Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய்

மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றினை. பூர்விகக் குடிகள், பின்னர் ஏற்பட்ட குடியேற்றங்கள் என இரண்டாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும், நாட்டாரியல் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றை ஆராய வேண்டும் எனவும். இதற்காதராமாக கலாநிதி சி. மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” தரும் தகவல்களைக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் தகவல்களை “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” உட்பட ஏனைய மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறும் தகவல்களுடன் இணைத்து நோக்க வேண்டும் எனவும் முன்னய கட்டுரையில் வரையறுத்திருந்தேன்.

மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் வேடர், புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர் ஆகிய குலக்குழுக்களை அல்லது சாதிகளை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக குறிப்பிட்டுள்ளன. வேடர்களை இயக்கருடன் தொடர்பு படுத்தியும் இயக்கர்களை திமிலர்களுடன் தொடர்பு படுத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன. வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை குவேனி வம்சத்துடன் தொடர்பு படுத்தி நோக்கியிருப்பதுடன், கி.மு. 500 ஆண்டளவில் இவர்கள் மட்டக்களப்பில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. மட்டக்களப்பில் வாழ்ந்த வேடர்;, புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர் எனவம் கூறப்படுகிறது.

கலாநிதி சி. மௌனகுரு அவர்கள்: மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் பிற தகவல்களையும் கொண்டு வேடர்களை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக தக்க ஆதாரங்களுடன் கூறியுள்ளார். அத்துடன் தற்காலத்தில் மட்டக்களப்பில் வேடர்கள் வாழ்கிறார்கள் என்ற கருத்தை மௌனகுரு அவர்கள் மட்டுமே உணர்த்தியிருக்கிறார். ஆனால் வேடர்கள் எப்போதிருந்து இங்கு வாழ்கிறார்கள் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. தற்கால களத்ததகவல்கள் மௌனகுரு அவர்களின் கருத்துக்களை மேலும் சான்றுபடுத்தக் கூடியதாக அமைகிறது என்பதனைக் கூறியாக வேண்டும். மட்டக்களப்பு வேடர்கள் மற்றும் அவர்களுடைய தெய்வ-வணக்க முறைகள் குறித்த தகவல்கள் அடுத்த கட்டுரையில் விபரிக்கப்படும். இக்கட்டுரையில் வரலாற்று நூல்கள் விபரித்துள்ள விபரங்கள் தொகுத்து முன்வைக்கப்படுகிறது.

கலாநிதி சி. மௌனகுரு அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக குடிகளாக வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினரைக் குறிப்பிடுகிறார். ஆயினும் வேடர்கள் பற்றிய விபரங்களையே விபரித்துள்ளார். அவர், “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்”(1998) எனும் ஆய்வு நூலில், மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் குறித்து, “…சுருக்கமான வரலாற்றிலிருந்தும், கிடைக்கும் சான்றுகளிலிருந்தும் மட்டக்களப்பில் ஆரம்பத்தில் பூர்விகக் குடிகள் இருந்தனரென்று…”(பக்.86)ம் “மட்டக்களப்பு பகுதியிலே குடியேற்றங்கள் ஏற்பட முன்னர் இங்கு சில சாதியினர் வாழ்ந்தனர் என்பது கர்ண பரம்பரைக் கதைகளாலும், மட்டக்களப்பின் தெய்வ,வணக்க முறைகளாலும் அறிய முடிகிறது”(பக்.100) எனவும் “…இப்படி வாழ்ந்தோர் வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினராக இருக்கலாம்”. எனவும் “இவர்கள் தமக்கென சில தெய்வங்களையும் வணக்கமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இன்றும் மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் கொண்டு அறிய முடிகிறது” எனவும் குறிப்பிடுகிறார். இவர்களை “புராதான குலக்குழு”வாக அவர் இனங்காட்டுகிறார்.

மேலும் “வேடருக்கு குமாரர் பிரதான தெய்வமாகவும்” , “வம்சாவழியாக வந்த தெய்வமாகவும்”(பக்.111) குறிப்பிடுகிறார். வேடர் மரபில் வந்தோரால் அதாவது வேட வெள்ளாளரால் கடைப்பிடிக்கப்படும் குமார தெய்வத்தினை மையமாகக் கொண்ட பல புராதன தெய்வ – வணக்கமுறைகளை கள ஆய்வுத் தகவல்கள் மூலம் (கள ஆய்வு தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்டமைந்தது. விபரம் (பக்.110-119)) விபரித்து, அது புராதான வாழ்க்கை முறையைக் காட்டுகிற முறையினையும் விபரித்துள்ளார். “இச்சடங்கு முறைகள் அவர்களின் முன்னோர்களின் புராதான வாழ்க்கை முறையின் நினைவுகளாகும். பூச்சி பிடித்தல், தேனி கொட்டுதல், யானை பிடித்தல் ஆகிய சடங்கு முறைகளில் அவர்களின் தொழில் சார்ந்த கிரியைகளையும், ஏனையவற்றில் நோய்தீர்க்க ஏனைய தெய்வங்களை வேண்டும் கிரியைகளையும் காணுகிறோம்” (பக.;118) என அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் “இறந்த முன்னோரை வணங்கும் வழக்கம்(உத்தியாக்கள்) இவர்களிடம் இருப்பதும் இவர்களின் புராதானத் தன்மைக்கு உதாரணமாகும்.”(பக்.100) எனவும் , மட்-அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் வேடர்களே முன்பு வேல் வைத்து வணங்கினர் என்ற கதையும், கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர், மண்டூர்க் கந்தசாமி ஆகிய கோயில்கள் முன்பு வேல் வைத்து வேடர்களால் வணங்கப்பட்ட கோயில்கள் என்ற கர்ணபரம்பரைக் கதையும் ஆரம்பத்தில் இவ்வணக்க முறைகளே மட்டக்களப்பில் இருந்தன என்பதை மேலும் வலியுறுத்துகின்றன”;(பக்.101) எனவும் மௌனகுரு அவர்கள்; குறிப்பிடுகிறார்.

எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்களும் மட்டக்களப்பில் பூர்விக குடிகளாக வேடர்கள் வாழ்ந்தனர் எனக் குறிப்பிடுவதுடன், “மட்டக்களப்பு ஆதிக்குடிகளின் இராச்சியம்(வேடர்களின் இராச்சியம்)” என வரோஸ் குறிப்பிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.(வெல்லவூர்க்கோபால்pன் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம். பக்.49) மேலும், எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்கள் குறிப்பிடும் மட்டக்களப்பிலுள்ள சாதிகள் 17 இல் வேடுவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில், “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும், இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற ‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பூர்வ சரித்தம் (2005) , சிறிகுலசேனனுடைய புத்திரன் கூத்திகன் மட்டக்களப்பில் குடியேற்றங்களை முதன் முதலில் உருவாக்கியவனாகக் குறிப்பிடுவதுடன், கூத்திகன் பின், மட்டக்களப்பை இரசதானியாக்கி அரசியற்றிய சேனனுடைய வமிசம் அருகிப்போக, நாகர் இயக்கர் என்னும் இரு குலத்தவர்கள் மேலெழும்பி, காலிங்கர், சிங்கர், வங்கர் என்னும் முக்குலத்தவரையும் அடக்கி, விண்டு அணையை இரசதானமாக்கி முப்பது வருச காலமாகக் கொடுங்கோல் செலுத்தினன் என (பக்13) குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் அனுரதன்புரியை அரசு செய்தவன் சோரநாகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இச்சோரநாகன் இயக்கர் துணைப்பிரியன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விபரிப்புக்களிலிருந்து, இங்கு “இரு குலத்தவர்கள் மேலெழும்பி” எனும் வரியானது அவர்கள் அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினையே குறிப்பாய் உணர்த்துகிறது.

மேலும், மட்டக்களப்பிலுள்ள முற்குலத்தவரில் சில நிதியத் தலைவர்கள் வேண்டுகோளின் படி இயக்கர், நாகரை அகற்ற கலிங்க தேசத்து மதிவரகாகுணன் புத்திரன் ரணாசலன்(ரணாசல்-ரஞ்சன்-நிரஞ்சன்) சைனிய வீரர் முந்நூறுடன் இங்கு வந்தான் எனவும், இவன் நாகரைச் சிநேகம் பிடித்து, இயக்கர் என்னும் திமிலரை வாளுக்கிரையாக்கி, விண்டு அணையிலுள்ள இராசமாளிகையை உடைத்து, இயக்கர் அரசனையும் அவன் பிரதானிகளையும் வெட்டிக் கொன்று, மேற்கு வடக்கு மகாவலி கங்கையால் இயக்கர் குலத்திலுள்ள யாவரையும் துரத்தி எல்லைக்கல்லும் நாட்டி..”(பக்.14) எனவருங் குறிப்புக்கள் இயக்கரை திமிலராகக் காட்டுகிறது. பின்னால் வரும் ரணாசலன் கூற்றானது, “நான் காலிங்கதேசம் போய்க் குடிகள் கொண்டு வந்து இயக்கரிருந்த இடமெல்லாம் குடியேற்ற வேண்டும்” என வருகிறது. இதிலிருந்து இயக்கர்கள் பெரும் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது.
இதேவேளை, ரணாசலன் அனுரதன்புரியை அரசு செய்த சோரநாகனுடன் இணைந்து, “இலங்கையை பன்னிரெண்டு பாகமாய்ப் பிரித்து, எட்டுப்பங்கை விசயதுவீபத்தோடு சேர்த்து மண்ணாறு, மணற்றிடரிரண்டையும் குருகுல நாகருக்கீந்து, தெட்சனாபதியை இயக்கர் குலத்திமிலருக்கீந்து, மட்டக்களப்பை ரணாசலனேற்றுக் கொண்டு…” எனவரும் செய்திகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இதன் மூலம் பின்னாளில் இயக்கர் வாழிடம் தெட்சனாபதியாக இருந்தது எனக் காட்டப்படுகிறது.

இதே வேளை இந்நூலிலுள்ள குலவிருதக் கல்வெட்டில் “நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு” என்ற குறிப்பும், சாதித்தெய்வக் கல்வெட்டில் “வேடருக்கு கன்னிகளாம்” (மௌனகுரு அவர்கள் குமார தெய்வச் சடங்கில் இணைந்துள்ள சடங்கில் கன்னிமார் சடங்கு நிகழ்வதனையும் குறிப்பிடுகிறார்.பக்.118) என்ற குறிப்பும் (பக்77) காணப்படுகிற போதும் சாதிகள் பற்றிய குறிப்பில், வேடர்கள் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. அதாவது சிறைக்குடிகள்-ஊழியம் செய்யும் சாதிகளில் வேடர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் அவர்கள் தனித்துவமான சாதிகளாக இனங்காட்டப்படுவதாக தெரிகிறது.

வெல்லவூர்க்கோபால் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம் (2005) எனும் நூலில், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் குறிப்பிடுவதுடன், அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். (பக்.27,45) இலங்கைக்கு புத்தரின் முதலாவது வருகை என மகாவம்சம் கூறும் காலத்துடன் தொடர்பு படுத்தியே இக்காலக்கணிப்பை அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், “இயக்கர் குடியிருப்புக்கள் நாடு முழுக்கப் பரவியிருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தே மாணிக்க கங்கை(கதிர்காமம்) மற்றும் விந்தனைப் பகுதிகளில் அவர்கள் பரவலாக வாழந்துள்ளமையும் தெரிகின்றது”(பக்.23) எனவும், நாகர்களின் இருக்கைகளாக “…மட்டக்களப்புப் பிரதேசத்தே நாகர்பொக்கணை(மன்னம்பிட்டி) , நாகர்முனை(திருக்கோவில்) , நாகன்சாலை(மண்டூர்) , சூரியத்துறை(மட்டக்களப்புப் பெருந்துறை) என்பனவும் குறிப்பிடப்படுகின்றன”(பக்.23) எனவும் வெல்லவூர்க்கோபால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இயக்கர், நாகர் குழுநிலை ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்(பக்.45) எனவும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் ஈழம் முழுவதிலும் வாழ்ந்தவர்களாகவே இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார்.
இலங்கை வரலாற்றில், கி.மு.454 தொடக்கம் கி.மு.437 வரையான காலப்பகுதி சரியான தகவல்கள் குறிப்பிடப்படாத போதும், உள்நாட்டுக் கலகக் காலம் என வரலாற்றில் சொல்லப்பட்டாலும் மீண்டும் இயக்கர், நாகர் வலிமை பெற்ற காலமாக கருதமுடியும் எனவும் வெல்லவூர்க்கோபால் குறிப்பிட்டுள்ளார்.
வெல்லவூர்க்கோபால் அவர்கள் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதனையம் அதன் உன்மைத்தன்மை பற்றியும் அறிய முடியவில்லை. ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை.

க.த.செல்வரசகோபல் அவர்கள் “மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டை வரலாற்று அடிச்சுவடுகள்”(2005) எனும் நூலின் முதன்மைப் பதிப்பாசிரியன் உரையில், “ விந்தனை வேடரும் தம்பானையில் தாம் புலம்பெயர்ந்த தம்பன்னை எனும் இடத்தின் பெயரை மறந்து போகாமல் தாம் வாழும் இடத்திற்கு இட்டுக் கொண்ட தம்பானை வேடரும், புலிந்தரும், திமிலரும், கழுவந்தரும் முக்கிய பண்டை மட்டக்களப்பின் குடிகளராக வாழ்ந்தனர்”(இணையப்பிரதி-பக்.15) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேடர்கள் பற்றி விபரிக்கையில், “விஜயனின் இன அழிப்புக்கு அஞ்சிய இயக்கர்கள் எனும் பண்டைய தேசிய இனத்தவர்கள்”(இணையப்பிரதி-பக்.61) , “மகியங்கனையை அடுத்த விந்தனை எனும் இடத்திலும் மட்டக்களப்பு வாழைச்சேனையை அண்மித்த கழுவன்கேணியிலும் அம்பாரையை அடுத்த தம்பானை எனும் இடத்திலும் வாழ்ந்து வந்தனர்” , எனவும் “இவர்களை விட பெருந் தொகையானோர் இத்திசை வழியே கூட்டமாகச் சென்று மட்டக்களப்பைச் சார்ந்த சமவெளியில் தங்கலாயினர் (இணையப்பிரதி பக்.62) , எனவும் விபரிக்கப்படுகிறது.

தொடர்ந்து இவ்வாறு புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் பற்றிய விபரிப்பில், “விந்தனை தம்பான எனும் இடங்களிற் சென்றவர்கள் இருப்பிடம் மலைக் குன்றுப் பகுதிகளாக இருந்தபடியாலும் தமது சொந்த நாட்டில் அரச உத்தியோகங்களிலும் படைகளிலும் பணிபுரிந்தவர்களாதலால் தாம் முன்னர் வாழ்ந்த இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத நிலையை அடைந்தனர். நாளடைவில் தம்மைச் சுற்றியுள்ள காட்டு வளத்திலேயே தமது வாழ்க்கையை நடத்தத் தொடங்கினர், அதாவது வேட்டை ஆடுவதைச் சீவனோபாயத் தொழிலாகக் கொள்ளலாயினர். இதனால் வேடர் என்ற காரணப் பெயரையும் பெற்றனர்.”(இணையப்பிரதி-பக்63) எனக் விபரிக்கப்பட்டுள்ளது.

மேலும் “1911ம் ஆண்டு குடிசன மதிப்புக் கணிப்பின்படி வேடர்களின் தொகை முழு இலங்கையிலும் 5312 பேர் மட்டுமே. மற்றக் குலங்களான திமிலர், புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர். அந்தக் காலகட்டத்தில், வேடக் குடியிருப்புகள் மகியங்கனை(விந்தனை) , தம்பானை, கழுவன்கேணி எனும் இடங்களில் மட்டும் இருந்தன. நாளடைவில் கழுவங்கேணி வேடர்களும் தமிழர் என்ற என்ற தேசிய அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர்.” (இணையப்பிரதி-பக்.17) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பின் தொல்குடிகளாக இன்றும் வாழ்ந்து வரும் வேடர்களின் வரலாற்று மூலம் தெளிவாக கண்டறியப்படாத நிலையிலும் ஆரியக் குடியேற்றத்தினால் துரத்தப்பட்ட இயக்கர்கள் (இயக்கர்களை இராவணனுடன் தொடர்பு படுத்தியும் நோக்கப்படுகிறது) பற்றிய தெளிவு ஏற்படுத்தப்படாத நிலையிலும் இவ்வாறு ஒரு முடிவுக்கு வருவது தவிர்க்க இயலாதது என்றே கருதலாம்.

இவரும் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கும் முடிவுகளுக்கும் ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை. பெருமளவு ஊக முறையிலேயே முடிவுகள் காட்டப்படுகின்றன.
வெல்லவூர்க்கோபால் அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் (வேடர்) குறிப்பிடுவதுடன் அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இவ்விளக்கங்களினால், மட்டக்களப்பின் பூர்விக மக்கள் வேடர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகிறது. ஆனால் பின்வரும் விடயங்கள் தொடர்ந்தும் சரிதிட்டமாக விளக்க முடியாத வினாக்களாக எஞ்சியிருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மௌனகுரு அவர்களின் “குமார சடங்கினைச் செய்பவர்கள் வேடர் மரபில் வந்தோராவர்” என்ற குறிப்பும்(பக்.110) “வேட வெள்ளாளரிடம் நடைபெறும் இச்சடங்கு முறைகள்”(பக்.118) என்ற குறிப்பும், இது குறித்த கள ஆய்வும் தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்ட அமைந்தது என்பதுவும் வேடர் மரபில் வந்த ஆனால் தற்போது அச்சமூகநிலையில் இருந்து வேறுபட்ட நிலையில் வாழுகின்ற சமூகத்தினையே அவர் குறிப்பிடுகிறார் என்பதனைக் காட்டுகிறது. அதாவது வேடர் மரபில் வந்தோர் அல்லது வேட வெள்ளாளர் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். மௌனகுரு அவர்கள், “ சில இடங்களில் முக்குவரிடையே வேட வேளாளர் என்ற ஒரு குடியும் காணப்படுகிறது. இது வேடரோடு முக்குவரிற் சிலர் கலந்தமையால் ஏற்பட்ட குடி என்று கூறலாம்”(பக்.93)எனவும் குறிப்பிடுகிறார்.

அப்படியாயின் இன்று வேடுவர்களாக அறியப்படுகின்ற சமூகங்களில் காணப்படும் தெய்வ-வணக்க முறைகள் எவை? அவற்றில் வெளிக்காட்டப்படும் அம்சங்கள் அவர்களின் வராலற்றினை அறிய உதவுகிறதா? என்பவை முக்கியமான வினாக்களாகும். இது குறித்து தற்போதைக்குப் போதிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

அடுத்து தொல்பொருள் சான்றுகள் மூலம் “வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள்” என்பதையும் நிருபிக்க முடியாமலும் உள்ளது. வேடர்கள் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசங்களில்தான் வாழ்ந்திருக்க முடியும் என்ற நிலையில், அப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

வேடர்களுக்கும், இலங்கையின் பூர்விகக் குடிகளான இயக்கர் மற்றும் நாகருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் மற்றொரு வினாவாகும். அதே வேளை, இவ் வேடர்களுக்கும் இராவணன் காலத்து அரக்கர்களுக்கும், புராதான ஈமத்தாழிகள் மூலம் அறியப்பட்ட தொல்குடியினருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுவும் மற்றொரு வினாவாகும்.

அடுத்து குவேனி குலத்திற்கும் மட்டக்களப்பின் தொல்குடிகளான வேடர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஆராயப்படல் வேண்டும்.
அடுத்து மட்டக்களப்பின் வரலாற்றில் வேடர்களையடுத்து ஆரம்பகால குடியேற்றவாசிகளாக கருதப்படும் திமிலருக்கும் வேடருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் விளக்கப்படுத்தப்படவேண்டும்.

முன்னைய பகுதிகள் :

மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்(1)

மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய்(2)

Exit mobile version