நீங்கள் ஆய்வு, திறனாய்வுத் துறைக்கு வந்த பின்னணி என்ன?
பின்னர் 4 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டு எம்.ஏ.ஆயத்தம். நான், கைலாசபதி, தில்லைநாதன் (பேராதனைப் பல்கலைப் பேராசிரியர்) மூவரும் ஒன்றாக எம்.ஏ. செய்தோம்.
இது ஐம்பதுகளில் நடந்தது. இந்தக் காலகட்டத்தில் இடதுசாரி எழுச்சி காணப்பட்டது. அந்த எழுச்சியில் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு வந்தது.
அந்தச் சமயத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் இருந்தது. ஆனால் எல்லோருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்ல. இதில் இரண்டு போக்குகள்
1. தென்னிந்திய வணிகச் சஞ்சிகைகளின் செல்வாக்கிலிருந்து விடுபடவேண்டும்.
2. இலங்கையின் சுதேச நிலைமைகளைப் பேசவேண்டும்.
ஆகிய இரண்டு போக்குகள் இருந்தன. இந்தப் போக்குகளில் கதை எழுதியவர்கள் யார் என்பது மிக முக்கியமானது. இவர்கள் புதுத்தலைமுறை எழுத்தாளர்கள்.. டேனியல் ஜீவா, ரகுநாதன் போன்றவர்கள். இவர்களை எழுத்தாளர்களாக ஏற்காத நிலைமை ஒன்றிருந்தது. இவர்களின் எழுத்துக்களின் பிரச்னைகளை ஏற்பதும் அன்றைக்கும் பிரச்னை. இவர்களைப் போல் பேச்சுத் தமிழில் , வழக்குத் தமிழில் கொச்சையாக பச்சையாக எழுதலாமா என்கின்ற கேள்வி அந்தக் கட்டத்தில் பண்டிதப் பாரம்பரியத்தை நிறுவ விரும்பியவர்கள் இவர்களை கண்டித்தார்கள். புதிய தலைமுறையிலும் பலர் இவர்களிலிருந்து வேறுபட்டார்கள். புதிய எழுத்தின் உட்கிடக்கை பற்றிய பிரச்னை அது.
புதிய விஷயங்களை எழுதுவதும் கூடத் தமிழ் மரபில் ஒன்று தான் என்று நாங்கள் வாதிட்டோம். அப்போது நாங்கள் மூன்று காரியங்கள் செய்யவேண்டியிருந்தது. ஒன்று, தமிழை வரன்முறையாகப் படித்த பாரம்பரியத்தின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. இரண்டு, இந்தப் புதிய இலக்கியவாதிகளுடைய தடங்களின் பொதுவான – உலகப் பொதுவான விஷயங்களைக் கண்டறியவேண்டியிருந்தது. மூன்றாவது அடிநிலை மக்களின் எழுத்து முறைமையை நியாயப்படுத்த வேண்டியிருந்தது. இதை அந்தக் காலத்தில் இழிசனம் இலக்கியம் என்றே பழித்தார்கள்.
பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே ரகுநாதன் நெருங்கிய பழக்கம். விஜயபாஸ்கரன், தி.க.சி தொடர்பும் உண்டு. சி.சு.செல்லப்பா தெரியும். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் தமிழகத்திற்கும் தெரிந்த எழுத்து ஆர்வலர்களாக மேற்கிளம்பினோம்.
அப்போது இரண்டு கடமைகள் எங்களுக்கு இருந்தன.
1.நவீன இலக்கியங்களைப் படைப்பது
2.பரம்பரை இலக்கியங்களை மீள்நோக்குச் செய்வது
சமூக விமர்சனம் செய்வதை, அதாவது மார்க்சிய நோக்கில் பார்ப்பதை நவீன இலக்கியங்களுக்கு மட்டுமல்லாமல் பழையவற்றிற்கும் கொண்டு போவதை எங்கள் கடமைகளாக அப்போது தான் உணர்ந்து கொண்டோம்.
எங்களுக்கு இயல்பாக இருந்த தேடலில் மார்க்சிய நோக்கில் தமிழ் இலக்கியத்தைப் பார்த்தோம். கமாலுதீன், சதாசிவம் போன்றவர்களுடன் சேர்ந்து இந்தத் தேடலை நடத்தினோம். அப்போது ‘இயக்கமும் இலக்கியமும்’ என்கின்ற என்னுடைய கட்டுரைத் தொடர் தேனருவி என்கின்ற இலங்கைச் சஞ்சிகையில் வந்து கொண்டிருந்தது. பாலுமகேந்திரா அப்போது இலங்கையில் இருக்கின்றார். அவரும் எங்களோட உறவாடிய நண்பர். அரசியல், சமூக, உளவியல், அறிவியல் தேடல் எங்களிடையே இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் எங்களிடம் இன்னொரு அம்சம் இருந்தது. அது பிற்காலத்தில் இல்லாமல் போய்விட்டது. அதாவது சிங்கள தமிழ்ப்புலமையாளரிடையே இருந்த உறவு எங்கள் சக மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம். நாங்கள் தமிழ் பற்றிச் சொல்ல அவர்கள சிங்களம் பற்றிப் பேச இருவரும் ஆங்கில இலக்கியம் குறித்து வாதாட – இப்படி… துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் பிற்கால மாற்றங்களால் அந்த அம்சம் இல்லாமல் போய்விட்டது.
இத்தகைய ஊடாட்டங்கள் காரணமாக நாங்கள் திறனாய்வுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டபோது தான் முற்போக்கு இலக்கிய சம்பந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம். அந்த நிலைப்பாட்டை நிலைநிறுத்த முயலும்போது அதற்குப் பின்னர் நிலவிய இலக்கிய நோக்கை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கைலாசபதியிலன் தமிழ் நாவல் இலக்கியம் எனது தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் அந்தக் காலப்படைப்புக்கள்.
நவீன இலக்கியத்தில் ஈடுபட்ட பிறகு இந்த ஆய்வை pre modern period ( முன்நவீனத்துவக்கால கட்டத்திற்குக்) க்கு கொண்டு போக முடியாதா என்கின்ற கேள்வி எழுந்தது. அப்போது பட்ட மேற்படிப்பிற்காக கைலாசபதியும் நானும் பேராதனைப் பல்கலைக்கழகம் வந்தோம்.
மார்க்சியம் எங்களுக்குப் பெரிய உலகத்தைத் திறந்து விட்டது போல இருந்தது. மார்க்சியத்தை அறியும் வாய்ப்பு, அப்படித் தான் திறனாய்வுத்துறைக்கு வந்தோம்.
திறனாய்வு என்பது வெறுமனே அபிப்பிராயங்களைக் கூறுவதல்ல. ஒரு திட்டவட்டமான அடிப்படையில் இலக்கியங்களை நோக்குவது என்கின்ற ஒரு விஷயம் அதில் கலந்தது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கின்ற ஒரு அநவாழனழடழபல ஐ நாங்கள் மேற்கொண்டோம். அந்தக் காலத்தில் க.நா.சு, சி.சு. செல்லப்பா, ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் போன்றவர்களோடு இருந்த தொடர்பு காரணமாக இரண்டையும் இணைத்துப் பார்க்கின்ற நோக்கு ஏற்பட்டது.
கைலாசபதி, சிவத்தம்பிக்கு முன்பு இலங்கையில் இலக்கியத் திறனாய்வு எப்படி இருந்தது?
எங்களுடைய காலத்திற்கு முன்பு இந்த மாதிரியான இலக்கிய விமர்சனம் இருந்தது கிடையாது. ஆனால், இலக்கிய ஈடுபாடு இருந்தது. மறுமலர்ச்சி இயக்கம் 40 களில் தொடங்குகிறது. அவர்கள் பாரதியைத் தங்கள் ஊற்றுக்காலாகக் கொண்டார்கள் .மற்றது இலங்கையில் இருந்த அரசியல் நிலைமைகள் காரணமாகத் தமிழ் பற்றிய பிரக்ஞையை முக்கியமான விஷயமாகக் கொண்ட போக்கு இவற்றை நாங்கள் இலக்கிய விமர்சனமாக நினைக்கவில்லை.
1956, 57 க்கு முன் வரன்முறையாக விமர்சனம் இல்லை. நாங்கள் கைலாசபதி,சிவத்தம்பி என்பது முக்கியமில்லை. அப்படி அதைப் பார்க்கக்கூடாது. இலக்கியத்தின் நன்மை,அதன் பணி என்பது பற்றிய விவாதம் தோன்றுவதற்கான சூழ்நிலை அல்லது புலமைச் சூழல் அதற்கு முன் இல்லை என்பது தான் குறிப்பிட வேண்டியது. இலக்கியத்தின் சமூகப் பணி சம்பந்தமான கருதுகோள்களை எடுத்துவைக்கிற அந்தச் சூழல் அதற்கு முன்பு இல்லை.
அறம்,பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு புருஷார்த்தங்கள் ஆன்ம விடுதலைக்குத் தான் இலக்கியம் என்கின்ற அந்தப் பாரம்பரியம் அல்லாமல் சமூக விடுதலைக்கும் இலக்கியம் பயன்படும். புலவர்கள் மட்டுமல்ல, யாரும் இலக்கியம் எழுதலாம். எவரும் எழுத்தாளர் ஆகலாம். …இந்த விதமான விவாதம் நடு 50 களில் தான் ஆரம்பம்.
ஒவ்வொரு எழுத்தையும் பிரசுரத்திற்கு முன்பாகவே நாங்கள் கூடி விவாதித்து விமர்சனம் பண்ணுவோம். ஒரு தோழமை உணர்ச்சியோடு இந்த விவாதம் நடக்கும். பிரசுரம் வந்துவிட்டதென்றால் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் எங்கள் விவாதம், விமர்சனம் அமையும். பிற்காலத்தில் கைலாசபதியும் நானும் பேராசிரியர்கள் ஆனோம். அப்போதும் எப்போதும் எங்கள் குழுவில் எல்லோருமே தோழர்கள் என்கின்ற அடிப்படையில் தான் பழகினோம். ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டோம். டேனியல் ஜீவா, ரகுநாதன், நந்தி ..இவ்வாறாக எங்கள் குழு அமைந்தது.
தளையசிங்கத்தின் அணுகுமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?
அவர் எங்களுக்கு சற்று முன்பே இலக்கியப் பிரவேசம் செய்தவர். சற்று வித்தியாசமானவர். இலக்கியத்திற்கு சமூக அடிப்படை சமூகத்தனம் தேவை என்றவர்,ஆனால் அதற்கு ஆன்மீக உயிர்ப்புஷம் வேண்டும் என்பது அவர் கருத்து. அவருக்கு எதிராக எங்கள் விவாதம் என்னவென்றால் மார்க்சியத்தை முழுதாக ஏற்கவேண்டும் என்பது தான். பின்னோக்கிப் பார்க்கும் போது பலமுறை சொல்லி இருக்கின்றேன். தளையசிங்கத்தின் நேர்மையைச் சந்தேகிக்கமுடியாது. தன்னுடைய கொள்கைக்காகப் போராடுபவர்.சமூகத் தளத்தோடு நில்லாமல் இலக்கில் அதன் விகசிப்பில் வேறுபடலாம் என்பவர் அவர்.
இலங்கையில் இலக்கியத்துறையில் அந்தக் காலகட்டத்தில் ‘விமர்சனம்’ ஏன் எதற்காக ஏற்பட்டது என்று தான் பார்க்கவேண்டும்.அப்போது ஒன்றாகப் படித்த அத்தனை பேரும் இலக்கிய விசாரத்தில் இறங்கினோம்.
ஒருவர் எழுதியிருந்தார். என் தகப்பனாருக்கே, சிவத்தம்பி என்பவர் இப்படியெல்லாம் எழுதுகின்றார் என்று எழுதியிருந்தார். நான் அவரது மகன் என்பது தெரியாத நிலை. என் தகப்பனார் அவன் என்னுடைய மகன் தான் என்றார்.இப்படி எங்கள் மீது மரபு காப்பவர்களால் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இது ஒரு அடிப்படையான Socio literary trend. Debate வந்தால் தானே ஆட்கள் வெளியே வரமுடியும். நாங்கள் வெளியே வரும்படியான சூழல் அன்று பாரம்பரியவாதிகளால் ஏற்பட்டது. ஆகவே வந்தோம் என்பது தான் முக்கியமே தவிர, கைலாசபதி, சிவத்தம்பி என்று பெயர்கள் மூலம் அதைக் குறிப்பது முக்கியமல்ல.
ஏன் இப்படி அமைந்ததென்றால் தமிழ் நாட்டுக்காரர்களுக்கு கைலாசபதி, சிவத்தம்பிக்கு முந்தைய விமர்சகர்களை அவ்வளவாகத் தெரியாது. ஆகவே அப்படிக் கேள்வியை அமைத்தேன்..
இலக்கிய விமர்சனம் எப்போது வரும்? இலக்கியத்தின் அம்சங்கள், பண்புகள் பற்றி ஒரு debate ஆரம்பம் ஆகும் போது தான் criticism.அது இன்றும் நடக்கின்றது. Marxist debate, strueturalistic debate, Neo Marxist debate இப்படி நாங்கள் சூனியத்திலிருந்து வரவில்லை. யாரும் அப்படிச் சூனியத்திலிருந்து வரமுடியாது. வரவும் கூடாது.
கைலாசபதியையும் உங்களையும் ஒருவராகவே – ஒன்று போலவே தமிழ் வாசகர்கள் கருதுகின்றார்கள். இருப்பினும் உங்கள் இருவரது ஆய்வு, திறனாய்வு அணுகுமுறைகளில் துல்லியமான வித்தியாசங்கள் இருக்கமுடியும். அவற்றை உங்கள் வார்த்தைகளில் பதிவு செய்யுங்கள்
ஆரம்பத்தில் நாங்கள் ரெண்டு பேருமே இந்த debate ல ஈடுபட்டிருந்தோம். கைலாசபதி இந்தக் காலகட்டத்தில் தினகரன் ஆசிரியராக இருந்தார். 1957 முதல் 67 வரை அவர் அதில் எழுத்தின் தன்மைகளுக்கு உருவாக்கம் தந்து வரும்போது எனக்கும் அதே வகையான உணர்வுகள் வந்திருக்கலாம். அடிப்படையில் நாங்கள் ஒரேவிதமான சிந்தனை உள்ளவர்கள்.நீண்டகால நண்பர்கள் கூட்டங்களில் பேசும்போது யார் முதலில் பேசுவது என்று இருவருக்கும் சண்டை வரும். ஏனென்றால் முதலில் பேசுபவர் இரண்டாமவர் கருத்தைச் சொல்லி விடுவோம். நாங்கள் ரெண்டு பேரும் ஒரே மாதிரித் தான் சிந்தித்தோம்.
பட்டப் பின் படிப்புக் கட்டத்தில் கைலாசபதி தத்துவத்தில் அக்கறை செலுத்தினார்.Heoric literature ஆய்வுக்குப் போன பிறகு comparative literature ஓப்பியல் சம்பந்தமான ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அது தானே அவரது . பிற்காலத்தில் ஒப்பியலில் தான் பெயர் பெற்றார் . புகழ் பெற்றார்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு வரலாறு, பொருளாதாரத் தொடர்புகள் இருந்த காரணத்தினால் தான் சமூக வரலாற்றில் அதிகம் ஈடுபாடு காட்டினேன். Ideology & Literary History இல் அழுத்தம் செலுத்தினேன். ஐனநழடழபல இரண்டு பேருக்கும் ஒண்ணு தான். Personality க்குள்ள ஒற்றுமையைப் பார்க்கவேண்டுமென்று சொன்னால் தனித்தமிழைப் பற்றி ரெண்டு பேருமே எழுதியிருக்கின்றோம் . என்னுடைய தனித்தமிழின் அரசியல் பின்னணி நூலாக வந்துள்ளது. அவரும் அதே மாதிரி எழுதியிருக்கின்றார்.
அவருடைய இலக்கிய ஆய்வு Marxist analysis of the Literary aspect.
ஆனால் இரண்டு பேருமே தனித்தமிழ் இயக்கத்தின் விமர்சகர்கள் இல்லையா?
ஆமாம். extremely critical இரண்டு பேருமே அப்படித்தான்.ஆனால் கோணங்கள் வேறு
அதன் பிறகு நான் நாடகத் துறையில் பிரவேசித்தேன். கைலாசபதிக்கு நாடகத்தில் அக்கறை ஈடுபாடு இல்லையென்று சொல்லக்கூடாது. அவரும் நடிகராக இருந்தார்.நாடகம் பற்றி அற்புதமாக விமர்சனம் செய்யக்கூடியவர். யார் எதைச் செய்தோம் என்று சொல்வது கஷ்டமாயிருக்கும். பின்னோக்கிப் பார்க்கும்போது அவர் இன்று உயிருடனில்லை. எனக்கு 65 வயதாகின்றது. அவருடைய ஸ்பெஷாலிட்டி ஒப்பியல் இலக்கியம். என் அழுத்தம் சமூக இலக்கிய வரலாற்றின் மீது. அந்த மாதிரி தான் எங்கள் இருவரையும் பார்க்கவேண்டும்.
இப்போதும் நீங்கள் தனித்தமிழ் இயக்கத்தின் எதிரி தானா?
தனித்தமிழ் இயக்கத்தை நான் இப்படிப் பார்க்கின்றேன். தமிழின் தனித்துவத்தை, அதன் சமூகப் பிரச்னைகளை மொழி நிலையிலிருந்து பேணுவதற்காகத் தோன்றிய இயக்கம் அது.ஆனால் ஒரு மொழி அவ்வாறு இயங்க இயலாது. அதற்காக ,தூய தமிழபை; பயன்படுத்தும் முயற்சிக்கு நானோ கைலாசபதியோ எதிரிகளல்ல. மொழியின் ஆளுமையை, ஆற்றலை பேசவேண்டும், எழுதவேண்டும் என்றால் நாம் சில வரலாற்று நீரோட்டங்களை நிராகரிக்கவேண்டியிருக்கின்றது. அதாவது பண்பாடுகள் இணைகின்றபோது மேலோங்கியுள்ள பண்பாடு.
இடதுசாரி அரசியலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? சோவியத் ஒன்றியச் சிதறல், சீனப் பாதை மாற்றம் என்கின்ற சூழலில் மார்க்சியத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
மார்க்சியம் பல்வேறு நாடுகளில் பல்வேறு மாதிரி இருக்கின்றது. லெனின்,ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் வேறு வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார்கள். இத்தாலியில்; வேறு மாதிரி பிரச்னைகள், பிரான்சில் இன்னொரு வகை, அமெரிக்காவில் முற்றிலும் வித்தியாசப்பட்ட மார்க்சியம் பிரிட்டன், ஹங்கேரியிலும் இப்படியே சூழலுக்கு ஏற்ற வகையில் மார்க்சியம் பற்றிய சிந்தனைகள் வருமத். இந்தச் சிந்தனைகள் எல்லாவற்றையும் நாங்கள் அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்புலத்தில் dynamics உடன் அசைவியக்கத்துடன் விளக்கிக்கொண்டு எங்களுக்கு எது சரி என்று பார்க்கவேண்டும்.
அதாவது ஒரே மாதிரியான தீர்வுகள் இல்லை
கிராம்சி சொல்கிற மாதிரி சில கருத்துக்களுக்கு hegemony இருக்கின்றது. குடும்பம், சமூகம், …பற்றிய சில கொள்கைகள் அழிவதில்லை. இவை அழியாததால் தனிச் சொத்து அழியாமல் போவதுமில்லை.
மார்க்சிஸ்ட் இன்டலெக்சுவல் எப்படிப் பார்க்கவேண்டும் என்றால், இந்தச் சிந்தனை மரபுகளுக்கான வரலாற்றுத் தேவைகள் யாவை. அந்த வரலாற்றுத் தேவைகளுக்கும் நமது வரலாற்றுத் தேவைகளுக்கும் உள்ள காரணகாரியத் தொடர்புகள். Marxim is a guide to polit action .ஆனபடியால் நாங்கள் இப்பொழுது மார்க்சியத்தைச் சரியான படியாகப் பார்க்கவேண்டியிருக்கின்றது
அதாவது இந்தப் பின்னடைவு காலத்தில்….
பின்னடைவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சில பேர் சொல்வது மாதிரி இது வந்து
சோஷலிசம் என்கிற ஐடியாலஜியின் பின்னடைவு அல்ல.
கோர்ப்பச்சேவ் இந்தப் பின்னடைவுக்கு கருவியாகப் பயன்பட்டுவிட்டார் இல்லையா?
ரஷ்யாவில் சோஷலிசத்தின் வீழ்ச்சி அகக்காரணிகளால் ஏற்பட்டதா, புறக்காரணிகளாலா என்று கேட்கிறீர்கள். நான் சொல்கின்றேன்.more due to internal, than due to external reasons.
Not because of Gorbachev alone?
கோர்பச்சேவ் கொண்டு வந்த கிளாஸ்தாஸ்ட் வருவதற்கான சூழல் அங்கே இருந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்களது விவசாயக் கொள்கை சரியத் தொடங்கிவிட்டது. அந்த அமைப்பும் சரியாக இயங்கிக்கொண்டிருக்கவில்லை
அதனால் தான் சுலபமாகப் போய்விட்டது ?
ஆமாம். சுலபமாகப் போய்விட்டது.புரட்சிகர எழுச்சி இல்லாத கசகஸ்தானிலும் ஆர்மேனியாவிலும் எப்படிக் கம்யூனிசம் நீடிக்கும். ரஷ்யாவில் புரட்சி நடந்தது. மாஸ்கோவில் அது நடந்தது. பிற இடங்களில் புரட்சியின் தேவை உணரப்படவே இல்லை. இன்டலக்சுவல்சும் சித்தாந்தத்தைக் கொண்டு போகவில்லை.
சைனாவில் இன்னும் கம்யூனிசம் பெயரளவுக்காவது நீடிக்கக் காரணம்? அதாவது, சைனாவிலும் இன்று சோஷலிசம் இல்லை….இன்னொரு வகையாகப் போய்க்கொண்டிருக்கின்றது இல்லையா?
சைனாவில் Thought of Mao என்றார்கள். ஏன் இப்படிச் சொல்லவேண்டும். அது கன்பூஷியன் பாரம்பரியம். அது ஒரு தேசிய மாடல். இதனால் தான் இப்போது கலாச்சாரத்தில் அழுத்தம், கவனம் தேவை என்கிறோம். கலாச்சாரத்தில் தான் தனிப்பட்ட சக்திகளும் சமூகச் சக்திகளும் பின்னிப்பிணைந்து செயற்படுகி;ன்றன. மனிதர்களின் தனித்தன்மைகளும் சமூக நிலைப்பட்ட அம்சங்களும் இந்தப் பண்பாட்டில் தான் நிலைபெற்று நிற்கும். அதற்கான தனிப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகின்றது.
சைனாவைப் பற்றி என்ன விமர்சனம் என்றால் அங்கேயும் கம்யூனிசம் போயாகிவிட்டது. வெறும் அரசியல் மட்ட கம்யூனிசம் தான் இருக்கின்றது. பொருளாதாரக் கொள்கைகளைக் கைகழுவியாகிவிட்டது என்பது தான்.
சைனா மிகப் பெரிய தேசம்.அங்கே எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவது கஷ்டம். ஆனால் ரஷ்யாவில் ஏற்பட்ட அளவு வீழ்ச்சி. இன்னும் ஏற்படவில்லை. அரசு இன்னும் இருக்கின்றது.
நாம் சோஷலிசத்தின் வீழ்ச்சி பற்றியே பார்க்கின்றோம். முதலாளித்துவம் இந்தக் காலகட்டத்தில் தன்னை எப்படி வளர்த்துக் கொண்டது என்று பார்க்கவேண்டாமா ?
மாறுதலுக்கேற்ப முதலாளித்துவம் தான் மாறிக்கொள்கின்றது. முந்தைய ஏகாதிபத்தியம் போல இப்போது அரசியல் குறுக்கீடு தரக்கூடிய நிலையில் அது இருக்கவில்லை. பொருளாதார ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது. . Trans- national companies வந்தாயிற்று. அது ஒரு புறம் . Concept of managemant . இன்று உலகத்தில் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் மனேஜ்மென்ட் படிப்பிக்கின்றார்கள். இதற்குக் காரணம் என்ன? இந்த மனேஜ்மென்ட் என்கிற ஐடியாவே sophisticated from of Capitalism அதாவது maximisation of profit .
லாபத்தை மட்டுமல்ல, சுரண்டலையும் அதிக பட்சமாக்குகிற முதலாளித்துவ நிறுவனம் அல்லவா?
ஆமாம். இ;ந்த முதலாளித்துவம் கம்யூனிசத்தின் தோற்றத்தையும் எழுச்சியையும் பார்த்துத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பிரச்னையை எதிர்நோக்கிய முறைமை இருக்கின்றதே அது மிகவும் சுவாரஸ்யமானது. அது தான் நாடு கடந்து எல்லை கடந்து பரவிய வசயளெயெவழையெட பின்னணி. இன்றைக்கு குழசன குழரனெயவழைn அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் எங்கே இருக்கின்றது. எல்லா இடத்திலும் அல்லவா இருக்கின்றது? ஆனாலும் ஓர் இடத்தில் தான் இருக்கின்றது. ஆக முதலாளித்துவத்தின் வளர்ச்சி – அது சோஷலிச வளர்ச்சிக்குப் பதிலாகத் தான் காட்டிய மாறுதலான முனைப்பு.
இன்னொன்று, முதலாளித்துவம் சோஷலிசத்தின் கடமைகளில் பல விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு விட்டது. ஒன்று, திட்டமிட்ட பொருளாதாரம். மற்றது, மக்களுக்கான சோஷியல் இன்ஷியூரன்ஸ் திட்டம் . சுரண்டல் மூலமாகவே மறைமுக நன்மைகளைப் பெற்று வந்த ஒரு பாரம்பரியம் மனித நேயமே வேண்டாமென்று சொல்லி விட்டது.தனி மனிதன் நன்றாகக் கவனிக்கப்படுவதால் அவனுக்கு மற்ற விஷயங்களைப் பற்றிக் கவலையில்லை.
மார்க்சியத்தின் எதிர்காலம் எப்படி?
மார்க்சியம் காலத்திற்கேற்றபடி வளர்க்கப்படவேண்டும். மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகள், சுரண்டல் முறைகளை அழிக்கமுடியாது. ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் பயன்படுத்தி வளரும் நிறுவனங்கள் மார்க்சியச் சிந்தனையை ஊக்குவிக்கப் போவதுமில்லை. ஆனால், மார்க்சியம் ஒரு முக்கியமான இன்டலெக்சுவல் இயக்கமாக இருக்கும். அதனைப் புதிய சூழலுக்கேற்ப புதிய முறையில் சிந்திக்கவேண்டும். மார்க்சியம் தொடர்ந்து மனித விமோசனத்திற்கான இலக்குகளைக் காட்டுகிற அளவு தத்துவமாக நீடிக்கும்.இதுவே என் கருத்து.
சமஸ்கிருதம் உருவாக்கப்பட்ட மொழியே
இலங்கையின் முதல் குடியேறிகள் – தொல்குடிகள் யார்? இன்றைய அதன் அரசியல் சிக்கலுக்கு என்ன தான் தீர்வு? தனி ஈழம் ஒன்று தானா அல்லது வேறு இடைப்பட்ட தீர்வுகள் சாத்தியமா ?
நீங்கள் கேட்கிற பாணியில், தொல்குடிகள் யாரோ அவர்களுக்குத் தேசத்தை விட்டு விட்டுப் பேசாமல் இருந்துவிட வேண்டும் என்கின்ற தொனி இருப்பது போல் தெரிகின்றது. அது அபாயமற்ற தீர்வு என்று நான் நம்பவில்லை. அப்படிப் பார்த்தால் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் பழங்குடிகளை அழித்துத் தான் வந்திருக்கின்றது வளர்ந்திருக்கின்றது. இப்படி வாதம் செய்பவர்கள் இருக்கின்றார்கள். இந்த வாதம் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்குப் பிரச்னை இருக்கின்றது. அதை எப்படித் தீர்க்கவேண்டும் என்பது தான் முக்கியம். யார் முதலில் யார் இரண்டாவதாக வந்தார்கள் என்பது பிரச்னையில்லை.
அந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பழங்குடிகள் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் அது தாய்நாடு. அதில் தங்களுக்கென்று பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தோற்றுவித்திருக்கின்றார்கள். அப்படிப் பார்க்கிற நிலைமையில் இந்தப் பிரச்னை தோன்றிய அளவில் நம்மிடம் தீர்வும் இருக்கின்றது. ஒருமுகப்பட்ட இலங்கையில் தமிழ் மக்களுடைய அரசியல் சாசன நிலைமை. ஆட்சி நிர்வாக அதிகாரம் – இந்தப் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றபோது எல்லாமே சுமுகமாகிவிடும். இவ்வளவு தான் இந்தியாவில் இருந்து கொண்டு நான் சொல்ல முடியும்.
இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் சிங்களவரின் பௌத்தத்திற்கும் தமிழரின் சைவ சித்தாந்தத்திற்கும் இரு சாராரின் முரணிய எதிர் எதிர் நிலைப்பாடுகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? அல்லது இவை முழுக்க முழுக்க இனவாதத்தை மட்;டுமே சார்ந்தவையா?
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சைவ சித்தாந்த மேலாண்மை என்பது யாழ்ப்பாணத்தில் மாத்திரம் தான் வித்தியாசம். என்னவென்றால் யாழ்பாணச் சைவ சித்தாந்தம், சமஸ்கிருதச் சார்புடையது. தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்தம், மெய்கண்டார் வழியில் தமிழ்ச் சைவ சித்தாந்தம். தமிழ் பேசுகின்ற பிராந்தியம் யாழ்ப்பாணம் மாத்திரமில்லை. இலங்கைத் தமிழர்களில் 9 சிறு சிறு பிரதேச வலயங்களைச் சேர்;ந்தவர்கள் இருக்கின்றார்கள். யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், மேற்குக்கரை, முஸ்லிம் பகுதி, மலையகம், இப்படி எல்லாம் சேர்ந்தது தான் இலங்கைத் தமிழினம்.
இவர்களில் பெரும்பாலான மக்கள் வடகிழக்குப் பகுதிகளில் வாழ்வதால் பிரச்னையும் வடகிழக்குப் பிரச்னையை மையமாகக் கொண்டு வந்தது யாழ்ப்பாணம் முக்கியம். ஆனால், தமிழர்கள் என்றால் யாழ்ப்பாணத்தவர்கள் மட்டுமல்ல.
பௌத்தத்தைப் பொறுத்தவரை சிங்களவர்கள் நிலையில் இரண்டு அம்சங்கள். 1 தாங்களே பௌத்தம் வளர்வதற்கான சரியான மனிதர்கள். இது மதகுருபீடம் சார்ந்த கருத்து. 2. நாங்கள் சொல்கிற பௌத்தம் தான் புத்தர் சொன்ன ஹீனயான பௌத்தம் என்றும் சொல்கிறார்கள்.
ஹீனயானம் என்கிறீர்களே, ஆனால் கோவில் கட்டி, புத்தர் உருவத்தை வைத்து வழிபடுகிறார்களே, அது எப்படி ஹீனயானமாகும்?
அதாவது தத்துவரீதியான ஹீனயானம் என்பது அவர்கள் வாதம்.நடைமுறையில் மகாயானம் சார்ந்த கூறுகளும் அதில் உண்டு. ஹீனயானத்திற்கும் மகாயானத்திற்கும் தத்துவப் பிரச்னைகள் இலங்கையிலும் உண்டு.ஆனால் அவர்கள் சுயநோக்கில் நாங்கள் தான் சரியான பௌத்தர்கள் என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இங்கே பௌத்தம் பயன்படுத்தப்படுகி;ன்றது.
இன்னொன்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் சைவ சித்தாந்தத்தை மன்னாரிலோ மட்டக்களப்பிலோ போய்ச் சொல்லமுடியாது. யாழ்ப்பாணத்தை வைத்துக் கொண்டே பிரச்னைகளைப் பார்ப்பதாலும் எங்களுக்குப் புதிய புதிய பிரச்னைகளும் உண்டாகின்றன.
அப்படியென்றால் சைவ சித்தாந்தம் இவர்களை இணைக்கவில்லை. ‘தமிழர்’ என்கிற அடிப்படையில் தான் இவர்கள் இணைகிறார்கள்.
அது நிச்சயம். தமிழர்களாக இருக்கும் தன்மையும் தமிழ் பேசுபவர்களாக இருக்கும் தன்மையும் தான் (அதாவது முஸ்லிம்களையும் சேர்த்து) இவர்களை இணைக்கின்றனவே தவிர சைவ சித்தாந்தம் அன்று.
திறனாய்வாளர்கள் என்று நீங்கள் எடுத்திருக்கும் துலாக்கோலில் இன்றைய தமிழகத்துக்குப் படைப்பாளிகளில் எவர் எவர்க்கு எடை அதிகம்? முன்பே இந்தக் கேள்விக்குப் பலமுறை பதில் சொல்லியிருக்கின்றீர்கள். இருந்தாலும்…
நான் ஒரு இலக்கிய வரலாற்றாசிரியனாகத் தான் படைப்பாளிகளைப் பார்க்கின்றேன். வரலாறு எழுதுபவன் தனக்கு வேண்டியவர்களைப் பற்றியே மட்டுமே சொல்லி மற்றவர்களை விட்டு விட இயலாது. கம்பனும் இருந்தான். ஓட்டக்கூத்தனும் இருந்தான். அப்படித்தான் எழுத முடியும். கம்பன் குரூப் ஒட்டக்கூத்தனை ரிப்போர்ட் பண்ணாவிட்டால் எப்படி இருக்கும்? அல்லது ஒட்டக்கூத்தன் குரூப் கம்பனை விட்டு விட்டால் எப்படி இருக்கும்?
இந்தச் சமூகத்தில் பல்வேறு கருத்துநிலைகள், போராடுகின்ற சூழல் உண்டு. அவற்றைப் பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் உண்டு. தங்கள் தங்கள் கருத்து நிலைகளில் நின்று அவற்றைச் செம்மையாகச் சொல்கிறவர்கள் உண்டு. அப்படிப் பார்க்கும்போது 3,4 வகையான குரூப் இருக்கின்து. அவர்கள் எல்லோரும் தான் நன்றாக எழுதுகின்றார்கள். அப்படித் தான் நான் பார்க்கிறேன்.
70 களில் காணாத, 80 களில் காணாத புதிய உற்சாகம், இலக்கியம் பற்றிய வாத விவாதம் இப்போது நடைபெறுகின்றது. இன்றைக்குத் தமிழகத்தின் வெகுஜனப்பண்பாட்டுச் சாதனங்கள் அமைகிற சூழலில் காத்திரமான இலக்கியம் பொதுஜனப் பத்திரிகைகளில் வராது.இன்றைய தமிழகத்தில் சீரியஸ் கல்ச்சருக்கும் மாஸ் கல்ச்சருக்கும் உள்ள பிரிகோடு மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.
ஆரியர், திராவிடர், வேளாளர் , தலித் என்னும் தத்துவச் சிக்கலில் உங்கள் நிலைப்பாடு என்ன ?
ஆரியர்,திராவிடர் என்பதை நான் தத்துவச் சிக்கலாகக் கொள்வதில்லை. மொழிக்குடும்பங்களை வைத்துக் கொண்டு நாங்கள் அவர்கள் என்று வரையறை செய்ய இயலாது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லியிருக்கின்றார்கள். இந்த மொழியும் அந்த மொழியோடு சம்பந்தப்படாமல் இல்லை. அந்த மொழியும் இந்த மொழியோடு சம்பந்தப்படாமல் இல்லை. ஆனால், Historiography காரர்கள் இவர்களைப் பிரித்துப் பார்ப்பது தவறு. பிழை என்று எழுதியிருக்கின்றார்கள்.
வேளாளர், தலித் என்பது தென்னிந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் – 19 ஆம் நூற்றாண்டு முதல் படிப்படியாக சமூகப் பிரக்ஞை பற்றிய வளர்ச்சி சம்பந்தப்பட்ட மக்களிடையே வளர்ந்து கொண்டே போகிறது. இது ஒரு காலத்தில் பிராமணர்கள், வேளாளர்கள் போன்ற மேல்மட்ட மக்களிடையில் தான் இருந்தது. ஜனநாயக மயமாக்கத்தின் விஸ்தரிப்பு நேர்கிறபோது அதை விளங்கிக்கொள்கிற ஜனநாயகப் பண்பாடு இல்லையென்றால் அதனால் சிக்கல் வருகிறது. அதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள்.
தமிழ், சமஸ்கிருதம் ஆகிய தொல் மொழிகள் இரண்டினுள் தமிழ் மட்டும் வாழும் மொழியாக இருக்க, சமஸ்கிருதம் ஏன் பேச்சு வழக்கிலிருந்து செத்தொழிந்து வி ட்டது? இதற்குப் பிராமணர்கள் மட்டுமே காரணமா ?
சமஸ்கிருதம் என்றைக்குமே பேச்சு மொழியாக இருந்ததில்லையே. அது உருவாக்கப்பட்ட மொழி . சடங்குகளுக்காகவும் இலக்கிய நோக்கங்களுக்காகவும் செம்மைப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட மொழி. சாதாரணமாக பிராகிருதம் தானே பேச்சு மொழி. அதாவது சமஸ்கிருதத்தில் வேதங்கள் ஓதவேண்டும். அதைச் செய்யவேண்டும். இதைச் செய்யவேண்டும் என்று சில விதிமுறைகளைச் சொல்லும்போது தானே அந்த மொழி வரும். சமஸ்கிருத நாடகங்களிலேயே பிராகிருத மொழி தானே பேசப்படுகின்றது.
அப்படியென்றால் அதாவது அது எழுத்து மொழி மட்டும் தான் என்றால் சிலர் மாநாடுகள் கூட்டி அந்த மொழியில் பேசியதாகச் செய்திகள் வருகின்றனவே. அது எப்படி?
எல்லாம் சரி . நீங்கள் சமஸ்கிருதத்தில் நியூஸ் கேட்டுப் பாருங்கள். சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் கேட்டுப் பழகினவர்கள் காதுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆக இதெல்லாம் வருவதற்குக் காரணம் identity disturbance தான்.
ஆனால், சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சுமொழியாக இருந்ததில்லை. அது பண்டிதர்களால் உருவாக்கப்பட்ட மொழி. அது இந்திய நாகரீகத்தின் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ள மொழி .அதை மறுப்பதற்கில்லை.
செம்மைப்படுத்திச் பேசுவது சாதாரணமாகப் பேசுவது இதெல்லாம் hierarchical society இருக்கத் தான் செய்யும்.
சமஸ்கிருதம் உருவாக்கப்பட்ட மொழி மட்டும் தான். பேச்சு மொழியாக என்றைக்குமே இருந்ததில்லை என்றால் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் அதன் தாக்கம் தெரிவதும் அது எல்லா மொழிகளோடும் பின்னிப் பிணைந்திருப்தும் எப்படிச் சாத்தியமாகி இருக்கும்?
ஒரு காலகட்டத்தில் அது தான் முக்கியமான lingua Franca , பண்பாட்டு மொழியாக இருந்தது. அதன் காரணமாக இப்படி நேர்ந்திருக்கின்றது என்று சொல்லலாம். 22 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் பொதுவான மொழியாக இந்தியாவில் இருந்ததா என்று கேட்கத் தான் போகிறார்கள். அதே போல் நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் ஆங்கிலம் எங்கும் பேச்சு மொழியாகவும் இருக்கிறதே ?
அது தான். சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட மதப் பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் அந்த மதத்தின் உயர் அம்சங்களைப் பேணுவதற்காகவும் ஒரு இலக்கிய மொழியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதை இந்தியா முழுவதற்கும் ஒரு பண்பாட்டு மொழியாக வளர்த்திருக்கின்றார்கள்.
இன்னொன்று சமஸ்கிருத இலக்கியங்களெல்லாம் வட இந்தியாவில் மட்டுமா எழுதப்பட்டன,? முக்கியமானவை தென்னாட்டில் தானே எழுதப்பட்டன. வட இந்திய வளர்ச்சிக்கும் சமஸ்கிருத வளர்ச்சிக்கும் தமிழகத்தின் பங்கு மிகக் கணிசமானது. அப்படிப் பார்க்கும்போது எல்லாப் பகுதிகளின் பங்களிப்பும் சமஸ்கிருதத்தி;ல் உண்டு. அது ஒரு குழுவுக்கு மட்டும் சம்பந்தப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. சமஸ்கிருதம் பேசுவதாலேயே அது எங்களுக்குத் தான் சொந்தம் என்பதும் உண்மையில்லை. அதற்கும் மற்ற மொழிகளுக்கும் தொடர்பில்லை என்றும் சொல்லமுடியா. சங்கரர் யார்? நம்மாழ்வார் யார்? இந்தியப் பக்தி இயக்கத்தின் இமேஜ் யாருடையது?
சிலருடைய வாதம் என்ன என்றால் சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு தான் இந்திய ஒருமைப்பாட்டை ந ிலைநிறுத்த முடியுமாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
அதாவது வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் சரி. ஒற்றுமையில் வேற்றுமைகளை மறைக்க முயல்வது சரியில்லை. இது தான் என் பதில்
தத்துவம், கலை, இலக்கியம், இலக்கணம், இசை ஆ கியவற்றில் சமஸ்கிருதமே தமிழுக்கு நன்கொடை வழங்கியுள்ளது என்கின்ற வாதம் உங்களுககு உண்டா ? நவீன எழுத்தாளர்களில் நிறையப் பேருக்கு இந்தப் பார்வை இருக்கின்றது. இது சரியா ? பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.
சொல்லவேண்டாம். நான் சொல்கிறேன்.அதாவது இந்தியாவின் பண்பாட்டை காய்தல் உவத்தல் இல்லாமல் ஆராய்கிறபோது எரிந்த கட்சி எரியாத கட்சி ஆடாதபோது இந்தியப் பண்பாடு என்பது இரண்டு பெரும் பாரம்பரியங்களை உள்ளடக்கியது என்பது தெரியவரும். அந்தப் பாரம்பரியங்களின் குறியீடாக அவற்றின் வெளிப்பாடாக சமஸ்கிருதமும் தமிழும் அமைந்திருக்கின்றன. தமிழ்ப்பாரம்பரியத்தின் சில அமைப்புக்கள் இங்கே காணப்படுகின்றன. அகம், புறம் பண்பாட்டுப் பாரம்பரியம். சூழ்நிலைச் செய்யுள் மரபு, திணை மரபு இவையெல்லாம் தமிழின் சொத்து. கதா சப்தாதி என்கின்ற நூல் பிராகிருதத்தில் இருப்பதால் அது சமஸ்கிருதம் என்று சொல்லிவிடமுடியாது.
இரண்டு பண்பாடுகள் இருக்கின்றன. ஒன்றை நிராகரிப்பதால் மற்றொன்று வாழ முடியாது. இரண்டுமே முக்கியம். இந்தியாவின் ஒருமைப்பாட்டை இந்த இரண்டு பண்பாடுகளையும் இணைத்தே பார்க்கவேண்டுமே தவிர எந்த ஒரு பண்பாட்டின் மேன்மை மூலமாகவும் அதைக் காணமுடியும் என்று நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.
நீங்கள் சொல்வது peaceful coexistence
ஆமாம்.இரண்டு பாரம்பரியமும் இருக்கவேண்டும்.இந்த இரண்டும் சிந்துச் சமவெளி தோற்றத்திலேயே இருக்கின்றன. நிச்சயமாக தமிழுக்கும் சமஸ்கிருதத்தி;ற்கும் இலக்கண மரபுகள் வேறு வேறு. தமிழ் நாட்டுக்கென்று ஒரு இசை மரபு இ;ருந்துள்து. இசை வடமொழியைச் சார்ந்தது மட்டும் தானா என்று அறிவதற்கு எங்களிடம் சான்றுகள் இல்லை.
கர்நாடக இசை என்பது தமிழ் இசை தானா ? அல்லது வேறா?
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். கர்நாடக இசை என்பது தென்னிந்தியாவின் சகல பிரதேசங்களுக்கும் பொதுவான இசை. தமிழிலிருந்து தான் கர்நாடக இசை வந்தது என்பதை நாங்கள் மட்டும் சொன்னால் கர்நாடகமும் தெலுங்கும் மலையாளமும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த நிலவரம் எனக்குத் தெரியாது .அந்த வித்வான்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. நாங்கள் மட்டும் ‘பண்’ ணிலிருந்து தான் கர்நாடக இசை வந்ததென்று சொன்னால் போதாது.
தென்னிந்தியா முழுவதற்கும் ஏன் இப்படி ஒரு பொதுவான இசை வந்தது என்பது ஒரு சரித்திரச் சம்பவம். முஸ்லிம்கள் வந்து கையேற்றுக் கொண்டது சங்கீதம். கட்டக்கலையை அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கலாச்சாரத்தை ஏற்கவில்லை. ஓவியம் இல்லை.அவர்கள் இசையை மட்டுமே எடுத்துக் கொண்டார்கள். இன்றைக்கும் இந்துஸ்தானி இசையில் முஸ்லிம்கள் பங்களிப்பு மிகப் பெரியது. அதனால் இசை மரபு மாறுகிறது. அந்த மாற்றத்தின் பின்புலத்தில் தான் சதுர் தண்டிகை பிரகாசத்தையும் சங்கீத ரத்னாகரத்தையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
14 ஆம் நூற்றாண்டிலிருந்து தெலுங்கைப் பிரதானமாகக் கொண்ட ஆட்சி ஒன்று தெற்கில் (விஜயநகரப் பேரரசு) நிறுவப்படுகின்றது. அதன் மூலம் தான் பிற்காலத்தில் கர்நாடக இசை, பரதநாட்டியம் ஆகிய பொதுவான கலைக்கூறுகள் வந்துள்ளன. கட்டிடக் கலையில் கூட ஆந்திரத்தில் நம்முடைய கலை தான். கன்னடத்தில் தான் ஹோய்சலக் கட்டிடக்கலை. ஆக எல்லாவற்றையும் ஒரு சமதளத்தில் நின்று பார்க்கவேண்டும். எனக்கு மட்டும் தான் என்று நமது திருப்திக்காககச் சொல்லிக் கொண்டிருக்கமுடியாது.
தமிழுக்கு ஒரு பெரிய இசை மரபு இருந்தது. அது எப்படி மாறியது என்பதைச் சரியாக இதுவரை விளக்கவில்லை.அந்த வரலாறு இன்னும் தெளிவாகவில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘வேதாந்தமும் மார்க்சியமும்’பற்றி மிகப் பெரிய தத்துவப் போராட்டமே நடைபெற்றது. எஸ்.ஏ.டாங்கே ஒரு புறமும் தேவி பிரசாத் சட்டோபாத்யாய ஒரு புறமும் நின்றார்கள். நீங்கள் யார் பக்கம் ந ிற்கிறீர்கள் ?
மார்க்சியத்திற்கு ஒரு புதுத் தத்துவப் பலத்தைக் கொடுகக்க் கூடிய வாதமாகவும் அதைப் பார்க்கவேண்டும். மார்க்சியத்தின் பலமான அம்சங்கள் என்னவென்றால் அதைக் கொண்டு பிற விஷயங்களை அணுகலாம். அறியலாம். மார்க்சியத்தைக் கொண்டு வேதாந்தத்தின் வளர்ச்சியை நாம் துல்லியமாகப் பார்க்கலாம். வேதாந்தத்தின் ஜனநாயகப் பண்புகள் யாவை அல்லாத பண்புகள் யாவை என்றெல்லாம் மார்க்சியத்தின் மூலம் பார்க்கலாம். ஆனால் வேதாந்தக் கண்கொண்டு மார்க்சியத்தைப் பார்க்கலாமா? அந்த வாதத்தை அப்படியும் பார்க்கவேண்டும் என்று சொல்கிறேன். ஏன் என்றால் வேதாந்தம் ஒன்று தானா! பல இருக்கின்றன. மார்க்சியமும் அப்படித்தான். பல மார்க்சியங்கள் இருக்கின்றன.
ஆனால் எல்லா மார்க்சியமும் மெட்ரியலிஸ்டிக் எல்லா வேதாந்தமும் ஸ்பிரிச்சுவலிஸ்ட்டிக்
அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது. அப்படி அதை reduce பண்ணாதீர்கள். மார்;க்சியம் மனிதனின் ஆத்ம உயிர்ப்புக்கு இடம் கொடுக்கவில்லை என்று தயவு செய்து சொல்லாதீர்கள். ஏனென்றால் spiritualism என்பது. is a matter of the human spirit .அதாவது, மனித உயிர்ப்புக்கு மார்க்சியம் கொடுத்த அளவு முக்கியத்துவம் எந்த மதமும் கொடுக்கவில்லை என்று நான் சொல்வேன்.
spiritualism என்கிறபோது இந்தியப் பாரம்பரியத்தில் ஆன்மீகம் என்று சொல்லிவிட்டோம். அதை ஏன் ஆன்மா என்று எடுத்துக் கொள்கிறீர்கள். மனித உயிர்ப்பு (Human spiri)என்று ஏன் எடுக்கக்கூடாது. மார்க்சியம் என்பது வெறுமனே மெட்டீரியலிசம் அல்ல.அது லோகாயதவாதத்திற்குச் சரி, மார்க்சியத்திற்குச் சரியில்லை.
வேதாந்தம் spirit ஐ abstract ஆக அல்லவா சொல்கிறது? Universal spirit என்கிறது வேதாந்தம்.
சரி அப்படி ஏன் சொல்கிறது. நான்கு வேதங்களின் முறைமை என்ன? உபநிஷதங்களின் முடிவு என்ன? அவற்றையெல்லாம் வேதாந்தம் என்று சொல்லும்போது சேர்த்துப் பார்க்கவேண்டும்.
நான் என்ன சொல்கிறேன் என்றால் இரண்டு நிலைகளை வைத்துக் கொண்டு ஒன்றுக்கொன்று சரியா பிழையா என்று பார்ப்பது சரியல்ல. மார்க்சியத்தை acculturate பண்ணுவதற்கான ஒரு வாதம் தான். வேதாந்தமும் மார்க்சியமும் என்கிற வாதம். அது வரைக்கும் சந்தோஷம் தான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இதில் எந்தப் பக்கம் என்பது எரிந்த கட்சி, எரியாத கட்சி.
அந்தக் காலத்து மார்க்சிஸ்ட் கலந்துரையாடலில் பாருங்கள். Levels of discourse இருக்கும். கருத்தாடல் மட்டங்கள் ஒரு சமூகத்திலேயே ஒரே ஒரு உற்பத்தி முறை இல்லை. நாலைந்து உற்பத்த முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று dominant ஆக இருக்கின்றது.இது தான் சமூக உருவாக்கத்தின் அடிப்படைத் தத்துவம் ஆனபடியால் do not be dogmatic.
இந்தியாவைப் பொறுத்தமட்டும் பௌத்த, சமண மதங்களை அழித்துவிட்டு சைவ, வைணவம் ஆதிக்கம் செலுத்துகின்றன.
பொருள் முதல்வாதிகள் ஏன் மீண்டும் பௌத்த, சமணங்களுக்குத் திரும்பலாகாது ?
பௌத்தமும் சமணமும் பொருள் முதல்வாதம் பேசியமதங்கள் அல்ல. பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்ததாகச் சொல்கிறீர்கள். நாங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டோம். யாழ்ப்பாணத்தில் சைவத்திற்குப் பெயர் அருகன் உணவு. சைவச் சாப்பாடு என்பது சமண உணவு. எங்களுக்கு மிகப் பெரிய இலக்கணங்களை எழுதியது பௌத்தமும் சமணமும் தான். கம்பன் காலத்திலேயே எங்களுக்கு ஒரு பவணந்தி தான் தேவைப்பட்டது . எங்கே அழித்தோம்.
உள்வாங்குவது என்பதும் ஒரு விதமான அழிப்பது தானே. அனைத்து அழிக்கிற உபாயம் அது
தேவாரம் எல்லாம் பின்னுக்குத் தான் தொகுக்கப்பட்டது. அவை தொகுக்கப்படாமல் போயிருந்தால் என்ன நிலைத்திருக்கும்? ஐம்பெரும் காப்பியம் மட்டுமே இருந்திருக்கும். அதெல்லாம் ஜைனர்களுடையது தானே. ஓர் இலக்கிய வரலாற்று ஆசிரியர் என்கின்ற முறையில் சொல்கிறேன். பௌத்த, சமணத்தை ஒழித்துவிட்டோம் என்பதை ஏற்பதற்கில்லை.
திருஞான சம்பந்தர், சமணர்களைக் கழுவில் ஏற்றினார் என்று சரித்திரம் சொல்கிறதே ?
அது hageography . அவர்கள் சமயத்தில் அவர்களுக்குச் சாதகமாகச் சொல்வார்கள். இவர்கள் சமயத்தில் இவர்களுக்குச் சாதகமாகச் சொல்வார்கள். அவை சரித்திரம் அல்ல. புகழ்ந்த வரலாறுகள், வரலாறுகள் அல்ல. கழுவில் ஏற்றியிருக்கலாம். இவ்வளவு காலத்திற்குப் பிறகும் புரட்டஸ்டாண்டுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் சண்டை நடக்கவி;ல்லையா? இங்கிலாந்தில் இல்லையா? இலங்கையில் இல்லையா? எங்கு இல்லை. அதைச் சமயச்சண்டை என்று ஏன் சொல்லவேண்டும்?
இந்தக் கேள்வியே ஏன் வருகின்றது, என்றால் இந்தியா புத்தரும் மகாவீரரும் பிறந்த நாடு. இங்கே புத்தரின் மதமும் இல்லை. மகா வீரரின் மதமும் இல்லை. இந்து மதம் இரண்டையும் ஜீரணம் பண்ணியிருக்கின்றது.
அதற்குக் காரணம், நீங்கள் சொல்கிற இந்து மதம் ஒன்றல்ல. இந்து மதம் என்று எதைச் சொல்கிறீ;கள்- சைவத்தையா, வைஷ்ணவத்தையா, சாக்தத்தையா? எல்லாம் சேர்ந்தது தான் இந்து மதம். அதாவது நீங்கள் சொல்கிற இந்து மதம் என்று ஒன்று இல்லை.It is non-existent. இந்து மதம் என்பதே உருவாக்கிச் சொல்லுவது தான். சைவன், வைஷ்ணவனை ஏற்றுக்கொள்ளமாட்டான். வைஷ்ணவன், சைவனை ஏற்றுக்கொள்ளமாட்டான்.
ஆனால், எல்லாரும் சேர்ந்து பௌத்தனையும் சமணனையும் எதிர்த்தார்கள். அழித்தார்கள்
(சிரிக்கின்றார்). அது வேறு. அதனால் நாம் புனிதர்கள் ஆகவில்லை. வெள்ளையர் காலத்தில் -colonial period இல் மேல் நாட்டு ஆராய்ச்சியாள்களாலும் activist அன்னி பெசன்ட் போன்ற களாலும் இந்து மதம் பிரக்ஞை பூர்வமாகக் கட்டப்பட்டது. அதை மறந்துவிட்டார்கள். அவர்கள் தான் இந்து மதத்தை mystify பண்ணினார்கள்.
முன்பே இந்தக் கேள்வியின் சாயலில் சில கேள்விகள் க ேட்டாயிற்று. இருப்பினும் நேரடியாக ஒரு கேள்வி. பெரியாரியத்தில் உங்கள் நோக்கில் கொள்ளத்தக்கன யாவை? தள்ளத்தக்கன யாவை ?
பெரியார் என்கின்ற வரலாற்று நிகழ்வு – phenomenon எவ்வாறு தோன்றியது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். தேசியப் போராட்டத்தின்போது இங்கே தோன்றிய சமூக முரண்பாடுகளின் உக்கிரமான தன்மைகளை உணர்ந்து கொள்ளாததனாலும் அந்தச் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படாத வகையிலும் சமூக விடுதலைக்கு வேண்டிய சில அம்சங்களுக்காகப் போராடவேண்டி வந்தது. அவர் கடைசி வரை அரசியல்வாதியாக பொலிடிகல் ஆக்டிவிஸ்ட் ஆக அவர் மாறவில்லை. சோஷியல் ரிஃபார்மராகவே இருந்தார்.
பெரியார் என்கிற வரலாற்று நிகழ்வை நாங்கள் புரிந்து கொள்ளாத வரையில் தமிழக வரலாற்றையும் எதிர்காலத்தையும் தரிசிக்க இயலாது.
பெரியார் என்கிற தத்துவத்தில் பகுத்தறிவு இருக்கின்றது. நாத்திகம் இருக்கின்றது. அதேநேரத்தில் பெண் விடுதலைக்காகவும் போராடினார். பெரியாரைச் சமூக ஓட்டத்திற்கு அப்பாலும் புறம்பாகவும் பார்ப்பது தவறு.
இந்தக் கேள்வியை இப்படிக் கேளுங்கள். ஏன் இன்றைக்குப் பெரியாரை நாம் நினைக்கிறோம்? ஏன் பெரியார் முக்கியமாகத் தெரிகிறார்? இப்படிக் கேட்கலாமே. அவர் நினைக்கப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன.
இன்னொரு நெருக்கமான கேள்வி. மார்க்சியத்தையும் பெரியாரிசியத்தையும் கருத்தாக்க அடிப்படையில் இணைத்தல் அதாவது synthesize செய்தல் சாத்தியமா ?
இன்று காலையில் கூட நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னார்கள். இந்திய வரலாற்றில் காந்தி ஒரு முகத்தைக் காட்டினால், பெரியார் இன்னொரு முகத்தைக் காட்டுகிறார். பூலே மற்றொரு முகத்தைக் காட்டுகின்றார். அப்படிப் பார்ப்பது நல்லதல்ல. அந்தந்தக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்கள். அப்படித் தான் பார்க்கிறார்கள். அதை நாம் விளங்கிக் கொள்ளவும் வேண்டும்.
பெரியாரியம்,அதாவது பெரியார் பேசியவை, எழுதியவை மார்க்சிய வளர்ச்சிக்கு முரணானவையாக இன்று காணப்படவில்லை என்று மட்டும் சொல்லமுடியும்.
————–
நேர்காணல் : கல்பனாதாசன்
(இந்நேர்காணல் புதிய பார்வை 16 – 31 அக்டோபர், 1-15 நவம்பர் 1997 இதழ்களில் வெளிவந்தது.)
நன்றி : புதிய பார்வை
Published in inioru.com Aug 2, 2008