இராணுவம் விற்பனை செய்யும் மலிவு விலைப் பொருட்களோடு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் போட்டி போட முடிவதில்லை. இதனால் வறிய விவசாயிகள் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்தியதர வர்க்கத்தைப் பொறுத்தவரை இராணுவத்தின் மலிவு விலைப் பொருட்கள் ஒருவகையான வசதியை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்று ‘உரிமை பெற்றுத்தருவோம்’ என்ற சுலோகத்தோடு தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவம் முற்றாக வெளியேறத் தேவையில்லை என்று கூறுகிறது. இதற்கும் மேலாக நவீன வசதிகளுடன் இராணுவக் குடியிருப்புக்கள் வடக்கின் பல இடங்களிலும் முளைத்துள்ளன.
இது தவிர இன்று தேர்தலில் போட்டியிடும் அத்தனை தரப்பும் ஜால்ரா போடுகின்ற மேற்கு நாடுகளின் அரச சாரா நிறுவனங்களின் (NGO) அழிப்பு நடவடிக்கைகள் சமூகத்தை அவலத்தின் இருளுக்குள் அழைத்துச் செல்கின்றன. இவர்கள் இரண்டு வகையான திட்டங்களோடு வருகிறார்கள் ஒன்று நுண் பொருளாதாரம் (Micro Finance) என்பது. சிறு தொழில் தொடங்கும் நோக்கத்தோடு சிறிது சிறிதாக மீளச் செலுத்தக்கூடிய கடன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுகும் இவர்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மக்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் கந்துவட்டிக்காரர்கள். போரினால் அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களிடமிருந்து இவர்கள் பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் அவர்களைத் தற்கொலை வரை அழைத்துச் செல்கிறது.
இரண்டாவது வகை அரச சார நிறுவனங்கள் ‘மக்களை சக்திமிக்கவர்களாக மாற்றுதல்(empowering people)’ என்ற திட்டங்களின் அடிப்படையில் எலும்புத்துண்டுகளை வீசியெறிகின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் அவ்வாறான உதவிப்பணத்திலேயே தங்கியிருக்கும் நிலை உருவாகின்றது. அரசுக்கு எதிராக அவர்கள் போராடுவதற்குப் பதிலாக அரச சாரா நிறுவனங்கள்(NGO) என்று அழைக்கப்படும் இந்த வெளி நாட்டு நிறுவனங்களிடம் பிச்சை கேட்கிறார்கள்.
மக்கள் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதும் இவர்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்கள். மட்டக்களப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணத்தில் இயங்கிய இரண்டு உள்ளூர் நிறுவனங்கள் மக்களைக் கைவிட்டதும் மக்கள் தெருக்களில் பிச்சை கேட்கிறார்கள். திருட்டு, பாலியல் தொழில் வன்முறை என்பன அதிகரிக்கின்றன. அதுதான் அவர்களின் நோக்கமும் கூட. இவர்களில் ஒரு பகுதியினரை மிகவும் மலிவான கூலிக்கு புதிய பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு அமர்திக்கொள்கின்றன. இந்த நூற்றாண்டின் அடிமைகளாக அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அன்னிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோ அல்லது சுயாதீனமாகவோ இலங்கைக்குச் சென்று பிச்சை போட்டுவிட்டு மீண்டும் புலம் பெயர் நாடுகளுக்கே ஓடிவந்துவிடும் ‘குற்ற உணர்வு மன நோயினால்’ பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு கும்பலும் இவ்வாறான ‘உதவி’ களைச் செய்து வருகின்றது. இந்த உதவிகள் இனச்சுத்திகரிப்பைத் தீவிரப்படுத்துகின்றன.
இனவழிப்பை நடத்திய *ஏகபோக நாடுகளுக்கு எதிராகவும், ராஜபக்ச பாசிஸ்டுக்களுக்கு எதிராகவும், உலக மக்கள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும் பொது அபிபிராயத்தை ஏற்படுத்துவார்கள் என நம்பியிருந்த மக்களை அழித்தவர்களின் பொறிகளுக்குள்ளேயே பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டு அவர்களே தேர்தலில் வெற்றிபெறப் போவதாகவும் கூறுகிறார்கள்.
டக்ளசு தேவானந்தாவும், மகிந்தவும், ரனிலும், சம்பந்தனும், விக்கியும் ஆதரிக்கும் வங்கிகள் கூட இனச் சுத்திகரிப்பை கச்சிதமாக நடத்தி முடிக்கின்றன. இந்த மேல்தட்டு வர்க்கக் கும்பல் நாளந்தம் குந்தியிருந்து பியர் குடிக்கும் நண்பர்களான வங்கிகளின் முகாமையாளர்கள் ராஜபக்ச அரசின் நண்பர்கள்.
ஒவ்வொரு வங்களும் குண்டர் படை நிறுவனங்களை வைத்திருக்கின்றன. பிரித்தானிய வங்கியான HSBC உட்பட அனைத்து வங்கிகளதும் குண்டர்படைகளுக்கு போலிஸ் படை துணையாகின்றது.
இதனால் உழைப்பையும் மேலதிக பணத்தையும் இழந்த மக்கள் கையேந்தும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். விக்கியினதும் டக்கியினதும் நண்பர்கள் தான் இவர்கள். புலம் பெயர் நாடுகளிலிருந்து விடுமுறைக்கு வந்து அரைக் காற்சட்டையோடு அலையும் பணம் படைத்தவர்களுக்கு இது விளங்குவதில்லை. அவர்கள் பக்திமான் விக்கியின் விசிறிகள். மேட்டுக்குடிகளைப் பார்த்தே பரவசமடைந்த ஒரு கூட்டத்திற்கு மக்களின் அவலங்கள் ரெலஸ்கோப் சினிமா மட்டும்தான். சீமானைவிட மோசமானவர்கள் இவர்கள்.
இதை விட விக்கியும் டக்ளசுவும் ஆதரிக்கும் இந்திய நிறுவனங்கள், ஹோட்டேல்கள், உல்லாசப்பயண நிறுவனங்கள் ஆகியன இராணுவத்தின் துணையோடு நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அமரிக்க, ஐரோப்பிய, சீன, ரஷ்ய நிறுவனங்களின் வகை தொகையற்ற ஆக்கிரமிப்பு ஆயிரக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கியுள்ளது. இதனை அரசாங்கமும் விக்கியும் அவற்றின் புலம் பெயர் அடிமைகளும் அபிவிருத்தி என்கிறார்கள்.
தவிர, இலங்கையிலுள்ள கிரிமினல் அரசு வரிகட்டாத திருட்டுப் பணத்தைப் பதுக்குவதற்கான சொர்கபுரி. இந்திய, ஐரோப்பிய, ரஷ்ய, சீன மாபியாக்களும் நிறுவனங்களும் வரிகட்டாதா பெருந்தொகைப் பணத்தை இலங்கையில் முதலிட்டு அடிமைகளான மக்களை அரைக் கூலிக்கு சுரண்டிக் கொல்கின்றனர். ராஜபக்ச கும்பலுக்கு ஒரு சிறுதொகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு பெரும் பகுதியைப் பதுக்கிக்கொள்கிறார்கள். புலம் பெயர் நாடுகலிருந்து தமிழர்கள் பலர் இவ்வாறு இலங்கையில் பணப்பதுக்கலில் ஈடுபட்டமை செய்திகளாக வெளியாகின.
வறுமை தின்னும் மக்கள் வாழ்வதற்காக தமது பண்பாட்டுப் பெறுமானங்களைக் கூட விற்பனை செய்யத் தயாராகிவிட்டார்கள். பாலியல் தொழில் வன்னியிலும், கிழக்கிலும்ம் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் வழமையான ஒன்றாகிவிட்டது.
இவற்றில் ஒரு சிறிய பகுதியையாவது தேர்தலில் வாக்குக் கேட்கும் கனவான்கள் பேசுகின்றார்களா? அவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்களின் நண்பர்களும் எஜமானர்களுமே அழிக்கிறார்கள்:.
பிச்சைக்கார சமூகத்தையும், ஊனமுற்றவர்களையும், பாலியல் தொழிலையும், போதைப் பொருளுக்கு அடிமையானஇளைஞர்களையும் இவர்களின் நண்பர்களே தோற்றுவிக்கிறார்கள்.
இவற்றுள் பல சிங்கள் மக்களையும் பாதிக்கின்றது. தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை அவர்களிடமிருந்து எதிர்ப்புக் குரல் வராமல் பேரினவாதத்தைப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் . சிங்கள மக்களைப் பொறுத்தவரை அவர்களிடமிருந்து எதிர்ப்பு வராமல் தமிழ் மக்களைக் காட்டுகிறார்கள்.
இவை நீண்டகாலத்திற்கு நிலைக்க முடியாது என்பது அதிகாரவர்க்கத்திற்குத் தெரியும், முழுவதையும் சுரண்டி அழித்து முடிக்க கால அவகாசம் தேவை. அதற்காகவே தேர்தல் போன்ற உக்திகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். விக்கி போன்றவர்களை முன்னிலைப்படுத்தி சட்டம் போட்டே எல்லாவற்றையும் முடித்துத் தரலாம் என்கிறார்கள், இதற்காக தமிழ்ப் பேசும் மக்களை உலக மக்களிடமிருந்தும், தமிழ் நாட்டு மக்களிடமிருந்தும் அனியப்படுத்துகிறார்கள்.
இந்தத் தேர்தலை ஏறெடுத்தும் பார்க்காமல் தம்மை இந்த அனைத்து ஓநாய்களிடமிருந்தும் தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே ஒரே வழி. நீண்டகாலம் செல்லலாம் ஆனால் காலம் தாழ்த்துவது அதற்கான தீர்வல்ல. அழிவு!