Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் தினம் – என்ன செய்யவேண்டும்? : தர்சிகன்

london_excelமரணித்துப் போன அனைத்துப் போராளிகளும் மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள் !ஒவ்வொரு கணமும் பிழைப்பிற்காக சக மனிதனை விழுங்கவும் தயாராகவுள்ள கயவர் கூட்டத்தின் நடுவே மரணித்துப் போவதற்கு எந்தத் தயக்கமுமின்றி மண்ணில் உரமாகிப் போனவர்கள் எமது சமூகத்தின் சொத்துக்கள்! ! போராடுதலும், ஒடுக்கப்படும் மக்களுக்காக வாழ்தலும், சாதலும் தமது மகிழ்ச்சியெனவே அவர்களில் பெரும்பாலனவர்கள் மரணித்துப் போயினர். தமிழ் பேசும் மக்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போரளிகளை விடுதலைக்காகத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் பெருமையோடு பேசிக்கொள்ளலாம்.

இவர்கள் அனைவரும் போருக்குள் வாழ்ந்த வாழ்வும் போராடுவதற்காக உயர்ந்த வரலாறும் அழிந்துபோகக் கூடாது. ஆக்கப்பட வேண்டும். இன்னும் பல நூற்றாண்டுகளின் பின்பும் மனிதகுலத்தின் ஒரு பகுதியின் விடுதலைக்காக மண்ணோடு மண்ணாகிப் போன மனித உயிர்கள் நினைவுகூரப்பட வேண்டும்.

ஒரு சந்ததியின் தியாகத்தையும் அர்பணத்தையும் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்த எமக்கு மத்தியில் முளைவிட்டிருக்கிறதே ஒரு கூட்ட்ம், அதற்கும் மரணித்துப்போன மனிதர்களின் மக்கள் பற்றிற்கும் என்ன உறவு?

முள்ளிவாய்க்காலில் முப்பது வருடப் போராட்ட்ம் இரத்தமும் சதையுமாக அழிக்கப்பட்டபின் கழுககுகள் போல வட்டமிட்ட பண வெறிகொண்ட கூட்டம் திட்டமிட்டுச் செயற்பட்டது. மரணித்துப்போனவர்களைப் புரட்சிகரமானதாக்குவதற்குப் பதிலாக அவர்களைப் புனிதமானவர்களாக்கிற்று. அவர்களின் தியாகங்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் உரமாகப்படுவதற்குப் பதிலாக, வழிபாட்டுக்குரியதாக்கிற்று.

அப்பாவிகளின் பணத்தைச் சுருட்டி வாழ்ந்தே பழக்கப்பட்ட இந்தக் கூட்டம், மரணித்தவர்களின் தியாகத்தையும் பணமாக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டது. இறந்து போனவர்களின் அனாதைகளாக மரணித்தவர்களை வைத்து தெருவோரங்களில் பணம்திரட்டும் கூட்டங்களைச் தமிழகச் சினிமாக்களில் மட்டுமே கண்டிருக்கிறோம். அதே போன்று தியாகிகளை வைத்து  கோப்ரட் வியாபாரிகளின் வீச்சில் பெரிய அளவில் நடத்தி முடிக்கிறார்கள் நமது புலம்பெயர் வியாபாரிகள்.

இவர்களைச் சுற்றி இவர்களின் அழுக்குப் படிந்த அருவருப்பன வியாபாரத்தை உருவேற்றுவதற்காக ஒரு புறத்தில் பல் அப்பாவிகளும், மறுபுறத்தில் அடிமைகளும் செயற்படுகிறார்கள்.

இஸ்லாமிய அடிப்படை வதிகளைப் போல, இந்துத்துவ அடிப்படை வாதிகளைப் போல, பின் தங்கிய அடிப்படை வாதச் சமூகம் ஒன்றை உருவாக்கி அதனைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் இந்த வியாபாரிகள் தமது தாய் நாட்டு மக்களின் அவலங்கள் குறித்து கிஞ்சித்தும் துயரடைவதிலை.

ஆயிரமாயிரமாய்ப் போராளிகள் அழிக்கப்பட்டு, ஒரு பகுதி இலங்கைப் பாசிச அரசின் கொடுங்கோல் சிறைக்குள்ளும், மறுபகுதி இராணுவத்தின் காலடியிலும் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள போது களியாட்டங்கள் போன்று மாவீரர் தினத்தைப் புலம்பெயர் நாடுகளில் நடத்தும் இக் கூட்டத்திற்குக் கொள்கை கோட்பாடு என்ற எந்த அடிப்படையும் கிடையாது.

தாம் கொள்ளையடித்த பணத்தின் பலத்தால் தம்மைச் சுற்றி சந்தர்ப்பவாதிகளைப் பாதுகாப்பு அரண்போல இக் கூட்டம் சேர்த்து வைத்திருக்கிறது. ஊடகங்களையும், பிரச்சாரச் சாதனங்களையும் உடமையாக்கி வைத்திருக்கிறது. உளவு நிறுவனங்களோடும் அதிகார வர்க்கத்தோடும் கைகோர்த்திருக்கிறது. ஏன், இலங்கைப் பேரினாவத அரசோடு கூட நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. 2012 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் உளவாளி கே.பி ஐ லண்டனிலிருந்து சென்று சந்தித்த குழுவிலிருந்த சிவாகரன் என்ற நபர் குறித்து இனியொரு இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது.(பார்க்க : இணைப்பு https://inioru.com/?p=30106). 2013 ஆம் ஆண்டு மாவீரர் தின செயற்பாட்டாளர்களில் ஒருவராக சிவாகரன் செயற்பட்டார். இது ஒரு உதரணம் மட்டுமே.

இனியொரு சிவாகரன் போன்றவர்களையும், புலம்பெயர் நாட்டில் இலங்கை அரசின் நேரடித் தலையீடுகள் பற்றியும், புலம்பெயர் அரசுகள் இலங்கைப் பாசிச அரசுகளுடன் இணைந்து நடத்தும் இனக்கொலை பற்றியும் இனியொரு போன்ற ஊடகங்கள் வெளிக்கொண்டுவருகின்ற போது புலம்பெயர் புலி வியாபாரிகள் தலைமறைவாகிவிடுகின்றனர். லைக்கா, லிபாரா, அனந்தகிருஷ்ணன் போன்ற பல்தேசிய வியாபார நிறுவனங்களால் தேசியப் போராட்டம் கையகப்படுத்தப்படும் போது இனியொரு அம்பலப்படுத்தியது, மாவீரர் தினம் நடத்தும் பிழைப்புவாதிகளும் அவர்களின் அலக்கைகளும் அண்ணர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தேசியப் போராட்டம் அழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாவது வருட்த்தை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். ஏன் போராட்டம் அழிக்கப்பட்டது என்றால் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து அழித்துவிட்டன, இனிமே அவர்களைத் தாஜா செய்வோம் என்கிறார்கள். எவ்வளவு இலகுவான மக்களை மந்தைகளாக்கும் பதில்? சர்வதேச நாடுகள் என்று இவர்கள் கொஞ்சிக் குலாவும் அதிகாரவர்க்கம் அழிப்பின் பின்புலத்தில் செயற்பட்டது உண்மைதான். அதுமட்டுமல்ல எமக்கு முன்னே உள்ள காரணம். நாம் முன்வைத்த அரசியலில் காணப்படும் தவறுகளைக் கண்டுகொள்வதையும் அவற்றிலிருந்து புதிய போராட்ட வழிமுறைகளையும் தத்துவார்த்த அடித்தளத்தையும் வளர்த்தெடுப்பது தொடர்பாக ஆராய்ந்து அடுத்த நிலையை நோக்கி நகர்வது அவசியமானது,

அதனை எல்லாம் நிராகரித்து நாளாந்தம் பழைய நினைவுகளை மீட்டுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருக்கும் இத் தலைமைகள் மக்களுக்கு அழிவுகளை மட்டுமே விட்டுச் சென்றிருக்கின்றன.

விமர்சனங்களுக்கு அஞ்சும் இக்கோழைகள் கூட்டம், அரசியல் விமர்சனங்களை எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் நோக்கில் முன்வைத்தால்கூட தேசியத் தலைவர் சொன்னார் என்று ஆரம்பித்து மக்களை மந்தைகளாக்கும் சீர்குலைப்பில் ஈடுபடுகின்றது.

மக்களின் பணத்தை உடமையாக்கியவர்களைக் கேட்டால் பிரபாகரன் வரட்டும் பணத்தைத் தருகிறோம் என்கிறார்கள், அவர்கள் நேசிப்பதாகக்கூறும் பிரபாகரன் மரணித்து ஐந்து வருடஙகள் ஓடி முடிந்துவிட்டன. உலகத்தில் மரணித்த தலைவர்களுக்கெல்லாம் வீர அஞ்சலி செலுத்தப்படுவது வழமை. பிரபாகரனை மட்டும் அனதையக்கிவிட்டு மக்களின் பணத்தின் மீது சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள்.இவ்வாறான மாபியாக்களை வீட்டிற்கு அனுப்பவேண்டும்.

27ம் திகதி நடக்கவிருக்கும் மாவீரர் தினத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை நிராகரிப்பதிலிருந்து இதனை ஆரம்பிக்கலாம். பூக்கள், கொடிகள், வெளியீடுகள், உணவுப் பண்டங்கள் போன்ற அனைத்தையும் இக் கும்பல்கள் பணமக்கிப் பதுக்கிக்கொள்கின்றன. இவற்றில் எதனையும் வாங்காமல் நிராகரித்தலே வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுதலையாவதற்கான முதல் படியில் காலடிவைத்தவர்களாவோம்.

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைக் கையகப்படுத்திக்கொண்டுள்ள இந்த மாபியாக்களையும், அவர்களுக்கு முலாம்பூசும் அடிமைகளையும், நிராகரிப்பதே மாவீரர் தினத்தில் விடுதலைக்காக மரணித்த அனைத்துத் தியாகிகளுக்கும் செய்யும் முதல் அஞ்சலியாக அமையும். இரண்டாவதாக கட்ந்துவந்த விடுதலைப் போராட்டத்தின் தவறான பக்கங்களை நேர்மையோடு ஆராய்வதும், அதன் அடிப்படையில் புதிய போராடத்திற்கான அடித்தளத்தை கட்டியெழுப்புவதும் இன்று எமது ஒவ்வொருவரதும் முன்னாலுள்ள வரலாற்றுக்கடமை. முப்பது வருடப் போராட்ட அனுபவமும், தோல்வியின் பாடமும் எமக்கு மத்தியில் புதிய அரசியல் தமையைக் கட்டியெழுப்பும்.

Exit mobile version