Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாற்று அரசியல் கருத்து ஒன்றிற்கான தேவையை உணரும் போக்கு புலம்பெயர் நாடுகளில் உருவாகியுள்ளது : சி.கா.செந்தில்வேல்

அண்மையில் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்தில்வேல் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் அரசியல் சுற்றுப் பயணம் மேற் கொண்டு நாடு திரும்பியுள்ளார். அவர் பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், ஊடக நேர்காணல்கள் என்பனவற்றில் பங்கு கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களின் சமகால எண்ணங்கள் போக்குகள் நிலைப்பாடுகள் பற்றி கண்டறிந்தும் கேட்டறிந்தும் வந்துள்ளார். அவரது மேற்படி பயண அனுபவங்களை இந் நேர்காணல் எடுத்துக் கூறுகிறது.

கேள்வி: அண்மையில் நீங்கள் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கிறீர்கள். அப் பயணத்தின் நோக்கம் எதுவாக இருந்தது?

பதில்: எனது அண்மைய இரண்டு மாத காலப் பயணம் முற்று முழுதாக அரசியல் பயணமாகவே அமைந்திருந்தது. கனடாவில் கடந்த இருபது வருடங்களாக மாற்று அரசியல் சமூக கலை இலக்கிய அமைப்பாகச் செயல்பட்டு வருவது தேடகம் என்னும் அமைப்பாகும். அதில் இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள், சமூக நலன் விரும்பிகள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். ஆக்கபூர்வமான பல காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் ஒன்று ரொறன்ரோ நகரின் மையப் பகுதியில் தரமான பெரிய நூலகத்தை நடாத்தி வந்தமையாகும். சிலவருடங்களுக்கு முன்பு அந்நூலகத்தை சில அராஜக சக்திகள் தீவைத்து எரித்து விட்டனர்.

தேடகம் அமைப்பின் முன் நிலை இயங்குநர்களில் ஒருவரான பொதுவுடைமைவாதி நெல்லியடி சிவம் அவர்களது மறைவின் முதலாவது வருட நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்தவே என்னை அங்கு அழைத்திருந்தனர். அத்துடன் பல்வேறு அரசியல் சமூக விடயங்களைப் பற்றிய கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்களை ஒரு மாத நிகழ்ச்சிகளாக ஏற்பாடு செய்திருந்தனர். அதன்பின் பிரான்ஸ்டென்மார்க் நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள், கலந்துரையாடல்களில் பங்குபற்றி வந்தேன். இவற்றின் மூலம் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு அனுபவங்களைப் பெறவும் பகிர்ந்து கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

கேள்வி: புலம்பெயர்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்வும் அவர்களது சமூகச் சிந்தனைகளும் எவ்வாறு காணப்படுகின்றன?

பதில்: அவர்கள் வாழுகின்ற நாடுகள் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள். அத்துமன் மேலைத்தேச பண்பாட்டுச் சூழலும் வேறுபட்டதாகும். நம்மவர்கள் நாளாந்தம் அத்தகைய சூழலில் கஷ்டங்கள் பலவற்றின் மத்தியிலேயே வேலை செய்கின்றனர். ஒரு யந்திரத்தனமான வாழ்க்கை முறைக்குத் தம்மைப் பழக்கப்படுத்தி விட்டனர். யாவும் பணம் என்பதை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றன. அங்கு உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கிடைப்பதாகக் கூற முடியாது. ஆனால் உழைப்பில் இருந்து எடுத்து சுகாதாரம் கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்கள் சிலவற்றுக்கு கொடுப்பதன் மூலம் மக்களை ஓரளவு திருப்தி கொள்ள வைக்கப்படுகிறது. மேலும் வீடு, வாகனங்கள் யாவும் நீண்ட கடன் அடிப்படையில் வழங்கப்பட்டு கட்டாயக் கடனிறுப்பிற்குள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது பொதுவான நடைமுறையாயினும் நம்மவர்கள் அதில் திருப்தி கண்டு பல்வேறு வேலைகளைத் தொடர்ந்து பல மணி நேரங்களாகச் செய்து வருகின்றனர். இதனால் அவர்களிடையே தாமும் தமது குடும்பம், உறவுகள் என்பதற்கும் அப்பாலான சமூகச் சிந்தனை என்பது அற்றுப் போய்க் கிடப்பதையே காண முடிகிறது. இருப்பினும் இவற்றுக்கிடையே மக்கள் சமூகச் சிந்தனையும் கொண்ட சிறுபகுதி

கேள்வி: அவ்வாறானால் கடும் உழைப்பின் மத்தியில் அவர்கள் கண்டு கொள்ளும் மகிழ்ச்சி நிம்மதி அல்லது ஆறுதல் எந்தளவில் இருக்கின்றன?

பதில்: நீங்கள் குறிப்பிட்ட மேற்படி விடயங்கள் புலம்பெயர்ந்த நம்மவர்கள் மத்தியில் மிகக் குறைந்த வீதத்திலேயே இருந்து வருகின்றன. திருமணங்கள், மரணங்கள், பிறந்தநாட்கள், கோவில்கள்- திருவிழாக்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட நேரங்களில் பங்கு கொண்டு ஒன்று கூடலாக்கிக் கொள்வதற்கு அப்பால் நமது சூழலில் போன்று அங்கு நடந்து கொள்வது கிடையாது. நடந்து கொள்ளவும் அங்குள்ள சூழல் இடம் தருவதில்லை.

கேள்வி: கடல் கடந்து பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தமிழர்களின் பண்பாட்டைப் புலம் பெயர்ந்தோர் பாதுகாத்து வருகிறார்கள் என்று விதந்து பேசப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: புலம்பெயர்ந்த நாடுகளில் நம்மவர்களிடையே பண்பாட்டுத் தளத்தில் புதுவித மாற்றங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூற முடியாது. மொழி, நடை, உடை பாவனை போன்றவற்றில் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆனால் தமிழர் பழமைவாதக் கருத்தியல் ஊடான சடங்குகள் கிரிகைகள், வழமைகள் யாவும் மரபின் பெயரால் கொண்டு செல்லப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் சாதிய, ஆணாதிக்க, மதப் பிற்போக்குத்தனங்கள் உறைந்து கிடக்கின்றன. மேற்குலக முதலாளித்துவ சூழலுக்குள்ளும் நமது பழமைவாத நிலவுடமைக் கருத்தியலும் சிந்தனையும் நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. ஒரு மூடுண்ட சமூகத்திற்குள் காணப்படும் பழமைவாதமே பண்பாடு என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. இது அடையாளத்திற்கு உரியதாக இருக்குமே தவிர, ஒரு ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு உரியதாக இருக்க முடியாது. இதனை ஒரு கேடான விடயம் என்றே கருத முடியும்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட சாதியம், ஆணாதிக்கம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்து அகன்று அல்லது அற்றுப் போய் வருவதாகக் கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: அப்படித்தான் மேலோட்டமாகப் பேசுவோர் கூறி வருகின்றனர். அங்குள்ள பெரும்பான்மையான தமிழர்களிடம் சாதியப் படி நிலைச் சிந்தனை நடைமுறையானது இறுக்கமாகவே படிந்திருந்து வருகிறது. காதல் திருமணம் என்ற இடத்திற்கு வரும் போது சாதியமும் ஆணாதிக்கமும் மேலோங்கி நிற்பதை அங்கு காண முடியும். அதே வேளை ஒரு சிலர் இதனை மீறச் சென்ற சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்களிடையே இறுக்கமாக இருந்து வரும் பழமைவாதக் கருத்தியலும் அதன் வழியாக ஊறிப் போன சாதிய ஆனாதிக்கச் சிந்தனை நடைமுறைகளும் உடைத்தெறியப்படாத வரை இங்கும் சரி புலம் பெயர்;ந்த சூழலிலும் சரி அவை நீடிக்கவே செய்யும்.

கேள்வி: இலங்கையில் யுத்தத்தின் முடிவிற்கும் விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் பின்னான சூழலில் உங்கள் அரசியல் பயணம் இடம் பெற்றிருக்கிறது. இவை பற்றி புலம் பெயர்ந்தோரிடம் எத்தகைய உணர்வலைகள் காணப்படுகின்றன?

பதில்: யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளும் அவர்களது நியாயமாhன அபிலாஷைகளும் தோற்கடிக்கப்படக் கூடாது என்பதிலும், யுத்த முனையில் மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதிலும் புலம் பெயர்ந்தோர் பொதுவான அக்கறையைப் பரவலாகக் கொண்டிருந்தனர். அதனாலேயே அவர்கள் அந்தந்த நாடுகளில் பல்லாயிரக் கணக்கில் அணி திரண்டு நின்றனர். ஆனால் அவ் வெகுஜனத் திரட்சியை விடுதலைப் புலிகள் தமது இருப்பிற்கும் தேவைக்கும் பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை அர்த்தமற்றவையாக்கிக் கொண்டனர். அதனால் அங்கு புலம் பெயர்ந்த மக்களிடம் தோல்வி, விரக்தி, அந்நியப்பட்டு சலிப்படைந்து, ஒதுங்கிப் போய் நிற்கும் போக்கு என்பன மேலோங்கிக் காணப்படுகின்றன. அதே வேளை யுத்தத்தை முன்னெடுத்த அரசாங்கத்தின் மீதும் அதற்கு ஆதரவு தந்த நாடுகள் மீதும் வெறுப்புடையவர்களாக இருந்தும் வருகின்றனர்.

கேள்வி: புலம்பெயர்ந்த தமிழர்கள் நடுவே விடுதலைப் புலிகள் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்கனவே கட்டியெழுப்பப்பட்டிருந்தன. ஆனால் அவர்களின் வீழ்ச்சி அங்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

பதில்: தமிழ்த் தேசியத்தின் பெயரிலான நடைமுறைச் சாத்தியமற்ற தூரநோக்கற்ற கொள்கை மீது கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் என்ற கனவுக் கோட்டை தகர்ந்து தரை மட்டமாகிக் கொண்டது. இந் நிகழ்வானது அங்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் தோல்வி விரக்தி ஆகியவற்றால், நம்பிக்கை வரட்சியே காணப்படுகிறது. அதன் நடுவே தூர நோக்கில் பட்டறிவுடன் சிந்திப்போரும் இருந்து வருகின்றனர்.

கேள்வி: மக்கள் மத்தியில் விரக்தியும் நம்பிக்கையீனமும் இருந்து வரும் சூழலில் அங்கு விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது?

பதில்: புலம் பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே இருந்த வருகிறது. அவர்கள் வீழ்ச்சிக்குப் பின்பு தங்களுக்குள் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் மறுத்தும் தூற்றியும் வருகிறார்கள். தற்போது அவர்கள் மூன்று குழுக்களாகப் பிளவு பட்டு நிற்கிறார்கள். அதில் எந்தவொரு குழுவும் கடந்த காலத்தில் இடம் பெற்றவைகள் பற்றி எவ்வித பொறுப்போ அன்றி சுயவிமர்சனமோ இன்றி பழைய குட்டையில் ஊறிய மட்டைகள் போன்றே பேசியும் எழுதியும் வருகின்றனர். அதேவேளை இம் மூன்று குழுக்கள் மீதும் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாத தன்மையே காணப்படுகிறது.

கேள்வி: புலிகள் இயக்கம் இவ்வாறு தம்முள் சிதறுண்டு கிடப்பதற்கும் அதன் பிரமுகர்கள் தமது நிலைப்பாடுகளைத் தலைக்கீழாக மாற்றி சுகங்களை நாடி நிற்பதற்கும் அடிப்படைக் காரணம் என்ன?

பதில்: தேசிய விடுதலை இயக்கம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எந்தவொரு இயக்கத்திற்கும் கோட்பாட்டு வழியிலான கொள்கை நிலைப்பாடு அவசியம். தமிழீழக் கோரிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் வெற்றிக்கான வெற்று முழக்கமாகவே அன்று முன்வைத்தது. அதன் பின் அதனைத் தமதாக்கிய தமிழ் இளைஞர் இயக்கங்களும் எவ்வித புரிதலும் இன்றி குறுகிய எதிர்பார்ப்புகளுடன் ஆயுத மோகத்தையையே காட்டினர். இதில் பல படிகள் மேலே சென்று விடுதலைப் புலிகள் யதார்த்தமற்ற தமிழீழக் கோரிக்கையை எவ்வித கோட்பாட்டு அடிப்படையும் இன்றி முன்னெடுத்தனர். குறுகிய கால நலன்களுக்கான வெற்றிகள் நீண்டகால இலக்கு இன்றி வெறும் இன உணர்ச்சி, ஆயுத நம்பிக்கை நிலைப்பாடுகளால் தோல்வி கண்டன.

கேள்வி: தற்போதைய நிலையில் ஒட்டு மொத்தப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் காணப்படும் அரசியல் போக்குகள் எத்தகையவைகளாகக் காணப்படுகின்றன?

பதில்: அவர்களிடத்தில் பொதுவான விரக்தியும் நம்பிக்கையீனமும் பிரதான போக்காகக் காணப்படுகிறது. அதேவேளை இலங்கைத் தமிழ் மக்கள் பற்றி அக்கறைப்படுவோர் மத்தியில் மூன்று போக்குகள் காணப்படுகின்றன. ஒன்று தமிழீழம் தான் ஒரே தீர்வு என நம்புவோர். இரண்டு, இணக்கமாக இன்றைய அரசாங்கத்துடன் சென்று சலுகை அரசியலை முன்னெடுப்பது. மூன்று, மேற் கூறிய இரண்டு போக்குகளையும் நிராகரித்து இலங்கையின் யதார்த்த சூழலில் முன் வைக்கக் கூடிய அரசியல் தீர்வுக்கான கொள்கையினை, கோட்பாட்டடிப்படையில் முன் வைப்பது என்பதாகவே காணப்படுகிறது. இம் மூன்றாவது மாற்று அரசியல் தேடல் போக்கினை சமூக அக்கறையும் மக்கள் சார்பும், சமூக மாற்றமும் பற்றிச் சிந்திக்கும் கணிசமான பகுதியினர் கொண்டுருக்கின்றன்.

கேள்வி: புலம்பெயர்ந்தவர்களிடம் நாடு கடந்த தழிழீழ அரசு’ என்பதற்கு எந்தளவில் வரவேற்பு இருந்து வருகிறது? அதனால் ஏதாவது பலாபலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அங்குள்ளவர்களிடம் இருக்கிறதா?

பதில்: இது முப்பத்திநான்கு வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கை போன்ற முழக்கமும், முட்டாள் தனமும் பிற்போக்குவாதமும் கொண்ட ஒன்றுதான். அதனை முன் வைத்தவர்கள் புலம்பெய்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள், மத்தியில் தம்மை உயர் அந்தஸ்த்தில் நிலை நிறுத்திக் கொண்ட மேட்டுக் குடித் தமிழர்களாவர். இவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் அழிந்து போன நாற்பதினாயிரம் மக்கள் பற்றியோ அன்று வெறுவிலிகளாக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் வன்னி மக்கள் பற்றியோ எவ்வித கவலையும் கிடையாது. அவர்கள் தமது ஆண்ட பரம்பரைக் கனவிலேயே மிதந்து கொண்டிருக்கிறார்கள். அதனை நனவாக்க அமெரிக்காவும் மேற்குலகமும் என்றோ ஒரு நாள் கை கொடுப்பார்கள் என எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதுவரை பழைய பழுதடைந்த கஞ்சியைப் புதுப்பானையில் வைத்து இடையிடையே சூடாக்குவதுதான்.

கேள்வி: வன்னியில் அல்லற்படும் மக்களைப் பற்றிய அலட்சியமான போக்கு அங்கு இருப்பதாகச் சொல்லுகிறார்களே அது உண்மையா?

பதில்: பெரும்பாலானோரிடம் வன்னித் துயரத்தினுள் மூழ்கி நிற்கும் மக்கள் பற்றிய அனுதாபமும் அக்கறையும் காணப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு அமைப்பு வாயிலாக அல்லது உதவிகள் சென்றடையக் கூடிய வகையில் சூழல்கள் இல்லாமல் இருப்பதையிட்டு ஆதங்கம் கொண்டுள்ளனர். அதே தனிப்பட்ட உதவிகள் பலவற்றை பலர் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த விடயம் நமது நாட்டின் அரசாங்கத்தோடு சம்மந்தமுடையதொன்றாகும். நீங்கள் குறிப்பிட்ட அலட்சியப் போக்கு மேட்டுக்குடி சிந்தனையுடையோர் மத்தியிலும் ஏற்கனவே ஏகப் பிரதிநிதித்துவம் செய்து நின்றவர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. இது அவரவர் கொண்டுள்ள உலகக் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

கேள்வி: நீங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கிய பிரதிநிதி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: எனது புரட்சிகரப் பொதுவுடைமை இயக்த்திலான முழு நேர அரசியல் பணி நாற்பத்தி ஐந்து வருடங்களைத் தாண்டி விட்டது. இந்தக் காலத்தில் முப்பதிநான்கு ஆண்டுகளை சாத்தியமற்ற இறுதியில் அழிவுகளைத் தேடி தந்த தமிழீழக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்து பொதுவுடைமைக் கொள்கையை வலியுறுத்தி வந்த முக்கியமானவர்களில் நானும் ஒருவன் என்பதில் இன்று திருப்தி கொள்கின்றேன். அன்று தமிழீழக் கோரிக்கைக்கு நாள்கோள் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த 1975ம் ஆண்டில் தமிழீழக் கோரிக்கை தவறானது, சாத்தியமற்றது, அழிவு தரவல்லது என்பதை விளக்கி தோழர் நா. சண்முகதாசனும் நானும் முக்கிய இரண்டு விவாத மேடைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் வாதிட்டவர்கள். அதில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கமும், ஈழவேந்தனும் எம்முடன் வாதிட்டவர்கள். எனவே கனடாவில் தமிழீழக் கோரிக்கைக்கான நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியோடு பேசியது எவ்விதத்திலும் தவறு அல்ல. அங்கும் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது மீண்டும் எம் மக்களுக்கு இருளடைந்த பாதையையும் நியாயமான அரசியல் தீர்வை மறுப்பதற்கு ஊட்டமளிக்கும் ஒருவகைச் சத்துணவு எனச் சுட்டிக் காட்டினேன். ஒருவர் எங்கே வேண்டுமானாலும் பேசலாம். என்ன அரசியலைப் பேசுவது என்பதே முக்கியமானதாகும். அன்றும் தவறான தமிழீழக் கோரிக்கையை எதிர்த்து நிராகரித்தோம். இன்றும் அதற்கான நாடு கடந்த தமிழீழ அரசு என்பதையும் நிராகரிக்கின்றோம்.

கேள்வி: மாக்சிச லெனினிசவாதிகள் தமிழீழக் கோரிக்கையை ஆதரிக்காது விட்டமையாலேயே இளைஞர்கள் பிழையான பாதையில் போனார்கள் என்று முன்னாள் போராளிகள் சிலர் சொல்லுகிறார்கள். அது உண்மையா? அவர்கள் அவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன? என்ன நினைக்கிறீர்கள?

பதில்: இது ஒரு காலம் கடந்த ஞானம் என்றே தான் கூற வேண்டும். சரியான ஒரு கொள்கையைப் பிழையான தலைமை முன்னெடுத்தால் பட்டறிவின் ஊடாக அத் தவறான தலைமை நிராகரிக்கப்பட்டு சரியான கொள்கை, சரியான தலைமையைப் பெற்றுக் கொள்ளும். அதே போன்று தவறான கொள்கையை ஒரு சரியான தலைமையால் முன்னெடுக்க முடியாது. ஏனெனில் அத் தவறான கொள்கையானது சரியான தலைமையை அழித்து விட வல்லதாகும். எனவே நாம் ஆரம்பத்திலிருந்து தவறான தமிழீழக் கோரிக்கை பற்றியும், பிழையான போராட்டத்தின் போக்குகள் பற்றியும் அவ்வப்போது சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன் வைத்து சரியான தடத்திற்கு வரவேண்டும் என வற்புறுத்தி வந்த வேளையில் அதில் அக்கறைப்படாதவர்கள் தமது தவறுகளை இன்று மாக்சிச லெனினிசவாதிகளின் தலைகளில் வைத்துத் தப்பிக் கொள்ள முனைவது எவ்விதத்திலும் நியாயமாகாது. அதனை விடுத்து தவறுகள் கோட்பாட்டுக் கொள்கை சுயவிமர்சனத்திற்கு ஊடாக் திருத்தப்பட்டு மாற்று அரசியல் மார்க்கத்திற்கு முன்வரல் வேண்டும்.

கேள்வி: அப்படியானால் மாற்று அரசியல் சக்தி என்பது எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இலங்கை இன்று ஒரு நவகொலனிய அமைப்பைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. இங்கே பல்வேறு முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் நிலைத்து நீடித்து வருகின்றன. வர்க்க, இன, சாதிய, பெண்கள் முரண்பாடுகளும் அவற்றின் மீதான ஒடுக்கு முறைகளும் நிலவுகின்றன. இவற்றில் வர்க்க முரண்பாடும் ஒடுக்குமுறையும் அடிப்படையானது. இன முரண்பாடும் ஒடுக்குமுறையும் பிரதானமானது. எனவே தேசிய இனப் பிரச்சினைகு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு காணக் கூடிய நிதானமான கொள்கை தேவை. அதனை வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயாட்சியாக, உள் சுயாட்சியாகவும் வென்றெடுத்து நிலை நாட்டல் வேண்டும். இதனைச் சிங்கள மக்களை எதிரிகளாகக் கொண்டு முன்னெடுக்க முடியாது. பிரதான எதிரி யார் நண்பன் யார் என்பது தெளிவாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் கொள்கையும் பரந்து பட்ட சக்திகளின் ஐக்கியமும் கட்டுதல் வேண்டும். இவற்றை பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எதிர்ப்புகள் மத்தியில் வெகுஜனமையப்படுத்தி மக்களது இயக்கங்களாக முன்னெடுக்க வேண்டும். இதையே நாம் மாற்று அரசியல் சக்தி எனக் கொள்கிறோம். இது ஒரு கடினமான பாதையும் முயற்சியுமாகும். இதனை விட வேறு மார்க்கம் இல்லை.

கேள்வி: நீங்கள் பேசிய கூட்டங்கள் கருத்தரங்குகள் கலந்துரையாடல்களில் பலவாறானவர்கள் பங்குபற்றினர். உங்கள் கருத்துக்களுக்கு எவ்வாறான வரவேற்பு இருந்தது?

பதில்: அங்கு பேசிய கூட்டங்களில் வரவேற்பு அவதானிப்பு விளக்கம் பெறுதல் எனப் பல தரத்திலும் பிரதிபலிப்புகள் இருந்தன. ஆனால் எனது கருத்துக்களுக்கு எதிர்ப்பு மறுப்பு என்பன இருக்கவில்லை. போராட்டத்தின் தோல்வி, நம்பிக்கையீனம் சோர்வு விரக்தி என்பனவற்றின் நடுவே எனது நீண்ட நேரப் பேச்சுக்களை மிகுந்த அவதானிப்புடன் உன்னிப்பாகக் கேட்டனர்.

கேள்வி: நீங்கள் நம்பும் ஒரு மாற்று அரசியல் சக்திக்கு புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஆதரவு திரட்ட முடியுமா? அதற்கான நம்பிக்கை உங்கள் பயணத்தில் உருவாகியுள்ளனவா?

பதில்: ஒரு மாற்று அரசியல் சக்தியின் அவசியத்தை அங்கு உணரும் போக்கு எழுந்துள்ளது. போராளி இயக்கங்களில் இணைந்து மக்கள் சார்பு, இன விடுதலை என நம்பிச் சென்று பின் விரக்தியுற்று வெளியேறிய நல்ல சக்திகளிடையே இம் மாற்று அரசியல் தேவை என்ற எண்ணமும் செயற்பாடும் தீவிரமாக இருந்து வருவதை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் மாற்றுக் கொள்கையும் மாற்று அரசியல் சக்தியைத் திரட்டுவதும் இலங்கையில் தான் செய்யப்பட வேண்டும். அதற்கான முன் முயற்சி மக்கள் மத்தியில் இருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும். அவ்வாறான முயற்சிகளுக்கும் செயற்பாட்டிற்கும் புலம் பெயர்ந்தோர் மத்தியில் இருந்து முழுமையான ஆதரவையும் அனுகூலங்களையும் பெற முடியும் என்ற நம்பிக்கை உண்டு.

கேள்வி: அவ்வாறெனில் புலம் பெயர்ந்த தமிழர்களை வலுவான ஒரு சக்தி என ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் இவர்களுடன் சிங்கள உழைக்கும் மக்கள்தான் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கக் கூடியவர்களாக உள்ளனர். அதே நேரம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் ஆகக் கூடிய பாத்திரத்தையும் பங்களிப்பையும் வழங்க முடியும். வழங்கவும் வேண்டும். அவர்களது முக்கியத்துவம் கொள்கை வகுப்பிலும் பரப்புரை செய்வதிலும், நிதி ஆதாரம் வழங்குவதிலும் முன் நிற்க முடியும். இவ்வாறு தான் உடனடிச் சூழலில் புலம் பெயர்ந்தோர் தமக்காகவும் நமக்காகவும் செயல் பட முடியும் என நம்புகின்றோம்

கொழும்பு நேர்கண்டவர்: பாலன்

நன்றி :  தினக்குரல்  வார இதழ்

Exit mobile version