(சி.வி.யின் 100வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மக்கள் பண்பாட்டுக் கழகம் கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஹட்டனில் நடாத்திய சி.வி பற்றிய ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் விரிவுப்படுத்தப்பட்ட வடிவம்)
1. அறிமுகம்
இலக்கியமும் அரசியலும் மேற்கட்டுமானத்தை சார்ந்தவைகள் என்ற வகையில் கருத்தியல்களே. கருத்தியலானது ஒன்றில் அடிக்கட்டுமானத்தை நிலைமாற்றம் செய்வதனை நோக்காக கொண்டிருக்கும் அல்லது நிலைபெற்றுள்ள அடிக்கட்டுமானத்தை பேணி பாதுகாப்பதை நோக்காக கொண்டிருக்கும். கருத்தியலானது மக்களினால் பிரக்ஞைபூர்வமாக வரித்துக் கொள்ளும் போது நடைமுறைக்கு (practice) வழிவகுக்கும். உற்பத்தி முறைமையை உறவை அடிப்படையாகக் கொண்ட அடிக்கட்டுமானம் கொண்டுள்ள தவிர்க்க, சமரசம் காண முடியாத வர்க்க முரண்பாட்டின் உள்ளார்ந்த அம்சங்களை உணர்ந்து அம்முரண்பாட்டை களைவதற்கான தளத்தை இலக்கியம், அரசியல் கொண்டிருக்கும் போது அவற்றின் கருத்தியலானது சமூகத்தின் நிலைமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. அம் முரண்பாட்டை மறுக்கும் தளத்தை இலக்கியம், அரசியல் கொண்டிருக்கும் போது அவற்றின் கருத்தியல்கள் சமூக அசைவியக்கத்திற்கு தடைபோடுகின்றன. வேறு வகையில் கூறுவதாயின்
அவை சமூகத்தின் அடிப்படையை மறுக்கும் பிரக்ஞையை (false conciseness) ஏற்படுத்துகின்றன. எனினும் அடிக்கட்டுமான முரண்பாடுகளை பேசாத இலக்கியமும் அரசியலும் அதன் தன்மையையும் காலத்தையும் களத்தையும் பொறுத்து சமூக அசைவியக்கத்திற்கான உந்துதல்களை வழங்ககூடியவைகளே. இலக்கியத்தில் மனிதாபிமான, சீர்திருத்த கூறுகளும் அரசியலில் ஜனநாயகத்தை வேண்டிநிற்கும் கூறுகளும் அவ்வுந்துதலை வழங்கக்கூடியவை. மேற்கட்டுமான அம்சங்களான இலக்கிமும் அரசியலும் தத்தமது இயல்புகளின் அடிப்படையில் ஊடாட்டம் கொண்டு ஒன்றையொன்று சார்ந்தும் தனித்தும் இயங்கக் கூடியவைகளாகும்.
மலையகத்தின் இலக்கிய முன்னோடியான சி.வி. மலையக மக்களின் வரலாற்று அசைவியக்கத்தில் தொழிற்சங்க, அரசியல் பணிகளூடாக வழங்கிய பங்களிப்பை மேற்குறித்த அடிப்படையில் இருந்து புறவயமாக நோக்குவது அவரின் பங்களிப்பை வலிந்து மிகைப்படுத்துவதனையோ அல்லது குறைத்து மதிப்படுவதனையோ தடுக்கக்கூடியது. அத்தோடு சி.வி.யை மையப்படுத்திய அடையாள அரசியலையும் பிழைப்புவாத இலக்கியப் போக்கையும் அம்பலப்படுத்தக்கூடியது.
பொதுவில் மலையகத்தில் இலக்கியம் படைப்பவர்கள் தமது படைப்புகள் மூலம் வெளிப்படுத்தும் எதிர்ப்பு, தொழிலாளர் சார்பு, மனிதாபிமானம், ஆதிக்க விரோதம் என்பவைகள் அரசியல் தளத்தில் அவர்களின் ‘நடுநிலை’ ‘அரசியல் நீக்கம்’ மூலம் மறைமுகமாக சமரச, தொழிலாளர் விரோத, மனிதாபிமானமற்ற, ஆதிக்க நிலைப்பாட்டை எடுத்துள்ளமையைக் காணலாம். எனினும் இலக்கியவாதியாக மட்டுமன்றி அரசியல், தொழிற்சங்கச் செயற்பாட்டாளராகவும் இருந்த சி.வி. எவ்வகை அரசியலை அல்லது அரசியல் கருத்தியலை ஆதரித்து செயற்பட்டார் என்பதை இலக்கியத்தை கடந்து அவரின் அரசியல் செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடவும் அவரின் இலக்கியம் அரசியலிலும் அரசியல் இலக்கியத்திலும் வகித்த பங்கையும் அறிய வழிவகுக்கும்.
அந்தவகையில் இக்கட்டுரையானது சி.வி.யின் பதிவுகள், அவரின் அரசியல், தொழிற்சங்க மற்றும் இலக்கிய நடைமுறைகள் மற்றும் சி.வி. பற்றிய பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவரின் அரசியல், தொழிற்சங்க பணிகளை சுட்டிக்காட்டி அது மலையக அரசியல் அசைவியக்கத்திற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கியது என்பதை மதிப்பிடுவதனை நோக்காக கொண்டுள்ளது.
2. சி.வி.யும் தொழிற்சங்க அரசியல் பிரவேசமும்
1914 செப்டம்பர் 14ஆம் திகதி பூண்டுலோயாவில் உள்ள வட்டக்கொடை மடக்கும்புற மேற்பிரிவு தோட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த தொழிலாளர் குடும்பத்தை விட வசதிபடைத்த குடும்பத்தில் சி.வி. பிறக்கிறார். சி.வி.யின் பிறப்பிடமான வட்டகொட பிரதேசமானது தொழிற்சங்க உணர்வு பெற்ற மக்களையும் பிரபல தொழிற்சங்க தலைவர்களை கொண்டும் காணப்பட்டதுடன் பெரிய கங்காணியான தனது தாய் மாமனாரின் விட்டிலேயே குழந்தை பருவம் தொட்டு வாழ்ந்திருக்கின்றார். அவரின் பாட்டனாரும் ஒரு பெரியகங்காணியே.
சி.வி. மடக்கும்புற தோட்டப் பாடசாலையிலும் அதன் பின்னர் அட்டன் மெதடிஸ் (தற்போது ஹைலன்ஸ்) கல்லூரி, நுவரெலிய புனித திருத்துவக் கல்லூரி, கொழும்பு நாளந்தா வித்தியாலயம் போன்ற கல்லூரிகளில் ஆங்கில மொழியில் பயின்றார். சிங்கள மொழி பரீட்சயமும் பெற்றிருந்தார். பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
பாடசாலை காலத்தில் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சி.வி. சாத்வீக, மனிதாபிமான நோக்கில் அவற்றை இலக்கியம் படைத்தும் வந்தார். தனது வாழ்விலும் அதனை கடைபிடித்து வந்தார். வங்கக் கவி தாகூர் இலங்கைக்கு 1934ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்த போது தமிழ்நாட்டு மன்னர் கதையொன்றை அடிப்படையாக கொண்டு தான் எழுதி இருந்த ‘விஷ்வமாஜினி’ என்ற நாடகத்தை அவரிடம் வழங்கி வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது சி.வி. நாளந்தா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தாகூரின் தாக்கம் அவரின் படைப்பிலக்கியங்களில் வெளிப்பட்டதுடன் அவரின் இலக்கிய செல்நெறியில் மாற்றங்களுக்கும் வித்திட்டது. அவர் ஆங்கில இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகளையும் கற்று தேர்ந்திருந்ததோடு ஆழமான இலக்கிய தேடலை கொண்டிருந்தார். இத்தேடல் அவரின் முற்போக்கு, புரட்சிகர இலக்கியங்களில் பரீட்சயத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் ஆகர்சிப்பை பெற்றிருந்த இலங்கை இந்திய காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான கே. ராஜலிங்கம், ஏ. அஸீஸ் ஆகியோரின் தூண்டுதல் காரணமாக தனது ஆசிரியர் பணியைத் துறந்து, 1940 யூன் 25ஆம் திகதி ஆரம்பமான இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தினுடாக (CICLU) (இ.இ.கா. தொழிற்சங்க பிரிவு) சி.வி. தொழிற்சங்க, அரசியல் பணிக்கு காலடி எடுத்துவைத்தார். வலதுசாரிகளிடமிருந்தும் ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிற்சங்கவாதிகளிடம் இருந்தும் இந்திய எதிர்ப்பு வெளிப்பட்டிருந்த சூழ்நிலையில் சி.வி. இலங்கை இந்திய காங்கிரஸ் கொள்கைகள் மீது கொண்டிருந்த உடன்பாடும் அவர் அவ்வமைப்பினூடாக தொழிற்சங்க, அரசியல் பயணத்தை தொடங்க முடிவு செய்தமைக்கு காரணமாய் அமைந்திருக்கலாம். சி.வி.யின் ஆங்கிலப் புலமை அவரை இ.இ.கா உள்ளீர்த்துக் கொண்டு முதன்மைப்படுத்த காரணங்களாயின. அக்காலத்தில் ஆங்கிலம் கற்ற கங்காணிமார்களின் புதல்வர்கள் இ.இ. காங்கிரசில் இணைந்து கொண்டமையும் பின் தலைவர்களாக உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் சி.வி. இ.இ.கா. இருந்த தலைவர்களில் வேறுபட்டவராக இருந்தார். தோட்ட வாழ்கையை நேரில் கண்டு வாழ்ந்தவர் என்ற ரீதியிலும் கல்வி, இலக்கிய அறிவு, பரந்து விரிந்த நண்பர் வட்டம் என்பவற்றின் விளைவாக மற்றைய தலைவர்களில் இருந்து வேறுபட்ட ஆளுமையாக சி.வி. திகழ்ந்தார். ஆதிக்க எதிர்ப்பையும் மக்கள் மீதான பரிவையும் உடைய சமூக நோக்கை அவர் கொண்டிருந்தார்.
இவ்வாறு தொழிற்சங்க பணிக்கு இ.இ.காங்கிரஸ் ஊடாக பிரவேசம் பெற்ற சி.வி. அந்த அமைப்பின் கீழ் சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் (1947) தலவாக்கலை தொகுதியில் வெற்றிபெற்று இ.இ. காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற 07 பேரில் ஒருவராக பாராளுமன்றம் நுழைந்தார்.
3. குடியுரிமை பறிப்பும் சி.வி.யும்.
மலையக மக்கள் இ.இ.காங்கிரசுடனும் கொண்டிருந்த அரசியல், தொழிற்சங்க உறவில் அச்சம் கொண்ட வலதுசாரி ஏகாதிபத்திய விசுவாசம் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அன்றைய அரசாங்கம் மலையக மக்கள் நாடற்றவர்களாகவும் அரசியல் அநாதைகளாகவும் ஆக்கும் நோக்குடன் குடியுரிமை சட்டத்தை 1948 ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றியது. இந்த மனிதாபிமானமற்ற சட்டத்திற்கு சிங்கள, இலங்கை தமிழ், முஸ்லிம் வலதுசாரி தலைமைகளின் ஆதரவும் கிட்டிற்று. அத்துடன் அக்காலங்களில் தோட்டங்களில் இருந்த மிகை தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டிய தேவையை பிரிட்டிஷ் தோட்டக் கம்பனிகள் கொண்டிருந்ததால், பிரசா உரிமை மறுப்பின் மூலம் பெரும் எண்ணிக்கையானவர்களை இந்தியாவிற்கு நாடுகடத்தும் உள்நோக்கம் அச்சட்டத்தில் இருந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. சுதந்திர இலங்கையின் இரண்டாவது தேர்தலுக்கான நியமனப் பத்திரம் 1952ஆம் ஆண்டில் செய்யப்பட்ட போது குடியுரிமை மறுப்பிற்கு எதிராக இ.இ. காங்கிரஸ் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் பலவீனமானதாகவும் வரையறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டதாக இரா. சிவலிங்கம் அவர்களினால் மதிப்பிடப்பட்டிருந்த போதும் பிரஜா உரிமை மறுப்புக்கு எதிராக இடம்பெற்ற ஒரே ஒரு போராட்டம் என்ற வகையில் முக்கியத்துவம் மிக்கது. அப்போராட்டத்தில் சி.வி. பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வழங்கி இருந்தார்.
சத்தியாக்கிரகம் நடைபெற்ற காலத்தில் இ.தொ.கா. இணைச் செயலாளராக சி.வி. இருந்துள்ள நிலையில் அதனை ஒழுங்கமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அப்போராட்டம் 142 நாட்கள் பிரதம மந்திரியின் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றதுடன், மலையக மக்கள் வாழும் பல மாவட்டங்களின் தோட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் கொழும்புக்கு வந்து பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது. அன்றைய ஐ.தே.கட்சியின் அடக்குமுறை, அடாவாடித்தனங்களினால் ஒடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் 11 பேர் 10 மணி நேரம் பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டனர். அந்த 11 பேரில் சி.வி.யும் ஒருவர். (சாரல் நாடன், 2014) இது சி.வி. சத்தியாகிரகப் போராட்டத்தில் வகித்த முனைப்பான பங்கையும் உறுதியையும் வெளிப்படுத்துவதாகும்.
1948ஆம் ஆண்டு பிரஜா உரிமைச் சட்டம், 1949 இந்திய பாக்கிஸ்தானியர் வதிவிடச் சட்டம் மற்றும் 1948 தேர்தல் திருத்தச் சட்டம் என்பன மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்த நிலையில், சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்த 1952க்கு பின்னர் மலையக மக்கள் தேர்தல் அரசியலில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டதுடன் நாடற்றவர்களாகவும் அரசியல் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டனர். மலையக மக்களின் நாடற்றவர் பிரச்சினை நான்கு தசாப்தங்கள் வரை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழிற்படை ஆட்பிரிப்பு ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு மனித அவலங்களாக தொடர்ந்தன.
4. தீவிர தொழிற்சங்கப் பணியில் சி.வி.
அவர் தொழிற்சங்கத்தை தொழிலாளர்களின் அமைப்பாக மாற்றுவதற்கு எவ்வாறான நோக்கினைக் கொண்டிருந்தார் என்பது 1950.07.26 அன்று
சி.வி. ஆற்றிய உரையின் பின்வரும் பகுதி கோடிட்டுக் காட்டுகிறது.
‘தொழிற்சங்கத் துறையில் இருக்கும் என்னைப் போன்றவர்கள், இந்த நாட்டில் உள்ள தொழிற்சங்க சட்டங்கள் எவ்வளவு உழுத்துப் போனதாக, நடைமுறைக்கு ஒவ்வாததாக, பழமையானதாக இருக்கின்றதென்பதைக் காண்கின்றோம். இந்தச் சட்டங்கள் முதலாளிமாரின் கையில் கசையைக் கொடுப்பவையாகவும், தொழிலாளர்களின் கசையடியைப் பெற்றுக் கொள்பவர்களாகவும் ஆக்கத்தான் உபயோகிக்கப்படுகின்றன.’ (சாரல் நாடான், 2014)
சி.வி. தொழிற்சங்க போராட்டங்களில் சாத்வீக போக்கை கடைபிடித்த போதும் இலங்கையின் முதலாளித்துவச் சட்டம் எவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களை நோக்கியுள்ளது என்பதை இதனூடாக வெளிப்படுத்தி இருக்கின்றமையானது இ.இ.கா. இருந்த, அதன் வழிவந்த வலதுசாரி, பிற்போக்கு தலைவர்களில் இருந்து அவர் வேறுபடும் விதத்தை காட்டி நிற்கின்றது.
சி.வி. இ.தொ.காங்கிரசின் கலாசாரப் பிரிவில் செயற்பட்ட போது மலையகத்தில் இலக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். (சாரல் நாடான், 2014)
5. தொழிற்சங்க பிளவுகளும் சி.வி.யின் அரசியல் நிலைப்பாடுகளும்
இ.இ. காங்கிரசில் (1950ஆம் ஆண்டு இ.இ.கங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) ஏற்பட்ட பிளவுகளும் இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்திய பல தொழிற்சங்கங்கள் தோற்றம் பெறுவதற்கும் வழிவகுத்திருந்த நிலையில் அக்கால தொழிற்சங்க தலைவர் என்ற வகையில் அந்த பிளவுகள் சி.வி.யையும் பாதித்தன. இ.தொ.காங்கிரசின் முதல் பிளவு 1956ஆம் ஆண்டு இடம்பெற்றது. இ.இ.காங்கிரசின் தாபக தலைர்களில் ஒருவரான ஏ.அஸீஸ் அவர்கள் 1956இல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சி.வி., எஸ்.எம். சுப்பையா, கே.ஜீ.எஸ். நாயர், பி.தேவராஜ், எஸ்.நடேசன் போன்றோருடன் சேர்ந்து தாபித்தார்.
எந்த சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்துடன் இ.தொ.கா. இணைய வேண்டும் என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, 1955இல் திரு. தொண்டமான் திரு. அஸீஸ் என்ற இ.தொ.கா. தலைமைகளுக்கிடையே முரண்பாடுகள் தீவிரமடைவதற்கும் பிளவு வரை நீட்சி பெறுவதற்கும் காரணமாகியது. தொண்டமான் அவர்கள் ICFTC (International Confederation of Free Trade Unions)யில் காங்கிரஸ் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதனை நிறைவேற்றினார். எனினும் அஸீசும் அவர்களும் அவருக்கு ஆதரவான தலைவர்களும் சோசலில நாடுகள், மூன்றாம் உலக மற்றும் முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய றுகுவுரு (World Federation of Trade Unions) இணைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். (எஸ். நடேசன், 1993)
சி.வி., அஸீஸ் அவர்களின் நிலைப்பாடுகளுடன் ஒத்தப் போக்கைக் கொண்டிருந்ததுடன் இ.கா.காங்கிரசில் இருந்த ஜனநாயக மறுப்பில் அதிருப்தியும் கொண்டிருந்தார்.
1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தாபிக்கப்பட்ட ஜ.தொ.காங்கிரஸ் துரித வளர்ச்சியைக் கண்டது. அந்த தொழிற்சங்கத்தின் தலைவர்களில் ஒருவர் என்றவகையில் சி.வி.யின் பங்களிப்பு குறிப்பிட்டுச் 9சொல்லத்தக்கதாகும். ஜ.தொ.காங்கிரசை இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அங்கீகரிக்க மறுத்து வந்த நிலையில், 1956 மே மாதம் அக்கரபத்தனை டயகம தோட்டத்து மக்கள் தமது சங்கத்தை (ஜ.தொ.கா) அங்கீகரிக்க மறுத்த தோட்ட துரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2000 தொழிலாளர்கள் வரை பங்கு கொண்டிருந்தனர். இப்பிரதேசத்தில் உள்ள தோட்டங்கள் தோரும் ஜ.தொ.கா. தலைவர்களான அஸீஸ், சி.வி. மற்றும் எஸ்.நடேசன் ஆகியோர் கூட்டங்களை நடத்தி தொழிலார்களுக்கு விழிப்புணர்வூட்டியதாக எஸ். நடேசன் தனது நூலில் குறிப்பிடுகிறார். பொலிசார் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில் இப் போராட்டத்தின் போது 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபிரகாம் சிஞ்ஞோ என்ற இளம் தோட்டத் தொழிலாளி மரணமடைந்தார். அப்போராட்டத்தை தொடந்து நடத்தி செல்வதற்கு சி.வி. வழிகாட்டியாக நின்று நடேசனுக்கு ஆலோசனை வழங்கி (எஸ்.நடேசன்,1993) போராட்டம் வெற்றியடைவதற்கு தனது பங்களிப்பை செய்துள்ளர்.
எனினும் சி.வி.யுடன் நெடுகாலம் அரசியல் மேற்கொண்ட டீ. ஐயாதுரை அவர்கள் சி.வி.யே அப்போராட்டத்தை வழிநடத்தினார் என குறிப்பிடுகிறார். ளுறுசுனு பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் இடம்பெற்ற குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அப்போராட்டத்தின் காரணமாக பண்டாரநாயக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள், ஜ.தொ.கா., இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று, பேச்சுவார்த்தையின் பின் ஜ.தொ.கா. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர் ஜ.தொ.கா. ஏற்பட்ட பிளவு இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் (CPWU) என்ற தொழிற்சங்கம் தோன்ற ஏதுவாகியது. இது பொதுவாக செங்கொடி சங்கம் என அறியப்பட்டது. இது இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இருந்தது. அஸீஸ் அவர்களின் தனிமனிதவாத போக்குகள், தீவிர அமைப்புகளில் அவர் இணைவதில் கொண்டிருந்த அச்சம் என்பவை காரணமாக ஜ.தொ.கா இருந்த இடதுசாரி போக்குடைய தலைவர்களான எஸ். நடேசன், பீ. தேவராஜ் ஆகியோரால் இ.பெ.தொ.ச. தோற்றுவிக்கப்பட்டதுடன் பின்னர் சி.வி., எஸ். எம். சுப்பையா, ரொசாரியோ பெர்ணான்டோ, ஏ.டி. மூர்த்தி, ஓ.ஏ. இராமையா, எஸ். மாரியப்பன், பீ.பீ.கந்தையா ஆகியோர் இணைந்து கொண்டிருந்தனர். (எஸ்.நடேசன், 1993). ஜசோவியத்தின் பாராளுமன்ற பாதையில் புரட்சி என்ற திரிபுவாதம் தொடர்பான பிரச்சினையில் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுற்றது. அது செங்கொடி சங்கத்திலும் பிரதிபளித்தது. எனினும் பெரும் தொழிலாளர்களின் ஆதரவுடன் செங்கொடி சங்கம் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி(சீன சார்பு)யினால் வழிநடத்தப்பட்டது.
ட்ரொட்ஸ்கிய கொள்கையைக் கொண்ட இ.ச.ச.கட்சி பாரம்பரியத்தை மீறி அதற்கு மாற்றாக மாக்சிய லெனினிச கொள்கையை முன்வைத்து கட்டப்பட்ட இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமாக பரிணமித்த இ.பெ.தொ.சங்கத்தில் சி.வி. இணைந்து பணியாற்றியமை தற்செயலானதாக இருக்க முடியாது. மலையக மக்களின் அரசியல் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதில் இடது அரசியல் கொள்கையுடனான தீவிர (radical) போக்குடைய தொழிற்சங்க பணியின் தேவையை உணர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானமாக அதை கொள்ளலாம். எனினும் இ.பெ.தொ.சங்கத்துடனான சி.வி.யின் உறவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
எஸ்.நடேசனின் கருத்துப்படி இ.பெ.தொ.ச. பொதுச் செயலாளராக என். சண்முகதாசன் தான்தோன்றித்தனமாக சுய நியமிப்பு செய்து கொண்டமையே சி.வி.யும், சுப்பையாவும் இ.பெ.தொ.சங்கத்தில் இருந்து விலக காரணம். எனினும் சி.வி.யும் சுப்பையாவும் இ.பெ.தொ.சங்கங்கள் வளர்ச்சி மற்றும் அ.இ.தோ.தொ.ச பணிகள் காரணமாக பின்தங்கி இருந்த இ.தொ.கா மற்றும் ஜ.தொ.கா ஆகியவை தமது முன்னைய பகைமையை மறந்து இணைந்து செயற்பட்டிருந்த ‘புதிய இ.தொ.கா.’வில் (இ.தொ.கா மற்றும் ஜ.தொ.கா இணைந்த அமைப்பு புதிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என அழைக்கப்பட்டது) மீண்டும் இணைந்தமையானது எந்த கொள்கை உடன்பாட்டின் அடிப்படையிலானது என்ற கேள்வி எழுகிறது. சி.வி. இ.தொ.கா. மற்றும் ஜ.தொ.கா ஆகியவற்றில் இருந்து வெளியேறுவதற்கு காரணங்களாய் இருந்த அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டமையினால் அவ்வமைப்புகளில் சேர்ந்து உருவாக்கிய புதிய இ.தொ.க. சி.வி இணைந்தார் என்று கூற முடியாது. அத்தோடு அச்சங்கத்தில் இருந்தும் அவர் பின்னர் வெளியேறியமையே அதற்கு சான்று பகர்கிறது. புதிய இ.தொ.கா இணைய சி.வி. எடுத்த தீர்மானமானது இ.தொ.கா. இருந்த வீ.கே. வெள்ளையன், இராஜலிங்கம் போன்றவர்களின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட நட்பின் அடிப்படையிலான எடுக்கப்பட்ட தீர்மானமாகவே நோக்க வேண்டியுள்ளது. இது சி.வி.யின் அரசியல் நடைமுறையின் பலவீனத்தையும் அரசியல் கொள்கை நிலைப்பாட்டில் அவர் கொண்டிருந்த உறுதியற்ற போக்கையும் காட்டுகின்றது. இ.தொ.கா. மற்றும் ஜ.தொ.கா. கூட்டணி 1962ஆம் ஆண்டே முறிவுற்றமை கவனிக்கத்தக்கது.
இ.தொ.கா. இருந்து அதன் முன்னால் செயலாளராகவும் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.கே. வெள்ளையன் வெளியேறி 1965ஆம் தொ.தே.ச என்ற தொழிற்சங்கத்தை அமைத்தார். (1965 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திராக இருந்த டட்லி சேனாநாயக்கவினால் வழங்கப்பட்ட இரண்டு நியமன உறுப்பினர் பதவி வெள்ளையன் அவர்களுக்கு வழங்காமையே அவர் இ.தொ.கா. இருந்து வெளியேற காரணம் என எஸ். நடேசன் அவர்கள் குறிப்பிட, ஏ.பி. கணபதிபிள்ளை செனட் சபை உறுப்பினர் நியமனம் வழங்காமையே என குறிப்பிடுகிறார். டீ. ஐயாதுரை அவர்கள் வெள்ளையன் அவர்கள் 1963ஆம் ஆண்டே இ.தொ.கா. இருந்து விலகிவிட்டார் என குறிப்பிடுகிறார்.) வெள்ளையனை இ.தொ.கா. ஆதிக்க தலைமை ஓரங்கட்டிமையானது அவரின் செல்வாக்கு இ.தொ.கா.வில் நிலைபெறுவதை தடுப்பதற்கான முயற்சியாக இருந்த அதேவேளை, அதில் சாதிய காரணிகளும் தாக்கம் செலுத்தியிருந்தன. சி.வி. 1966ஆம் ஆண்டு தொ.தே.சங்கத்தில் இணைந்து கொண்டார். இணைந்த காலத்திலே பிரதி தலைவர் பதவியை வகித்த சி.வி. 1972ஆம் ஆண்டில் இருந்து அவர் இறக்கும் வரை நிர்வாக பொறுப்பாளர் பதவியை விகித்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றினார். வெள்ளையன் அவர்கள் இறந்த பின்னர் அவ்வமைப்பின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்தியுள்ளார்.
தொ.தே.சங்கம் தொழிலாளர் ஒருவரை அதன் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கொள்கை உடன்பாட்டின் அடிப்படையிலேயே தாபிக்கப்பட்டது. அதனடிப்படையில் எஸ். பெருமாள் என்ற தொழிலாளி தலைவராக நியமிக்கப்பட்டார். 1970 ஆம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டு வரை இச் சங்கத்தின் தலைவராக தொழிலாளியான டீ. ஐயாதுரை தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டிற்கு மாற்றான நிலைப்பாடாக இதனை கொள்ளமுடியும். எனினும் ஆதிக்க அரசியலுக்கான முழுமையான பதிலாக கொள்ள முடியாது. அத்தோடு சங்கத்தின் அரசியல் கொள்கையை நடைமுறையை பிரதிபலிக்ககூடிய வலிய காரணியாக இதை கருத முடியாது. எவ்வாறாயினும் அத்தீர்மானம் ஆதிக்க அரசியலுக்கு எதிரான பிரதிபலிப்பு என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
தொ.தே.ச. தனது தொழிற்சங்கவாத நிலைப்பாட்டுடன் நிலைபெற்று வந்தபோதும் அச் சங்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அதன் சிதைவுக்கு வழி வகுத்தன. அப்பொருளாதார நெருக்கடிகள், அச்சங்கத்தினூடாக தொழிற்சங்க அரசியல் செய்திராதவர்களுக்கு அதன் தொழிற்சங்க அரசியல் அடையாளத்தை விற்க வேண்டி ஏற்பட்டது. அத்தோடு சங்கத்தின் தலைவர் பதவியை சங்கத்தின் உறுப்புரிமை பெற்ற தொழிலாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற கொள்கை கைவிட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டது. வி.கே. வெள்ளையன், சி.வி. ஆகியோரின் பாரம்பரியத்தில் கட்டப்பட்ட தொ.தே.ச. ஏற்பட்ட இந்த நிலையானது அப்பாரம்பரியத்தின் முறிவை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இவ்வாறு தொழிற்சங்க பிளவுகளுக்கு உட்பட்ட சி.வி. தான் காலத்துக்கு காலம் சார்ந்திருந்த தொழிற்சங்கங்களின் கொள்கை நடைமுறைக்கு உட்பட்டு தனது தொழிற்சங்க, பத்திரிக்கை, இலக்கிய பணிகள் ஊடாக தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரின் தனிப்பட்ட மனிதாபிமான பண்புகள் தொழிலாளர்கள் மீதான கரிசனைகள் அவரின் நடைமுறைகளின் வெளிப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் தொ.தே.ச. ஊடாக தொழிற்சங்க அரசியலை மேற்கொண்ட சி.வி. அதன் கொள்கைகள் வழிநின்று அதனை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். எனினும் அச்சங்கம் தொழிற்சங்கவாத நிலைப்பாட்டில் நின்று செயற்பட்டு வந்திருந்தமை கவனிக்கத்தக்கது.
6. சி.வி.யின் சமூக உணர்வும் அரசியல் நோக்கும்
I. தம் மக்கள் பற்றிய கண்ணோட்டமும்
‘நான் தேயிலை தோட்டத்தை சேர்ந்தவன், சொந்த தோட்டமில்லை. கம்பனி தோட்டம். எனது பந்துக்கள் இன்றும் தோட்டதில் வேலை செய்கின்றார்கள்.’ (சாரல் நாடன், 2014)
என சி.வி. குறிப்பிடுகிறார். தான் தோட்டதைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படுத்த தயக்கம் கொண்டிராத சி.வி. தனது உறவுகள் இன்னும் தோட்டங்களிலேயே வேலை செய்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு தோட்டத்துக்கும் தனக்கும் இடையிலான உறவை இணைக்கும் இன்னொரு அடிப்படையையும் காட்டி நிற்கிறார். சி.வி. தான் தோட்டத்தைச் சார்ந்தவன் என்பதை தனது அரசியல் பிழைப்புக்காக சொல்லவில்லை. உரிமை மறுக்கப்பட்டு அடக்கப்பட்ட மக்களின் ஒருவனாக தன்னை அடையாளப்படுத்துவதன் வெளிப்பாடே அது. அவ்வெளிப்பாட்டிற்கு சான்றாக அவர் சார்ந்திருந்த தொழிற்சங்க பணிகளில் அவர் தொழிலாளர்கள் சார்பாக இருந்து ஆற்றிய பணிகள் அமைகின்றன. முழு தோட்ட மக்களின் முன்னேற்றம் பற்றி சி.வி. சிந்தித்துள்ளார் என்பது அவரின் குடும்பம் பெரிய கங்காணி பின்னணியை கொண்டிருந்த போதும் பெரிய
கங்காணி பற்றி ‘நமது கதை’ என்ற கட்டுரையில் முன்வைத்துள்ள பின்வரும் பதிவு சான்றுபகர்கின்றது.
‘தோட்டத் துரைக்கும் தொழிலாளர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. தொழிலாளி பெரிய கங்காணியின் சொத்து…
தோட்டங்களில் ஜமீன் போலல்லாது ‘ரட்ட மாத்திய’ போல் சுகபோக வாழ்வை நடாத்தினார்கள். பட்டினங்களில் வட்டிக் கடை, தாய் நாட்டில் நிலம், சிறு தோட்டங்களை வாங்கினார்கள்….
2000 பெரிய கங்காணிகள் இருந்தார்கள் ஜெமிந்தார்கள் போல் தோட்டப் பெயர்களோடு சேர்த்து அழைக்கப்பட்டனர்.’ (சி.வி. வேலுப்பிள்ளை, 1987)
மலையக மக்கள் தாம் ஒரு புதிய சமூகமாக இலங்கையில் நிலை கொண்டு, இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்திய நிலைமாற்றத்தை குறிப்பிட்டு அந்நிலைமாற்றத்திற்கு காரண கர்த்தாக்களான மலையக மக்களின் நிலையை ‘நமது கதை’ என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ஹல்தமுல்லையில் சென்னை வங்கி திறக்கப்பட்டிருந்தது. தேயிலை தொழில் வேறு எத்தனையோ தொழிலுக்கு தாய் தொழிலாக அமைந்தது. கல் தச்சு, மர தச்சு, குட்டிக் கடைகள், போஸ்ட் ஆபீசுகள், ரயில்வே, பி.டபில்யூ.டி. பொது சேவை இலாகா கச்சேரி, பொலிஸ், மருத்துவமனை, போன்ற எத்தனையோ ஸ்தாபனங்கள் தோன்றின. உள்நாட்டு மக்கள் எத்தனையோ வேலைகளின் அமர்ந்தார்கள். தேயிலை ஒரு புதிய நாகரீகத்தை கொண்டு வந்தது… ஆனால் நம்மவர்கள் கந்தை கட்டிகளாகவே இருந்தார்கள்’ (சி.வி. வேலுப்பிள்ளை, 1987)
மலையக மக்கள் அவர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் மனிதர்கள் காலடி பட்டிராத மலை உச்சிகளை தமக்கான நிலமாக்கி மனித நாகரீகத்தை ஏற்படுத்தினர் என்பதை வலியுறுத்தி சிங்கள விவசாயிகளின் காணிகள் பறிக்கப்பட்டு அதில் மலையக மக்கள் குடியமர்த்தப்பட்டதாக கூறப்படுவதை சி.வி. மறுக்கிறார். அடிப்படையற்ற அவ்வாதத்தை ‘மலையக மக்களின் இன்றைய பிரச்சினை’ என்ற கட்டுரையில் பின்வருமாறு தர்க்கபூர்வமாக நிராகரிக்கிறார்.
‘வந்ததும் வராததுமாய் இவர்கள் காடுகளை அழிப்பதில் ஈடுபடுத்தப்பட்டனர். விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களில்தான் குடியமர்த்தப்பட்டனர் என்று சிலர் கூறுவர். எவ்வளவோ நன்செய் நிலம் கேட்பார் கேள்வியின்றி கிடந்த அந்த நாளில் சிங்கள விவசாயி மலை உச்சிகளில் ஏறி என்ன செய்து கொண்டிருந்தான் என்பது எமக்குப் புரியவில்லை. ஆனால் மலையக வரலாறு குறித்தும் மலையகத்தை சிருஷ்டிப்பதில் மலையக மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் குறித்தும் ஓரளவேனும் இந்த விமர்சகர்கள் அறிந்திருப்பார்களேயானால் சிங்கள விவசாயிகளை மலைமேல் ஏற்றும் தமது செய்கை குறித்த வெட்கம் அடைந்திருப்பார்கள்’ (சி.வி. வேலுப்பிள்ளை, 1987)
மலையக மக்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் இலங்கை மலையக மக்களின் தாய் நாடு என்பதை சி.வி. நாட்பதுகளிலேயே அழுத்தி கூறியுள்ளார். 1947ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இலங்கை எனது தாய் நாடு என்பதை பின்வருமாறு வழியுறுத்துகிறார்.
‘எனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டது போல இந்த பூமியில் தான் நான் பிறந்தேன். சூரிய ஒளியை முதலில் இங்குதான் தரிசித்தேன். இறுதியாக நான் கண்களை மூடப் போவதும் இந்த நாட்டிலேதான்.’ (சாரல்நாடன், 2014)
அத்தோடு இலங்கையில் இருந்து ஒப்பந்தங்கள் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பப்படுவதை அவர் ஏற்கவில்லை அந்த ஒப்பந்தங்கள் என்ன உள்நோக்கத்தை கொண்டிருந்தது என்பதை பின்வருமாறு பதிவு செய்கிறார்.
‘சிறிமா- சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் சுயமாகவும் மலையகத்தோரில் பலரை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க உதவியது. இது பெருந்தோட்ட அமைப்பு முறையில் தேவைக்கு ஆதிகமான தொழிலாளரை அப்புறப்படுத்தி பெருந்தோட்ட அமைப்பு முறை மேலும், மேலும் இலாபம் பயப்பதாக உருவாக்குவதற்கு உதவி செய்கின்றது.’ (சி.வி. வேலுப்பிள்ளை, 1987)
மலையக மக்கள் இந்தியா செல்வதுதான் தீர்வாக அமையலாம் என மலையகத்தின் சில தலைமைகள் கருதிய அதேசமயம் இன வன்முறைகளின் அதிகரிப்போடு வட கிழக்கில் குடியேறுவதுதான் தீர்வு என கூறிய நேரத்தில், அவை இரண்டும் யதார்த்தமற்றவை என்பதை குறிப்பிட்டு மலையகத்திலேயே வாழ்வதே யதார்த்தம் என்பதை சி.வி. பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘வன்செயலின் பின்னால் மலையக மக்களின் முன்பாக மூன்று தீர்வுகளே எஞ்சி நின்கின்றன.
ஒன்று: இந்தியாவுக்கு சென்றுவிடுவது.
இரண்டு: வட கிழக்குக்கு குடியேறுதல்.
மூன்று: மலையகத்திலேயே இருப்பது.
இவற்றில் முதலாவதே கூடிய ஆதரவையும் மூன்றாவது குறைந்த ஆதரவையும் பெற்றது.
ஆனால் மக்களின் விருப்பு இவ்வாறாக இருந்தாலும் யதார்த்தம் மூன்றாவதையே பெரும்பாலும் ஆதரித்தது. முதலாது, வெறுமனே ஓர் விருப்பாகத்தான் இன்றுவரை இருக்கிறது.’ (சி.வி. வேலுபிள்ளை, 1987)
மலையக மக்களின் கல்வி வளர்ச்சியின் தேவையை சி.வி. உணர்திருந்தார். அவர் 1935ஆம் ஆண்டு தாகூரின் பெயரில் கல்விக் கூடம் ஒன்றை பூண்டுலோயாவில் அமைத்துள்ளார். அத்தோடு சி.வி. தோட்டங்களில் தின்னைப் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வி வழங்கும் செயற்பட்டை மேற்கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
மலையகத்தில் நிலவிய சாதிய கட்டமைப்பு பற்றியும் அரசியல், சமூக பண்பாட்டுத் தளத்தில் சாதியத்தின் தாக்கம் பற்றியும் அறிந்திருந்தார். என்றாலும் அவர் எந்தவித சாதிய சிந்தனைக்கும் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளாது பரந்துபட்ட நோக்கில் மலையக மக்களை நோக்கினார். இவர் கல்வி, இலக்கிய புலத்தினூடாக பெற்ற நட்பு வட்டங்கள் அனுபவங்கள் அவரின் புலமைத்துவம், மானுடத்தை நேசிக்கும் மான்பு அதற்கு காரணங்களாய் இருந்தன. சி.வி. சிங்கள பெண்னொருவரை மனந்தமையும் கவனிக்கத்தக்கதாகும்.
சி.வி. மலையக மக்களின் வரலாறு, வாழ்வியல், மானுடவியல் அம்சங்கள் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் அவர்களின் பங்கு என்பவற்றை டீழசn வழ டுயடிழரச நூல், (உழைக்கப் பிறந்தவர்கள், தேயிலை தேசம் என இந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டள்ளது) நமது கதை உட்பட பல்வேறு கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். இவைகள் மறைக்கப்பட்ட மலையக மக்களின் வரலாற்றை பதிவு செய்துள்ளன.
மலையக மக்களின் மீட்சி பற்றிய சி.வி.யின் பார்வையானது, அவலம் நிறைந்த வாழ்வை வாழ்கின்ற மலையக மக்கள் அதில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதாய் இருந்தது. அம்மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு முதலாளித்துவ ஜனநாயக முறைமைக்குள் இருந்து தீர்வுகளை தொழிற்சங்க பணிகள் ஊடக சி.வி. முயற்சித்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது.
II. சுய சார்பும் காலனித்துவ எதிர்ப்பும்
ஆங்கிலத்தில் சிறந்த புலமையை பெற்றிருந்த சி.வி. ஆங்கில அடிமை மோகத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆரம்பம் முதல் ஆங்கில மொழியில் தன் மக்களின் அவலத்தை, வாழ்க்கைப் போராட்டத்தை வெளிப்படுத்திய சி.வி. பிற்காலத்தில் தமிழ் மொழியிலும் இலக்கியம் படைப்பதில் முனைப்பாக செயற்பட்டமை தான் யாருக்காக இலக்கியம் படைக்கிறேன் என்பதில் கொண்டிருந்த தெளிவின் வெளிப்பாடு எனலாம். சி.வி. 1946இல் எழுதிய ‘முதற்படி’ என்ற கட்டுரை தொகுப்பின் ஆரம்ப பகுதியில் காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அத்தொகுப்பில் உள்ள கீழ்வரும் கூற்று அவர் ஆங்கில அடிமை மோகம் கொண்டவர்கள் பற்றிய பார்வையை காட்டுகிறது.
‘நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம் – இது நமக்கே யுரிமையா தென்பதறிந்தோம். என்ற நாதத்தின் எதிரொலி இங்கு பிறந்தது என்றாலும் ஆங்கில மோகம் நம் சுய அறிவைக் கொலை செய்வது வழக்கம். இதில் இருந்து சுகமடைவது சற்று கஸ்டமாவதால்…’ (சி.வி. வேலுப்பிள்ளை, 1946)
சி.வி. நிலபிரபுத்துவ மேட்டுக்குடி சிந்தனைகளை வெறுத்தார். தன் மக்களின் அவலத்தை போக்க அவர்களில் ஒருவராக இருந்து சிந்தித்த அவர், அனைத்து மக்களின் விடுதலைக்கும் தடையாக காலனித்துவம் இருக்கின்றமையை உணர்ந்திருந்தார். காலனித்துவத்திற்கு எதிராக சிங்களவர், இலங்கை தமிழர், இந்திய தமிழர், முஸ்லிம்கள் என இணைய வேண்டும் என்ற சிந்தனையை கொண்டிருந்தார். அத்தோடு இந்திய தொழிலாளர்கள் தொடர்பாக சிங்கள மக்கள் கொண்டிருக்கும் எதிர்ப்பு அர்த்தமற்றது என்பதையும் ‘முதற்படி’ என்ற கட்டுரை தொகுப்பில் உள்ள கீழ்வரும் பதிவு வெளிப்படுத்துகிறது.
‘…சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டத்தில் அயர்வும், சற்று ஏற்றமும் ஏற்பட்டது. இது மட்டுமா? மூலதனமும் வியாபாரமும் இந்திய வர்த்தகர்களிடம் பொன் விளையும் இறப்பர்- தேயிலை தோட்டங்களில் வெள்ளையன் கையில் அந்நியர் இலங்கையில் நடத்தி வரும் சுரண்டல் கைங்கரியத்திற்கு ஆயுதமாக இருப்பவர்கள் இந்திய தொழிலாளர்கள் என்பது தான் இவரின் அபிப்பிராயம். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அயர்வு தெரியாத் திறமையால் கோட்டை பிடிப்பது போல எல்லா உத்தியோகங்களையும் கவர்ந்து வந்ததிலிருந்து சிங்களவர்கள் மனம் வெதும்பி இருக்க வேண்டும். இந்நிலையில் நாம் இருந்தால் எப்படி நடந்துக் கொண்டிருப்போம் என்பதற்கு சிங்களவர்கள் இந்தியர்களாக இருந்தால் உடன் பதில் சொல்வார்கள்.’ (சி.வி. வேலுப்பிள்ளை, 1946)
1947.12.09 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சி.வி. பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘நாம் அநகாரிக தர்மபாலவை பற்றி ஒரு புத்தகம் போடவேண்டும். சிங்கள மொழியில் அகராதி இல்லை. அகராதியும் வெளியிட வேண்டும்’ (சாரல் நாடன், 2014)
காலனித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய அநகாரிக தர்மபாலவிற்கு புத்தகம் போட வேண்டும் என சி.வி. குறிப்பிட்டிருக்கின்றமையானது தர்மபால அந்நிய எதிர்ப்பையும் சுய சார்பையும் அடிப்படையாக கொண்டமைந்தாக நோக்கலாம். எனினும் தர்மபாலவின் தீவிர சிங்கள பௌத்த தேசிய கருத்துக்கள் விமர்சனத்திற்குரியவைகளாகவே நோக்கப்படுகின்றன. சிங்கள மொழி தொடர்பாக சி.வி. கொண்டிருந்த அக்கறை முற்போக்கானதே. சகோதர இனத்தவரின் மொழி மீதான இத்தகைய கரிசனையானது இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கைக்கும் கௌரவத்திற்கும் அடிப்படையாக அமையக்கூடியது. எனினும் பேரினவாதத்தின் வளர்ச்சியும் குறுந்தேசிய வாதத்தின் ஆக்கபூர்மற்ற வினையாற்றுகைகளும் இவ்வாறான கரிசனையை தலைவர்களிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் அழித்துள்ளமை துரதிஸ்டமே.
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தலைவரான சி.வி.யிடம் இருந்த இவ்வாறான பார்வை, அன்று வெளிப்பட்டமையானது அவரின் சுய சார்பும், இனங்களுக்கடையிலான புரிந்துணர்வு கௌரவம் வளர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்ததையுமே வெளிப்படுத்துகிறது.
III. இடதுசாரி முற்போக்கு ஆதரவு
முற்போக்கு கருத்துக்களை ஆதரித்த அதேவேளை பழமைவாத, ஆதிக்க போக்குடைய தலைமைகளை சி.வி. நிராகரித்தார். 60களில் மலையகத்தில் வெளிப்பட்ட புதிய பரம்பரையினரின் தீவிர அரசியல் போக்கையும் அவர் ஆதரித்தார். இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின், இ.பெ.தொ.சங்கத்தில் அவர் இணைந்து பணியாற்றியமையுள்ளமை அவர் இடதுசாரி தொழிற்சங்க அரசியலில் கொண்டிருந்த உறவை காட்டுகிறது.
சி.வி. இ.இ.காங்கிரஸில் இருக்கும் காலத்திலேயே இடதுசாரி கொள்கை மீது கொண்டிருந்த ஈர்ப்பை 1947ல் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றின் கீழ்வரும் பகுதி வெளிப்படுத்துகிறது.
‘இடதுசாரி குழுவில் நான் ஒரு சாதாரண உறுப்பினன் என்ற போதும் இந்த நாட்டில் உள்ள மறுமலர்ச்சிக் குழுவில் நான் ஒரு அங்கத்தினன்.’ (சாரல் நாடன், 2014)
இவ்வாறு இடது சார்புத்தன்மையை சி.வி. கொண்டிருந்த போதும் இடதுசாரி அரசியலின் தத்துவார்த்தப் பார்வையில் நின்று மலையக மக்களின் பிரச்சினையை வர்க்க போராட்டத்தின் பிரச்சினையாக நோக்கி அதற்கான அரசியல் மார்க்கத்தை உறுதிப்பட கொண்டிருக்கவில்லை. எனினும் மலையக மக்கள் முதலாளித்துவ சக்திககளால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ‘மலையக மக்களின் இன்றைய பிரச்சினை’ என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். சி.வி. முதலாளித்துவ சட்டம் தொடர்பாக கொண்டிருந்த பார்வையானது வர்க்க பகுப்பாய்வு சாயலுடன் இருந்த போதும் இடது தொழிற்சங்க பிளவுகளும் சி.வி.யின் இடது நோக்கிய அரசியல், தொழிற்சங்க பயணத்திற்கு ஒருவகையில் தடையாக இருந்திருக்கலாம். அவர் இடதுசாரி கருத்துக்களுக்கு எதிரானவராக இருக்கவில்லை என்றபோதும் அவர் 1966ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொழிற்சங்கப் பணியை மேற்கொண்ட தொ.தே.ச. தொழிற்சங்கவாதப் போக்கினயே கடைப்பிடித்திருந்தமை கவனிக்கத்தக்கது. இந்த தொழிற்சங்க போக்கானது சி.வி.யை முதலளித்துவ முறையில் இருந்து கொண்டு ஜனநாயக அடிப்படையில் மலையக மக்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வது என்ற அடிப்படையிலான ஜனநாயகவாதியாக இருப்பதனை மேலும் உறுதிப்படுத்தியது.
IV. தேசிய இனப்பிரச்சினையும் மலையக மக்களும்
பிரஜா உரிமை, வாக்குரிமை பறிப்பு பின்னர் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் என்ற பேரில் நாடு கடத்தல் என்ற ஒடுக்கமுறைக்கு உட்படுத்தப்பட்ட மலையக மக்கள் குறிப்பாக எழுபதுகளின் பின்னர் இன வன்செயல்களைக் கொண்டு ஒடுக்கப்படும் நிலை தோன்றியுள்ளமையை அறிந்திருந்த சி.வி. தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதன் இன வன்செயல்கள் அதிகரித்தமையை ‘மலையக மக்களின் இன்றைய பிரச்சினை’ என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘தோட்டங்கள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட போது அது நாட்டை வளப்படுத்தும் என்றே எண்ணப்பட்டது. நாடு வளமானதோ என்னவோ ஆனால் மலையகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அரசாங்கமும், இந்த நாட்டின் முதலாளித்துவ சக்திகளும் பெருந்தோட்ட அமைப்பு முறையில் உள்ள நல்லவற்றை எல்லாம் பெரும்பான்மை மக்களே பெற்றுத் தீர வேண்டும் என்ற இனவாத போக்கைக் கடைப்பித்து வந்துள்ளன.
எனவே, பேரினவாத அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்த இம்மக்கள் இப்புதிய போக்கினால் மேலும் ஒடுக்குதல்களுக்குள்ளானார்கள்…’
மலையக மக்களின் பிரச்சினைகள் நாட்டின் இனப்பிரச்சினையோடு சேர்த்து நோக்குவதில் உள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டிய சி.வி. தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் அரசியலில் வகிக்க போகும் இடத்தை முன்னுணர்ந்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘வடக்கு கிழக்கு பிரச்சினை அல்லது இந்நாட்டின் இனப்பிரச்சினை இந்நாட்டின் இனிவரப்போகும் தலைவிதியை நிர்ணயிக்ககூடியதாக இருக்கும் என்பது தெளிவு.’ (சி.வி.வேலுப்பிள்ளை, 1987)
‘…இவை யாவற்றையும் தொகுத்து ஆய்ந்து பார்க்கும் போது மலையகம் அதன் பூரண அர்த்தத்தில் மலையகத்தால் பிரதிநிதித்துவப்பட வேண்டியது அவசியம் என்பதையும் இதுவே இன்று அதிமுக்கியமான தேவையாகவும் பிரச்சினையாகவும் இருக்கின்றது என்பது கண்கூடு’
சி.வி.யின் இக்கருத்தானது மலையக தேசியம் பற்றிய கருத்தாக நோக்கலாம். இன வன்முறை பின்னணியில் மலையக மக்கள் தம்மை தேசிய இனமாக அணிதத்திரளச் செய்யும் போக்கு முனைப்பு பெற்றிருப்பதை உணர்ந்தே இக்கருத்தைக் கூறியுள்ளார் எனலாம்.
V. இணக்க அரசியல் என்ற காட்டிக் கொடுப்பு பற்றி
வர்க்க, இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சி.வி. பாராளுமன்ற அரசியலின் வரையறைகளை அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். பாராளுமன்ற இணக்க அரசியல் என்ற அடிப்படையில் மலையக மக்களின் உரிமைகளை அடகுவைத்தமையை தனது நீண்டகால அரசியல் அனுபவத்தினூடக அறிந்திருந்தார். மலையக மக்கள் ஆட்சியாளர்களினால் ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறு தம்மை பலியிட்டுக் கொண்டனர், அதற்கு மலையக தலைமைகளின் சலுகை அரசியல் என்ற காட்டிக் கொடுப்பு அரசியல் வகித்த பங்கு, அதனூடாக மக்கள் தமது போராட்டக் குணத்தை இழந்த விதத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘இது உண்மையில் மலையகம் மலையகத்தை காட்டிக் கொடுத்ததால்தான் சாத்தியமானது என்பதுதான் சரியான பதிலாயிருக்க முடியும்.
மலையகத்தின் ஒரு குறிப்பிட்ட மேல்தர வர்க்கம் தனது அற்ப சலுகைகளுக்காக அரசாங்கத்துடன் இணைந்திருப்பது தேவையானதொன்றாக இருந்தது.
ஆனால் இதற்குரிய காரணம் பின்வருமாறு கூறப்பட்டது. மலையகத்தை நோக்கிய இன ஒடுக்கல் பலம் வாய்ந்தாத மாறிக் கொண்டு வருகையில் யாவரும் ஓரணியில் திரள்வதை அவசியம் என்றும் அரசாங்கத்தை பகைத்துக் கொண்டால் நிலைமை மோசமாகிவிடும் என்ற காட்டிக் கொடுப்பு தத்துவங்களும் முன்வைக்கப்பட்டன…
மற்றது மலையக மக்கள் தமது பாரம்பரிய போராட்ட உணர்வுகளை மறந்து கெஞ்சிக்கெஞ்சி பெறல் என்ற இந்த வஞ்சகத்திற்கு பலியாகிப் போனர்கள்.’ (சி.வி. வேலுப்பிள்ளை, 1987)
மலையக அரசியல் சக்திகள் தொடர்பாக அன்று மதிப்பீடு செய்து சி.வி. முன்வைத்த இக்கருத்துக்கள், இன்று மலையகத்தின் பாராளுமன்ற பாதையை தெரிவு செய்த தலைமைகள் அனைத்தும் அரசாங்கத்துடன் இருந்து மலையகத்தை அபிவிருத்தி செய்வதாக கூறிவருகின்றமையானது சிறப்பாக பொருந்தி வருகின்றமை கவனிக்கத்தக்கது.
சி.வி.யின் பாரம்பரியத்தை முன்னெடுப்பதாக கூறும் தற்போதைய தொ.தே.சங்கம் உட்பட பாராளுமன்ற பாதையை தெரிவு செய்துள்ள அரசியல், தொழிற்சங்க அமைப்புகளும் அவரின் பாரம்பரியத்தை முன்னெடுக்கத் தயாரில்லை என்பதை தமது நடைமுறைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு சி.வி. கொண்டிருந்த ஆதிக்க எதிர்ப்பு, சாதியம் என்ற அடையாள அரசியலை கடந்த பொது மாண்புடனான அரசியல் கருத்துநிலையை பாராளுமன்ற வாக்குச்சீட்டு அரசியலில் செல்லுபடியற்றதாக இருக்கின்றமையானது, மலையக அரசியல் தளத்தில் சி.வி.யின் பாரம்பரியத்தின் முறிவை மட்டுமன்றி முடிவையும் காட்டு..நிற்கின்றது.
7. சி.வி.யின் இலக்கியமும் அரசியலும்
அதீத தனிமனிதவாத உள்ளடங்கங்களையே யதார்த்தங்கள் என நிலை நிறுத்தும் பின்நவீனத்துவவாத மாயைகளையும் அதீத கற்பனாவாதங்களையும் (romanticism) தவிர்த்து இலக்கியங்களை நோக்கும் போது, இலக்கியம் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாகவோ அல்லது யதார்த்தத்தை வெளிப்படுத்தி யதார்த்தத்தை மாற்றுவதனை உள்ளடக்கமாக கொண்டிக்கும். யதார்த்தத்தை பிரதிபளிக்காதவைகள் நோக்கமற்றவைகள் என்றாகாது. அத்தோடு யதார்த்தத்தை பிரதிபளிக்கும் எல்லா இலக்கியங்களும் நேரிடையான மாற்றத்தை ஏற்படுத்த வல்லவைகளாகாது. யதார்த்தத்தை பிரதிபளிக்கும் ஒரு இலக்கியப் படைப்பொன்று மாற்றத்தை பற்றி பேசாமலே மாற்றத்தை நோக்கிய உணர்வை தூண்டலாம். சி.வி.யின் இலக்கியப் படைப்புகள் எந்த தளத்தைக் கொண்டிருந்தன, அவை எந்த வகையில் அவரின் அரசியல் தளத்தை பிரதிபளித்தன என்பதை பார்ப்பது அவரின் அரசியல் கருத்துநிலைக்கும் இலக்கியத்துக்கும் இடையாலான உறவை தெளிவுப்படுத்தக்கூடியதாகும்.
சி.வி. கவிதைகள், நாவல்கள், கதைகள் என்ற படைப்பிலங்கியங்கள் ஊடாக தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தியவராவார். அவர் மலையக நாட்டார் பாடல்களை ‘மாமன் மகளே’ என்ற மகுடத்தின் கீழ் தொகுத்து வெளியிட்டிருந்தார். அவரின் கட்டுரைகளின் நடுவே கவிதைநடையையும் தரிசிக்கலாம். எனினும் இங்கு சி.வி.யின் rp.tp.apd; In the Ceylon Tea Garden, (1954) (இலங்கை தேயிலை தோட்டத்திலே என தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.) என்ற கவிதை (1952ஆம் ஆண்டில் இவை எழுதப்பட்டன), நூலுரு பெற்ற நாவல்களான வாழ்வற்ற வாழ்வு (1955), வீடற்றவன் (1962), இனிப்படமாட்டேன் (1982) என்பவற்றை அடிப்படையாக கொண்டு அவரின் படைப்புத் தளத்தை நோக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. 1954ஆம் ஆண்டு In the Ceylone Tea Garden கவிதை, 1955ஆம் ஆண்டு வெளிவந்த வாழ்வற்ற வாழ்வு என்ற நாவலில் சி.வி. யதார்த்தத்தை பிரதிபளித்த அதேவேளை யதார்த்தங்களை மாற்றுவதற்கான உணர்வுகளின் முனைப்பபையும் வெளிப்படுத்தி இருந்தார். இக்காலத்தில் இவர் இ.தொ.கா.வின் கொள்கை மீது நம்பிக்கை வைத்து அரசியல் செய்த காலமாகும்.
எனினும் முறையே 1962 வெளிவந்த வீடற்றவன் நாவலில் யதார்த்தங்களோடு விரக்தி உணர்வும் வெளிப்பட்டிருக்கின்றமையை காணலாம். இக்காலப் பகுதியானது சி.வி. தொழிற்சங்கப் பிளவுகளில் சிக்குண்ட காலம் என்பது கவனிக்கத்தக்கது. இனிப்படமாட்டேன் (1982) நாவலானது இவர் தொ.தே.சங்கத்தை தொழிற்சங்க தாபனமாக தெரிவு செய்து வழிநடத்திய காலத்தில் எழுதப்பட்டதாகும். சி.வி.யின் சுயசரிதையாக அமைந்த இந் நாவலில் யதார்த்தம் வெளிப்படுத்தும் அதேவேளை மக்கள் மீதான நம்பிக்கையோடு முடிவுறுகிறது.
In the Ceylone Tea Garden என்ற ஆங்கில கவிதையானது மலையக மக்களின் இன்னல்கள் நிறைந்த வாழ்வியலை, அவலங்களை, உரிமை மறுப்புக்களை, உரிமை குரல்களையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. அக்கவிதை நூல் இலங்கை தேயிலை தோட்டத்திலே என கவிஞர் சக்தீ அ. பாலையாவினால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. சி.வி.யின் கவிதைகளின் உள்ளடக்கமும் அது வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தரிசிக்க சக்தீ அ. பாலையா தமிழாக்கம் செய்த ‘இலங்கை தேயிலை தோட்டத்திலே’ என்ற கவிதையில் பலராலும் மேற்கோள் காட்டப்படும் ‘ஆழப்புதைந்த….’ என்ற பகுதியும் முடிவு பகுதியில் இருந்து ‘நூற்றாண்டு காலமாய் நுழைந்த இவ்விருட்டை… ‘ என்ற பகுதியும் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்பகுதிகள் மூலத்தில் இருந்து விளங்கிக் கொள்ளப்பட வேண்டிடும் என்பதற்காக மூலக்கவிதையையும் தரப்படுகிறது.
‘ஆல ஆயn !ஃ வுhநல டநை னரளவ ரனெநச னரளவ ஃ டீநநெயவா வாந வநயஇஃ ழே றடைன றநநன கழடறநசள ஃ ழுச அநஅழசநைள வழமநnஃ வுசiடிரவநள சயளைநஃ ழுஎநச வாந கயவாநச’ டிநைசள!ஃ ழு ளாயஅந றாயவ அயnஃ நுஎநச பயஎந வாநஅ ய பசயஎந? ஃ ழுடெல பழன in ர்ளை புசயஉநஃ ஊழஎநசநன வாநஅ றiவா ர்ளை பசயளளஃ ‘
“My Man !/ They lie dust under dust / Beneath the tea,/ No wild weed folwers / Or memories token/ Tributes raise/ Over the father’ biers!/ O shame what man/ Ever gave them a grave? / Only god in His Grace/ Covered them with His grass/ “
‘ஆழப் புதைந்தஃ தேயிலைச் செடியின்ஃ அடியிற் புதைந்தஃ அப்பனின் சிதைமேல்ஃ ஏழை மகனும்ஃ ஏறி மிதித்துஃ இங்கெவர் வாழவோஃ தன்னுயிர் தருவன்ஃ என்னே மனிதர்ஃ இவரே இறந்தார்க்குஃ இங்கோர் கல்லறைஃ எடுத்திலர்! வெட்கம்ஃ தன்னை மறைக்கத்ஃ தானே அவ்விறைவனும்ஃ தளிர் பசும் புல்லால்ஃ தரை மறைத்தனனோ!ஃ’
இங்கு மலையகத்தவரின் அவலத்தின் மொத்த வெளிப்பாட்டை உழைத்து உழைத்து இறந்து மாந்தருக்கு கல்லறைகூட இல்லை என வெளிப்படுத்துகிறார். கடவுளர் மட்டுமே அவர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர் என கூறுகிறார். தங்களை காப்பாற்ற யாருமே இல்லை என்ற கையறு நிலையில் இருந்து மலையக மக்களின் ஏக்க குரலாக இதனைக் காணலாம். எனினும் கவிதையின் இறுதிப்பகுதி இவ்வாறு அமைகிறது.
“And so the tom-tom’s throb/ That for a hundred years/ In fettered darkness held/ My bronze bodied men/ Shall sound yet again/ From the mountain heights/ To the valleys below/ With a clearer call/ With a surer call/
From their voteless gloom/ From their stateless doom/ Of rights withered dross/ Shall wake another dawn;/ In that matting hour/ Whare once life decayed/ Shall spring a fire – throb,/ In the breathing of men./
The tear and the sweat/ That for a hundred years/ Scattered on the dust/ Gathered unto the might/ Of a rise sun,/ Shall beget a million men/ To march upwords and on/ To whare great morning wait/ For the tom-tom’s throb/ “
நூற்றாண்டு காலமாய் நுழைந்த இவ்விருட்டைஃ வேரோடழிக்கஃ என்தமிழ் மக்கள் கூறுவர் சிகரஃ உச்சியில் ஏறிக்ஃ கூறுவர் திடல்கள்ஃ யாங்ஙனு மடுக்கவே.ஃ
விடுதலைக் குரலது வெற்றிக் குரலது வீரக்குரலது விரைந்தெழும் கேட்பீர்! அடிமை நிலையைஃ அகற்றவும் அழைக்கும்ஃ அன்புக் குரலதுஃ அன்பரீர் கேட்பீர்!ஃ வாக்குரிமையோடுஃ வளநாட்டுரிமையும்ஃ ஊக்கமும் வெற்றிஃ ஓம்பிடுங்காலம்ஃ
பூக்குமே யந்தப்ஃ புண்ணிய நாள்தனில்ஃ ஆக்கம் புரிந்தவர்ஃ அமைதி இழந்தவர்ஃ மூச்சிலே சுதந்திரத்ஃ திருகலந்திடுமே; ஃ மூச்சிலே விடுதலைச்ஃ சுகம் மலர்ந்திடுமே.ஃ பேச்சிலே வீரமும்ஃ உறுதியும் மாட்சியும்ஃ பிறந்திடும் வெற்றிப்ஃ பெருவாழ்வாமே.ஃ
சக்தி பாலையாவின் தமிழாக்கமானது சி.வி.யின் மூலக்கவிதையின் உணர்வில் இருந்து வேறுபடும் விதத்தை இங்கு காணலாம். சி.வி. விடுதலை குரலது என்ற சொல்லை மூலத்தில் பயன்படுத்தியிருக்கவில்லை. தெளிந்த சிந்தையுடனான குரலது என்ற பொருள் வரும் வகையிலேயே பயன்படுத்தி இருக்கின்றார். சி.வி.யின் கவிதையினூடாக ஏற்படுத்த எத்தனிக்கும் யதார்த்தத்தை மாற்றுவதற்கான உணர்வை சக்தி பலையா தமிழாக்கத்தில் சற்று அதிகமாகவே இருக்கின்றமையை காணலாம். சி.வி. மலையக மக்களின் விடிவு மலையக மக்களின் கைகளில் உண்டு; அதற்கு அவர்கள் எழுச்சி கொள்வர் என்ற நம்பிக்கை விதையை விதைத்திருக்கின்றார். எவ்வாறாயினும் சி.வி. தான் வாழ்த காலத்தில் இடம்பெற்ற போராட்டங்களை அவரின் கவிதையில் தரிசிக்க முடியாதிருக்கின்றமையை சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் (லெனின் மதிவானம், 1994) குறிப்பிடத்தக்கது.
வாழ்வற்ற வாழ்வு நாவலானது பெரிய கங்காணி குடும்பம் சுற்றி கதை நடத்தப்படுவதுடன் பெரிய கங்காணி முறையின் வீழ்ச்சியை சுற்றி விரியும் கதையில் இ.தொ.கா. செல்வாக்கு மக்களிடம் செல்வாக்கு பெறுவதையும் மலையக மக்கள் மீது விமர்சித்து மாற்றத்துக்கான தேவையை வழியுறுத்துவதாய் அமைந்திருந்தது. ‘உதயமாகிவிட்ட கதிரவன் இருளை அகற்றி புன்னகை செய்கிறான்’ என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி முற்றுப் பெறுகிறது.
கவிதையிலும், வாழ்வற்ற வாழ்வு நாவலிலும் சி.வி. வெளிப்படுத்தும் நம்பிக்கைகள் அவர் அரசியல் ரீதியாக இ.தொ.கா. கொள்கை மீது நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டவைகளாக கருதலாம். இக்காலத்தில் தொழிற்சங்க பிளவுகள் நிகழவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
1962ஆம் ஆண்டு வீடற்றவன் நாவலை எழுதும் போது சி.வி. தொழிற்சங்க பிளவுகளுக்கு உட்பட்டிருந்தார். வீடற்றவன் நாவலில் தொழிற்சங்கங்கத்தின் முக்கியத்துவம் அதன் போராட்டங்களே மாற்றங்களை கொண்டுவரும் என்ற உணர்வை சி.வி. ஏற்படுத்தினாலும் கதை முடிவில் அவலத்தையே யதார்த்தமாய் காட்டி முடிக்கிறார். தொழிற்சங்கம் அவசியம் என்று பேசும் அதேவேளை அதற்கு எதிர்மாறாக தொழிற்சங்கப் செய்வதால் தொழிலாளி தன் தனிப்பட்ட வாழ்வை இழக்கும் அபாயம் இருப்பதாய் கதையை முடிக்கிறார். இந்; நம்பிக்கையீனமானது தொழிற்சங்க பிளவுகளின் காரணமாக ஏற்பட்ட விரக்தி நிலையின் வெளிப்பாடுகளாக கொள்ளலாம்.
சி.வி.யின் சுயசரிதையாக அமைந்த இனிப்படமாட்டேன் நாவல் சி.வி. வாழ்ந்த கால மலையகத்தை பதிவு செய்வதுடன் அவரின் அரசியல், சமூக, தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. இடதுசாரி, முற்போக்குகள் பலமின்றி இருப்பதை வெளிப்படுத்தி தான் முற்போக்குவாதியோ பிற்போக்குவாதியோ இல்லை என்று கதையூடாக குறிப்பிடுகிறார். எழுபதுகளின் பின்னர் மலையக மக்கள் மீதான இன வன்முறை அதிகரித்த நிலையில் மலையக தேசிய உணர்வுகளும் கதையினூடாக வெளிப்படுத்தப்பட்டள்ளமையைக் காணலாம்.
எனவே, இலக்கியத் தளத்தில் மலையக மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை வெளிப்படுத்தும் படைப்பாளியாக சி.வி இருந்துள்ளார். அந்தவகையில் அவைகள் மலையக மக்கள் பற்றிய பதிவுகளாகின்றன. சி.வி. வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல், தொழிற்சங்க பிளவுகள் ஊடாக அவரில் ஏற்பட்ட விரக்தியும் நம்பிக்கையீனங்களும் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. இந்த நம்பிக்கையீனங்கள் அவர்காலத்தில் இடம்பெற்ற போராட்டங்களையும் அவரது படைப்புகளில் முனைப்பாக வெளிப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளமை கவனிக்கத்தக்கது. இது அவரின் அரசியல் கருத்துநிலையில் இருந்த பலவீனங்களின் வெளிப்பாடாக கொள்ளலாம். அவலத்தை கண்டு குமுறும் மனிதாபிமானத்தை அவர் படைப்புகளில் முதன்மையாக காணலாம். மீட்சிக்கான குரல்களும் மக்கள் மீதான நம்பிக்கையும் வெளிப்பட்டுள்ளது. அந்தவகையில் மலையக மக்களை கருப்பொருளாக கொண்ட சி.வி.யின் படைப்பிலக்கியங்கள் அம்மக்களின் வாழ்வியலை, அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளை மனிதாபிமான நோக்கில் நின்று வெளிப்படுத்தியுள்ளன.
முடிவுரை
மலையக தொழிற்சங்க வரலாற்றின் 1940களில் ஆரம்பித்து எண்பதுகள் வரை பல்வேறு கருத்தியல்கள் நடைமுறைகளைக் கொண்டிருந்த தொழிற்சங்க இயக்கங்கள் ஊடாக பணிபுரிந்த சி.வி. மலையக அரசியல், தொழிற்சங்க வரலாற்று தடத்தில் மறைக்கப்பட முடியதாகவராக காணப்படுகிறார். சி.வி. மனிதாபிமானி, ஜனநாயகவாதி, காலனித்துவ எதிர்ப்பாளன், மலையக தேசியம் பற்றிய பார்வை உடையவர், இடதுசாரி ஆதரவு கொண்டவர். ஆதிக்க மேட்டுக்குடி அரசியல், சாதியம், பிழைப்புவாத பாராளுமன்ற அரசியல் பாதை என்பவற்றுக்கு எதிரானவர். அவர் தனது அரசியல் கருத்துநிலையில் இடதுசாரி ஆதரவைக் கொண்டிருந்த போதும் அதனை பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக் கொண்டவர் அல்ல,
எனவே ஜனநாயக வழிநின்று மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடினார். இது அவரை தொழிற்சங்கவாதத்திற்குள் சிறைவைத்திருந்தது.
பன்முக ஆளுமை மிக்க சி.வி. மலையக இலக்கியத்தின் முன்னோடி. தனது எழுத்துக்கள் மூலம் மலையக வாழ்வியலை, வரலாற்றை வெளிப்படுத்தியவர். சி.வி. தனது இலக்கியப் படைப்புகளில் மலையக மக்களின் வாழ்வியல் அவலங்களை, வாழ்கைப் போராட்டத்தை வெளிப்படுத்தியதோடு மாற்றங்களுக்கான குரலை வெளிப்படுத்தியவர். மாற்றங்களுக்கான குரல்கள் அவர் படைப்புகள் வெளிவந்த காலங்களில் அவர் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள், அனுபவங்களின் பிரதிபளிப்பாகும். மலையக அரசியலில் சி.வி.யின் அரசியல், தொழிற்சங்க பாரம்பரியத்தின் தடயங்கள் தகர்க்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் சி.வி.யின் அரசியல், தொழிற்சங்க கொள்கை நடைமுறைகளின் போதாமைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதே சி.வி.யின் மக்கள் சார் அரசியல் கூறுகளை முன்னெடுப்பதற்கான வழியாகும்.
இலக்கியத் தளத்தில் சி.வி.யை மேலும் ஆய்விற்கு உட்படுத்தி மக்கள் இலக்கியப் படைப்பாக்கத்திற்கான அவரின் இலக்கிய கூறுகளை மேலும் செம்மைப்படுத்தி வளர்ப்பதே மலையக மக்கள் இலக்கியத்திற்கு வலுச்சேர்க்கும். இது மலையகத்தில் மக்கள் அரசியலுக்கான பண்பாட்டுத் தளத்தையும் உருவாக்குவதாய் அமையும். சி.வி.யின் அரசியல் தொழிற்சங்க தளத்தை நேர்மையீனமாய் மறைப்பதும், அவரின் கொள்கை நடைமுறைகளின் வரையறைகளை மறுப்பதும், இலக்கியத்தை மட்டும் கொண்டு அவரின் அரசியல் நிலைப்பாட்டை மதிப்பிடுவதும், அவரவர் அரசியல் நிலைப்பாட்டின்பாற்பட்டது. எனினும் சி.வி.யை மிகையாக போற்றுதல் என்பது அவரை கௌரவப்படுத்தும் முயற்சிகளல்ல மாறாக சி.வி.யை சிதைத்து, சி.வி.யின் தடயங்கள்கூட இல்லாத சி.வி.யின் பாதைக்கான முயற்சிகளாகும்.
பயன்பட்ட நூல்கள்:
சாரல் நாடன், சி.வி., சில சிந்தனைகள், கண்டி, 1986.
…………….., மலையகம் வளர்த்த தமிழ், துரைவி வெளியீடு, 1997.
…………….., ஸி.வி., வேலுப்பிள்ளை, குமரன் புத்தக இல்லம், 2014.
சிவலிங்கம்,இர., மலையக சிந்தனைகள், இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு, 2001.
வேலுப்பிள்ளை. சி.வி., முதற்படி, 1946.
…………………….., மலைநாட்டு மக்கள் பாடல்கள், கொழும்பு, மாவலிப் பிரசுரம், 1976.
…………………….., இனிப்படமாட்டேன், மதுரை, மீனாட்சி புத்தக நிலையம், 1984.
…………………….., வீடற்றவன், சென்னை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், 1987.
…………………….., நாடற்றவர் கதை, ஐலண்ட் அறக்கட்டளை வெளியீடு,1987.
…………………….., வாழ்வற்ற வாழ்வு, கொட்டகலை, சாரல் வெளியீட்டகம், 2001. …………………….., தேயிலைத் தோட்டத்திலே, பாக்கியா பதிப்பகம், 2007.
ஜயவர்தன,கு., இலங்கையின் இன வர்க்க முரண்பாடு, குமரன் புத்தக இல்லம், 2011.
Kanapathipilla,A.P., The Epic of Tea Politics in the Plantation of Sri Lanka, Social Scientist Association, 2011.
Nadesan,S., A History of the Up-country Tamils people in Sri Lanka, Social Scientist Association, 1993.
Velupillai. C.V, Born to Labour, Colombo, M.D. Gunasena. . 1970.
கட்டுரைகள்
லெனின் மதிவானம், கவிஞர் சி.வி.யின் இலக்கிய நோக்கு – காலமும் கருத்தும், 1994.
inoru.com/?p=17266