Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன்

முன்பெல்லாம் வாசல்கதவைத் திறந்தால் வேப்பம் பூ வாடை வீசுகின்ற ஒரு தேசத்தில், இரத்தவாடை வீசிய இனப்படுகொலை நாட்களைக் கடந்து மூன்று வருடங்கள் வந்துவிட்டோம். இப்போதெல்லாம் கொல்லைப்புறக் கதவைத் திறந்தால் அமரிக்க வாடை அல்லவா வீசுகின்றது! பல தடவைகள் கைகுலுக்கு விருந்துண்டு விசாலமான அறைகளில் ஆடி மகிழ்ந்த கடாபி என்ற வயதாளி கொல்லப்பட்ட போது எக்காளமிட்டு அவர் சிரித்தாரே!அதுதான்.. “நாங்கள் வந்தோம், நாங்கள் பார்த்தோம், அவன் செத்துப்போனான்” என்று தொலைகாட்சியில் கைதட்டிச் சிரித்த மனிதப் பெண் ஹிலாரி கிளிங்டன் நாளை காலை வேப்பம் பூ வாசனையைக் கடந்து பிரஞ்சு வாசனைத் திரவியங்களோடு சாமானிய ஈழத் தமிழனின் வாசற் கதவைத் தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

‘அப்பாவி மக்கள் அண்ணார்ந்து பார்த்தால் குண்டு மழை பொழிகிறது. நேற்றுப் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று இரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. உலகம் பார்த்திராத அவலக் குரல்கள் வானத்தைப் பிளந்து அமரிக்கனின் செய்மதியைக் கூட எட்டுகிறது.’ இவை எல்லாம் நிறைவேறிக்கொண்டிருக்க ‘அமரிக்காவில் புத்த கோவில் ஒன்றில் அரைவாசி அமரிக்கப் பிரஜைக்கு சிங்கள இன வெறியர்கள் பூஜை போடுகிறார்கள். அமைதியின் வடிவமான புத்தனின் சீடர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டவர்களிடம் அவர் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கிறார். பயங்கரவாத அழிப்பைத் தலைமை தாங்கியதற்காகப் பாராட்டப்படுகிறார்.’ சரத் பொன்சேகா என்ற, அப்பாவி மக்களை அழித்த அரக்கன் தான் 2008 ஆம் ஆண்டு அமரிக்கப் புத்த கோவிலில் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட மாகான்.

அந்த ஆசிர்வாதத்தோடு, “இலங்கை சிங்களவர்களது நாடு. அங்கே ஏனையோர் வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் எந்தச் சந்தப்பத்திலும் தேவையற்ற விடயங்களைக் கேட்பதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்”. என்ற வார்த்தைகளை உதிர்த்த பேரினவாதி யாருமல்ல சரத் பொன்சேகா மட்டுமே. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – காய் நகர்த்தும் கோட் சூட் பேர்வளிகள் – தேர்தலுக்காக கூட்டுச் சேர்ந்து தமிழ்த் தேசியம் பேசிய அதே சரத் பொன்சேகா.

அப்பாவிகளைக அதிகமாகக் கொன்றுபோட்டது ‘நீயா நானா’ என்ற போட்டியில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தால் சிறையில் அடைக்கபட்டவர். அமரிக்கா எட்ட நின்று பார்த்தாலே இரத்தம் சொட்டும் என்பார்கள். இப்போது சன்னல் வரை வந்து சரத் பொன்சேகாவை ராஜபக்ச சிறையிலிருந்து விடுதலையாக்கிவிட்டார்கள். அரபு நாட்டு மக்களைக் கடந்து ஆப்கானிஸ்தான் வழியாக இலங்கையில் சனநாயகம் கட்டப் போகிறார்களாம் அமரிக்கர்கள். அதுவும் ரனிலின் ஆதரவோடு, சம்பந்தன் சிங்கக் கொடியோடு கூத்தாட, சரத் போன்சேகாவை வைத்து சனநாயகம் செய்யப்போகிறார்களாம்.
இந்த அமரிக்க சனநாயக்த்திற்குப் பழக்கப்பட்டுப் போன புலம் பெயர்ந்த “ஒரு குடைக் கடைக் கார்கள்” சம்பந்தன் சனநாயகத்தின் பின்னால் சால்ரா போட ஆரம்பித்து விட்டார்கள்.

1995 – 1996 ஆம் ஆண்டுகள் காலபகுதியில் செம்மணிச் சுடலையில் ஆண்களும் பெண்களுமாக 500 பேர் வரையில் எரித்துச் சாம்பாலக்கப்படிருந்தனர். கொலை, பாலியல் வன்முறை, என்ற அனைத்திற்கும் தலைமை தாங்கிய இராணுவத்தை வழி நடத்தியவர் பேரினவாதி சரத் பொன்சேகா. ஒரு சிறிய வேறுபாடு : மற்ற இராணுவத் தளபதிகளைப் போலன்றி சரத் பொன்சேகா கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் நேரே நடத்திக்காட்டிய “வீரர்”.
இதென்ன ஆக 500 பேர் தானே விட்டுத்தள்ளுங்கள் என சம்பந்தன் ஆரம்பிக்க முள்ளிவாய்க்கால் விழா, மாவீர்ரர் விழா ஆகியவற்றைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட புலம் பெயர் அரசியல் ஜாம்பவான்கள் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு நாள் இன்னொரு சரத் பொன்சேகா கொலைசெய்ய, ஹில்லாரி ‘வருவார், வந்து பார்ப்பார், மக்கள் கொல்லப்படுவார்கள்.’

பெருந்தேசிய வெறியோடு, இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்ட கொடிய மனிதனுக்கா ஆதரவு வழங்குகிறீர்கள் என சமப்ந்தனின் சேட்டைப்பிடித்து கேட்பதற்கு மக்களுக்குப் பலமில்லை. சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து வளர்த்தெடுத்த இனவெறி இராணுவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும். புலம் பெயர் மக்கள் விழித்தெழுந்து புலம் பெயர் அமைப்புக்களின் அலுவலகங்களை முற்றுகையிட மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஹில்லாரி கிலி ஏற்படுத்திவிட்டர்.

இவை இப்படி இருக்க கிடைத (G)கப்பில் கார் ஓட்டிவிட்டார் மகிந்த ராஜபக்ச. அதுவும் அவரது குடும்பத்தோடு சேர்ந்து!

போர்க் குற்றங்களில் கல்லோடு மண்தோன்றாக் காலத்து முன் தோன்றி வாளோடு வேலிபாய்ந்து மூத்த குடியென நிறுவிக்கொண்ட சரத் பொன்சேகாவையே அமரிக்க சனநாயகம் விடுதலை செய்து சமாதானி பட்டம் கொடுத்தால் மகிந்த குடும்பம் எப்படிப் போர்க்குற்றவாளியாகும். இன்றைக்கு வரை மகிந்த குடும்பத்திற்குக் கிலி ஏற்றியது மேற்கு போர்க் குற்றம் சுமத்தலாம் என்பதே. இனிமேல் அது செல்லுபடியாகது. மகிந்த போர்க்குற்றவாளி என்றால் அமரிக்க ஆதரவு பெற்ற சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளி தானே?

ஆக, ராஜபக்ச என்ற பாசிட்டு நிறுவிய ‘தெற்காசிய ஜனநாயகத்திற்கும்’ வெற்றி, ராஜபக்ச குடும்பத்திற்கும் வெற்றி. இந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர்களே அமரிக்கா தான். இந்தியா இனப்படுகொலையை அமரிக்காவின் துணையோடு வெற்றிகரமாக நடத்திக்கொடுத்தது. இன்று அமரிக்கா இந்தியாவின் துணையோடு ராஜபக்சவைப் புனிதப்படுத்தியிருக்கிறது. இனிமேல் ராஜபக்ச ஐயப்ப சாமிக் கோயிலுக்குப் பதிலாக அமரிக்க சாமிக் கோயிலுக்கு தான் போகப்போகிறார்.

ராஜபக்சவைப் போர்க்குற்றவாளி ஆக்கமேற்கும்விரும்பவில்லை. அவர்களது விருப்பமெல்லாம் ராஜபக்ச குடும்பம் இன்னும் வாலாட்டினால், சரத் பொன்சேகா, தேசியக் கூட்டமைப்பு, ரனில்,ம் ஜேவிபி போன்ற இத்தியாதிகளை வைத்து குட்டித் திருத்துவதைத் தான்.

இலங்கையில் சமாதானம் வந்ததோ என்னவோ ராஜபக்ச குடும்பத்திற்கு சமாதானமும் சாந்தியும் ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை.சரத்தை விடுத்தததோடு மகிந்தவையும் போர்க்குற்றத்திலிருந்து விடுவித்தது அமரிக்கா.

இனிமேல் அரச மரமும் புத்தரும் தமிழ்ப் பிரதேசங்களில் சத்தமின்றி ஆட்சி செலுத்துவார்கள். இதையெல்லாம் யாருடைய எதிர்ப்பும் இல்லாமல் இரண்டு போர்க்குற்றவாளிகளும் தத்தமது பங்கிற்கு நிறைவேற்றிக் கொள்வார்கள்.

800 இற்கு மேற்பட்ட அப்பாவிகளும் போராளிகளும் சிறைவைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் எப்படி ஒரு போர்க்குற்றவாளி மட்டும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமரிக்காவும் அதன் சகாக்களும் குரல்கொடுக்க முடியும்.? சரி, அமரிக்க அதிகாரம் தான் கொலைகளுக்குப் பழகிப்போயிற்றே, புலம் பெயர் நாடுகளில் தமிழ் ஈழம் பெற்றுத் தருவோம் என மார்தட்டிய அமைப்புக்கள் யாராவது இது குறித்துப் பேசியிருக்கிறார்களா?
இது ஒரு விமர்சனக் களமாக, சோதனைக் காலமாக, தங்களின் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் நிறுவுவதற்கு உரிய நேரமாக புலம் பெயர் அமைப்புக்கள் கருத்தில் கொள்ளத் தயாரா?

அழிக்கப்பட்ட மக்களின் அவலக் குரல்கள் அவர்களின் காதுகளில் அறைந்து சொல்கிறது “பணத்திற்காகவும், பகட்டிற்காகவும், பதவிக்காகவும் மட்டுமே புலம் பெயர் அமைப்புக்கள் உருவாகின” என்று. அது பொய்யென நிறுவ வேண்டுமானால்,

1. சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளையும் சரத் பொன்சேகவைப் போன்று விடுதலை செய்யக் கோரிப் போராட்டம் நடத்துங்கள்.

2. சரத் பொன்சேகாவைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு போராட்டம் நடத்துங்கள்.

3. மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வரும் போது பிரித்தானிய மகாராணியின் இருப்பிடத்தின் முன்னால் எதிர்ப்புப் போராட்டம் நடத்துங்கள்.

நடத்துங்கள் என்று சொல்வதற்கு நான் ஒபாமாவா என்ன. நடத்த நீங்கள் தயாரா என்பது தான் கேள்வி.

இவற்றை நீங்கள் நிராகரித்தால் நீங்கள் மக்கள் சார்ந்தவர்கள் அல்ல என்பது உறுதியாகிவிடும். உங்கள் சொந்த நலனுக்காக மேற்கின் கொலைகாரச் சமூகத்தோடு கைகோர்த்துக்கொண்ட சாபத்திற்கு உள்ளாகிவிடுவீர்கள்.

இப்போ கேள்வி இதுதான் நீங்கள் மக்கள் நலன் சார்ந்து செயற்படுகிறீர்களா இல்லை உங்கள் சொந்த நலன் சார்ந்து வியாபாரம் செய்கிறீர்களா?

ஒன்று மட்டும் உண்மை, நீங்கள் உங்கள் மக்கள் சார்ந்த நீதியை இப்போது நிறுவத் தவறினால் சமூகப்பற்றுள்ள மக்களை நேசிக்கும் இன்னொரு கூட்டம் உங்கள் வீட்டு முற்றத்தில் போர்க்குரல் எழுப்பத் தயாராகிவிடுவார்கள். அவர்களோடு நாமும் இணைந்து கொள்வோம்.இது எச்சரிக்கை அல்ல எதிர்காலத்திற்கான முழக்கம்.

Exit mobile version