Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையக சமூக விடுதலைக்காக இளைய சமூகம் மாற்று சிந்தனையை உள்வாங்க வேண்டும் : எஸ்.மோகனராஜன்

ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து புரட்சி வெடிக்கும் என்பது அரிஸ்டோட்டிலின் கருத்து. இதற்கு எரிமலை சிறந்த உதாரணம். உள்ளே இருப்பது தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதற்காக கிளர்ந்தெழும் உலகில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றையும் இந்த அடிப்படையிலேயே நோக்க வேண்டும் புரட்சி பொழுதுபோக்காகவோ, விளையாட்டுக்காகவோ தோன்றுவதில்லை தன்னை ஆள முயன்ற பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 13 அரசுகள் ஒன்று சேர்ந்து அமெரிக்க சுதந்திர போராட்டத்தை நடத்தியதன் மூலமே ஐக்கிய அமெரிக்க குடியரசு உருவானது.

ஓஐஏ ம் லூயி மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த மக்களின் வெடிப்புதான் மன்னன் தலையை துண்டாக அறுத்து பிரான்சிய புரட்சிகள் தோன்றியது. (இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகள் மக்களுக்கு உரிமைகள் வழங்க முன்வந்தன) ஆரம்பத்தில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் அடாவடித்தனங்களை கொண்ட மிக மோசமான ஆட்சிக்கு எதிராகவே ஸ்பாட்டர்கள் கிளர்ந்தெழுந்தனர். ரஷ்யாவிலும் 11ம் சார் நிக்கலஸ் மன்னுக்கு எதிராகவும் இதே நிலைதான் தென்னாபிரிக்காவில் வெள்ளையின ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கருப்பினத்தவர்களது போராட்டம் அமைந்தது.

இவ்வாறு உலக வரலாறு அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் சிந்தனை செய்து ஒன்றாக போராட முனைந்து கிளர்ந்தெழுந்தமையே உரிமைகளையும் பெற முடிந்ததுடன் அடக்குமுறையை இல்லாதொழிக்க முடிந்தது. இன்னும் சில நாடுகளில் அடக்கு முறைகள் உள்ளன. இன்று, அன்று இருந்த லூயி போன்ற மிகக்கொடூரமான ஆட்சி அமையாமைக்கு அதிகார வர்க்கம் இப்புரட்சிகள் மூலம் கற்று கொண்ட பாடங்களே காரணமாகும்.

உலகில் பல பாகங்களிலும் மக்கள் அடிமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர் முதலாளித்துவ பொருளாதார முறைமை இந்நிலையை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பவன் ஒன்றும் இல்லாதவனாக வாழ்கிறான். உழைக்காதவன் சொத்துள்ளவனாக வாழ்கின்றான். பொருளாதார சுரண்டுலுக்காக மக்களை பயன்படுத்தும் நாடுகளுள் இலங்கையும் ஒன்று. இங்கு வாழும் மக்கள் ஏனைய நாடுகளில் வாழும் பண முதலைகளுக்கு கூலிக்காரர்களாக இயந்திரமாக உழைக்க வேண்டியவர்களாகியுள்ளனர்.

புடவைக்கைத்தொழிலை எடுத்துக்கொண்டால் அருமையான சக்தி மிக்க இளைய சமூகம் இன்று கிணற்றுத்தவளையாகியுள்ளது. வீட்டையும் ஆடைத்தொழிற்சாலையையும் (கைத்தொழிற்சாலை) தவிர அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரிவதற்கு சாத்தியமில்லை. சமூகத்துக்கு அவர்களால் பயனில்லை. ஆளும் வர்க்கம் இவர்களை சிந்திக்கவிடாமல் வேலைப்பலுவை அதிகரித்து திறமைகளை மழுங்கடித்து சக்தியை கசக்கி பிழிந்து பணம் சம்பாதிக்கின்றது.

பல்தேசிய கம்பனிகளும் ஏனைய தனியார் பண முதலைகளும் மக்களை கொன்று பணம் சேர்க்கத்தான் பார்க்கின்றன. மலையகத்துள் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான். தேயிலை மூலம் இலங்கைக்கு கோடிக்கணக்கில் இலாபம் கிடைத்தாலும் சம்பளமோ வாழ்க்கை முறைமையோ மாறுபாடில்லை. இதன் பின்னணி என்னவென்று சிந்தித்து பார்த்தால் நாம் சுரண்டப்படுகின்றோம். எம் உழைப்பில் எவனோ வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். எமது ஆயுளை நம்மை ஆளும் முதலாளித்துவ சமூகத்துக்காக இழக்கிறோம் என்ற உண்மை விளங்கும்.

இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற வேறுபல நாடுகளிலும் தேயிலை உற்பத்தி இடம்பெறுகின்றது. சீனாவை பொருத்தமட்டில் தேயிலை ஒரு வித்தியாசமான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது, சுய கௌரவத்துடன் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். மலையகத்தில் இறப்பர், தேயிலை பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது மிகவும் மோசமானது. பெரட்டு அழைத்தழும், சம்பளம் வழங்கும் முறையும் அடிமைகள் என்பதையே ஞாபகப்படுத்துகின்றது.

இது பிறரிடம் கையேந்துகின்ற நிலையை காட்டுகின்றது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது குறித்த தொழில் தருணர் தொழில் பொறுளரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யும் முறைமை இலங்கைக்கு வந்துள்ளது. ஏன் இவ்வாறான நடைமுறைகளை பெருந்தோட்டங்களில் ஏற்படுத்த முடியாது? இதற்கு போதுமான அறிவுப்பக்குவத்தை இம்மக்கள் பெற்றுள்ளனர். என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறான செயற்பாடுகளை தற்போதைய பணமுதலைகளான தொழிற்சங்கங்கள் செய்ய முன்வருவதுமில்லை. அவ்வாறு செய்தால் மக்கள் அடிமைகள் எளும் தமது நிலையை மறுத்துவிடுவார்கள் என அவர்கள் நினைக்கக்கூடும். இலங்கைக்கும் ஏனைய சமூகத்தினரோடு போட்டி போட்டு முன்னேறக்கூடிய போதிய வளம் மலையக சமூகத்திடம் உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த வேண்டும் இதைக்கொண்டு எமது சமூகத்தினை வளர்ச்சியடையச் செய்யலாம். பட்டதாரிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், என யாவரும் தமது பொறுப்பை சரிவர செய்வார்களாயின் இவ்விலக்கு இலகுவானது.

ஒரு தனிநபர் ஏற்க முடியாது எனவே பல்வகைப்பட்ட சமூகத்தினரும் கல்வியறிவூட்டுதல், சமூக விழிப்புணர்வு நிகழிச்சிகளை ஏற்பாடு செய்தல், வைத்திய ஆலோசனைகள், வைத்திய முகாம்கள், சுகாதார வசதிகள் மற்றும் மக்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதுடன், இளைய சமூகத்தினர், சிறுவர்களிடம் வாசிப்பு பழக்கத்தினையும், சமூகத்திற்கு தனது பங்களிப்பை வழங்கம் மனப்பாங்கையும் பொதுநல சிந்தனையும் வளர்க்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆளும் தரப்பினரும், பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் மக்களை ஏமாற்றி இலாபம் தேட முனைகிறவர்களேயொழிய யாரும் மக்களுக்கு சேவை செய்ய முன்வருவதில்லை. என்பதை வரலாறு மக்களுக்கு உணர்த்துகின்றது எனவே மக்கள் மாற்று சிந்தனை மூலமாக பொருத்தமான மாற்று அரசியலை நோக்கி பயணிக்க வேண்டும் இளைய சமுதாயத்தின் சிறந்த புத்தாக்க சிந்தனைக்கும் கற்றோரின் சிறந்த முற்போக்கான கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்து மாற்று சிந்தனையை வளர்த்தெடுப்பதன் மூலமாக மக்கள் உரிமைகளை பேணலாம், அடிமை வாழ்வை உடைத்தெரியலாம்.

உலக மக்கள் வாழ்க்கைக்கு பெருளாதாரமே அடிப்படை இது சிலர் கையில் மட்டும் இருக்கும் வரை பலர் நிம்மதியின்றி அவதிப்படவே செய்வர். அடிமை விழங்கொடிக்க வேண்டுமாயின் சுரண்டும் பகைப்பேய்கள் தூக்கி எறியப்பட வேண்டும். மக்களுக்கான அரசியல் தலைமையின் பின்னால் மக்கள் அணித்திரண்டு புரட்சி செய்யும் போதுதான் போலிவேஷமிட்டு மக்கள் இரத்தத்தை உறிஞ்சி குடித்துக்கொண்டிருந்தவர்களின் முகம் கிழியும்.

கற்றோர் சமூகம் பணத்துக்கும் பதவிக்கும் சலுகைக்கும், சில அற்ப சொற்ப நலன்களுக்கு மக்கள் துரோகிகள், அதிகார வர்க்கத்தினரின் அடிவருடிகளாக போய் சேர்வதானது தனது தாயின் கருவறையை தானே நெருப்பில் இடுவதைப்போன்ற மன்னிக்க முடியாத ஒரு செயல். இவ்வாறான சமூக சீர்கேட்டை செய்துக்கொண்டு உயிர்வாழ்வதைவிட அவ்வாறான சமூக ஒட்டுண்ணிகள் செத்து மடிவதே உகந்தது. அற்ப சொற்ப நலன்களுக்காக தன்மானம் இழந்து காட்டிக்கொடுக்கும் வாழ்க்கை விபச்சாரத்தை விட மிகவும் மோசமானது இதை மலையக சமூகம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. மக்களுக்காக குரல் கொடுப்பதாகக்கூறி இவ்வளவு காலமும் சாதாரணமான மனிதனாக வாழ்வதற்கு போதுமான உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுக்க முடியாத மலையக இளைஞர், யுவதிகளை எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் கைதுசெய்து வருடக்கணக்கான சிறைவைக்கும் அவசரகால விதிகளுக்கு ஆதரவு வழங்கி கையுயர்த்திக்கொண்டு தனது இனத்துக்கே குழி தோண்டும் சில பிரதிநிதிகளுக்கு அடிமைகளாக கற்றோர் சமூகம் மாறுவதால் எமது சமூகம் இன்னும் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்கின்றது என்பதை யாரும் மறக்கக் முடியாது.

இதற்கிடையில் மக்களுக்கு சேவை செய்வதாக பாசாங்குகாட்டி வேஷமிட்டுக்கொண்டு அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் அரைவாசியை தான் விழுங்கிவிட்டு மிகுதி எழும்புத்துண்டுகளை மக்களுக்கு வழங்கும் பிரதிநிதிகளை மீண்டும் மீண்டும் நாம் தேர்தல் மூலம் தெரிவு செய்வதால் வரலாற்றில் மிகப்பாறிய குற்றவாளியாக கருதப்படுவோம். என்பதோடு எதிர்கால இளைய சமூகம் அறுவடை செய்யவருக்கும் அடிமைத்தனத்தினதும், ஏமாற்றத்தினதும் மந்த யோசனையின் விளைவும் தற்போதைய சமூகத்தால் வழங்கப்படுகின்ற முதுசமாகும்ஃ சீதனமாகும் என்றுதான் வரலாறு கூறும்.

எனவே இளைய சமூகம் மாற்று சிந்தனைகளை உள்வாங்க வேண்டும், சினிமா, நாடகத்தொடர்கள் கையடக்கத் தொலைபேசி, ஆபாசத்திரைப்படங்கள், ஆபாசப்பத்திரிகைகள், குடிபோதை போன்ற முதலாளித்துவ மயக்க நுட்பங்களுக்கு உட்படாமல் வேலைத்தளங்களிலும் ஏனைய இடங்களிலும் தமது சிந்தனை, நடத்தைகளில் மாற்றம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இம்மாற்றம் சமூக மேம்பாட்டுக்கு தேவையான விடயங்களை கேட்டல் நல்ல பத்திரிகைகளை பார்த்து பழகுதல், கலந்துரையாடல், மாக்ஷிய சித்தாந்தம் படித்தல், நல்ல பல முன்னோர்களை பின்பற்றுதல் மூலம் ஏற்படும்.

எனவே புதிய சிந்தனை, சுய மரியாதை, கௌரவமான வாழ்க்கை, யாருக்கும் அடிமையாகாத அறிவுத்தெளிவு, பிறரை கையேந்தாத சுய உழைப்பு, யாருக்கும் அடிமையாகாத மக்கள் நலனுக்காக அரசியலில் ஈடுபடும் சக்திகளுடன் சேர்ந்து செயற்படுதல், அநீதிகளை தட்டிக்கேட்டல், நல்ல பல விழுமியங்களை பேணுதல், மூட நம்பிக்கைகள், சாதிவேறுபாடுகளை உடைத்தெரிதல், ஏமாற்றுக்காரர்களை பூண்டோடு அழித்தல், நல்ல சிந்தனையுள்ள சமூகத்தை கட்டியெழுப்புதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் மலையக சமூகத்தை மேம்படுத்த வேண்டியது இன்றைய இளைய சமூகத்தினதும், கற்றோரினதும் தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.

எஸ்.மோகனராஜன்,  சட்டத்தரணி

Exit mobile version