தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் கூட இப்படித்தான் பயன்பாட்டிற்கு உட்பட்டது. இதற்கெல்லாம் புலிகள் மட்டும் காரணமாகிவிட முடியாது. இன்று அரசியல் குறித்துப் பேசுகின்ற நாம் அனைவரும் தான் காரணம்.
இரண்டு வேறுபட்ட குழுக்கள், மாவீரர் தினத்தை ஒழுங்கமைப்பதற்கு அவர்களிடையே ஏற்படும் மோதல்கள், அருவருக்கத்தக்க அவதூறுகள் எல்லாம் முடிவின்றித் தொடர்கின்றன.
பிணங்களை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற இந்தக் கூட்டங்கள் எமது போராட்ட வரலாற்றின் சாபக்கேடுகள்.
அரசியல் முரண்பாடுகள் கொண்ட ஆயிரம் குழுக்கள் ஒரே நோக்கத்திற்காக உருவாகலாம். அரசியல் கருத்து மோதல்களால் புதிய கருத்துக்கள் உருவாகலாம். மோதும் இரு குழுக்களிடையேயும் அரசியல் முரண்பாடுகள் கிடையாது. 80 களில் தீவிர ஆயுதப் போராகப் பரிணாமம் அடைந்த பெருந்தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களின் தோலிவியிலிருந்து கற்றுக்கொள்ள இவர்கள் தயாரில்லை. போராட்டம் விட்டுச் சென்றுள்ள வியாபார இடைவெளிக்குள் புகுந்து கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஓட்டமெடுக்கவே எஞ்சியுள்ள “தேசிய வியாபாரிகள்” காத்திருக்கின்றனர்.
இவை எல்லாம் ஒரு புறத்தில் நடந்தேற, மறுபுறத்தில் இலங்கை அரசு புலம் பெயர் மக்களின் போராட்ட உணர்வை அழிப்பதற்கு தம்மாலான அத்தனை வழிகளிலும் முயற்சிக்கின்றது.
இறந்துபோன, இல்லாமல்போன, சாம்பலாக்கப்பட்ட அனைத்துப் போராளிகளின் தினமாக வெற்றிக்கான அரசியலோடு மாவீரர் தினம் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சித் தினமாக உருவாக்கப்பட்ட வேண்டும்.
உலகெங்கும் மக்கள் எழுச்சிகளைச் சந்திக்கும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதற்காகப் பெருமைப்படலாம்! முப்பது வருடப் போராட்ட அனுபவம் கொண்டவர்கள் என்பதிலிருந்தெ உலகை நோக்கலாம்!! அறுபது வருட இராணுவ ஒடுக்கு முறையை முகம் கொடுத்தவர்கள் என்பதற்காக எழுச்சி கொள்ளலாம். இவை அனைத்தையும் முன்வைத்தே உலக எழுச்சிகளின் முதன்மையான ஒன்றாக எம்மைத் தகவமைத்துக் கொள்ளலாம்!!!
ஆனால் துயர்கொள்ளும் வகையில் நமது சமூத்தின் அரசியல் தலைமை வியாபாரிகளின் கோரப்பிடியில் சிக்குண்டுள்ளது.
மாவீரர் தினம் பல ஆயிரங்கள் வருமானத்தை வழங்கும் என்பதே மோதலின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
“தேசிய வியாபாரிகளுக்கு” எதிரான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். அப் போராட்டம் இலங்கை அரசிற்குச் சார்பானதாக மாற்றமடையாமல் நகர்த்தப்பட வேண்டும். மாவீரர்தினம் போன்ற எழுச்சி நிகழ்வுகள் வியாபாரிகளிடமிருந்து விடுவிக்கப்படும் அதே வேளை புதிய பரிணாமத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி நாளாக அது மாற்றமடைய வேண்டும்.
மாவீரர் தினத்தில் வியாபாரப் பொருட்களாகப் பயன்படும் பூக்கள், தீபங்கள், கொடிகள் போன்றவற்றைப் புறக்கணிப்பதிலிருந்து இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம். வியாபாரிகளை வீட்டிற்கு அனுப்பலாம். புதிய எழுச்சி நாளையும் அதற்கான அரசியலையும் உருவாக்கும் ஆரம்பப் புள்ளியாக இது மாற்றமடைய வாய்ப்புண்டு.
புலம் பெயர் வியாபாரிகளுக்குப் பணம் சேர்க்கும் பொருட்களை மாவீரர் நாளில் புறக்கணிக்கும் போராட்டம் பிரச்சார இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.