Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மறுபடி ஒரு முறை காட்டிக்கொடுக்காதீர்கள் : கோசலன்

போராட்டம் என்பது இரண்டு இரகசிய இராணுவக் குழுக்களிடையே நடைபெறுகின்ற யுத்தமுமோ அந்த இராணுவக் குழுக்களின் இரகசியங்களைப் பேணுகின்ற உளவு நிறுவனமோ அதனைச் சுற்றி அரசியல் காய் நகர்த்தும் பொறிமுறையோ அல்ல. துரதிஷ்ட வசமாக முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களுக்குச் சொல்லித்தரப்பட்ட, பழக்கப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இவை மட்டும் தான்.

உலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் இணைந்தே இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு இன்று “நடந்து விட்டதே” என வருத்தம் தெரிவிப்பதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் உள்ளன. தமிழ் மக்கள் என்பவர்களின் பிரதினிதிகளோ உலக நாடுகளை வால் பிடித்து ஏதாவது சாதித்து விடலாம் என்று கோமாளித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் அவ்வாறான நம்பிக்கையை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று எமக்கு மத்தியில் அதிலும் குறிப்பாகப் புலம் பெயர் நாடுகளில் சமூகப் பற்றுள்ளவர்களின் கடமை, இந்தத் தவறான சிந்தனைக்குள் கட்டுண்டுடிருக்கும் மக்கள் கூட்டத்தை இலங்கை அரசிற்கு எதிரான மக்கள் சார்ந்த போராட்ட வழிமுறையை நோக்கி வென்றெடுப்பதாகும். 80 வீதமான அரபியர்கள் அமரிக்காவைத் தங்கள் எதிரியாகக் கணிக்கிறார்கள். 60 வீதமான உல மக்கள் அதிகார அரசுகளே அழிவுகளுக்குக் காரணம் என்கிறார்கள். இவர்களிலிருந்தெல்லாம் ஒடுக்கப்படும் தேசிய இனமான நாம் விலகிச் சென்று எம்மைச் சிறுபான்மை ஆக்கி எம்மை நாமே அன்னியப்படுத்திக் கொள்கின்ற அவலத்தை இவர்கள் நடத்தி முடிக்கிறார்கள். ஏனென்றால் நமது தலைமகள் இந்த நாடுகளின் ஆட்சி அதிகாரத்திற்கு விசுவாசமானவர்கள். அதனால் அவர்களை ஒடுக்குவோருக்கு ஆதரவானவர்கள்.

பலர் இவற்றைப் புரிந்து கொள்வதில்லை. மூன்று தசாப்தம் உருவாக்கிய பழமைவாதச் சிந்தனை எம் ஒவ்வொருவரிடமும் அழுக்குகளாக ஒட்டியிருக்கின்றது. எதிர்ப்பியக்கதின் பரந்துபட்ட பன்முகத்தை நிராகரித்து தூய்மை, புனிதம் என்ற குறியீடுகளூடாக ஒற்றைப் பரிமாணச் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது. இதே சிந்தனையும் அதன் அழிவரசியலும் தொடருமானால் இன்னும் 30 வருடங்கள் அழிவுகளை மட்டுமே நாம் அறுவடை செய்வோம்.

தவறுகளை உணர்வதற்கும், பரந்த மனோபாவத்தோடு தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் தவறினால் நாம் ஊக்குவிக்க வேண்டிய எதிர்ப்புப் போராட்டம் முன்னோக்கி நகர வாய்ப்பே இல்லை. சிங்கள-பௌத்த “புனித” நிலமாக வடக்குக் கிழக்கு மலையகம் என்பன மாற்றப்பட்டுவிடும்.

தவறுகளை விமர்சித்தல் என்பதே தவறு என்கிற “மிரட்டல்” தமிழ் இனவாதிகளால் முன்வைக்கப்படுகிறது. ஏன் தவறுகளை விமர்சிக்கிறோம் என்றால் அவை மறுபடி நிகழக் கூடாது என்பதற்காக மட்டுமே. இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பதற்காகவே.

ராஜபக்சவைப் பழிவாங்க வேண்டுமானால் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் ஒன்றிணையுங்கள் என்கிறார்கள். ராஜபக்ச மட்டுமா எமது பிரச்சனை? அறுபது ஆண்டுகளாக அழிக்கப்படுகின்ற தேசிய இனத்தின் உச்சபட்சக் குறியீடு மட்டுமே ராஜபக்சவும் அவரது குடும்பமும்.

ராஜபக்ச அகற்றப்பட்டால் அவரது இடத்தை நிரப்புவதற்கு ஆயிரம் பேரினவாதிகள் வரிசையாக நிற்கிறார்கள். இனிமேல் ஒவ்வொரு இனப்பகொலையாளியும் இவ்வளவு துணிவாக 50 ஆயிரம் மக்களைக் கொன்று போட்டுவிட்டு அரியாசனத்தில் அமர்ந்திருப்பதை அனுமதிக்க முடியாது என்பதால் ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்ற சிறிய, பரந்த மனோபாவத்தினூடான விளக்கத்தைக் கூட இனவாதிகள் சொல்லத் தயாரில்லை. இங்கே ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டமாக, அழிக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் சார்ந்த போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஏன் இவர்கள் போராட்டத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆய்விற்கு உட்படுத்த் மறுக்கிறார்கள்? எம்மைச் சுற்றியிருப்போர் கொலைகாரர்களும், திருடர்களும் என்பதை அறிந்து கொண்டும் ஏன் அவர்களோடு கைகோர்த்துக் கொள்வோம் என்கிறார்கள்? ஒடுக்கப்படுவோரின் உண்மையான நண்பர்களை அறிந்துகொண்டும் ஏன் தமிழர்களைச் சிறுபான்மையாக ஒதுக்க எண்ணுகிறார்கள்? உலகெங்கும் உருவாகி பெரும் சக்தியாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஜனநாயக முற்போக்கு அணியினரிடம் இருந்து தமிழ் மக்களை ஏன் அன்னியப்படுத்துகிறார்கள்.

இலங்கையில் ராஜபக்ச குடும்பம் நிகழ்த்தும் திட்டமிட்ட குடியேற்றங்களுகு எதிராக, அதிகாரச் சீர்குலைவுகளுக்கு எதிராக எல்லாம் மக்கள் தங்களது சக்திக்கு உட்பட்டுப் போராட முனைகிறார்கள்.

இந்திய இராட்சத இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு எதிராகப் பழங்குடி மக்கள் போராடுவது போல, கஷ்மீர் மக்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவதுக் போன்று, நாகாலாந்தில் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் போராடுவது போல ஈழத் தமிழர்களும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அது சிறியதாக இருக்கலாம். அதன் வளர்ச்சி தவிர்க்க முடியாத அரசியல் புறச் சூழலைக் கொண்டிருக்கிறது. அவர்களின் நண்பர்களை இனம் கண்டு கொள்வதும் அதனூடாக அவர்களின் போராட்டத்தைப் பலப்படுத்துவதும் எமது கடமை. மாறாக, 80 களில் இந்தியாவை நம்பி மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சீரழித்தைப் போன்று இப்போது ஏகாதிபத்திய அரசுகளை நம்பி மக்களைக் காட்டிக்கொடுக்காதீர்கள்.

Exit mobile version