மனிதப் பேரவலத்தைச் சந்தித மனிதக் கூட்டத்தின் எச்ச சொச்சங்கள் நாங்கள். அந்த சமூகத்தை தமது வசதியான இருப்பு நிலையிலிருந்து ஆதிக்கம் செலுத்த முனையும் அதிகார மையங்கள், அதன் பிரதிநிதிகளான மனிதர்கள் அவர்களால் ஆளுமை செய்யப்டும் அப்பாவி மக்கள் என்பன அனைத்தும் இன்று புதிய கருத்தியல் போராட்டத்தின் தேவையை முன்னெப்போதும் இல்லாதவாறு உணர்த்துகின்றன.
இவ்வாறான அனைத்துச் சலசலப்புக்களும் மத்தியில் தான் வன்னிப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்டன. இரண்டு வருடங்களின் பின்னதாக அந்தப் படுகொலைகளை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த அதிகார மையங்கள் அவை குறித்துப் பேச முற்படும் போது துரித வேகத்தில் இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் வருடங்கள் சென்ற பின்னர் வட கிழக்கில் ஒரு தேசிய இனம் வாழ்ந்தது அழிந்துபோனதான சோக வரலாறு குறித்து இதே அதிகார மையங்கள் பேசிக்கொள்ள அதன் எச்ச சொச்சங்களான அப்பாவித்தமிழர்கள் புழகாங்கிதமடைந்து கொள்வார்களோ?
அறுபது வருடங்களுக்கு மேலாகக் தொடர்ச்சியான வன்ன்முறைகளுக்கு உட்படுத்தப்படும், தெற்காசிய அரசியல் அதிகாரங்களின் துருப்புச் சீட்டான தமிழ்ப் பேசும் மக்கள் இப்போது சர்வதேச அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த அடிப்படையில் தெற்காசிய ஒடுக்கப்படும் மக்களின் சிந்தனைத் தளத்தை உலகின் ஒடுக்கும் ஏகபோகங்கள் ஆக்கிரமிக்க முற்படுகின்றன.
இதற்கு எதிரான மாற்று அரசியல் தளம் ஒன்றையும் அதற்கான சிந்தனைத் தளத்தையும் உருவாக்கும் முயற்சிகள் எப்போதும் போலவே மிகப்பெரும் அதிகார பலத்துடனனான மோதுகையின் விளைவிலிருந்தே உருவாகமுடியும். அவ்வகையான மோதுகையில் பலமிழந்து மந்தமடைந்து போகின்ற மனிதர்கள் மத்தியில் புதிய சிந்தனையைக் கட்டமைப்பதற்கான கருத்தியல் போராட்டம் சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களும் அப்பால் நடத்தப்பட வேண்டும்.
அபோராட்டம் குழுவாத சேற்றிலும், மத்தியதர வர்க்க உணர்ச்சிகளிலும், புனிதம் குறித்த புனைவுகளிலும், வரட்டுவாதங்களிலும் ஒரு புறத்தில் சிக்கியிருக்க மறுபுறத்தில் இவற்றின் மத்தியிலிருந்து மேலெழுகின்ற வியாபர அரசியல் ஏக போகங்களின் நலன்களோடு இணைவை ஏற்படுத்திக்கொள்கிறது.
முப்பதாண்டுகளாக அழிவுகளை மட்டுமே சேகரித்து வைத்திருக்கும் போராட்ட வரலாற்றிலிருந்து குறைந்த பட்சம் கற்றுக்கொள்வதைக்கூட நிராகரிக்கும் இந்த வியாபரிகள் தேசியம் குறித்த அரசியல் சிந்தனையை அதிகார மையங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இங்கே இரண்டு பிரதான எல்லைக்கோடுகளுக்கு நடுவே புதிய மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். மக்கள் அரசியலைச் சாராது ஏகாதிபத்தியங்கள் குறித்து மட்டுமே பேசுகின்ற இடது சாரி திருட்டு அரசியல் வியாபாரிகள் ஒரு புறத்திலும் மறுபுறத்தில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்குள் மக்களை இழுத்துச் செல்கின்ற இனவாதிகள் இன்னொரு புறமுமாக மக்கள் சார் அரசியலுக்கு எதிரான போராட்டங்களை ஏகாதிபத்தியங்களின் முகவர்கள் திட்டமிட்டு நடத்துகின்றனர்.
30 வருடப் போராட்டம் உருவாக்கிய, குறுக்கு வழிகளில் இரந்து பெற்றுக்கொள்கின்ற சிந்தனை முறை அதிகார மையங்கள் பயன்படுத்திகொள்வதற்கான அத்தனைக இடைவெளிகளையும் விட்டுச் சென்றிருக்கிறது.
இதற்கெதிரான கருத்தியல் போராட்டத்தை நடத்துவதற்கான இடைவெளியையும் சந்தர்ப்பத்தையும் கூட அறிவுசார் சமூகம் எமக்கு முன்னால் விட்டுச் சென்றிருக்கிறது. வியாபார அரசியல், குழுவாத, அதிகார நலன்களுக்கு எதிராக இந்த இடைவெளியை இப்போது பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் மிக நீண்ட காலத்திற்குச் சமூகத்தை அழிவின் விழிம்பிற்குள் இழுத்துச் செல்பவர்களாகிவிடுவோம். இதற்கான பொறுப்பு சமூகம் குறித்துச் சிந்திக்க மறுக்கும் ஒவ்வொருவரையும் சாரும். குறைந்தபட்சம் இதனை நோக்கிய ஒருங்கிணைவு இன்று அவசியமாகிறது.
நிலவும் சிந்தனை முறையின் ஒவ்வொரு கூறுகளும் கேள்விக்குள்ளாகப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் மேற்கிலிருந்து விதைக்கப்பட்ட நச்சு விதைகளின் எல்லைக்குள்ளேயே இதற்கு எதிரான கருத்தியலும் உருவானது. மேற்கின் தீய எண்னங்களுக்கு எதிரான அரசியல் என்பது அடிப்படை வாதமாக மேலும் உறுதிபெற்ற சமூகவிரோதச் சிந்தனையாக உருவானது. மேற்கின் நோக்கங்களுக்கு எதிரான இஸ்லாமிய சமூகம் அடிப்படை வாதத்தோடு எதோ ஒரு வகையில் தொடர்புகொள்ளும் நிலை உருவானது. அதனைக் கையகப்படுத்திக்கொண்டவர்கள் அரசியல் வியாபாரிகளும் சந்தர்ப்ப வாதிகளுமே.
ஆக, இஸ்லாமிய அடிப்படை வாதம் மற்றும் அதற்கு எதிரான மேற்கின் அதிகாரம் என்ற இரண்டு துருவங்கள் உருவாகின. இவை இரண்டுமே ஏகாதிபத்தியங்களின் ஆளுகைக்கு உட்பட்டவையாக அமைந்திருந்தன.
மேற்கில் அனைத்து இஸ்லாமியர்களையும் சமூகவிரோதிகளாகக் காணும் சமூகப் பொதுச் சிந்தனை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அதன் மறு புறமும் அவ்வாறே அமைந்திருந்தது.
ருவாண்டாவில் இனப்படுகொலை 8 லட்சம் மக்களைக் கொன்று குவித்து பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் குர்ரு மற்றும் துர்சி இனக்குழுக்கள் இரண்டுமே சாதாரண மக்களயும் எதிரிகளாகவே கருதிக்கொள்கின்றனர்.
மிக நீண்ட காலமாகச் சிறுபான்மையினரின் அரசதிகாரம் தோற்றுவித்த வெறுபுணர்வு உருவாக்கிய கருத்தியலையும் ஆண்ட பரம்பரை, அறிவுடையோர் என்று உருவாக்கப்பட்ட கருத்தியலில் கட்டுண்டிருந்த துர்சி இன மக்களின் சிந்தனையையும் ஏக போகங்கள் மோதவிட்டு வேடிக்கை பார்த்தன.
தமிழ்ர்கள் அனைவரும் தம்மை அழித்துவிடுவார்கள் என்ற பய உணர்வு சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் அனைவருமே தமிழர்களின் எதிரிகள் என்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியிலும் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. ஏகாதிபத்தியங்கள் காலனியக் காலத்தில் உருவாக்கிய இந்தச் இந்தனை அதன் முகவர்களால் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டது. தெற்காசிய அரசியலின் துருப்புச் சீட்டாகப் பயன்பட்ட இந்த முரண்பாடு இப்போது சர்வதேசிய அரசியல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் என்ற அரசியல் தளத்தை அதன் சரியான அர்த்தத்தில் உறுதிபடுத்துவதும் இதன் அழிவுக்கு உட்படுத்தும் இனவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வதும் இன்று அவசர தேவை.
வியாபார இடதுசாரிகள் கூறுவது போல் வர்க்க முரண்பாட்டை முன்வைத்து தேசிய இனங்களின் தன்னுரிமையை நிராகரிப்பது திருட்டுத் தனம். சந்தர்ப்ப வாதம். பாசிசம் கோலோச்சுவதைப் பார்த்த்துகொண்டே மௌனித்திருக்கும் அவமானகரமான அரசியல். இவை எல்லாவற்றிற்கும் மாறாகக் கருத்தியல் தளத்தில் அனைத்து வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டும். மனித் உரிமை அமைப்புக்களிலிருந்து ஜனநாயகவடிவங்களின் புதிய காலத்தின் அரசியல் வரை விசாரணை செய்யப்பட வேண்டும்.எமது சிந்தனை முறையின் அனைத்து வேர்களும் அசைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
தெற்காசியாவின் மனித மாதிரியை உருவாக்கும் ஏகபோகங்களின் அழிவு அரசியலுக்கு எதிரான மாற்றை உருவாக்குவதிலிருந்தே புதிய அரசியல் உருவாக இயலும்.