முதலில் வராலற்று முலாதாரங்கள் மற்றும் அவற்றின் தன்மைகளைச் சுருக்கமாக நோக்கலாம். வரலாற்றை அறிவதற்கான மூலாதாரங்களில் ஒருவகையானவை, தொல்பொருட்கள், கல்வெட்டுக்கள்-செப்பேடுகள், நாட்டரியல் வழக்காறுகள் (வாய்மொழி வரலாற்று மூலங்கள்-நாட்டார் பாடல்கள்-மரபு வழி அமிசங்கள்) என்பவையாகும். இவற்றினால் கிடைக்கப்பெறும் வராலற்றுத் தகவல்கள் பெருமளவுக்கு ஊகங்களாகவே அமையும் என்பதுடன், இவற்றினால் அறியப்படும் தகவல்கள் கொண்ட காலப்பகுதி வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதி என்றே குறிப்பிடப்படும்.
மற்றொரு வகை வரலாற்று மூலதாரங்கள், எழுதப்பட்ட இலக்கியங்களும் வரலாற்று நூல்களும் – குறிப்புக்களும் ஆகும். இவற்றால் அறியப்படும் தகவல்கள் கொண்ட காலப்பகுதி வரலாற்றுக் காலம் என அழைக்கப்படும். எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் தகவல்கள், உண்மையான வரலாற்றுத் தகவல்களாகக் கருதப்படும் போதும் சரிதிட்டமான வரலாற்றுத் தகவல்களாகக் கருதமுடியாது. இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் வரலாற்று நூல்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்(உ-ம்: வில்கம் கெய்கர்) இதனை நன்கு நிருபணம் செய்கின்றன. எனவே வரலாற்று நூல்களிலிருந்து உண்மையானதும் சரிதிட்டமானதுமான வரலாற்றை வேறு ஆதாரங்கள் துணையுடன் தான் அறிந்து கொள்ள முடியும்.
ஈழத்தில்; எழுந்த முதல் தமிழ் இலக்கியமாக அமைவது “ சரசோதிமாலை” ஆகும். இது கி.பி. 1232 இல் எழுதப்பட்ட ஒரு சோதிட நூலாகும். இந்நூல் தம்பதெனிய அரசன் நாலாம் பராக்கிரமபாகு ஆணைப்படி, தேனுவரப் பெருமாள் என்ற பண்டித போசராசன் என்பவரால் எழுதப்பட்டு, அம்மன்னன் அவையில் அரங்கேற்றப்பட்டது. இதன் பின்னர் எழுந்த தக்சண கைலாசபுராணம், வையா பாடல், கோணேசர் கல்வெட்டு ஆகிய மூன்றுமே ஈழத்து தமிழ் வரலாற்று நூல்களாகும். இம்மூன்றிலும் மட்டக்களப்பு வரலாறு பற்றி விபரங்கள் இல்லை. ஆக மட்டக்களப்பு மாண்மியம்”, “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்”; என்பவற்றைத் தவிர்த்தால், மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் எனக்குறிப்பிடத்தக்க பண்டை தமிழ் நூல்கள் எவையும் இல்லை. எனவே, ஐரோப்பியர்கள் எழுதிய வேற்று மொழியிலமைந்த குறிப்புகள்தான் முதல் எழுதுப்பட்ட வராலற்று ஆவணங்களாகக் கொள்ள வேண்டியுள்ளது போல் தெரிகிறது.
இந்தநிலையில், தொல்பொருட்கள், இலங்கைச் சரித்திர நூல்கள் மற்றும் பிறநாட்டார் குறிப்புக்கள், நாட்டாரியல் அம்சங்களிலிருந்தே மட்டக்களப்பின் பண்டைய வராலற்றை அறிய வேண்டியிருக்கிறது.
மட்டக்களப்பின் தொன்மையான வரலாற்றுத் தகவலாக அமைவது, தொல்பொருள் சான்றாக அமையும் கதிரவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈமத்தாழிகள் ஆகும். ஆனால் இது பற்றி போதிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
தொல்பொருள் சான்றாதாரங்கள் அதிகம் அறியப்படாத நிலையில், அவற்றை கண்டறிவதற்கான முயற்சிகள் இல்லாத நிலையில் ஏனைய வராலற்று மூலங்களிலிருந்து மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை அதுவும் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. அவ்வகையில் முக்கியம் பெறுவது நாட்டாரியல் அம்சங்கள் (வாய்மொழி வரலாற்று மூலங்கள்-நாட்டார் பாடல்கள்-மரபு வழி அமிசங்கள்)ஆகும். “300 வருட ஐரோப்பியர் ஆதிக்கத்தின் தாக்கத்தால் மட்டக்களப்பு சிற்றரசுகள் மறைந்து விட்டன. இருந்த போதும் இன்று கோவில்களில் படிக்கப்படும் கோவில் வரலாறுகள் அவர்களின் வீரமரபையும், நாடு கைப்பற்றி ஆண்ட வரலாற்றையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கின்றன” என டெனிஸ் பி.மக்ஜில்வ்ரே குறிப்பிட்டுள்ளதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்விடத்து ஒரு விடயத்தினை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மட்டக்களப்பின் தற்கால வழக்கிலுள்ள தெய்வ-வணக்க முறைகள், மொழி மற்றும் பண்பாட்டம்சங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்தும் வடபகுதி தமிழர்களிடமிருந்தும், சில வேளைகளில் தற்கால தமிழ் நாட்டவர்களிடமிருந்தும் வேறுபட்டு தனித்துமானதாகக் காணப்படுவது பல்வேறு ஆய்வாளர்களின் கவனத்தினை ஈர்த்திருக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பண்டிதர் வி.சி.கந்கையா அவர்கள் எழுதிய “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) எனும் நூலிலும், கலாநிதி சி. மௌனகுரு அவர்கள் எழுதிய “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” எனும் ஆய்வு நூலிலும் இவை பற்றிய விபரிப்புக்களைக் காணமுடிகிறது. இதனால் மட்டக்களப்பை, பண்டைத்தமிழகத்தின் ஒருபகுதியாக இருந்து பின்னர் கடல்கோள் போன்ற காரணங்களால் பிரிந்த ஒரு பகுதியாக சிலரால் கருதப்படும் போக்கு காணப்படுகிறது. ஆயினும் இதற்கான சான்றுகள் போதியளவில் காட்டப்படவில்லை.
மட்டக்களப்பு வரலாற்றின் தொன்மையை இராவணனுடன் தொடர்பு படுத்தி சிலர் குறிப்பிட முயல்கிறார்கள். அதற்கு, முதலில் இராமயணம் பற்றிய சரிதிட்டமான ஆய்வகள் – அதாவது அதன் வரலாற்றின் உண்மைத்தன்மை நிருபிக்கப்படல் வேண்டும்.
இவற்றைத் தவிர்த்தால், கலாநிதி சி.மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” எனும் ஆய்வு நூல் முக்கியமானதொன்றாக அமையலாம் எனக்;கருத வேண்டியுள்ளது. இம்முக்கியத்துவம் மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள் குறித்து அவருடைய எழுத்தினால் மட்டுமன்றி, மட்டக்களப்பு வரலாறு குறித்து அவர் எழுதிய சுருக்கக் குறிப்பினாலும் ஆகும். தற்போதைக்கு, கலாநிதி சி.மௌனகுரு அவர்களின் சுருக்க வராலற்றுக் குறிப்பிலிருந்து மட்டக்களப்பின் வரலாற்றை ஆரம்பித்துச் செல்வதே வசதியாக இருக்கும் போல் தெரிகிறது.
கலாநிதி சி.மௌனகுரு அவர்கள் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” எனும் தனது ஆய்வு நூலில், மட்டக்களப்பு வரலாறு பற்றி,
மேலே குறிப்பிட்ட சுருக்கமான வரலாற்றிலிருந்தும், கிடைக்கும் சான்றுகளிலிருந்தும் மட்டக்களப்பில் ஆரம்பத்தில் ப+ர்விகக் குடிகள் இருந்தனரென்றும், காலத்துக்கு காலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மட்டக்களப்பின் பல பாகங்களிலும் பல குடியேற்றங்கள் நடைபெற்றன என்றும் இந்திய அரசர்களின்(சிறப்பாக சோழ, கலிங்க) ஆட்சிக்கும், சிங்கள அரசர்களின் ஆட்சிக்கும் இப்பிரதேசம் உட்பட்டிருந்ததென்றும் பின்னால் ஐரோப்பியர் வருகையின் பின் புதிய மதங்களையும், கலாசாரங்களையும் பெற்றதோடு பிற பிரதேசங்களுடன் நிர்வாக ரீதியாக இது இணைக்கப்பட்டதென்றும் அறிகிறோம்.
இவ்வரலாற்றுப் போக்கிற்கூடாகவே மட்டக்களப்பில் இன்று காணப்படும் சமூக அமைப்பு உருவாகியது. காலத்துக்குக் காலம் தத்தமக்குரிய இனங்களும், குடிகளும் தாம் குடியேறிய பகுதிகளில் தத்தமக்குரிய தனித்துவங்களுடன் வாழ்ந்தாலும் பொது ஆட்சியின் கீழ் வரும்பொழுது சில பொது விதிகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. இச்சமூக அமைப்பின் பிரதான அம்சம் சாதி அமைப்பு முறையாகும். (பக். 86) குறிப்பிட்டுள்ளார்.
இவ்விளக்கம் மட்டக்களப்பின் சிக்கலான வரலாற்றை எழிமையான முறையில் புரியவைக்கிறது. அவ்வகையில் மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை,
· மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள்
· காலத்துக்கு காலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மட்டக்களப்பின் பல பாகங்களிலும் நிகழ்ந்த குடியேற்றங்கள் என்ற இரண்டு அம்சங்கள் அடிப்படையில் அறிய முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள்
மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் என, வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினராக இருக்கலாம் எனவும் அவர்களின் வழியில் இன்று வேடர், வேட வெள்ளாளர் ஆகிய சாதியினர் வாழ்வதாகவும் சி.மௌனகுரு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(பக்.100) இவர்களில் புலிந்தர் மட்டக்களப்பு பூர்வீகக் குடிகளாக கருதப்பட போதிய சான்றுகள் இல்லை. இயக்கரையும் வேடரையும் வேறுபடுத்தி அறியக்கூடுமா எனத்தெரியவில்லை. எனவே மட்டக்களப்பில் இன்று வாழும் வேடர், வேட வெள்ளாளர்(இவர்கள் வேடர்கள்-வெள்ளாளர் கலப்பினால் உருவானதாகக் குறிப்பிடுவர்) ஆகியோரே மட்டக்களப்பின் பூர்விக குடிகளாக கருதப்பட வேண்டியவர்களாவர்.
மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளின் தெய்வ, வணக்க முறைகளாக குமார தெய்வத்தினை முதன்மையாகக் கொண்ட சில தெய்வ-வணக்க முறைகளை சி.மௌனகுரு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்(பக்.100). குமார தெய்வ வணக்கம் வேடர் மரபில் வந்தோரால் மேற்கொள்ளப்படுகிறது எனவும் வேடபாசையிலே வணக்கமுறைக்குரிய சொற்களும் பாடல்களும் அமைந்துள்ள எனவும் இவர்களின் சடங்குகள், இவர்களின் புராதான வாழ்க்கை முறையின் நினைவுகளாக இருப்பதாகவும் சி.மௌனகுரு அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (பக்.118).
இவ்வணக்கமுறை தளவாய், பாலமீன்மடு(?) அகிய ஊர்களில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது வேடர்கள் வாழும் ஊர்கள் இவையல்ல. எனவே இவ்வூர்களில் உள்ள தெய்வ-வணக்க முறைகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதுவும் தற்போது வேடுவர்கள் மத்தியில் காணப்படும் நாட்டாரியல் வழக்காறுகள் வேறு எவையேனம் உண்டா என்பதுவும் ஆராயப்பட வேண்டும்.
மட்டக்களப்பில் நிகழ்ந்த குடியேற்றங்கள்
இக்குடியேற்றங்கள் பற்றிய தகவல்கள் சிக்கலானவையாக, சரியான ஆதராங்கள் துணையுடன் விவரிக்கப்படாததாக காணக்கிடக்கின்றன. தோற்றுவிக்கப்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபடுவது முதல் பணியாகும்.
மட்டக்களப்பில் குடியேற்றங்கள் இரு வழியில் நிகழ்ந்திருக்க முடியும். ஒன்று கடல் வழியில். மற்றது இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து தரைவழியாக.
தரைவழியான குடியேற்றங்கள் தொடர்பான தகவல்களை நாம் இலங்கை வரலாற்று நூல்களிலிருந்து அறிய வேண்டும். சிங்கள வரலாற்று நூல்களிலிருந்து அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆட்சிக்காலப் பகுதிகளில் இருந்த தமிழ் மன்னர்களும், தமிழ் மக்களும் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறார்களா? என்பதை அறிய வேண்டும். அது பற்றிய தகவல்கள் கிடைப்பின், அதனை மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறும் தகவல்களுடன் ஒப்பிட்டு ஆராய முடியும். இதற்கான சாத்தியப்பாடுகள் நிலவியிந்திருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது.
சிங்கள இராசதானிகள் வளர்ச்சியடைந்த போது(சிங்கள-பௌத்த ஆதிக்கம் ஏற்பட்ட வேளை) அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் தமது பண்பாட்டம்சங்களுடன் தனித்து வாழ்வதற்கு ஏற்ற இடமாக, இச்சிங்கள இராசதானிகளிற்கு தொலைவிலும்-கட்டுப்பாட்டிற்கு எல்லைக்கு அப்பாலும் இருந்த யாழ்ப்பாணமும், கிழக்கு மாகாணமும் ஏற்ற வாழிடங்களாக தெரிவு செய்து குடியேறியிருக்க முடியும். இதே காரணத்தினால்தான், விஜயன் காலத்திலும் இயக்கர்கள் வாழ்வதற்கேற்ற இடமாக கிழக்கு மாகாணமும் அமைந்திருக்க முடியும். தற்போதைய வேடர்களின் பிரதான வாழிடமான மகியங்கனை கிழக்கு மாகாண எல்லையில் அமைந்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அத்துடன் “ஒப்பீட்டளவில் இது தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியமும் ஆகும். இத்தனிமைப்படுத்தலுக்கு புவியியல், வராலற்றுக் காரணங்கள் உள்ளன.” என டெனிஸ் பி.மக்ஜில்வ்ரே குறிப்பிட்டுள்ளதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தரைவழி குடியேற்றங்கள் என்னும் வகையில், சிங்கள இரசாதானிகளிற்கு வந்த தமிழ் மக்களுடன் தொடர்பு படுத்தி, மதுரை இளவரசியும் அவளுடன் வந்தவர்களும், சேனன், குத்திகன், எல்லாளான் காலத்து குடியேற்றங்கள், கஜபாகுவினால் குடியேற்றப்பட்டோர், சோழ படையெடுப்புடன் தொடர்பான குடியேற்றங்கள், கலிங்க மாகான் தொடர்பான குடியேற்றங்கள், சிங்கள மன்னர்களுடன் தொடர்புடைய தமிழ் குடியேற்றங்கள், கதிர்காமம் வழியாக ஏற்பட்டிருக்கக் கூடிய குடியேற்றங்கள் போன்றவை குறித்து தகவல்கைள ஆராய முயலலாம்.
கடல்வழியான குடியிருப்புகள் குறித்து மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் மற்றும் நாட்டாரியல் வழக்காறுகள் ஆதாரங்களாக அமைய முடியும். மட்டக்களப்பு மாண்மியம்-மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்றவற்றிலுள்ள இலங்கை மன்னர் சாராத ஏனைய தலைவர்களின்-குடிகளின் விபரங்களை பரிசீலிப்பதுடனாக இதனை மேற்கொள்ள முடியும்.
மட்டக்களப்பின் பூர்விமாக வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் மக்கள் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்திருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது. தரைவழிக் குடியேற்றங்களும் படுவான்கரைப்பிரதேசத்திலே நிகழ்ந்திருக்காலம். கடல்வழிக் குடியேற்றங்கள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் நிகழ்ந்திருக்கலாம். இதில் உள்ள சிக்கல் பூர்விகக் குடிகளுக்கும், குடியேற்றக் குழுக்களுக்கிடையே நிகழ்ந்த கலப்புக்கள், குடியேற்றக் குழுக்களுக்கிடையே நிகழ்ந்த கலப்புக்கள் பற்றியதாகும். மற்றொரு சிக்கல் குடியேற்றங்கள் பரவிய முறையாகும்.
ஐரோப்பியர் காலத்திற்குரிய வரலாற்றுத் தகவல்களை ஏனைய மட்டக்களப்பு வரலாற்று மூலங்களிலிருந்து(ஐரோப்பியர் குறிப்புகள்) பெறலாம்.
இவ்வாறு, மட்டக்களப்பிற்கான தொடர்ச்சியான ஒரு வராலற்றை நாம் கண்டறிந்து கொள்ள முடியும்.
இலங்கை வரலாற்று நூல்கள் கூறும் தகவல்கள் தொடர்பாகவும் விமர்சனங்கள் இருப்பதனால் எச்.டபிள்யு.கொடிறின்டன் மற்றும் ஜி.சி.மென்டிஸ் ஆகியோரின் இலங்கை வரலாற்று நூல்களிலிருந்து தகவல்களைப் பெறுவது பொருத்தமானதாக அமையலாம். இவ்வரலாற்றுத் தகவல்களுடன் தொல்பொருள் சான்றுகள் பெறப்படின் ஓரளவு சரிதிட்டமாக வரையறுத்து கூறிவிடலாம். போதியளவு தொல்பொருள் ஆவணங்கள்(படுவான்கரைப் பிரதேசத்தில்) இருப்பதாக கருதப்படுகிறது. அவை கண்டறியப்பட வேண்டும்.
இவற்றிலிருந்து நாம் ஆராய வேண்டிய மட்டக்களப்பு வரலாறு தொடர்பான விடயங்களின் பருமட்டான ஒரு வரைபு உருவாக்கினால்,
· கதிரவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈழத்தாழிகள்
· மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள்
வேடர், புலிந்தர், இயக்கர் மற்றும் வேடர்
· குடியேற்றங்கள்.
கடல் வழியாக நிகழ்ந்திருக்கக் கூடிய குடியேற்றங்கள்.
தரைவழியாக நடந்த குடியேற்றங்கள்
· ஐரோப்பியர் காலம்
· தற்காலம் என அமையும்.
இவை குறித்து தனித்தனியாக ஆய்வதினூடாக நாம் ஓரளவு மட்டக்களப்பின் வராலற்றைக் கண்டறிய முடியும்.
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்த போது மட்டக்களப்பு, தனித்துமான சமூக-பண்பாட்டம்சங்களைக் கொண்ட தமிழர்கள் வாழும் ஒரு பிரதேசமாக இருந்திருக்கிறது என்றால், அதனைத் தோற்றுவித்த வரலாற்றைக் கொண்ட மக்கள் பற்றி அறிவது என்பது சிறப்பானதொரு பணியாகும்.
முன்னைய பதிவு :