Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர்தினம் – இதுவரைகாலம் சிந்திய இரத்தத்தின் எதிர்காலம்? : சபா நாவலன்

ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பயங்கர வாதத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள்; ஊனமுற்ற, அங்கவீனர்களின் சமூகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது; சிறைவைக்கப்பட்ட மக்கள் போக அனைத்துத் தமிழ் பேசும் சிறுபான்மையினரும் இலங்கை எங்கும் ஆயுத முனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் நிறுவன மயப்பட்ட சிங்களப் பெருந்தேசிய வாதம் என்பது அதன் உச்சநிலை அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கெல்லாம் துணை போகின்ற அரச துணைக் குழுக்கள், அதன் புலம் பெயர் அங்கங்கள், அவற்றின் சித்தந்தக் கூறுகள், அரச சார் தன்னார்வ நிறுவனங்கள், இந்திய மேலாத்திக்க அடக்குமுறை அனைத்துமே இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தேவையையும் அதனை நிறுவனமயப்படுத்தும் கட்சியையும் அதன் பின்பலமாக அமையவல்ல தலைமறைவு இயக்கங்களையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.

அனைத்து மேலாதிக்க வல்லரசுகளதும் தெற்காசிய ஈர்ப்பு மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ள நிலையில், தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் புதிய வழிமுறை என்ன? அதன் தந்திரோபாயம் என்ன என்பதெல்லாம் குறித்துச் சிந்திப்பதற்கு புலம் பெயர் நாடுகளின் வாழ் நிலை இடம்தராது என்பது உண்மைதான். ஆனால் குறைந்தபட்சம் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் முன்னேக்கி நகர்வதற்கான உந்துசக்தியாக செயற்படுவதற்கான ஆரம்ப நிலையில் கூடப் புலம்பெயர் அமைப்புக்களோ, தமிழ் நாட்டு தமிழின வாதிகளோ இல்லை என்பது துயர்தரும் உண்மை.

ஈழப் போராட்டத்தின் தோல்வி என்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளின் புதிய நிலைகளிற்கும் உரைகல்.

புலிகளின் தோல்வியிலிருந்தும், போராட்டங்களின் தோல்வியிலிருந்தும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட ஆயிரமாயிரம் தமிழ்பேசும் மக்கள் இலங்கையிலும் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் அதிகார வர்க்கத்தின் அரசியல் நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்கும் இடையேயான வேறுபாட்டை இனம் காண ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிலையில் 18 வருடங்களாக புலிகளின் போராளிகளின் நினைவு நாளாக மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. பிரித்தானியாவில் முன்னெப்போதும் இல்லாதவாறு மாவீரர்தினம் இரண்டு குழுக்களாகக் கொண்டாடப்படும் என்று அதன் ஒழுங்கமைப்பாளர்கள் சார்ந்த பகுதிகளில் பேசப்படுகிறது. இதனை மறுக்கின்ற பலர் ஒன்றை மட்டும் சொல்கிறார்கள் “சிங்களவன் ஒன்று திரண்டு தமிழர்கள அழிக்கிறான், தமிழர்கள் ஒற்றுமைப்படுங்கள்”. தோற்றுப்போன அதே முழக்கங்களோடு இனவாத நோக்கில் தெளிவான அரசியல் பார்வையின்றி உணர்ச்சியேற்றும் கொண்டாட்டமாகவே இதனை நடத்த முயல்கிறார்கள்.

தேசியம், தலைமை என்ற சுலோகங்களோடு முன்வருகின்ற முன்னையவர்கள் அவற்றின் உள்ளடக்கத்தைக் கூடப் புரிந்கொள்ளவில்லை.

தேசியத்தின் பெயராலும், தேசத்தின் பெயராலும், பிரபாகரனின் பெயராலும் எத்தனை வியாபாரிகள் உருவாகியுள்ளார்கள். ஈழப் போராட்டம் மாவீரர்களையும், தியாகிகளையும் உருவாக்கியதுபோல நூற்றுக்கணக்கான வியாபாரிகளையும் உருவாக்கி உலாவவிட்டுள்ளது. கே.பியின் நீட்சிகள் கூட தேசியத் தலைவர், தேசம், தேசியம் என்ற சுலோகங்களோடு உலாவருகின்றன. உறுதியான அரசியலற்ற வெற்று முழக்கங்களின் ஆபத்தை உணர்ந்துகொள்ளாவிட்டால் நாளை மகிந்த ராஜபக்ச மாவீரர்தினத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினாலும் வியப்பில்லை.

இழந்துபோனவர்கள் தியாகிகள். போராடி மடிந்து போனவர்கள் சமூகத்திற்காகத் தம்மை அழித்துக்கொண்டவர்கள். இனிமேல் போராடுவதற்கான உறுதியை அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் விதைகளாக விழுந்தது கடவுள்களாக அழிந்துபோவதற்கல்ல, விருட்சமாக எழுவதற்காக. உலகின் ஒவ்வொரு புரட்சியாளனையும் வழிபாட்டிற்கு உரியவர்களாக மாற்றி அவனின் போராட்ட உணர்வைக் கொச்சைப்படுத்துகின்ற அதிகார வர்க்கம் அதனூடாக போராட்டங்களைத் திசைதிருப்புகின்றது. 18 வருடங்களாக மரணித்துப்போன போராளிகள் பூஜைக்கு உரியவர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர். எழுச்சிக்கான வித்துக்களாக அவர்களின் தியாகம் மாற்றப்பட வேண்டும். அதற்கெல்லாம் ஒழுங்கமைப்பாளர்கள் தயாராக இருப்பார்களா என்பது சந்தேகத்திற்கு உரியதே. மாவீரர் தினம் என்பது ஒடுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான எழுச்சித் தினமாக, இனப்படுகொலையின் பின்புலத்தில் செயலாற்றும் அதிகாரவர்க்கங்களுக்கு எதிரான புரட்சிகர நாளாக மாற்றமடைவதற்கு அதன் ஒழுங்கமைப்பாளர்கள் தயாரா?

பலஸ்தீனிய விடுதலை இயக்கத்திலிருந்து உலகின் ஒவ்வொரு சந்திகளிலும் சுயநிர்ணய உரிமைக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுகின்ற ஆயிரக்கணக்கான அமைப்புக்களை ஐரோப்பாவில் காண்கின்றோம். இவர்களிலெல்லாம் மாவீரர் தினத்தில் பங்கேற்க அழைக்கப்படுவார்களா? ஒவ்வொரு கணமும் அழிக்கப்படுவோமா என்ற அவலத்துள் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தின் புலம்பெயர் அங்கங்கள் நாங்கள் என்பதை அவர்களுக்கும் அறிவிப்பதற்கு மாவீரர் தினம் பயன்படுமானால் போராளிகளின் மரணம் பணம் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறையாக அன்றி போராடுவதற்கான ஆரம்பமாக அமையும் என்பதை ஒழுங்கமைப்பாளர்கள் உணர்ந்துகொள்வார்களா?

எண்பதுகளிலிருந்து போராடுவதற்காகவே இளமையின் உல்லாசத்தை இழந்து துப்பாக்கிகளோடு மறைந்து போனவர்களில் பலர் துரோகிகள் என்ற முத்திரையோடு இல்லாமல் போனார்கள். ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்வதற்குத் தயார் என ஒழுங்கமைப்பாளர்கள் பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?
பிரபாகரன் முன்னெடுத்த அரசியலுடனான உடன்பாடு அல்லது முரண்பாடு என்ற விவாதங்களுக்கு அப்பால், அவரையும் மாவீரர்களில் ஒருவராக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவிக்கத் தயாரா? ஒவ்வொரு அடுத்த பத்தியிலும் தேசியத் தலைவர் என்று உச்சாடனம் செய்யும் ஒழுங்கமைப்பாளர்கள் பிரபாகரனை மாவீரராக அறிவிக்க மறுப்பதென்பது அவமதிப்பதாகாதா?

இவற்றிற்கெல்லாம் தயாரானால் சந்தர்ப்ப வாதிகளுக்கும் மக்கள் பற்றுள்ளவர்களுக்கும் இடையேயான தெளிவான எல்லைக்கோட்டை நாம் இனம்காண முடியும்.

தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் போது அவர்களைப் பெருமைப்படுத்துவது மட்டுமல்ல நாமும் உயர்வடைகிறோம். தவறுகளைத் திருத்திகொள்வதும், கற்றுக்கொள்வதும், அதனூடாக மக்கள் போராட்டத்திற்கான வெற்றியை நோக்கிய வழியைக் கண்டறிவதும் மாவீரர்களுக்கு இதயசுத்தியுடன் அஞ்சலி செலுத்துவதாகாதா?

Exit mobile version