Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மார்க்சியப் பகுப்பாய்வு தேவை தானா? : கோசலன்

வரலாற்றையும் நாம் சார்ந்த சமூகத்தையும் அணுகும் போது அவற்றைப் புரிந்து கொள்ள முனையும் போதும் பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஈழ விடுத்லைப் போராட்டத்தையே உதாரணமாகக் கொண்டால் தவறுகள் ஆரம்பத்திலிருந்தே நிறுவன மயமாகியிருக்கிறது என்ற கருத்தை ஐயர் முன்வைக்கிறார். நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்மைக்கும், சரிக்கும் தவறுக்கும் இடையிலான போராட்டம் என்பது எல்லா சூழ்நிலைகளையும் போலவே ஈழப்போராட்டத்திலும் நடந்திருக்கிறது. இங்கெல்லாம் உண்மை வெற்றிபெற வேண்டும் என்பது தான் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் விருப்பு.

தனிமனிதர்களும் அவர்களது சிந்தனைகளும் மட்டும் தான் வரலாற்றைத் தீர்மானிக்கும் ஒரே காரணி என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அது தவறானது தனிமனிதர்களின் சிந்தனையைத் தீர்மானிப்பது கூட சமூகம் என்கிறது இன்னொரு வாதம். இந்த இரண்டாவது முறை தான் விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறை என்று அழைக்கப்படுகிறது.

விஞ்ஞான பூர்வமான இந்த ஆய்வு முறை கார்ல் மார்க்சால் தொகுத்து முன்வைக்கப்பட்டது. இதனையே மார்க்சிய ஆய்வுமுறை என்று சமூக விஞ்ஞானம் பெயரிடுகிறது.

மார்க்சியப் பகுப்பாய்வு முறை இரண்டு பிரதான கூறுகளைக் கொண்டது. பொருள் முதல் வாதம்,  இயங்கியல் என்ற இந்தத் தத்துவங்கள் உருவான போது சமூகம் குறித்த புதிய பார்வை உதயமானது.

வரலாற்றை,  சூழலை, பொருள் முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்ளல் என்பது சமூகம் குறித்த பொருள்முதல் வாதப் பார்வை. அவ்வாறு புரிந்துகொள்ளப்பட்ட சமூகத்தின் இயக்கத்தை, அதன் மாற்றத்தைப் பகுத்தாராய்தல் இயங்கியல் எனப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம்நாளை எவ்வாறு மாற்றங்களை உடையதாக அமையும் என்பதை எதிர்வு கூறும் முறைமையே இயங்கியல். இந்த இரண்டையும் ஒருங்கு சேர்த்த ஆய்வு முறைமையே மார்க்சியப் பகுப்பாய்வு எனப்படுகிறது.

பொருள் முதல்வாதம் என்பது பொருளை முதன்மையாகக் கொண்டு பகுத்தாராய்தலைக் குறிக்கிறது. பொருள் என்பது சமூகத்தைக் குறிக்கிறது. நாம் வாழும் சமூகம் உற்பத்தி சக்திகளாலும் அவற்றிற்கு இடையேயான உறவுகளாலும் இவை தீர்மானிக்கும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தி சக்திகள் என்பது மனிதன் உட்பட ஏனைய உற்பத்திக் கருவிகளை எல்லாம் குறிப்பிடும் பொதுச் சொல். உற்பத்தியில் ஈடுபடும் மனிதக் கூட்டங்களுக்கு இடையேயான சிக்கலான உறவுகளை உற்பத்தி உறவுகள் என்பர்.

16ஆம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் காணப்பட்ட உற்பத்தி உறவுகள் இன்றில்லை. அப்போதெல்லாம் பாரிய நிலச் சொந்தக்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்தனர். அவர்களை நிலப் பிரபுக்கள் என்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தில் இருந்ததானால்நிலப் பிரபுத்துவ சமூகம் என்றனர்.

அப்போது மக்கள்நிலைத்தோடு பிணைந்து வாழ்ந்தனர்.  அதற்கேற்ப அவர்களின் சிந்தனையும் அமைந்திருந்தது. விதவைகள் மறுமணம் செய்ய முடியாது, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்குக் கூட சுதந்த்திரம் இல்லை.நிலப் பிரபுக்களும், அதிக அளவில்நிலத்தைச் சொந்தமாக வைத்திருந்த மன்னர்களும் கடவுள் போலப் போற்றப்பட்டனர்.

தனிமனிதர்களின் இயல்புகளும்நன்நடத்தையுமே சமூகத்தைத் தீர்மானிப்பதாகவும் கடவுளின் கட்டளைப் படியே அனைத்தும் நடப்பதாக எண்ணிக் கொண்டனர். குறுநில மன்னர்கள் கதாநாயகர்களாகவும் சக்கரவர்த்திகள் கடவுளின் அவதாரமாகவும் போற்றப்பட்டனர்.

பின்னர் மனிதர்களின் தேவை அதிகரிக்க உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்தன. இயந்திரங்கள் உருவாகின.நிலத்தோடு பிணைந்திருந்த மனிதர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்த்து தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்தனர். புதியவற்றைக் கற்றுக்கொண்டனர். மன்னர்கள் கடவுள்கள் அல்ல எனப் புரிந்து கொண்டனர். இப்போது மூலதனத்தைச் சொந்தமாக்கிக் கொண்டு முதலிடுபவர்களே சமூகத்தில் பெரிய மனிதர்கள் ஆகினர்.

இன்று வரக்கும் இந்த தொழில் வளர்ச்சி பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வளர வறியநாடுகளை ஒடுக்கு அங்கு உற்பத்தி சக்திகளை வளரவிடாமல் தடுத்தனர்.

உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் ஆதாரமாக முன்வைத்து மேற்குறித்தவாறே சமூகம் விஞ்ஞான பூர்வமாக ஆராயப்படுகிறது. இதற்கு மாறாக இன்னொரு வகையிலும் பிற்போக்குவாதிகளும் முட்டாள்களும் ஆராய்வார்கள்.

ஒரு பகுதியினர் எல்லாம் கடவுள் விட்ட வழி என்று மிக இலகுவாகக் கூறித் தப்பித்துக் கொள்வார்கள். இது தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இலகுவில் எடுபடாமல் போகவே வேறு வகைகளில் பிற்போக்கு வாதிகள் முன்வந்தனர்.

வெள்ளை நிற மக்கள் மேலானவர்கள். அவர்கள் புத்திசாலிகள். இப்படி பல்வேறுவழிகளில் தம்மைநிறுவ முற்பட்டனர். இப்போதுநாம் சொல்லிக் கொள்கிறோமே, தமிழர்கள் மேலானவர்கள், அவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றெல்லாம்.. ஆனால் இது வரைக்கும் பொருளை அதாவது மையமாக வைத்து ஆராயும் மார்க்சிய முறையை எந்த ஆய்வாளரும் தவறு என்று கூறியது கிடையாது.

தேவை ஏற்படும் போதெல்லாம் மார்கிசிய ஆய்வு தான் சரியானது என்று அதன் எதிரிகளே வாக்குமூலம் வழங்குவார்கள். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பிரஞ்சு அதிபர், அவரது புதிய மனைவி, பாப்பாண்டவர், பிரித்தானிய ஆர்க் பிஷப், அமரிக்கப் பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் மார்க்சிய வழிமுறை சரியானது என பொது வெளியில் கூறிவிட்டார்கள்.

இதனை இன்னமும் தவறு என்று சொல்கின்ற பிந்தங்கிய சமூகங்கள் பல உலகில் வாழ்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. தமது சொந்த நலனுக்காக எமது சமூகத்திலும் விஞ்ஞான பூர்வமான முறைகளை நிராகரிப்போர் பலர் வாழ்கின்றனர்.பொருள்முதல்வாத ஆய்வின் வழியாகச் சமூகத்தைப் புரிந்து கொண்டாலே அது எவ்வாறு சிந்திக்கிறது செயற்படுகிறது என்பவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.

பொருள் முதல்வாத்தின் பிரதான கூறுகள்:

1. பொருள் என்பதே அடிப்படையானது கருத்து என்பது பொருளால் தீர்மானிக்கப்படுவதே என்று கூறுகிறது.

2. சமூக ஒழுக்கம், சட்டம், நீதி, வழமை போன்ற அனைத்துமே பொருளைப் பிரதிபலிப்பனவாகும்.
உதாரணமாக மன்னர் காலத்தில் நீதியானது எனக் கருதப்பட்ட பல விடயங்கள் இன்றைய சமூகப் பொதுப் புத்தியால் அநீதியானதாகக் கருதப்படுகிறது. அன்றைய பொருள் இப்போது மாற்றமடைந்து விட்டது.

3. சமூக வாழ்க்கை தீர்மானிக்கும் சிந்தனை முறை வளர்ச்சி பெறுகிறது. அதன் வளர்ச்சியின் ஒரு புள்ளியில் அது சமூகத்தின் மீது(பொருளின் மீது) ஆதிக்கம் செலுத்துகிறது. அது பொருளை மாற்றும் வலிமை பெறுகிறது. இவ்வாறு தாம் சமூகமாற்றம் நிகழ்கிறது.

உதாரணமாக பிரபாகரன் என்ற தனிமனிதனின் சிந்தனையைத் தீர்மானித்த சமூக வாழ்நிலை என்பது என்ன என்பதை அய்யரின் “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற ஆவணம் ஆராய முற்படுகிறது. இதுவரை பிரபாகரனைக் கடவுள் என்ற என்றும் புனிதமானவர் என்ற எல்லைவரை நகர்த்திய ஒரு சாராரும், கொலைகாரன் என்று என்று தூற்றிய மறுசாராற்கும் இடையே பிரபாகரனின் சிந்தனையத் தீர்மானித்தது எது என்ற பகுப்பாய்வை அய்யரின் கட்டுரையில் காணக்கூடியதாக உள்ளது.

ஒரு அரசின் இராணுவம் மக்கள் தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தி கொலைசெய்வதற்குத் தயாராக முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும். இதனூடாக அரசு மக்களுக்கு எதிரான வன்மமான சிந்தனையை இராணுவத்தின் மத்தியில் உருவாக்கும். இராணுவம் சார்ந்த சமூகம் என்பது பெரும்பாலும் முகாம்களாகவே அமைவதால் அது தீர்மானிக்கும் சிந்தனை மக்கள் சார்ந்ததாக அமைவதில்லை.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பொதுவக மக்களிலிருந்து தனிமைப்பட்ட இயக்கங்களே பெரும்பாலும் உருவாகியிருந்தன. இருப்பினும் எல்லா விடுதலை அமைப்புக்களிலும் அரசியல் பிரிவு என்ற மக்களோடு தொடர்புடைய ஒரு பகுதியும் காணப்பட்டது. அரசியல் பிரிவுப் போராளிகளின் சிந்தனை முறை என்பது இராணுவப் பிரிவோடு ஒப்பிடும் போது மக்களுக்கு எதிரான தன்மை குறைவானதாகவே காணப்பட்டது.

அவர்கள் வாழும் சமூகச் சூழல் என்ற பொருள் தீர்மானித்த சிந்தனை முறை இராணுவப்பிரிவின் சிந்தனை முறையிலிருந்து வேறுபட்டதாக அமைந்திருந்தது இங்கு அனுபவரீதியாகக் காணப்படக் கூடிய பொருள்முதல் வாத உதாரணமாகும்.

மார்க்சியப் பகுப்பாய்வு முறையை பொதுத் தளத்தில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியின் முதல் பகுதி இது. இதனைச் செழுமைப்படுத்தும் பொறுப்பை மார்க்சியத்தைப் புரிந்து கொண்டவர்களிடமும், கேள்விக்குள்ளாக்கி கற்றலை ஆழப்படுத்தும் பொறுப்பை வாசகர்களிடமும் ஒப்படைக்கிறேன்.

Published on: May 30, 2010 @ 23:32

வளரும்…

Exit mobile version