மே மாதம் 18ம் திகதி புலிகளின் தலைமையும் அதன் கட்டமைப்பும் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரான புதிய அரசியல் சூழல் 27ம் திகதி நவம்பர் மாதம் நிகழத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகளின் பின்னர் இன்னொரு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. புலிகளின் அனைத்துக் கூறுகளும், அதன் எச்ச சொச்சங்களும் கூட துடைத்தொழிக்கப்பட்டு விட்டன என்ற செய்தி 2009ம் ஆண்டு மாவீரர் தினத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாகப் புலம் பெயர்
பெருந்தேசிய ஒடுக்குமுறாக்கெதிரான தமிழ் பேசும் மக்களின் 60 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்ட போராட்டம் புலம்ம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை இன்னும் புலிகளின் சிந்தனை முறையின் வரம்புகளுக்குள் தான் தேங்கியிருக்கின்றது என்பதை மாவீரர் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதிர்ச்சியளிக்கும் பெரும் பணச்செலவும், பணச் சேகரிப்பும், உணர்ச்சி அரசியலும் புலிகளின் புலம் பெயர் ஆதரவுத் தலைமை இன்னமும் மக்களின் உணர்வுகளை தமது சுயலாப நோக்கங்களிற்காகப் பயன்படுத்துகின்ற அவல நிலையே காணப்படுவதை உணர்த்தி நிற்கிறது.
சரியான திசை நோக்கித் திட்டமிடப்படாத நியாயமான போராட்டம் ஆயிரக் கணக்கான உணர்வுமிக்க போராளிகளை மண்ணோடு மண்ணாக்கியிருக்கிறது; ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பயங்கர வாதத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள்; ஊனமுற்ற, அங்கவீனர்களின் சமூகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது; வன்னியில் சிறைவைக்கப்பட்ட மக்கள் போக அனைத்துத் தமிழ் பேசும் சிறுபான்மையினரும் இலங்கை எங்கும் ஆயுத முனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சரத் பொன்சேகா என்ற கொடிய போர்க் குற்றவாளியும், 50 ஆயிரம் மக்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்றொழித்த மகிந்த ராஜபக்ச அரசும் இன்னும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் குறித்துப் கொண்டிருக்க உலகமெல்லாம் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் புலிகளின் புலம்பெயர் தலைமைக்கு எந்தத் தார்மீகப் பொறுப்பும், குற்றவுணர்வும் இல்லாதது போல் கம்பீரமாய் மேடை போட்டுப் பாட்டுப்பாடி இன்னொரு தீபாவழி போல் மாவீரர் தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் நிறுவன மயப்பட்ட சிங்களப் பெருந்தேசிய வாதம் என்பது அதன் உச்சநிலை அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கெல்லாம் துணை போகின்ற அரச துணைக் குழுக்கள், அதன் புலம் பெயர் அங்கங்கள், அவற்றின் சித்தந்தக் கூறுகள், அரச சார் தன்னார்வ நிறுவனங்கள், இந்திய மேலாத்திக்க அடக்குமுறை அனைத்துமே இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.
புலிகளின் தோல்வியிலிருந்தும், போராட்டங்களின் தோல்வியிலிருந்தும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட ஆயிரமாயிரம் தமிழ்பேசும் மக்கள் இலங்கையிலும் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் அதிகார வர்க்கத்தின் அரசியல் நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்கும் இடையேயான வேறுபாட்டை இனம் காண ஆரம்பித்துள்ளார்கள்.
ஈழப் போராட்டத்தின் தோல்வி என்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளின் புதிய நிலைகளிற்கும் உரைகல்.
ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களின் பக்கத்திலும், ஒடுக்கப்படுகின்ற மக்கள் கூட்டங்களின் சார்பிலும் தான் அதிக வலிமையும் பலமும் அமைந்திருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, மொத்த உலகத்திலும் அவர்கள் தான் பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மைக்கு எதிரான ஒடுக்கும் அரச பயங்கரவாதம் ஒவ்வொரு நிமிடமும் அடக்குமுறைக்கான வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது.
உலகில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளோடும், போராட்டங்களோடும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மாறாக ஒடுக்கும் அரசுகளோடும், அதன் விரிவாக்க அங்கங்களோடும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட புலிகளின் தலமை, போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளியுள்ளது.
அரசியல் அதிகாரதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகலில் புலிகளுக்கும் அரசிற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு எப்போதும் இருந்ததில்லை. புலிகளின் அரசியல் முறைமைக்குள் எந்த மக்கள் பற்றுள்ள முற்போக்கு இயக்கங்களும், அரச அதிகாரத்திற்கு எதிரான அமைப்புக்களும், அடங்கியதில்லை.
இன்று கூட மாவீரர் தினத்தில் கேணல் ராம் என்பவரின் உரை வெளியான போது பலருக்கு அவர் அரசின் பிடிக்குள் இருந்துதான் மக்களைக் குழப்பும் நோக்கில் அதனைப் பதிவுசெய்தாரா என்ற பரவலான சந்தேகம் எழுப்பப் படுகிறது. புலிகளுக்கு பரந்துபபட்ட அதிகாரத்திற்கு எதிரான போராட்ட அமைப்புக்களோடு தொடர்பிருந்திருக்குமானால் இவ்வாறான சந்தேகங்களுக்கே இடமிருந்திருக்காது. பல சந்தேகங்கள் சர்ச்சைகள் எல்லாம் புலிகளின் அரசியல் வழிமுறையின் இன்றைய தொடர்ச்சியாகவே அமைகிறது.
புலம் பெயர் தமிழர்கள், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற இனத்தின் அடையாளக் குரலாக ஒலிக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்; ஆனல் அடக்குமுறையாளர்களோடு கைகோர்த்துக்கொண்டல்ல!
ஒடுக்குமுறைக்கெதிராக நிகழ்கின்ற அனைத்துப் போராட்டங்களோடும் எம்மை இணைத்துக்கொள்வதனூடாக மட்டுமே எமக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள இயலும்.
புலிகளின் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கின்ற முதலாவது சிந்தனை மாற்றம் இதுவாக அமையுமானால் நாம் புதியவற்றைத் தேடுவதற்கான முதல்படியாக அமையும்.
மாவீரர் களியாட்டங்களை நிகழ்த்தும் புலம்பெயர் புலிகளின் உணர்ச்சி அரசியலும் அரச பயங்கரவாதங்களோடு அவர்களின் அடையாளப்படுத்தலும் தகர்க்கப்படுவதற்கான வழிமுறை கூட இங்கிருந்துதான் ஆரம்பிக்கும்.
இந்தியாவிலும் இலங்கையிலும், உலகம் முழுவதிலும் மக்கள் பற்றோடு , சமுக உணர்வோடு போராடுகின்ற சக்திகளோடு எம்மை இணைத்துக்கொள்வதும், தன்னார்வ நிறுவனங்களும், புலி சார் சந்தர்ப்ப வாதிகளும், பண முதலைகளும், வியாபாரிகளும், அரச துணைக் குழுக்களும் ஒன்றிணைகின்ற அரசியல் தளத்தைத் தயவின்றி எதிர்த்து ஒடுக்குமுறைக்கு எதிரான விட்டுக்கொடுப்புக்களற்றுப் போராடுதல் என்பது மாவீரர் தினத்தின் பின்னான எமது அரசியலின் ஆரம்பமாகும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.