Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகத்தை மீட்டெடுத்த சிவனு லட்சுமணனை நினைவுக் கூரல் : லெனின் மதிவானம்

sivanu‘போராட்டமே வாழ்க்கை. ஆம், மனிதனும் மனித குலமும் இயற்கையின் மூலாதார சக்திகளை எதிர்த்து நடத்தும் போராட்டமாக அது இருக்க வேண்டும். இந்த தலை சிறந்த போராட்டத்தை வர்க்க அரசாங்கமானது, மனிதனை அடிமைப்படுத்துவதற்கான, மனிதனின் உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அருவருக்கதக்க போராட்டமாக மாற்றிவிட்டன.’ சக மனிதர்களின் நன்மைக்காக, இருப்புக்காக தனது உயிரை தியாகம் செய்த சிவனு லட்சுமணன் பற்றி நினைக்கின்ற போது மார்க்ஸிம் கார்க்கியின் மேற்குறித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.

மலையக மக்களின் வரலாறும் சமூகவுருவாக்கமும் மலர் தூவிய பாதையில் மென் நடைப்பயின்றதல்ல. ஒவ்வொரு அடியும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், அதுவும் ஒரு ஜீவ மரண போராட்டத்தின் ஊடே வளர்ந்ததொன்றாகும். எனவே இவர்களின் சராசரி வெற்றிகள் கூட நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் அடையப் பெற்றதாகும். இன்று புதிதாக தோன்றிவருகின்ற மத்தியதர வர்க்கத்தின் தாக்கம் மலையக சமூகவுருவாக்கத்தை நாலாம் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது உண்மைதான். இந்நிலையில் மலையகம் பொறுத்த குறுந் தமிழ் தேசிய உணர்வும் பிராந்திய மேலாதிக்க உணர்வும் தலைக்காட்டுவது தவிர்க்க முடியாததொன்றாகின்றது. இருப்பினும் மலையக தேசியத்தின் முற்போக்கான பக்கத்தை விருத்தி செய்து முன்னெடுத்து செல்கின்ற வேளை, மலையக மக்களுக்காக உயிர் நீத்த தியாகிகள் பற்றிய தேடலும் பதிவுகளும் அவசியமாவையாகின்றன.

இவ்வாறானதோர் சுழலில் 1977 ஆம் ஆண்டு தோட்டக் காணியை (நுவரெலியா- டெவன் பகுதியில்) பறிப்பதற்கெதிரான பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இறையாகிய சிவனு லட்சுமணன் போன்ற தியாகிகள் குறித்த நினைவுக் கூரல் அவசியமானதாகின்றது இந்நினைவுக் கூரல் என்பது கூட வெறும் சம்பிரதாய பூர்வமான நினைவுரைகளாகவோ பதிவுகளாகவோ அல்லாமல் மலையக சமூகத்தின் இருப்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவும் அமையும். அந்தவகையில் சிவனு லட்சுமணன் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான பின்னணி பற்றி நோக்குதல் அவசியமாதாகும்.

அன்று ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அதன் தலைமையில் இயங்கிய ஐக்கிய முன்னணியும் தேசிய முதலாளித்துவ சக்தியாக விளங்கியது. வரலாற்று அரங்கில் பிரவேசிக்கின்ற போது அது ஏகாதிபத்திய எதிர்புணர்வைக் கொண்டிருந்ததுடன் மக்கள் சார்ந்த பண்புகளையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பது முற்போக்கான அம்சமாகும். அதேசமயம் தமது வர்க்க நலன் காரணமாக சர்வதேச முதலாளித்துவத்திற்குள் சரணடைந்தனர். அவர்களது ஏகாதிப்பத்திய பண்பும் படிபடியான மழுங்கியதுடன், தனக்கு கையாளாக பயன்பட்ட தொழிலாள விவசாய வர்க்ககத்திற்கும் எதிராக மாறியது. திரு. பண்டாரநாயக்க இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இந்த பண்பு முனைப்படைந்தது.

இவ்வாறான நசிவு தரும் அரசியலின் பின்னணியில் கண்டிய பௌத்த-சிங்கள நிலபிரபுத்துவ உணர்வு முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில் திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமது ஒரே ஆண் வாரிசான திரு. அணுரா பண்டாரநாயக்காவை பாராளுமன்ற அரியணையேற்றுவதற்காக நுவரெலியா-மஸ்கெலியா என்ற தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதுடன் கண்டிய பௌத்த-சிங்கள உணர்வுடன் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் மலையக சமூக ஆய்வாளரொருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

‘அணுரா இதனை மிகவும் திறமையாகப் புரிந்து கொண்டு செயற்படுபவதாக நிரூபிக்கப் போய் தனது இனவாத சொரூபத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்திக் கொண்டார். தன்னை ஒரு கண்டிய சிங்கள வீரன் எனக் காட்டிக் கொள்வதற்காக மலையகத் தமிழர் மீது இனவெறியைக்கக்கினார். இவருக்கு ஆதரவாக அவரது மாமனார் மற்றொரு ‘கண்டிய சிங்கள வீரன்’ கொப்பேகடுவ ‘கண்டிய சிங்களவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுச் சிங்கள மக்களுக்கு பகிர்தளிப்பதற்குத் தடையாக தொண்டமான் குறுக்கே நின்றால் அவரையும் வெட்டிக் கூறுப்போட்டு பகிந்தளிப்பேன்’ என முழங்கினார். இங்கு தாக்கப்பட்;டது தொண்டமான் அல்ல மலையக தொழிலாளர்கள்’ மோகன்ராஜ்.க (பி.ஏ. காதர்), 1984, ஈழ ஆய்வு மையம், ஐக்கிய இராச்சியம். பக்.154,155.)

இத்தகைய பௌத்த-சிங்கள மேலாக்கச் சிந்தனையின் பின்புலத்தில் மலையக மக்கள் இந்நாட்டில் அந்நிய கூலிகலென்றும் அவர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டவர்கள் என்ற கருத்து சிங்கள மக்களிடையே அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளின் விளைவாக மலையக மக்களுக்கு சொந்தமான பல தோட்டக் காணிகளை பறிக்கும் நடவடிக்கைகள் பலாத்காரமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. பல தோட்டங்களுக்கு நில அளவையாளர்கள் சென்ற போது அதனை எதிர்த்து தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்ட கலகத்தினால் அவர்கள் பின்வாங்கினர். பல இடங்களில் தோட்டத்தொழிலாளர்கள் சிங்கள கடையர்களாலும் படையினராலும் தாக்கப்பட்டார்கள். சில தோட்டங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டதுடன் தொழிலாளர்கள் விரட்டியும் அடிக்கப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு டெல்டா சங்குவாரி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும்.

இத்தகைய காணிச் சுவிகரிப்பின் இன்னொரு பேரிவாத செயற்பாடாக அமைந்ததொரு நிகழ்வுதான் 1977 அம் ஆண்டு மலையகப் பகுதியில் 7000 ஏக்கர் தேயிலைக் காணியை பறித்து நிலமற்ற சிங்கள கிராமத்தவர்களுக்கு பகிர்தளிக்க வேண்டும் என்றடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடிவடிக்கையாகும். தமது உழைப்புக்கான தளம் பறிமுதலாவதால் தாம் பாதிப்படைவோம் என்ற உணர்வில் தொழிற்சங்கங்களை கடந்த போராட்டங்கள் மலையகமெங்கும் எழுந்தன. அவ்வாறு டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பொஸிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிவனு லட்சுமணனின் மரணம் (11.05.1977) விலை மதிப்பற்றது. இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர் என்பதை பீ.ஏ காதர், டி. அய்யாத்துரை ஆகியோர் பதிவாக்கியுள்ளனர். இப்போராட்டத்தின் மூலமாக மலையக மக்களின் காணி பறித்தெடுக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும் சிவனு லட்சுமணனின் மரணத்தை தொடர்ந்து அவரது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை எதிர்த்து மலையகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் புத்திஜீவிகள், மாணவர்கள் என பல தரப்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஹட்டனில் ஹைலன்ஸ், பொஸ்கோ கல்லூரி; மாணவர்கள் செய்த ஆர்ப்பாட்டம், அவ்வாறே நாவலப்பிட்டியில் மாணர்கள் செய்த போராட்டம் என்பன முக்கிய நிகழ்வுகளாகும். இதன் பின்னணியில் செயற்பட்ட சில ஆசிரியர்கள் அரசியல் பழிவாங்களாக 24 மணித்தியாலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். எடுத்துக்காட்டாக நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த தோழர் அழகலிங்கம் என்பவரின் இடமாற்றத்தைக் குறிப்பிடலாம். அந்தவகையில் இம்மண்ணை தமது உழைப்புக்கு களமாக அமைந்த நிலத்தை பாதுகாப்பதற்கான நடந்த போராட்டமும் அதில் உயிர் தியாகம் செய்த சிவணு லட்சுமணனின் இறப்பும் மலையக மக்களை விழிப்புக் கொள்ளச் செய்தது எனலாம்.

இதன் மறுப்புறத்தில் சிவனு லட்சுமணன் இறந்த காலப் பகுதி தேர்தல் காலமாக இருந்தமையினால் இந்த சம்பவத்தை தமது தேர்தல் வெற்றிக்கு சாதகமாக மலையக தொழிற்சங்க தலைவர்களும், யு.என், பி. கட்சியினரும்; பயன் படுத்தி;க் கொண்டனர். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில், முன்னர் பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு மேற் கொண்ட மக்கள் விரோதச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி சுதேச விதேச பிற்போக்குச் சக்திகளின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறியது. இந்தச் சூழலில் உலகமயப் பொருளாதாரத்தை அமுலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மிகத் திட்டமிடப்பட்டவகையில் முன்னெடுக்கப்பட்டன. விவசாய நிலங்கள் கைவிடப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம் முயற்சிகள் யாவும் வெளிநாட்டு, உள்நாட்டு உயர்வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தன.

இவ்வகையில் பார்க்கின்ற போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக நடைமுறையில் கண்டிய பௌத்த சிங்கள நிலபிரபுத்துவ சிந்தனைகளையே தமது அரசியல் நடவடிக்கைகளில் வெளிப்படுத்தினர். அவ்வாறே இந்நாட்டை விதேச மற்றும் உள்நாட்டு மேட்டுக்குடியினரின் சுகபோகத்திற்கும் செல்வ குவிப்பிற்காகவும் திறந்து விட்ட யு. என். பி அரசாங்கமும் மலையக மக்களுக்கு எதிராக அவர்களது இனத்தனித்துவத்தை தேசிய இனத்திற்குரிய அடையாளங்களை சிதைப்பதற்கான நடிவடிக்கைகளையே மேற்கொண்டது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக மலையக தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் உணர்வுக் கொண்டிருப்பினும் அதனை இவர்கள் துளியளவும் கவனத்pலெடுக்கவில்லை என்பதை கடந்த கால நிகழ்வுகள் எண்பித்திருக்கின்றது.

அன்று எமது உழைப்பிற்கு களமாக இருந்த மண் பறிபோவதற்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் மலையகத்தில் எழுந்த போராட்டங்கள் உயிர்த்தியாகங்கள் அதனை தற்காலிகமாக தடுத்து நிறுத்திய போதிலும் காலப்போக்கில் அவை எம்மிடமிருந்து பறிபோனதாகவே காணப்படுகின்றன. இன்று மலையகத்தில் என்றும் இல்லாதவாறு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இயற்கை சூழலும் நீர்விழ்ச்சிகளும் உல்லாச பிரயாணிகளின் சுகபோகத்திற்கான இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. மலையக பகுதிகளில் விடுதிகளும், கபானாக்களும் உருவாக்கப்பட்டுவருகின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை போன்ற நிகழ்ச்சித் திட்டங்களும் ஒரு விதத்தில் மலையக மக்களின் காணிகளை பறிப்பதற்கான செயற்பாடுகளாகவே அமைந்திருக்கின்றது. சிவனு லட்சுமணனின் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற டெவன் பிரதேசம் இன்று பறிமுதலாகி இருப்பது இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். மேலும், இன்று பௌத்த சிங்கள பேரினவாத பண்பாட்டின் பின்னணியில் மலையக தமிழர் சிங்கள மக்களோடு ஐக்கியப்பட்டு வாழ்தல் என்பதற்கு பதிலாக அவர்களின் இன தனித்துவத்தையும், தன்னடையாளங்களையும் இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளே இன்று இடம்பெற்று வருகின்றன. ஆனால் இதுவரை சிவனு லட்சுமணனுக்கான நிவைவு சின்னமோ அல்லது கல்லறையோ கட்டப்படவில்லை என்பது துயரகரமான செய்தியாகும். இந்நினைவு சின்னங்கள் என்பது கூட சிவனு லட்சுமணனுக்கு வருடாவருடம் தெய்வம் (திவசம்) கொண்டாடவோ சூடம் போடுவதற்கோ அல்ல. இன்று உலகமயமாதல் சுழலில் தன் அடையாளங்களோ சுயசிந்தனையோ இல்லாதொழிக்கப்பட்டு- தனது காலையே வெட்டி சூப்பு வைக்க முனைகின்ற தலைமுறையினர் உணர்வு பெறவும் தமது முன்னோர் நமக்காக செய்த மகத்தான போராட்டங்கள் தியாகங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காகவும் சிவனு லட்சுமணன் நினைவுக் கூறப்படல் வேண்டும்.

இது இவ்வாறிருக்க, சிவனு லட்சுமணனின் உயிர் தியாகம் என்பது மக்களை உணர்வுக் கொள்ளச் செய்து தமது உரிமைகளுக்காக அவர்களை போராடத் தூண்டியது. ஏறத்தாழ எண்பதுகளின் தொடக்கம் வரை மலையகத்தில் ஒரு உழைக்கும் மக்கள் சார்ந்த அரசியல் உணர்வே முனைப்பு பெற்றிருந்தது. இதில் மிக முக்கியமான ஒன்று மலையக மக்களின் குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டமை ஆகும். சிவனு லட்சுமணன் போன்றோரின் உயிர் தியாகத்தினால் ஏற்பட்ட ஒரு அரசியல் உணர்வே இம்மக்களின் குடியுரிமையை அங்கீகரிப்பதற்கான அக காரணியாகும். இன்னொரு புறத்தில் இத்தகைய அரசியல் எழுச்சிகளினால் வட – கிழக்கில் தோன்றிய இயக்கங்கள்கூட மலையக மக்களின் குடியுரிமை தொடர்பில் கவனமெடுக்க தொடங்கி இருந்தன.

அந்தவகையில் திம்பு பேச்சுவார்த்தையில் மலையக மக்களின் குடியுரிமை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதன் புற காரணியாக அமைகின்றது. அந்தவகையில் மலையக மக்கள் உழைக்கும் மந்தைகள் என்ற நிலையிருந்து மாறி அவர்கள் ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டதன் வளர்ச்சியை இவ்வம்சம் குறித்து நிற்கின்றது. மலையகத்தில் இத்தனியை சமூக உருவாக்கத்தினால் தோன்றிய புதிய மத்தியதர வர்க்கம் இரண்டு குணாதிசயங்களை கொண்டதாக காணப்படுகின்றது. ஒன்று உழைக்கும் மக்களிலிருந்து அந்தியப்பட்டு தனது நலனுக்காக எதனையும் செய்கின்ற அந்த உழைக்கும் மக்களையே காட்டி கொடுக்கின்ற துரோகச் செயலை செய்;கின்ற ஒரு வர்க்கமாக பரிணமித்துள்ளது. இன்னொரு புறத்தில் உழைக்கும் மக்களின் நலனோடு தம்மை இணைத்துக் கொண்டு மலையக சமூகத்தின் மாற்றத்திற்காக செயற்படுகின்ற பிரிதொரு அணியினரையும் இம்மத்திய தர வர்க்கத்தில் காணலாம். இவர்களுடைய அரசியல் சமூகு ஸ்தாபன சார்ந்த தத்துவார்த்த பின்னணியை உருவாக்குவதில் சிவனு லட்சுமணனுடைய உயிர் தியாகம் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றது.

சிவனு லட்சுமணன் போன்றோரின் தியாகத்தால் கட்யெழுப்பட்ட மலையக மக்களின் உரிமைக்கான போராட்டமானது இன, மத மொழி, சாதி சார்ந்த போராட்டமாகவோ அல்லது குழு போராட்டமாகவோ முன்னெடுக்கப்படாமல் அது பரந்துப்பட்ட ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலையகத் தமிழர்களின் சுபிட்சத்திற்கான மக்கள் போராட்டமானது இலங்கையில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல் அவசியமானதாகும். எனினும் இவர்களின் மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும். இந்த பின்னணியில் சிவனு லட்சுமணனின் வீர நினைவுகள் நினைவுக் கூறப்பட வேண்டும்.

Exit mobile version