Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் தினம் : புதிய திசைகள்

இலங்கை அரச பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேரினவாதத்தின் ஒடுக்குமுறை அதன் கட்டற்ற உச்சவடிவத்தை தொட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற அத்தனை மனித விரோத செயற்பாடுகளதும் மொத்த உருவமாக சிங்கள பவுத்த பேரின வாதம் தனது பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைப் போரில் பிரதான பங்கு வகித்த ஆயுதப் போராட்ட வடிவத்தை முற்று முழுதாகத் தோற்கடித்த பின் அவலங்களும் அழிவுகளுமே தாயகத்தில் தேங்கி நிற்க, இலங்கை பேரினவாத அரசின் இரத்தம் படிந்த கோரக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீட்சியடைகின்றன.

இலங்கை அரசினால் நன்கு திட்டமிடப் பட்ட செயற்பாடுகளின் விளைவாக, உலகெங்கும் ஒடுக்கு முறைக்கு எதிரான மக்கள் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க, நாமோ எமக்குள் மேலும் மோதல்கள் மூலம் உணர்வுபூர்வமான புலம் பெயர் மக்களை நம்பிக்கையீனத்திற்கு தள்ளி விடும் ஆபத்தை எதிர் நோக்குகிறோம்.

ஒரு நாட்டை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக, சொந்த தேசத்தின் மீதான ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக, ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மக்களின் விடிவிற்காக என்று ஈகம் செய்யப் படும் போற்றத்தக்க உயிர் தியாகங்கள் உலகவரலாற்றில் பதியப்படுகிறது. பேரினவாதத்திற்கெதிரான தமிழ் மக்களது தேசியவிடுதலை போராட்டம் சமூக வரலாற்றில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை வகிக்கும் நிகழ்வாகும்.

ஒடுக்கு முறைக்கு எதிரான வீரம் மிக்க போராட்டங்களில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள் அனைவருமே, அவர்கள் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களானாலும், ஏனைய அரசியல் வழிமுறைகளை முன்வைத்த இயக்கங்களைச் சார்ந்தவர்களானாலும் போராளிகள் என்ற தியாகக் குறியீட்டைப் பெறுகிறார்கள். இந்த வகையில் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடி தம் உயிரைத் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும், மக்களுக்கும் நமது வீர அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றோம். போராட்ட வழிமுறை தவறுகள், அகமுரண்பாடுகளுக்கு அப்பால் வடகிழக்கு தமிழ் மக்களின் தேசியவிடுதலை போரில் சமரசமின்றி இலட்சியத்தில் உறுதியுடன் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் நாங்கள் நினைவு கூருவோம். போராளிகள் தினமென்பது சோகம் கொண்டாடி அனுதாபம் பெறும் தினமாக அர்த்தப் படுத்திக் கொள்ளப் படாமல் மறைந்த போராளிகளுக்கு வணக்கம் செலுத்தி போராட்டத்தை மேலும் முன்னோக்கி உந்திச் செல்ல உறுதி எடுத்துக் கொள்ளும் நாள் என்பதை மனதில் நிறுத்துவோம்.

இலங்கை அரச பாசிச ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நாம் “மாவீரர்கள்” எல்லாம் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற வரம்பை அமைத்துக்கொண்டு ஏனையோரை அன்னியமாக்கியிருக்கிறோம். தமது சொந்த நலன்களுக்காக தலைமை, புனிதம் என்ற கருத்தியல்கள் மூலம் துரோகி என்றொரு சாதியை உருவாக்கி, தமது தலைமைக்கு சார்பல்லாத அனைத்துப் போராளிகளையும் அன்னியப்படுத்தி அவர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்தியதன் பாதகமான பக்க விளைவுகளினாலேயே, எமது ஆயதப் போராட்டம் எமது எதிரிகளால் தந்திரமாகக் கையாளப் பட்டு வெற்றி கொள்ளப் பட முடிந்தது.

எம்மக்கள் மேல் கட்டமைக்கப் பட்ட “புனிதம்” என்ற கருத்தியல்களை மீளாய்வு செய்யக் கூடியவர்கள்; தலைமைகளுக்காக,ஒரு அணிக்காக அன்றி தமிழ் ஈழ மக்களின் விடிவிற்காக மட்டுமே இவ்வளவு அர்ப்பணங்களும் தியாகங்களும் என்பதை முன் நிறுத்தக்கூடியவர்கள் இவ்வாறான தேசிய எழுச்சி நிகழ்வுகளை தலைமை தாங்குவது வரலாற்றுத் தேவையாகிறது.

புலம்பெயர் தேசங்களில், இவ்வருடம் அரசியல் வியாபாரிகள் அப்பட்டமாகவே தமது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார்கள். இதுவரை காலமும் மற்றவர்களைத் துரோகிகள் என்று அன்னியப்படுத்தியவர்கள் இம்முறை வியாபாரக் கணக்கு, செல்வாக்குப் பலப் பரீட்சை என்று தமக்குள்ளேயே மோதிக்கொள்கிறார்கள். விடுதலையை மட்டுமே நோக்காகக் கொண்டு சமூக வரம்புகளைக் கடந்து போராடுவதற்காக முன்வந்த போராளிகளை இந்த வியாபாரிகள் கொச்சைப்படுத்துகிறார்கள்; அவமானப்படுத்துகிறார்கள்; கேவலப்படுத்துகிறார்கள்.

எமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய அனைத்துப் போராளிகளினதும் தியாகங்கள் எம்மால் போற்றப் படவேண்டியவை. இதை நாங்கள் எந்த வியாபாரிகள் கைகளிலும் விட்டுவிடமுடியாது. மாயைகளில் இருந்து விடுபடுவதும், எமது வளர்சியை தடுக்கும் எதிரியின், துரோகிகளின் ஆயுதமும் அதுதான் என்பதையும் உணர்ந்துகொள்வோம். உலகில் உரிமைக்காக, விடுதலைக்காக போராடும் மக்கள்; இலங்கையில் ஒடுக்கப்படும் சக சிறுபான்மையின மக்கள்; எமது உரிமைக்கு குரல் கொடுக்கக் கூடிய சிங்கள மக்கள்; தமிழ் நாட்டு மக்கள் எமது நண்பர்கள் என்பதை நினைவில் கொள்வோம். இந்த நிலையில் எதிர்காலத்தை நோக்கிய புதிய பயணம் நண்பர்களையும் எதிரிகளையும் இனங்காண்பதிலிருந்தே ஆரம்பமாகும்.

நன்றி
புதிய திசைகள்

Exit mobile version