ஒவ்வொடு காலையும் அழகாக விடிந்த நாட்கள் இருண்டு போயின. இராணுவச் சிப்பாய்களின் காலடி ஓசையில் விழித்தெழும் குழந்தைகள் கூட அவர்களை எதிரிகளின் ஏவல்கள் என அறிந்து வைத்திருந்ததனர்.
இந்த வேளையில் சரி ஏது தவறு ஏது என்று சரியாகத் தெரிந்துகொள்ளாதவர்கள் இராணுவத்திற்கு எதிராகப் போராfட என்று தமது சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கடந்து இயக்கங்களில் முழு நேர உறுப்பினர்களாக இணைந்து கொண்டார்கள்.
இந்த வேளையில் இயக்கங்களை அழித்து இளைஞர்களின் போராட்ட உணர்வை அழித்து வெற்று இராணுவ யுத்தமாக மாற்றுவதற்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியை அறிமுகப்படுத்திற்று.
மிகவும் கோரமான சித்திரவதை உக்திகளை கற்றுக்கொடுத்த இந்திய இராணுவப் பயிற்சி ரெலோ(TELO), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE), ஈ.பி.ஆர்.எல்.எப்(EPRLF) ஈரோஸ்(EROS) ஆகிய இயக்கங்களுக்கு வழங்கப்பட்டன.
சமூக உணர்வும், மக்கள் பற்றும், மனிதாபிமானமும், போர்க்குணமும் மிக்க போராட்டக் குழுக்கள் வெறித்தனமும், மிருக உணர்வும், கோரமும் கொடூரமும் உடைய ஆயுதக் குழுக்களாக மாற்றம் பெற்றன. இந்திய அரசு தனது ஒவ்வொரு நகர்வுகளையும் கவனமாக மேற்கொண்டது.
பயிற்சி முடிந்து இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே கோரமான ஆயுத மோதல்கள் இயக்கங்களிடையே தோன்றின. புலிகள் தவிர்ந் ஏனைய இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்பட்டன.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டது போன்றே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏன் கொல்லப்படுகிறோம் என்றுதெரியாமலேயே கொல்லப்பட்டனர்.
தியாகிகளான போராளிகள்
எவ்வளவு ஊதியம் தருவார்கள் என்று எண்ணியா இயக்கங்களில் இளைஞர்கள் இணைந்துகொண்டார்கள்? தம்மைச் சூழவர உள்ள சமூகம் ஒடுக்கப்படுகிறது என்று உணர்ந்துகொண்டவர்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே இணைந்துகொண்டார்கள்.
கடந்த அரை நூற்றாண்டில் மிகக் குறுகிய காலப்பகுதியில் எந்த வகையான பிரதிபலனையும் எதிர்பார்காமல் முழுநேர அரசியலில் இவ்வளவு தொகையில் இணைந்து கொண்டவர்கள் வடகிழக்கு இளஞர்கள் மட்டும்தான்.உலகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இதனைக் காணமுடியாது.
எமது சமுகம் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை சமூகத்திற்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது.
வாழ்ந்திருக்க வேண்டிய இவர்களில் எவரும் துரோகிகள் என்று யாராவது கூற முனைந்தால் அவர்கள் மனிதகுல விரோதிகள். எமது சமூகத்தின் சாபக்கேடுகள்.
இவர்களில் யாரையாவது தவிர்த்து மாவீரர் தினம் என்ற ஒரு நிகழ்வு நிகழுமானால் அதுவே சமூகத்தைத் திட்டமிட்டுக் கூறுபோடும் நிகழ்வாகும். ஒற்றுமை ஒற்றுமை என்ற வரிக்கு வரி எதையோ சொல்கிறார்கள், ஒற்றுமைக்கு சாவுமணி அடிப்பதற்கு என்றே, முப்பது வருட அழிவுகளின் பின்னரும் பிரிவினையைத் தூண்டுவது என்பதே குறித்த சிலருக்கான மாவீரர்தினம்.
மாவீரர்தினம் இரண்டாகப் பிளவுற்று நடைபெறுகிறது என அங்காய்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். போராளிகளைப் பிளவுபடுத்துவதிலிருந்தே அது கருவுற்றது என்பதே அது. வெறுமனே குறித்த அடையாளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது.
மக்களுக்கான போராட்டம் என்பது மனிதாபிமானத்தின் அடிப்படையிலிருந்தே ஆரம்பமாக முடியும். மனிதர்களை மனிதர் நேசிப்பது அதன் முதற்படியாக அமையும் போது ஒரு சமூகத்தை ஒத்துக்கிவைத்துவிட்டு சடங்கு செய்து சம்பாதிக்க முயலும் குழுக்கள் இலங்கை அரச ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள அல்ல.
போராளிகளை இழந்த குடும்பத்தினர் ஏனைய போராளிகளின் வலியை உணர்ந்தவர்கள் அவர்கள் ஏனைய இயக்கப் போராளிகளையும் அங்கீகரிக்கக் கோருவது தாம் இழந்தவர்களுக்கு செய்யும் மனிதாபிமானக் கடமையாகும். மாவீரர் தினத்தை ஏற்பாடுசெய்து பணம் திரட்டிக்கொள்ளும் ஏற்பாட்டாளர்களைப் போன்று அவர்கள் கோரமான உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் அவர்களிடமிருந்தே முளைவிடும்.
***
அழிக்கப்படும் தமிழ் மக்களும் மாவீரர் பணச்சடங்கும்
இலங்கையில் இனப்படுகொலையின் பின்னர் இனச்சுத்திகரிப்பு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பெண்களை இராணுவ ஆட்சியின் பாலியல் கருவிகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசு ஆரம்பித்துவிட்டது.
நிலப்பறிப்பு, பாலியல் வன்கொடுமை, பௌத்த மத ஆதிக்கம் போன்ற பல நடவடிக்கைகளுக்கு ஊடாக தமிழ்ப் பேசும் மக்களின் தனித் தன்மை துவம்சம் செய்யப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் மக்கள் மீதான போர் இன்று வேறு வடிவங்களில் பேரினவாத அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது அதன் ஏற்பாட்டாளர்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
குர்தீஷ் மக்களின் தியாகிகள் தினம் புரட்சிகரமாக உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தினமாக பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளிலும் நிகழ்த்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் குரூரமான ஒடுக்கு முறை பிரயோக்கிக்கும் நிலையிலும் அவர்களின் போராட்டம் வெற்றியடைந்ததன் அடிப்படை இதுவே.
மாவீரர் சடங்கு அனைத்துப் போராளிகளதும் இழப்பாக, புரட்சிகர நிகழ்வாக உலகின் மனிதாபிமானிகளுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் அறிவிக்கப்படும் நிலை உருவாக வேண்டும். பணம்படைத்த பல்தேசிய நிறுவனங்களும், ஏகாதிபத்திய நாடுகளும் கூட்டம்போட்டு கூத்தடிக்கும் விலையுயர்ந்த மண்டபங்களிலிருந்து அது வெளியேற்றப்பட்டு தெருவிற்கு வர வேண்டும்.
போராளிகளை விதைத்த குடும்பங்களைச் சார்ந்தோர் இதனைப் புரிந்து கொள்வார்கள்.
***
பிரபாகரன்
பிரபாகரனை நேசிப்பதாகக் கூறும் ஏற்பாட்டாளர்கள், பிரபாகரன் கடவுளுக்குச் சமானம் எனக் கூறும் ஒழுங்கமைப்பாளர்கள், பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்ற இந்த நூற்றாண்டின் கேலிக்கூத்தான பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். மக்களின் பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்தும் சிலர் பிரபாகரன் வந்ததாலே பணத்திற்குக் கணக்குக்காட்டுவோம் என்கிறார்கள். இதற்காகவே இறந்துபோன பிரபாகரனை இன்னும் உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.
சரி தவறு என்பதற்கு அப்பால் தனது வாழ் நாள் முழுவதையும் போராட்டத்திற்கே அர்பணித்த பிரபாகரனை அனாதைப் பிணமாய் அஞ்சலி கூட இல்லாமல் அழித்துவிட்டார்கள். நான்கு வருடங்களை தொலைத்த பின்னரும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாத மாவீரர் தினம் எவ்வளவு நயவஞ்சகத் தனமானது! மாவீரர் தினத்திம் உச்சபட்ச அருவருப்பு இதில் தான் தங்கியுள்ளது!!
தமது குடும்பத்தின் இளம் சந்ததியைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள் மாவீரர் தின ஏற்பாட்டாளர்களின் திருட்டுத்தனத்தைப் புரிந்துகொள்வார்கள்.
****
யார் துரோகிகள்
எதையாவது விமர்சித்தால் இலங்கை அரச கைக்கூலி, துரோகி என்றெல்லம் கூறுகின்ற கேவலமான அரசியல் இன்னும் தொடர்கிறது. மாவீரர் தினத்தை விமர்சித்தால் கூட ‘துரோகத்தைப் ‘ பரிசாகத் தருவதற்கு அதனை முன்வைத்துப் பணம் சேர்க்கும் வியாபாரிகள் காத்திருப்பார்கள்.
மாவீரர் தினத்திற்குத் தயாராகும் புலம் பெயர் மக்கள் இந்தக் கேள்விகளையும் சுமந்து செல்வார்கள்.