குமார தெய்வமும் குமார தெய்வச் சடங்கும் ஏனைய தெய்வங்களிலிருந்தும் வழிபாட்டு முறைகளிலிருந்தும் வேறுபட்டமைவதனை கலாபூ னம் க.மகேஸ்வரலிங்கம் அவர்கள், “மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும்”(2008) என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். இவர் குமார தெய்வத்தினை முருகன் எனக்குறிப்பிடுகிற போதும் குமார தெய்வத்தினதும் அச்சடங்கினதும் தனித்துவமான பல அம்சங்களை இனங்கண்டுள்ளார். அவர், குமார தெய்வம் சிறுதெய்வம் அல்லது சுதேச தெய்வமாகும். இது மட்டக்களப்புக்கு மட்டும் உருத்துடைய தெய்வங்களில் ஒன்று.
குமார தெயவச் சடங்கு முறை, ஆகம வழிபாட்டிற்கும் தெய்வம் ஆட்டுகின்ற பூசாரி வழிபாட்டிற்கும் வேறுபட்ட ஒன்றாகக் காணப்படுகிறது.
குமார தெய்வம் தவிர ஏனைய தெய்வங்களிற்கு விக்கிரகம் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
கும்பங்கள் வைக்கப்படுவதில்லை. மடைகள் மாத்திரம் வைத்து தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன.
ஏனைய தெய்வமாடுகின்ற சடங்குகள் போல உருக்கொடுத்தல், கட்டுதல், வெட்டுதல் முதலிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதில்லை.
சடங்குகள் தெய்வங்களை மன்றாடுகின்ற முறையில் அல்லது வேண்டுதல் செய்கின்ற முறையில் நடத்தப்படுகிறது.
பூசகர் அல்லது கப்புகனும் உருக்கொண்டு ஆடுபவரும் ஒருவரே. கப்புகன் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு உருவத்தையும் வேண்டுதல் செய்து தான் உருக்கொண்டு ஆடிவருவார். கப்புகன் தெய்வங்களுக்குரிய ஆடைகளை அணிந்து ஆடிவருவார். கப்புகனார தெய்வத்திற்கு தக்கபடி ஆயுதங்களும், நடித்தல், அபிநயித்தல் என்பனவும் செய்வார். கப்புகனார் சிலம்பு சதங்களை அணிந்து ஆடுவார்.
சடங்கில் கட்டுச் சொல்லப்படும்.
ஆட்டத்திற்கு ஏற்ப கொட்டு அல்லது பறை அல்லது மத்தளம் அடிக்கப்படும்.
கப்புகானர் தெய்வங்களாக மாத்திரமன்றி இறந்து போன மனிதர்களாகவும் உருக்கொண்டு ஆடுவார். போன்ற தகவல்கைள தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகவல்கள் முருக வழிபாட்டிற்கும் குமாரச் சடங்கிற்கும் இடையிலான வேறுபாடடை உணர்த்தி நிற்கிறது.
கலாநிதி சி. மௌனகுரு அவர்களும், “முருகனையே இவர்கள் குமாரர் என அழைப்பர்” (பக்.111) எனக்குறிப்பிடுகிற போதும் குமாரருக்கும் முருகனுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டியுமிருக்கிறார்.
“முருகன் …. போன்ற பெரும் தெய்வ வணக்கு முறைகளும் காணப்படுகின்றன. இக்கோயில்களில் ஆகம விதிப்படி பிராமணர்களே பூசை செய்கின்றனர். இக்கோயில்களில் தினப்பூசை நடைபெற்று ஆண்டுக்கொரு விழாவும் நடைபெறுகின்றது. பிராமணர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களாவர். இவ்வழிபாட்டு முறை முறை மிகப் பிந்தி வந்திருக்க வேண்டும். (பக்.103) எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“பிற்காலத்தில் வெளிநாட்டார் குடியேற்றத்தினாலும், கலாசாரத்தினாலும் குமாரர் தெய்வக் கோவில்கள் பெரும் தெய்வக் கோயில்களாயிருக்கலாம்”(பக்.102) எனக்குறிப்பிடுகிறார். மேலும் “பழைய தெய்வங்களான குமார, மாறா போன்ற தெய்வங்கள் முருகனுடன் சம்பந்தப்படுத்தப்பட்டன” எனவும் “மட்டக்களப்புப் பகுதியிலும் கிராமியத் தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் சைவ, வைணவ வணக்க முறைகள் அணைத்துக் கொண்டன” எனவும், பெரும் தெய்வங்கள் இவற்றதை; தம்முடன் இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக சிறு தெய்வங்கள் பெரும் தெய்வ வணக்கத்தை தம்மளவில் உள்வாங்கிக் கொண்டன எனவும், “இங்கிருந்த சிறு தெய்வ வழிபாடுகளினதும், சமூக அமைப்பினது செல்வாக்குமே இதற்குகக் காரணம் எனவும், குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குமார தெய்வ வழிபாட்டு முறையை நாடக அமிசம் நிரம்பிய சடங்குகள்” எனவே அவர் குறிப்பிடுகிறார்.
இதனை விட “முருகன், பிள்ளையார், சிவன், திருமால் போன்ற பெரும் தெய்வங்களைப் பந்தலிட்டு வணங்கும் வழக்கம் இங்கில்லை. அத் தெய்வங்களுக்கு கற்கோயில்களே உள்ளன. அவற்றிற்குரிய வணக்க முறைகள் கூட வித்தியாசமானவை. தெய்வ வணக்க முறைகளுக்குரிய சன்னதம் கொண்டாடல், காவியம் பாடல், உடுக்கு அடித்தல், மடை வைப்பு, மந்திர உச்சாடனம் என்பன இப்பெரும் தெய்வக் கோயில்களில் இல்லை என்பது அவதானித்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் தற்போதும் குமார வழிபாட்டைப் பேணுவோரும் குமாரரையும் முருகனையும் ஒன்றாகவே கருதுகின்றனர். புராதான கால குமார தெய்வ வழிபாட்டு முறைகள் பல மாற்றங்களுக்கு உட்பட்டே தற்காலத்தில் பேணப்பட்டு வருகிறது. குமாரர் கோவில்கள் முருகன் ஆலயங்களாக மாற்றவும் பட்டுள்ளன. ஆயினும் அவற்றிலும் குமாரருக்கும் முருகனுக்கும் இடையிலான வேறுபாடுகளை அவதானிக்க முடிகிறது.
ஜெயந்தி புரம் கோவிலில் குமார தெய்வம் கற்சிலையாக அமைந்திருக்கிறது. இது பிள்ளையார் கற்சிலையிலிருந்து சற்று வேறுபட்டது. ஏனைய குமார கோவில்களில் இரும்பிலான வாள், கத்தி போன்ற ஆயுதங்களே வழிபடப்படுகின்றன.
குமார தெய்வம் தனி ஒரு தெய்வ வழிபாடாக இல்லாமல் பல் தெய்வ வழிபாடாகக் காணப்படுகிறது. அதில் முக்கியமானது கழுக்குமாரராகும். இதற்கு கழுமரம் குறியீடாகவுள்ளது. கிரானிலும், சித்தாண்டியிலும் இதனைக் காணலாம். புள்ளிக்குமாரன் எனும் தெய்வமும் முக்கியமானதாகும். இது அம்மை நோய்க்குரிய தெய்வமாக விளங்குகிறது. இவற்றை விட வேறு பல தெய்வங்களும் காணப்படுகிறன்றன.
குமார தெய்வ வழிபாட்டு முறை சடங்கு எனப்படுகிறது. இச்சடங்கு முறைகள் ஏனைய வழிபாடுகளில் இருந்து வேறுபட்டது. தினப்பூசைகள் நடைபெறுகின்ற போதும் அவற்றிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
குமார தெய்வச் சடங்கு முறைகளில்; குமார கலை, இராச கலை, வேட கலை ஆகிய கலைகள் குறிப்பிடப்படுகிறது. இக்கலைகளை
தெய்வங்களின் உட்பபிரிவுகள் எனவும் அவை ஆதிக்குமாரர், கொழும்புக் குமாரன், அழகுக் குமாரர், கண்டிக் குமாரர், புள்ளிக்குமாரர், காலிக்குமாரர் எனவும் குறிப்பிடுவர்.
சடங்கை நடத்துபவர் பூசகர் எனப்படுவார். இவர் கப்புகன் என அழைக்கப்பட்டாலும் கப்பகன் முறையிலிருந்து இச்சடங்கு வேறுபட்டமைகிறது. குமார தெய்வச் சடங்கில் மந்திரங்கள் பயன்படுத்தபடுவதில்லை. பூசகர் அல்லது கப்புகன் தெய்வமாக உருக்கொண்டு ஆடுவார்.
தெய்வத்திற்குரிய ஆட்ட முறைகள் தனித்தனியானை. சலங்கை அணிந்து, வௌ;வேறு ஆடைகளும் அணிந்து ஆட்டம் இடம் பெறும். நடித்தல், அபிநயித்தல் இடம் பெறும். கட்டும் சொல்லப்படும்.
சடங்குகள் தெய்வங்களை மன்றாடுகிற முறையில் அல்லது வேண்தல் செய்கின்ற முறையில் நடத்தப்படுகிறது. வழிபாட்டு முறையில் மன்றாட்டு முறை முக்கியமானதாகும். குமாரர் மன்றாட்டுத் தெய்வம் ஆகவே கருதப்படுகிறார். இவற்றிலிருந்து குமாரர் – குமார வழிபாடும் முருகன் – முருக வழிபாடும் வேறுபட்டமைவதனை அறிய முடிகிறது.
குமார வழிபாடும் முருகவழிபாடும்; மட்டக்களப்பில் புராதான காலத்திலிருந்து நடைபெற்று வருபவையாகும். முருக வழிபாடும் குமார வழிபாடு போல் தொன்மையான வழிபாட்டு முறை என்பதானலும், இரண்டும் புராதான காலத்தில் வேடர்களுடன் தொடர்பு பட்டிருப்பதனாலும், முருகனுக்கு வேல் குறியீடாகவும் குமாரருக்கு ஆயுதங்கள் குறியீடாகவும் அமைந்திருப்பதனாலும் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கலாம். சமூக மேல்நிலையாக்கத்தினால் பிற்காலத்தில் முருக வழிபாடு ஆகம முறைக்கமைவாக மாற்றம் பெற்றுள்ளது. அதன் பின்னர் குமாரர் வழிபாடும் ஆகம முறையிலமைந்த முருக வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. இதன்காரணமாக குமார வழிபாட்டில் பழைய வழிபாட்டு எச்சங்களை இன்றுங் காணமுடிகிறது.
இதே வேளை மட்டக்களப்பிலுள்ள திருப்படைக் கோவில்களான பிரசித்தி பெற்ற முருகன் கோவல்கள் முன்னர் குமாரர் கோவில்களாக இருந்தனவா? என்ற கேள்வியும் எழுகிறது. மண்டூர் முருகன் ஆலயத்தில் உட்பிரவாகத்தில் சிறிய குமாரர் கோவில் இருப்பது இதனை உறுதி செய்கிறது. சித்தாண்டி முருகன் ஆலயத்திலன் வெளிப்பிரவாகத்தில் குமாரர் ஆலயம் இருக்கிறது! தற்போதுள்ள குமார கோவில்கள் முருகன் கோவில்களாக மாற்றப்படுகின்றமையும் இக்கருத்தினை உறுதி செய்கிறது.
குமாரர் – முருகன் தொடர்பினை மேலும் அறிவதற்கு, பேராசிரியர் நா.வானமமாலை அவர்களின் :தமிழர் பண்பாடும் தத்துவமும்”(1973) எனும் நூலிலுள்ள, “முருக-ஸ்கந்த இணைப்பு”, “பரிபாடலில் முருக வணக்கம்” ஆகிய கட்டுரைகள் உதவுகின்றன. வானமமாலை அவர்கள்,
“மரவழிபாடு, வேல் வழிபாடு உருவ வழிபாட்டிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை என்பதை மானிடயவிலாளர்கள் விளக்கியுள்ளனர்.” எனவும் தமிழ் நாட்டில் வரலாற்று முற்காலமான(கி.மு.1150) ஆதிச்சநல்லூர் தாழி அடக்க காலத்திலேயே ஆரம்பகால முருக வணக்கம் குறித்த சேவல் உருப்பொறித்த திரிசூலம், தங்கவாய் மூடிகள் போன்ற சான்றுகள் கிடைத்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தாழி அடக்க முறைகள் மட்டக்களப்பு கதிரவெளிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதுவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள் முன்னர் வேல் அல்லது திரிசூலம் வைத்து வழிபடப்பட்டது என்ற செய்தியும், குமாரர் ஆலங்யங்களில் முன்பாக திரிசூலம் வைக்கப்படும் வழக்கம் காணப்படுவதும் கவனத்த்pல் கொள்ளத்தக்கது.
இதனை விட முருக வணக்கமுறை குறித்து பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
“ தமிழ் நாட்டில் மிகப் பழைமையான வணக்க முறைகளில் முருக வணக்கமும் ஒன்று என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்வர். பழந்தமிழ் இலக்கியத்தில் முருகு. முருகன் என்ற இரண்டு பெயர்களுடயை தெய்வங்களும் ஓரே தெய்வத்தையே குறிப்பிடுகின்றன. வேலன் இத் தெய்வத்தின் பூசாரி.” (பக்.06)
“முதல் நிலையில் இத்தெய்வக் கருத்து குறிஞ்சி நில வாழ்க்கையில் தோன்றியிருத்தல் வேண்டும். கல் கருவி நாகரிகம் மறைந்து உலோக நாகரிகம் தோன்றி இரண்டும் கலவையாக நிலைப்பெற்ற காலத்தில் உலோகக் கருவிகளுக்கும் , அக்கருவியைப் பயன்படுத்துவோருக்கும் ஏற்பட்ட மதிப்பினால், வேலைப் பயன்படுத்தும் ஒரு தெய்வம் பண்டைத் தமிழர் சிந்தனையில் மதிப்புப் பெற்றது. வேலைத் தாங்கிய பெண் தெய்வங்கள் இருந்ததில்லை.
“பழங்கால குறவர், எயினர், தானவர் போன்ற குறிஞ்சி நில மக்கள் புஞ்செய் அல்லாது நஞ்செய் பயிர்த் தொழிலை மேற்கொண்ட ஆரம்ப காலத்தில் தோன்றிய கடவுட் கருத்து முருகன் ஆகும்.”
தமிழ் நாட்டில் 3ம் நூற்றாண்டிற்கும் 7ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஸ்கந்தப் பண்பாடு முருக வணக்கத்தோடு இணைந்து ஒன்றுபடுகிறது.
வடநாட்டில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் வரும் ஸ்கந்தன் பற்றிய கதையானது, இனக்குழுச் சிறு தேவதைகளில் ஒன்றாக இருந்து பெருந் தெய்வமானவன் என்பதைப் புலப்படுத்தும். “இந்திரன் பழைய வேதப் பழங்குடிகளில் சிறு இனக்குழுத் தலைவர்களின் சாயலில் இந்திரலோகத்தில் குழுத்தலைவனாகப் படைக்கப்பட்டவன். வேத காலத்தில் மிகப் பிரபலமடைந்திருந்த இவன் செல்வாக்கு குன்றியவன் ஆனான். ஏன்? குழுக்கள்(சிறு மாடு மேய்க்கும் குழுக்கள்) பெரியவை ஆயின. சுpல குழுக்கள் கல் கருவி நிலையினின்றும் “உலேகக் கருவி நிலை”க்கு முன்னேறின. ஆப்பொழு அவர்கள் கருத்துலகிலும் மாறுதல் தேவையாயிற்று. சிறு குழுத்தலைவன், பெருங்குழுவைப் பாதுகாக்கும் வலிமையற்றவனாகக் கருதப்பட்டான். பெருங்குழு பல போர்களில் :டுபடவேண்டியதாயிற்று. அதற்கேற்றபடி, உடல் வலிமையும், இளமையும், போர்த்துடிப்பும், சிறந்த போர்க்கருவிகளும் உடைய படையும், அதனைக் களத்தில் நடத்துவதற்குத் தலைவனும் வாழ்க்கையில் தேவையாயினான். கருத்து உலகில் இதன் பிரதிபலிப்பாக இந்திரனுக்குப் பதிலாக ஒரு போர்க்கடவுள் தேவையாயினான்.” எனக்குறிப்பிடுகிறார்.
ஸ்கந்தன் எதிரிகளோடு போரடச் சக்திவாய்ந்த ஒரு புதிய சேனாதிபதி, சிறு குழு பெருங்குழுவாகும் நிலையில் பல குழுப்போர்களை நடாத்தும் வலிமை மிக்க போர்க்கடவுள். இக்கருத்தக்கள் மட்டக்களப்பிலுள்ள குமார – முருக வழிபாடு பற்றி புதிய வகையில் நோக்க வேண்டி தேவையை உணர்த்துகிறது
மேலும் முருக வழிபாடு குறித்து “முருகனை களத்திலும், ஓர் மன்றிலிலும் வெறியாடி வழிபடுவது பெருவழக்கமாயிருப்பினும், ஆபூர்வமாகச் சில விடங்களில் முருகனுக்கு கோவில்கள் இருந்தவென்பதை புறநானூற்றில் வரும் முருகன் கோட்டம் என்ற தொடர் காட்டும்.
பழைய முருக வழிபாட்டு முறைக்கும் பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்கள்(சங்ககால இலக்கியம்) காட்டும் முருக வழிபாட்டு முறைக்கும் வேறுபாடுகள் காணப்படுகிறது. எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “இளமை, உற்சாகம், மதுவெறி, அழகுணர்ச்சி, காதல், தீமையை ஒழிக்கும் தன்மை, பிறரைக் காத்து நிற்கும் பண்பு இவற்றையெல்லாம் திரட்டி தெய்வ வடிவாக உலகில் பல பாகங்களிலும் இலக்கியம் செய்திருக்கிறார்கள் பண்டைக்கால மக்கள். இவர்களுள் இநத்pய தெய்வங்கள் ஸ்கந்தனும், முருகனும் ஆவர்” (பக். 3) எனக்குறிப்பிட்டுள்ளதுடன் கிரேக்க தெய்வமான பாக்குஸ் டயோனிஸால், பழைய ஏற்பாட்டில் வரும் தீர்க்கதரிசி மோசஸ் போன்ற கடவுள்களும் இத்தன்மை கொண்டவர்கள் என்ற முடிவினையும் இவர் குறிப்பிடுகிறார்.
“முடிவில் முருகன் போன்ற தெய்வங்கள் உலக முழுவதிலும், பழங்குடி மக்கள் நிலியிலிருந்த சிறு குழுக்கள், நிலைத்த நாகரிகமடையும் போது உலோக உபயோகத்தைக் கற்றுக் கொண்டு பெருங்குழுக்களாக மாறும் காலத்தில், இளமை, வலிமை, போர்த்திறன், காதல் இயல்பு, இயற்கையை வெல்லும் திறன்(தீயையும் நீரையும் அடக்குபவன்) இது போன்ற தன்மைகளே உருவான கடவுள்களை மக்கள் கற்பனை செய்துள்ளார்கள். சமூக வளர்ச்சியின் ஏகதேச ஒற்றுமையால் தமிழ் நாட்டு முருகக் கருத்து வளர்ச்சியும் ஒப்பிடத்தக்கனவாயுள்ளன”(பக்.29) எனக்குறிப்பிட்டுள்ளார். இவை மட்டக்களப்பின் முருக மற்றும் குமார வழிபாடு பற்றி ஒரு புதிய ஆய்வு அணுகுமுறையை எமக்குத் தருகிறது.
இதற்கப்பால், கிரமியத் தெய்வங்கள் பற்றிய ஆய்வுகள் உணர்த்தி நிற்கும் விடயங்கள் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முன்னர் கொழும்பில் நடைபெற்ற “நாட்டார் வழக்காறுகள்” தொடர்பான கருத்தரங்கில் இந்திய-இலங்கை தமிழறிஞர்கள் இது குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்கள். இக்கருத்தரங்கில், குறித்த சமூகத்தின் காவலர்களாக அல்லது நெருக்கடியான காலங்களில் போரிட்டு அச்சமூகத்தினைக் காத்து நின்றவர்களோ கிரமியத் தெய்வங்களாக விளங்குகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அத்துடன், ஒரு சமூகத்தில் ஒதோ ஒரு காரணத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படும் போது(கூடுதலாகப் பெண்கள்), அவர்களால் தங்கள் சமூகத்திற்கு தீங்கு ஏதும் நேரலாம் என்ற அச்சம் காரணமாக, அத்தீங்குகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும் வண்ணம் தண்டிக்கப்பட்டவர்களைத் தெய்வங்களாக வழிபடும் முறையும் உண்டு எனவும் கூறப்பட்டது. தமிழ் நாட்டில் மேற்கொண்ட ளவாய்வுகளில் சில கிராமியத் தெய்வச் சிலைகள், காயம் பட்ட அடையாளம் கொண்டோ அல்லது அங்கவீனமான நிலையில் இருப்பதுவும் கண்டறியப்பட்டது எனவும் விபரிக்கப்பட்டது. கண்ணகி சங்க இலக்கியங்களில் “ஒரு முலையறுத்த பெண்ணாக” சித்தரிக்கப்படுவதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதே போல பெரும் புகழ் வாய்ந்த காரைக்காலம்மையார் எலும்புருவம் – பேயுருவம் தாங்கியமையும், தலையால் நடந்து சென்று இறைவனை; தரிசித்தமையும், அவர் வாழ்ந்த இடத்தினை நாயன்மார்களில் ஒருவர் தரிசிக்க அஞ்சி நின்றமையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பில் குமார வழிபாட்டில், கழுக்குமாரர் வழிபாடும் இடம்பெறவுதுண்டு. இதற்கு கழுமரம் குறியீடாகும் என்பது ஒரு கனத்த தகவலாகும். சித்தாண்டி குமார சடங்கில், பூசாரி ஆடும் போது கழுமரத்தில் தலையை முட்டுவது போன்ற பாவனை செய்வார் எனக்கூறப்படுகிறது. அதே வேளை ஜெயந்திபுரம் குமார ஆலயத்தில் குமாரசிலைக்கு ஒரு கண் சிவப்பினால் பொட்டு இடப்பட்டிருந்ததனையும் அவதானிக்க முடிந்தது. இது தற்செயலானதா? அல்லது மேலே விபரித்தது போன்ற சமூகச் செய்திகளை மையமாகக் கொண்டு, அதன் எச்ச நினைவாக வைக்கப்பட்டதா எனபதனை அறிய வேண்டும்.
உலகிலுள்ள பண்டைக்கால மக்கள் போல, மிகப்பண்டைக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த மக்களின் சமூக வளர்ச்சி நிலையினை, வேல் வைத்து வழிபடுதல், குமார வழிபாடு, புரதான முருக வழிபாடு போன்றவை குறித்து நிற்கிறது என்ற முடிவிற்கு வரவேண்டியவர்களாயிருக்கிறோம். குமார வழிபாடு பின்னர் முருக வழிபாடாக மாற்றம் பெற்றதா? அல்லது அவை இரண்டும் தனித்துவமானவையாக வளர்ச்சி பெற்று சில இடங்களில் ஒன்றிணைக்கப்பட்டனவா என்பதுவும் அறியப்பட வேண்டும். (கிரான் போன்ற இடங்களில் இன்னமும் பழைய மரபுகளுடன் பேணப்படுகிறது.
என்ன சமூகக் காரணத்தினால் புதிய இரும்பினாலான திரிசூலம் அல்லது வேலாயுதம் அது போல கத்தி – வாள் போன்றவற்றையும் இவர்கள் வழிபட்டார்கள் என்பதுவும், போர்த்தெய்வம் ஒன்றை வழிபடும் தேவை என்ன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். கிழக்குப் பிரதேசத்தில் இடம் பெற்ற குலக்குழுப் போர்கள், போர்கள் , பொருளாதார மாற்றங்கள் போன்றன குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சிங்கள வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டுள்ள இயக்கர்கள் அழிக்கப்பட்டமை, கிழக்கில் நடைபெற்ற போர்கள், கண்டி இராசதானிக் காலத்தில் கிழக்கில் இடம் பெற்ற போர்கள், மட்டக்களப்பு வரலாற்றில் சொல்லப்பட்ட திமிலர் மீதான போர் போன்றன குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, சிங்கள வரலாற்று நூல்களில் கிழக்குப் பிரதேசம் பற்றிக் கூறப்படும் செய்திகளை அறிவதுவும், புராதான தொல்பொருள் சான்றுகள் குறித்த தேடலை மேற்கொள்வதுவும் இவ்விடயம் குறித்து அறிந்து கொள்வதற்கு அவசியமாகும்.
முன்னைய பதிவுகள் :
மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை : விஜய்
மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய்
மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய்
மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்