Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மறக்க முடியுமா : கு.கதிரேசன்

பிப்ரவரி 19 ,2009  அன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது , அன்று தான் இலங்கை தமிழர்கள் சிங்கள ராணுவத்தால்  கொல்லப்படுவதை தடுக்க கோரி ஒரு மாதகாலமாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திமுடித்து விட்டு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு திரும்பி இருந்தார்கள். அதனால் அவர்கள் ஒரு மாதகாலமாக நிலுவையில் இருந்த வழக்குகளை விரைந்து முடிக்க பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்.ஆனால் கருணாநிதியால் ஏவி விடப்பட்ட காவல் துறையினரோ சுப்ரமணிய சாமி கொடுத்திருந்த புகாரின் பேரில் வழக்கறிஞர்களை கைது செய்ய உரிய அனுமதி எதையும் உயர்நீதிமன்றத்திடம் பெறாமல் ஆயிரக்கணக்கான போலீசார் உரிய தற்காப்புடனும் ,வெறியுடனும் காத்திருந்தனர், வழக்கறிஞர்கள் கைதின் போது நடந்த சிறு வாக்குவாதத்தை சாக்காக வைத்து வழக்கறிஞர்கள் மீது வேட்டை நாய்களேன பாய்ந்தனர். எதிர்பட்ட வழக்கறிஞர்கள் , கட்சிகாரர்கள் , நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரையும் எந்த வரைமுறையும் இல்லாமல் போலிஷ் விளாசி தள்ளியது.இதில் பலருக்கு எதற்காக அடிவாங்குகிறோம் என்பது கூட தெரியாமலையே அடிவாங்கினார்கள்.

வழக்குமன்றங்கள், வழக்கறிஞர்களின் அறைகள், நூலகம் என்று அனைத்தையுமே அகங்காரத்தின் உச்சிக்கு சென்றிருந்த கருணாநிதியின் காவல் துறை அடித்து நொறுக்கியது. நீதித்துறையின் அதிகாரங்களை கேள்விக்குள்ளாக்கி ஜனநாகயாக மரபுகளை குழி தோண்டி புதைத்த போதும் , கருணாநிதி அரசு ஒரு காவல் துறை அதிகாரி யை கூட இன்று வரை  தண்டிக்கவில்லை.

கருணாநிதி இதன் மூலம் மக்களுக்கு பூச்சாண்டி காட்ட நினைத்தார், அனைத்து சட்டங்களையும் படித்த அறிவு ஜீவிகளே எப்படி அடிவாங்கினார்கள் என்று பார்த்தீர்களா என்று மக்களை பயமுறுத்த நினைத்தார். அது மட்டுமா அதற்கு சில மாதங்கள் முன்பாக சட்டக்கல்லூரி   மாணவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்களை கொடூரமான ஆயுதங்களால் அடித்து நொறுக்கியதை கண்டு தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் உள்ளம் எல்லாம் பதைபதைத்து. ஆனால் கருணாநிதியின் காவல்துறையோ கல் நெஞ்சத்தோடு கண்ணெதிரே நடக்கும் கலவரங்களை கண்டும்  காணதது போலவும் நின்றிந்தது, காவல் துறையின் பணியே மக்களை காப்பதும் , தீயவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதுமே. ஆனால் கடந்த ஆட்சியில் காவல் துறையின் போக்கோ கடந்த ஐந்தாண்டுகளாக நல்லவர்களுக்கு எதிரிகளாகவும், அமைச்சர்கள் , ரவுடிகள் ,ஊழல் அதிகாரிகளுக்கு ஏவல் வேலை செய்ததுமே காணக்கிடைக்கிறது.

வழக்கறிஞர்களை அநியாயமாக தாக்கி விட்டு அந்த நீதிமன்றத்திற்கே விழாக்கொண்டாட வந்த கருணாநிதிக்கு வழக்கறிஞர்கள் கருப்பு கோடி காட்டினர், தமிழக டி.ஜி.பி.உடன் இருக்கவே கருணாநிதியின் ஆட்கள் ரவுடிகள் போல அந்த இளம் வழக்கறிஞர்களை தாக்கினார்கள்.அந்த அளவிற்கு கருணாநிதியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சணம் இருந்தது என்றல் இவர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவரா.

உளவு துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பணியை செய்யாமல் சதா நேரமும் எதிர்கட்சிகளை கண்காணிப்பதும் ,தொலைபேசிகளை ஒட்டுகேட்பதையுமே செய்து வந்திருக்கின்றன. உளவு துறை தலைவரும் ,டி.ஜி.பியும்  தி,மு.க. கொள்கை பரப்பு செயலாலர்களாக செயல் பட்டதால் தான் தேர்தல் ஆணையம் அவர்களை விடுப்பில் அனுப்பியது சங்கரராமன் கொலைவழக்கில் அதிகாரிகளை சுதந்திரமாக பணிசெய்ய விட்டு சங்கராசாரியாரை கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி அரசோ அந்த வழக்கை முறையாக நடக்காமல் இருக்க எல்லா வேலையையும் செய்துவருகிறது. தற்போது ஒரு விசாரணை அதிகாரியே நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் என்றால்  இந்த அரசு குற்றவாளிகளின் புகலிடமாக அல்லவா இருக்கிறது.

பட்ட பகலில் ஒரு காவல் துறை அதிகாரி ரவுடிகளால் வெட்டி கொல்லப்படுகிறார் ,அமைச்சர் உட்பட பல உயர் அதிகார்கள் அந்த காவல் துறை இளம் அதிகாரி துடிதுடித்து சாவதை வேடிக்கை பார்த்துகொண்டுருக்கின்றனர், இதுதான் காவல் துறையினருக்கு கருணாநிதி அரசு காட்டிய மரியாதை. தினமும் ஒரு கொலை என்ற விதத்தில் சட்டம் ஒழுங்கு இந்த ஐந்து ஆண்டுகளாக சந்தி சிரித்தது,மயிலாப்பூரில் இரண்டு கொலை, தஞ்சாவூரில் குண்டு வீசி கொலை, கோவையில் சிறுமி கற்பழித்து கொலை  என்று நாளிதழை திருப்பினாலே கொலை செய்தி வராத நாளே இல்லை.

கருணாநிதிக்கு பங்குகள் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் நியாயமான உரிமைகளுக்காக போராடிய ஒரு மூத்த தொழிற்சங்கவாதியை இந்த காவல் துறை அவமரியாதையாக நடத்தியது. அந்த தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்கியது. டி.ஆர்.பாலு நடத்தும் சாராய ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்றால் மாவட்ட எஸ்.பி.தலைமையிலான குழு அப்பாவி விவசாயிகளை ஓட ஓட அடித்து துன்புறுத்தியது.இதன் மூலம்  இந்த அரசு யாருக்கு பாதுகாப்பு தந்தது என்பது அந்த சம்பவம் மூலமே வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னையில் தனியாக இருக்கும் தம்பதிகளை குடும்பத்தோடு கொன்று விட்டு பணம் நகைகளை கொள்ளையடித்து ஒரு கும்பல் சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது அதற்கு  அமைச சர்களின் ஆசிர்வாதமும் இருக்கிறது . பல வழக்குகளில் குற்றவாளியாக உள்ள ஒருவரோடு சேர்ந்து முதல்வர் திரைப்படம் எடுக்கிறார். அதன் மூலம் பல குற்றவாளிகளும் பணம் இருந்தால் போதும் இந்த ஆட்சியில்  அதிகாரத்தை வளைத்துவிடலாம் என்று குளிர் விட்டு திரிகின்றனர்.இவைகள் தான் இந்த ஆட்சிகளின் சட்டம் ஒழுங்கின் நிலைமை. இவ்விதமே செல்லுமானால் தமிழகத்தில் ரவுடிகள் இராட்சியம் தான் நிலை பெரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மணல் கொள்ளையர்களால் தமிரபரணியே கொள்ளைபோவதை தோழர்.நல்லகண்ணு தடுக்க விட்டால் இந்த அதிகாரிகளும் தி.மு.காவும் எதிர்காலத்தில் நதியே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள் கருணாநிதிக்கு நேர்மையான அதிகாரிகளை கண்டாலே பிடிக்காது அவரின் குடும்ப ஊழலை அம்பலப்படுத்திய நேர்மையான அதிகாரியான உமாசங்கர் மீது ஊழல் பழியை சுமத்தியும் இன்னபிற காரணங்களை கூறியும் பணிநீக்கம் செய்தார்,ஆனால் வீட்டு வசதிவாரிய ஊழல் செய்த பல அதிகாரிகளை செல்ல பிள்ளைகள் போல வளர்த்து வருகிறார். சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று போராடிய போது  இவர் காவல் துறையை ஏவி விட்டு கொடூரமாக அவர்களின் போராட்டத்தை ஒடுக்கினார். அரசு ஊழியர்களை ஓட ஓட அடித்து நொறுக்கியது கருணாநிதியின் காவல் துறை. இவ்வாறு தனது ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை வளர்த்து விட்டதும் , தனது ஊழலுக்கு எதிராகவும் ,உரிமைகளுக்காக போராடியவர்களையும் கருணாநிதி கடுமையாக ஒடுக்கியதும் தான் அவர் செய்த இந்த ஐந்தாண்டு கால சாதனை. அந்த வேதனை இன்னும் ஐந்தாண்டிற்கு தொடர வேண்டுமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

தொடர்பிற்கு : 9843464246 | advkathiresan@gmail.com

Exit mobile version