இதே வேளை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராஜபக்ச குடும்ப பாசிச அரசு இராணுவ ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஏற்கனவே கோரமான இராணுவ ஒடுக்குமுறைக்குள்ளும், இலங்கை உளவுத்துறையின் கண்காணிப்பினுள்ளும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது பெருந்தேசிய வாத ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலம் வரை கிறீஸ் பூதங்கள் என்ற புரளியைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை இராணுவ சர்வாதிகாரிகள், தமிழ்ப் பேசும் மக்கள் பிரதேசங்களை நிரந்தரமாக இராணுவமயப்படுத்த வழிகளை தேடிக்கொண்டிருந்தனர்.
இப்போது மாவீரர்தினம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் என்ற புரளிகளை உருவாக்கி, அது குறித்த பய உணர்வை உருவாக்கி இராணுவ ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் சுவரொட்டிகளை இராணுவமே சில இடங்களில் பதிந்துவிட்டு மாணவர்களை மிரட்டிவருவதாக பலர் சந்தேகிக்கின்றனர்.
இலங்கை அரசு புலிகளின் அல்லது அதன் ஆதரவாளர்களின் இருப்புக் குறித்த அச்சத்தை உருவாக்குவதனூடாக தமது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது.
இராணுவத்தை வட – கிழக்கில் தொடர்ந்து நிலைகொள்ளச் செய்வதற்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளுதல் இதன் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
தவிர, அண்மைக்காலங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து இயல்பான மக்கள் எழுச்சிகள் உருவாகி அரசிற்குப் பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. இவ்வாறான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் புலிகள் குறித்த பயத்தை முன்வைத்து போராட்டங்களில் முன்னணி வகித்தவர்களைக் கைது செய்வதற்கும், அழிப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக்கொள்கிறது. இது இரண்டாவது பிரதான காரணம்.
இதுவரையில் ராஜபக்ச குடும்ப அரசு உட்பட அனைத்துப் பேரினவாத அரசுகளும் புலிகளைச் சுட்டிக்காட்டியே சிங்கள மக்கள் மத்தியிலான மக்கள் எழுச்சிகளை மட்டுப்படுத்தி வந்திருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கிறோம் என்றவர்கள் இன்று புலிகள் அற்றுப்போன நிலையில் போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். சிங்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்புப் போராட்டங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. இவற்றை ஒடுக்குவதற்கு இந்த வருட ஆரம்பத்திலிருந்தே புலிகள் மீண்டுள்ளனர் என்று ராஜபக்ச அரசு கூற ஆரம்பித்திருந்தது. இந்தப் பிரச்சாரம் இனிமேல் தீவிரமடையும். இது மூன்றாவது முக்கிய காரணமாகும்.
தேசிய இனப்பிரச்சனை தீர்வு குறித்துப் பேச முற்பட்ட போதெல்லாம் புலிகளை அழித்துவிட்டு வருகிறோம் என்றவர்கள் புலிகள் அழிக்கபட்டு முன்று வருடங்களை அண்மிக்கின்ற நிலையில் அது குறித்துப் ஆரம்ப நிலை நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளவில்லை. புலிகள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை நிறுவிக்கொண்டால், மீண்டும் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்பதே முன்னிலைக்கு வரும். தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்துப் பேசுவதைக் கூடப் பின்போடலாம். நான்காவது பிரதான காரணம் இது.
இலங்கை அரசின் போர்க்குற்றம், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம், இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்ற அனைத்தும் இன்று உலகிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவைத் தோற்றுவித்துள்ளது. புலிப் பூச்சாண்டி காட்டி அவற்றை அழிப்பதற்கான வழிமுறை ஐந்தவது காரணமாகும்.
இவை அனைத்துக்கும் மேலாக புலிகள் தமது நடவடிக்கைகள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் முன்வைத்தே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வருகின்ற முன்னணி சக்திகளையும், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து குரல்கொடுக்கும் ஜனநாயக சக்திகளையும் அழிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு இலகுவாக மேற்கொள்ளும்.
புலிகளின் இருப்புக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி அழிவுகளை அரசியலை முன்னெடுப்பது ராஜபக்ச அரசைப் பொறுத்தவரை மிகவும் இலகுபடுத்தப்பட்ட வழிமுறை. கிறீஸ் பூதத்தை விட பல அதிகமான வழிகளை இது திறந்துவிடுகிறது.
குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளின் தேசிய வியாபாரிகளின் ஊடாகவே இலங்கையில் புலிகளின் மீட்சி குறித்த பிரச்சாரங்களை முன்னெடுத்து அங்கு போராட முனையும் முன்னணிசக்திகளை அழிக்க முடியும்.
மாவீரர் தினத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், கிழக்கில் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டதாகவும், இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டதாகவும் புலம் பெயர் ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் இதற்கு சிறந்த முன்னறிவிப்பு.
சமூகப்பற்றற்ற, மக்கள் குறித்து எந்தச் சிந்தனையுமற்ற இந்த ஊடகங்கள், அவற்றின் பின்னணியில் செயற்படும் அரசியல் வியாபாரிகள், புலம்பெயர் அரச ஆதரவாளர்கள் என்ற அனைவரும் இலங்கை அரசுடன் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதற்கான அபாய அறிவிப்பே இவை அனைத்தும்.
தேசியம், தேசியத்தலைவர், தாயகம் போன்றவற்றை வெற்று முழக்கங்களாகப் பயன்படுத்தும் அரசியல் குறித்த அடிப்படை கோட்பாடற்ற ஊடகங்கள், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத வியாபாரிகள், இவர்களோடு கைகோர்த்துக் கொள்ளும் இலங்கை, இந்திய, சர்வதேச உளவு அமைப்புக்கள் என்பன அனைத்தும் அவலத்தில் வாழும் மக்கள் கூட்டத்தை முற்றாக அழிப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டு இயங்குகின்றன.
தேசியத் தலைவர் என ஆயிரம் தடவை முழக்கமிடும் இவர்கள் பிரபாகரன் மரணித்து மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையிலும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தக்கூடத் திரணியற்ற வியாபாரிகள் கூட்டம். தமது சொந்த நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத தயங்கமாட்டார்கள்.
வியாபாரிகள், சந்தர்ப்ப வாதிகள், அழிவு சக்திகள் ஆகியோரின் பிடியிலிருந்து போராட்டத்தை விடுவிப்பதும் அதன் புரட்சிகரமான வழிமுறைகளைக் முன்வைப்பதும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமை.