Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மார்க்சியமும் தமிழ் உணர்வும்

தமிழ் உணர்வாளர்’ தமிழ் உணர்வு குறித்து பேசுபவர்கள் யாரும் மார்க்சியத்திற்கு எதிராகவோ அல்லது அதைக் கேலி செய்தோ பேசிக் கேட்டதில்லை; எழுதிக் கண்டதில்லை. குறைந்த பட்சம் வாய் வார்த்தைகளில் எழுத்தளவில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். நடைமுறையில் இன்றைய தமிழகத்தில் ஒரு மார்க்சியர் எடுக்க வேண்டிய நிலைபாடுகளை எடுக்கின்றார்களா?என்பது விவாதிக்க வேண்டிய ஒன்றுதான். சரியான மார்க்சிய நிலைபாடு இதுதான் எனத் தீர்ப்பளிக்கும் உரிமையை சமூக அறிவியல் நோக்கும் ஜனநாயக பண்பும் கொண்ட எவரும் கோர இயலாது. சரியெனக் கருதுவதை பற்றி நிற்பதும் அதனை வலியுறுத்தி எடுத்துக் கூறுவதற்குமே அதிக பட்ச உரிமை உள்ளதெனலாம்.

சிக்கலான இந்திய சமூக அமைப்பில் எல்லா சமூக அறிவியலிலும்போல நியாயமான நேர்மையான கருத்து மாறுபாடுகளுக்கு இடமுள்ளது என்ற தெளிவு எல்லா மார்க்சியர்களுக்கும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது எனலாம். மாற்றுக் கருத்து அனைத்திற்கும் பின்னால் மாற்று வர்க்கத்தின் நலன் ‘வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னால் உள்ள பெண்’ போல இருப்பதாகக் கூறுவது மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும் ஏற்புடையதல்ல. இதனை அவர்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்.மார்க்சியம் பேசுபவர்கள் ‘தமிழ் உணர்வு’ எனும் பதத்தை பொருட்படுத்தி எதிர்கொள்ளாமல் கேலிபேசுவது என்பது நாம் சாதாரனமாகக் கேள்விப்படக்கூடியதுதான். ‘தமிழ் உணர்வு’ குறித்து பேசுபவர்களில் பலர் ஏனைய பல சமூகப் பிரச்சினைகளில் எடுக்கும் நிலைபாடுகள், சந்தர்ப்பவாதம், ஊழல், போலித்தனங்கள், கைக்கொள்ளும் சாதியம், அது குறித்த பசப்பல்கள் ஆகியவற்றின் மூலம் தங்களைக் கேலிப் பொருட்களாக ஆக்கிக் கொள்கின்றனர் என்பது உண்மையே. இவர்களில் பலரது ‘தமிழ் உணர்வு’ அவர்களுக்கு முகமூடி என்பதிலும் உண்மை உள்ளது. இவர்களில் பலர் எல்லாத் தமிழர்களும் சகோதரரே எனும் உணர்வு அற்றவர்களாக இருக்கின்றனர். பலரும், நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல; யாரும் எனக்குத் தாழ்ந்தவர் அல்ல எனும் இருபுறமும் கூர்மையான சமத்துவ உணர்வு கொண்டவர்கள் அல்ல. அதில் ஒன்றும் வியப்பில்லை. இந்திய தேசியம் பேசுவோர்க்கும் இது பொருந்தக் கூடியதே.மொழி எனும் கருவி?மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி என்பது போன்ற கருத்துகள் காலாவதியாகிவிட்டன.

மொழி என்பது குறித்து பேச்சு வரும் சமயங்களில் அது ஏதோ டெலக்ஸ், டெலிபிரிண்டர், ஃபேக்ஸ் போன்ற ஒரு கருவி என்பது போன்ற கருத்துகள் எளிதாக உதிர்க்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போதும் கூட அது தமிழ்ப் பெருமிதங்கள், உயர்வு நவிழ்ச்சிகள், தமிழ் குறித்த அறிவியலுக்கு மாறான கருத்துகள் வரும்போது மட்டும்தான் ‘அறிவியலுக்கு மாறானது எதுவும் ஏற்புடையதல்ல’ என்ற பசப்பலோடு கூறப்படும். இவையெல்லாம் சமஸ்கிருதம் குறித்து கூறப்படும்போது அமைதி காக்கப்படும். தமிழ் குறித்த இந்த கருத்துகள் ஒரு ஆதிக்க எதிர்ப்பு நிலையிலிருந்து வந்தவை, எனவே ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் புரிந்துகொள்ளப் படவேண்டியவை என்பது மறக்கப்படும்.மொழி என்பது ஒரு கருவி அல்ல அது பண்பாட்டுப் பெட்டகம் என்பதும் சிந்தனையை எழுதிப் பார்க்கும் கரும்பலகை அல்ல சிந்தனைக்கு கச்சாப் பொருள் வழங்கும் தோற்றுவாய் என்பதெல்லாம் மறுப்பில்லா கருத்தாக மாறிவிட்டது. இந்த வரையறுப்புகள் எல்லாம் எடுத்துக் கூறப்படுவதற்கு முன்பே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு குறித்தும் இது போன்று ஒலிக்கும் கருத்துகள் முன்வந்திருந்தன.

இரு மொழிகள் குறித்தும் கூறப்பட்ட உயர்வு நவிழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அவற்றில் வரலாற்றுரீதியானதும் அறிவியல் பூர்வமானதுமான நியாயக் கூறுகள் உள்ளன எனலாம். சரி, தமிழ் உணர்வு என்பதுதான் என்ன?தேசிய இன உளவியல்‘தமிழ் உணர்வு’ என்பது தமிழ் தேசிய இனத்தின் பொதுவான உளவியல்தான். ஒரு தேசிய இனம் என்பதற்கு மார்க்சியம் கூறும் வரையரை என்ன?ஒரு தொட்டுத் தொடரும் நிலப்பரப்பில் ஒரு பொதுவான வரலாறு, மொழி, பண்பாடு, பொருளாதாரப் பிணைப்பு ஆகியவற்றோடு ஒரு பொதுவான உளவியலைக் கொண்ட மக்கட் பரப்பு என்பதே ஒரு தேசிய இனம்.ஒரு தேசிய இனம் என்பது ஒரு மரபினாக இருக்க வேண்டிய அவசியமில்லை.ஒரு தேசிய இனம் பலகாலம் வேறு வேறு நாடுகளில் வாழக் கூடியதாக இருக்கலாம். ஒரு தேசிய இனம் வரலாற்றுரீதியான உருவாக்கம்.துவக்கமும் முடிவுமற்ற நிரந்தரமல்ல. மாற்றங்கள் இல்லாத சாசுவதமுமல்ல. எல்லாம் போல மாறக் கூடியதே.ஜாதி, மத, நிற பேதங்களை மட்டுமல்ல, மொழி, இனம், தேசம் எனும் பிளவுகளையும் கடந்துதான் சோசலிசம், சோசலிசக் கட்டுமானம் பயணிக்க வேண்டும். தேசிய இனப் பகுப்பும் வேறுபாடும் அடையாளமும் அழிய வேண்டிய ஒன்றே. ஆனால் அது அவரை விதை அழிந்து அவரைச் செடியாக ஆவது போல நிகழ வேண்டும்.

அவரை விதையை கட்டாந் தரையில் பூட்ஸ் காலின் கீழேபோட்டு நசுக்கி அழித்தால் அவரைச் செடியோ கொடியோ வளராது. அவரை விதை ஒரு முரணியக்க மாற்றமாக விதையெனும் நிலையை மறுதலித்து செடி எனும் நிலை பெற வேண்டும்.அப்படி தேசிய இனம் என்பதும் ’மறுதலிப்பின் மறுதலிப்பாக’ மாற்றம் கானப்பட வேண்டும்.அப்படி அல்லாது அழிக்க முயல்பவர்கள் அவரை விதையை பூட்சுக் கால்கொண்டு அழிக்க முயல்வதுபோல தங்களது நலனோடு போட்டியிடும் தேசிய இனங்களை அழிக்க முயல்பவர்களே. அவரை விதையை பூட்சுக் கால் கொண்டு அழித்து விடலாம்.சொந்த சிந்தனையும் உணர்வும் கொண்ட மக்களால் ஆன ஒரு தேசிய இனத்தை அவ்வலவு எளிதாக அழித்துவிட முடியாது. ஐரிஸ், போலிஸ், குர்து, அர்மீனியன், திபெத்திய தேசிய இனங்களுக்குப் பொருந்தும் இந்த உண்மை தமிழ் தேசிய இனத்திற்கும் பொருந்தும்.தமிழ் தேசிய இனம் உள்ளவரை தமிழ் உணர்வுக்கும் மரணமில்லை; தமிழ் உணர்வு உள்ளவரை தமிழ் தேசியத்திற்கும் மரணமில்லை.

Exit mobile version