Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாற்றம் காணவேண்டிய சிந்தனைமுறை… : ஞானசுந்தரம் மனோகரன்

இதுவரை இருந்த எங்களது போராட்டத்தை வழிநடத்திய சிந்தனை முறையில் மாற்றம் தேவை என்பது எல்லோராலும் உணரப்படுகின்றது. அப்படியாயின் எங்களிடமிருந்த ஒரு பொதுவான சிந்தனைமுறை, அதாவது எம்மக்களின் விடுதலைக்கான இதுவரை இருந்த அணுகுமுறைகளின் சிந்தனைமுறைதான் என்ன?

இந்த கேள்வி எழும்போதே அப்படியோரு சிந்தனைமுறை இருந்ததா என்றுகூட சிந்திக்கத் தோன்றுகின்றது. அப்படி பார்க்கும்போது எங்கள் மத்தியில் பெயர் தெரியாமலே பெரும்பான்மையான மக்களின் சிந்தனைமுறை புலிகளின் சிந்தனைமுறையாகத்தான் இருந்திருக்கின்றது. இதன் அடிப்படை எது?

இந்த சிந்தனைமுறை எங்களுக்குள்ளிருந்த சிந்தனைமுறைதான். இந்த சிந்தனைமுறைதான் எம்முரிமைக்கான போராட்டத்தில் பெரும்பின்னடைவையும், பெரியமனித அழிவையும் கொண்டுவந்துவிட்டது. ஆகவே இந்த சிந்தனைமுறையில் மாற்றங்காணவேண்டும்.

வன்னியில் போராட்டத்தலைமை அழிந்தபின்பும் பழைய சிந்தனை முறையுடன் சில முன்னெடுப்புக்களை தொடர்வது மீண்டும் எங்களை அழிவுக்குத்தான் கொண்டுபோகும். ஆகவே எங்களிடம் இருக்கின்ற இந்த சிந்தனைமுறை அடியோடு மாறவேண்டும். கடந்துவந்த முற்பது வருட அரசியல்போராட்டத்திலும் பின்வந்த முற்பது வருட ஆயுதப்போராட்டத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட சிந்தனைமுறைதான் இது.

இந்த சிந்தனைமுறை உருவானதின் காரணம் இதுவரை இருந்த போராட்ட தலைமைகளின் மையச்சிந்தனைதான். இந்த சிந்தனைகளுக்கெல்லாம் ஒட்டுமொத்த அடிப்படை யாழ்மையவாத சிந்தனை ஆகத்தான் இருந்திருக்கின்றது.
இதுதான்தான் புலிகளின் சிந்தனைமுறையும் கூட.

 ஏன் இதுவரையிருந்த அனைத்து போராட்ட தலைமைகளின் சிந்தனையாகவும் இருந்திருக்கின்றது. இன்று புலம்பெயர் நாடுகளில் பெரும்பான்மையானவர்கள் இந்த யாழ்மையவாதசிந்தனை உடையவர்கள்தான். ஆகவே இந்த சிந்தனைமுறையை புரிந்து கொள்வதின் மூலமே எங்களது போராட்டசிந்தனையில் மாற்றம்வரும்.

புலம்பெயர் நாடுகளில் இந்த யாழ்மையவாதசிந்தனை முழுமையாக பேணிக்காக்கப்படுகின்றது. சில வேளை தளத்தில் கூட புலம் பெயர் நாடுகளில் உள்ள முழுமையான யாழ்மையவாதசிந்தனை இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் அங்கு மக்களின் வாழ்நிலை தொடர்ச்சியாக மாறுதலுக்கு உட்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்கள் அங்கு உச்சத்தில் உள்ள யாழ்மையவாதசிந்தனையுடன் எந்தமாற்றமும் இல்லாமல் வாழ்கின்றார்கள். உதாரணமாக புலம் பெயர் நாடுகளில் உள்ள கோவில் நிர்வாகத்தில், தமிழ்பாடசாலைகளில், பழைய மாணவர்சங்கங்களில், சில கட்டமைப்புகளில் இந்த யாழ்மையவாதசிந்தனையின் அதிகாரத்தையும் சீரழிவையும் கண்கூடாக பார்க்கமுடியும்.

ஆகவே இந்த சிந்தனைமுறை மாறவேண்டும். இந்த அதிகார அரசுகளும், அதன் கூட்டாளிகளும் சேர்ந்து நிகழ்த்திய வன்னிமக்களின் அழிப்புக்கள் அனைத்திற்கும் காரணம் புலிகளின் போராட்டமுறைக்கு கிடைத்த தோல்விமட்டும்மல்ல. எங்கள் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும், சிந்தனைமுறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்விதான். ஆகவே இந்த சிந்தனைமுறை ஆய்வு செய்யப்படாமல், அதன் அடிப்படையான யாழ்மையவாதசிந்தனையின் உள் நடைமுறை தெரியாமல் அடுத்தகட்ட முன்னெடுப்பு ஆரோக்கியமாக அமையாது. ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புத்தான் தளத்தில் உள்ள மக்களுக்கு பெரும்பங்கு ஆற்றவேண்டிய தேவையுள்ளது.

மிகவும் இழிவான நிலைக்குவந்தநிலையில், எம் இனத்தின் அடையாளங்கள் எல்லாம் நசுக்கப்படுகின்ற நிலையில் இருந்து இதை நாங்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டும். இது ஒரு முக்கியமான காலகட்டம் . ஒரு புதிய தளத்திற்கு போகவேண்டிய இந்தக்கட்டத்தில் இதுவரை இருந்த சிந்தனைமுறை தூக்கி எறியப்படவேண்டும். அப்படியாயின் இந்த யாழ்மையவாத சிந்தனை கொண்ட புலம் பெயர் மக்கள் இதை தெளிவாக உணரவேண்டும். இதன்முலம் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வரும் .

யாழ்மையவாதசிந்தனைமுறையில் இருந்து வெளியே வந்தால்த்தான்
1 ) புலிகளின் சிந்தனை முறையின் தொடர்ச்சியை ஏற்கமாட்டோம்.
2 ) உலகில் எங்களைப் போல் ஒடுக்கப்படுகின்ற மக்களுடன் உறவை வளர்ப்போம்.
3 ) சில ஊடகங்கள், சில ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் தெரிந்துகொண்டும் மீண்டும் புலிகளின்
சிந்தனையை வேறு வழியில் வளர்க்க முற்படமாட்டார்கள்.
4 )இப்போது உள்ள கட்டத்தில் ஏதோவிதத்தில் போராட முற்படுபவர்களை பெயரைக் கொடுத்து ஒதுக்கி வைக்கின்ற வேலையையும் செய்யமாட்டார்கள்.
5 ) தங்களை மட்டும் புனிதமானவர்கள் என்று மையப்படுத்தி கருத்துக்களை விதைக்க மாட்டர்கள்.
6 ) புலம்பெயர் நாடுகளில் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூறுவதை ஒரு வழிபாடாக, வியாபாரமாக மாற்றிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

ஏன் எல்லோருமே ஒரே தளத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும்.

எங்கள் எல்லோரிடமும் இருக்கின்ற அதிகாரம் சார்ந்த இந்த சிந்தனைமுறை தகர்க்கப்படவேண்டும். இதனால்தான் கடந்த காலங்களில் தங்களின் அதிகாரத்தை மட்டும் சார்ந்த கருத்தியல் என்பது புலிகளின் அரசியலாக எல்லா இடங்களிலும் அதிகாரம் செலுத்தியது. இதுதான் புலம் பெயர் மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதன் வளர்ச்சிப்போக்குத்தான் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் அழிக்கும் சக்தியாக மாற்றியது. இப்போது தளத்திலும், புலத்திலும் உள்ள அனைத்து போராட்டக் கூறுகளையும் அடியோடு அழித்து விட்டது. ஒட்டுமொத்த சமூகக் கூறுகளெல்லாம் நசுங்கிப் போய் விட்டது.

ஏன் எம்முரிமையைக்கூட பேச இருந்த தளத்தையும் அழித்துவிட்டது. இதற்கு எல்லாம் காரணம் இந்த யாழ்மையவாதசிந்தனையாகும்.
யாழ்மையவாதசிந்தனை என்ற குறியிட்டு சொல்லின் பின்னே உள்ள அதன் உள் நடைமுறையை புரிந்துகொண்டால்தான் நாங்கள் ஒவ்வொருவரும் இந்த சிந்தனைமுறையின் ஆதிக்கத்திலிருந்து வெளியே வரலாம். மேலும் எங்கள் சிந்தனைமுறைகளிலும் மாற்றம் வரும். இதன்மூலம் தான் புலிகள் உட்பட மற்றைய போராட்டசக்திகளும் இதுவரை இருந்த சிந்தனைமுறையில் இருந்து வெளியே வரலாம். இது தான் ஒரு பலமான தளத்தை உருவாக்கும் .

கடந்த காலங்களில் நிறைய விடயங்களுக்கு குறியிடும் சொல்லை (யாழ்மையவாதசிந்தனை )கொடுத்து ஒதுக்கிவிட்டோம். அதன் உள் நடைமுறையை பார்க்க முற்படவில்லை. இப்போது ” யாழ்மையவாதசிந்தனை” என்ற குறியிடும் சொல்லை உடைத்துப் பார்ப்பத்தின் மூலம்தான் எம் சிந்தனையை மாற்றி அமைக்க முடியும்.

யாழ்மையவாதசிந்தனை என்பதின் பொருளை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்வோமாக!!

Exit mobile version