Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்

மட்டக்களப்பு வரலாற்றை விபரிக்கும் நுல்கள் மற்றும் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. மட்டக்களப்பின் வரலாறு குறித்த முதல் நூலாக அமைவது S.O. கனகரெத்தினம் அவர்கள் 1923 ஆம் ஆண்டில் எழுதிய ‘“The Monograph of Betticaloa District of the Eastern Province”ஆகும். மட்டக்களப்பின் வரலாறு மற்றும் சாதியமைப்பு பற்றி விபரிக்கும் இந்நூல் நீண்டகாலமாக மட்டக்களப்பின் வரலாற்று ஆவணமாக பலாராலும் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து முக்கியம் பெறுவது வித்துவான் கு.ஓ.ஊ. நடராசா அவர்களால் 1962 இல் வெளியிடப்பட்ட ‘மட்டக்களப்பு மான்மியம்’ ஆகும். இந்நூலும்; மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை விபரிக்கும் நூலாக நீண்டகாலமாக விளங்கியது. அது மட்டுமின்றி மட்டக்களப்பு தமிழர்களுக்கு ஒரு தொன்மையான வரலாறு உண்டு என்ற ஒரு பெருமித உணர்வையும் இந்நூல் ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூல் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலில் இந்நூல் விபரிக்கும் வராற்றுத் தகவல்கள் முரணானவையாக, சிக்கலாதனவையாக அமைந்திருப்பதனை பின்வந்த பல ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இரண்டாவதாக இந்நூலில் பிரித்தானியர் ஆட்சிக்காலம் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுவதனாலும், மைல், லோ போன்ற சொற்கள் இடம் பெறுவதன் காரணமாகவும், 1915 ஆம் ஆண்டில் அச்சுப்பதிப்பாக வெளிவந்த ‘இலங்கைச் சரித்திரம்’ எனும் நூலில் உள்ள விடயங்கள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் ஐரோப்பியர்; ஆட்சிக்காலத்தின் பின்னரே இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மட்டக்களப்பின் தொன்மையான வரலாற்றை விபிரிப்பதாகக் கருதப்பட்ட மட்டக்களப்பு மாண்மியம் மிகப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

கலாநிதி க.த.செலவராசாகோபால் அவர்கள், ‘மட்டக்களப்பு மான்மியம்’ செட்டிபாளையம் இ.வ.கணபதிப்பிள்ளை என்பவரின் ‘மட்டக்களப்பின் வரலாறு’ எனும் ஓலைச் சுவடியினை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவ்வோலைச்சுவடி 1900 த்திற்குப் பின்னரான காலத்திலேயே எழுதப்பட்டது எனவும், தக்க ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார்.

இவ்வாறு முரணான-சிக்கலான வரலாற்றை பதிவு செய்ததுமட்டுமன்றி, பிற்காலத்தில் மட்டக்களப்பின் வரலாற்றை எழுதுபவர்கள் திசை தடுமாறிச் செல்வதற்கும் கு.ஓ.ஊ. நடராசா அவர்களின் ‘மட்டக்களப்பு மான்மியம்’ வழியேற்படுத்தியிருக்கிறது. பிற்கால அய்வாளர்கள் ஒன்றில் மட்டக்களப்பு மாண்மியம் கூறும் செய்திகளின் அடிப்படையில் தவறான ஒரு வரலாற்றையே விபிரக்க முனைந்திருக்கிறார்கள், அல்லது மட்டக்களப்பு மாண்மியம் கூறும் வரலாற்று முரண்களில் சிக்கித் திணறியிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாண்மியத்தினை அடுத்து பல நூல்கள், கட்டுரைகள் வெளிவிந்திருப்பினும் முக்கியமானதாகக் கூறப்பட்டது, ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ ஆகும். இந்நூல் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் எனும் வகையில் நான்கு ஓலைச் சுவடிகளும்; காணப்பட்டது. இந்நான்கு ஓலைச்சுவடிகளும் முரண்பட்டும் காணப்பட்டன. இதனால் இவற்றை ஒப்புநோக்கி நேர்த்தியான, வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய சிறந்த பதிப்பொன்றைக் கொண்டு வரவேண்டும்’ என்ற நோக்கில் வித்துவான் சா.இ.கமலநாதனும் அவரது துணைவியார் கமலா கமலநாதனும் ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ எனும் நூலை தயாரித்தனர். இந்நூலின் தயாரிப்புக்கு த.சிவராம் துணைபுரிந்திருந்தார் என்பதுடன் நூலிற்கான வரலாற்று அறிமுகக் குறிப்பினையும் எழுதியுமிருந்தார்.

இந்த ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ செட்டிபாளையம் இ.வ.கணபதிப்பிள்ளை என்பவரின் மட்டக்களப்பின் வரலாறு எனும் ஓலைச் சுவடியினை ஆதாரப்பிரதியாகக் கொண்டே அமைந்திருந்தது, அத்துடன் அவர்கள் ஒப்புநோக்கிய ஏனைய ஓலைச்சுவடிகளும் க.கணபதிப்பிள்ளை என்பவரினாலேயே எழுதப்பட்டது என்னும் விடயத்தினை கலாநிதி க.த.செலவராசாகோபால் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். எனவே ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலின் ஒரு மறு பிரதியாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. இவ்விரு நூல்கள் குறித்து க.த.செலவராசாகோபால் அவர்கள் ,

‘இதுவரை மட்டக்களப்பு மாண்மியம் எனும் பெயர்சூட்டப்பட்டு இருதடவைகள் மட்டக்களப்பு மக்களிடையே பிரபலியமாகிய அதே நூல் இப்போது மட்டக்களப்பு பூர்வீக சரித்திரமாகி மீண்டும் ஒரு தோற்றத்தை தந்துள்ளது. இவைகள் மூன்றிலும் உள்ள விசயங்கள் ஒன்றே என்பதையும் இதற்கான மூலப்பிரதி செட்டிபாளையம் இ.வ.கணபதிப்பிள்ளை புலவர் பனை ஓவைலச்சுவடியில் படைத்த மட்டக்களப்பு வரலாறு என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளேன்.’ எனக் குறிப்பிட்டிருப்பதுடன், சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வரை மட்டக்களப்பு மாண்மியத்திலோ அல்லது மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்திலோ சொல்லப்படும் தகவல்களை எடுத்து ஆள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இம்மூன்று முயற்சிகளுக்கு அப்பால் மட்டக்களப்பு வரலாறு குறித்து முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர் கலாநிதி க.த.செல்வராசாகோபால் ஆவார். கலாநிதி க.த.செல்வராசாகோபால் எழுதிய ‘யாரிந்த வேடர்’ எனும் நூல் கட்டுரை 1965 இல் வெளிவந்திருந்தது. இவருடைய வதனமார் வழிபாடு ஓர் ஆய்வு, 1675இல் மட்டக்களப்பில் டச்சுக்காரரை எதிர்த்த இளஞ்சிங்கன் – தென்மோடி நாடகம், மீன்பாடும் தேன் நாடு, வசந்தன் கூத்து ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. ‘யாரிந்த வேடர்’ நூலில் இலங்கைக்குரிய சொந்தக்காரர்கள் காடுகளில் மறைந்து வாழும் வேட்டுவக் குலத்தவரே என ஆதராங்களுடன் எழுதியிருந்தமையால் நூலாசிரியர் நீதி விசாரணைக்கு உட்பட்டிருந்தார் என்பதுவும் நூலின் விற்பனை தடைசெய்யப்பட்டிருந்தது என்பதுவும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

கலாநிதி க.த.செலவராசாகோபால்(ஈழத்துப்பூராடனாhர்) அவர்கள் எஸ்.பி. கனகசபாபதி(கல்கிதாசன்) துணையுடன் 2005 இல் ‘மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்றுச் சுவடுகள்’ எனும் நூலையும்; ‘மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்றுச் சுவடுகள் பாகம் 2’ எனும் நூலையும் வெளியிட்டிருக்கிறார். க.த.செலவராசாகோபால் ‘மட்டக்களப்பு மான்மியம்’ மற்றும் ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ ஆகிய நூல்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அந்நூல்கள் தொடர்பான பல தகவல்களையும் அவரே வெளியிட்டிருந்தார். எனவே இந்நூல்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு மட்டக்களப்பு வரலாற்றை ஆராயும் தன்மை காணப்படுகிறது.
வித்தவானும் பண்டிதருமான வீ.சி.கந்தையா அவர்கள் எழுதிய மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூல் 1964 இல் வெளிவந்தது. அந்நூலிலுள்ள ‘அரசியலும் தமிழர் குடியேற்றமும்’ எனும் பகுதி மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை விபரித்துச் செல்கிறது. அந்நூலும் மட்டக்களப்பு மான்மியத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டு பல தவறான வரலாற்றுத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. ஆயினும் அந்நூலில் மட்டக்களப்பு சமூகம் குறித்து பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை காணலாம்.

‘மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்;கையும்’ எனும் நூல் தொகுப்பில் (1980) கு.ஓ.ஊ. நடராசா அவர்கள் எழுதிய இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவை ‘மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம்’, ‘மட்டக்கப்புத் தமிழ் மக்கள்’ என்பனவாகும். ‘மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம்’ மட்டக்களப்பு மான்மியத்தை தழுவியது.

வெல்லவூர்க்கோபால் அவர்கள் 2005 இல் ‘மட்டக்களப்பு வரலாறு – ஓரு அறிமுகம்’ எனும் நூலை வெளியிட்டிருந்தார். பத்தாண்டு கால தொடர்முயற்சியினால், தமிழ் நாடு, புதுவை, கேராளா மற்றும் ஒரிசாவிலமைந்துள்ள ஆவணக்காப்பகங்களிலிருந்து கிடைத்த தகவல்களையும் மட்டக்களப்பு பிரதேச கள ஆய்வுத் தகவல்களையும் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்நூல் புதிய பல தகவல்களை வெளிக்கொணர்கிற போதும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலை ஆதராமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. எனவேதான் பல இடங்களில் இந்நூலாசிரியரால் ‘மட்டக்களப்பு மான்மியம்’ கட்டமைத்த வரலாற்றுப் பொய்மைகளிலிருந்து விடுபட முடியாமல் போய்விடுகிறது.

இவை தவிர, அருள் செல்வநாயகம் எழுதிய ‘சீர்பாத குலவரலாறு’ எனும் நூல் சீர்பாதகுலத்தவரின் வரலாற்றை விபரிக்கிறது. இதனைவிட எஸ.டி.ராகவன் எழுதிய முக்கவ வரலாறு, ஞா.சண்முகம் எழுதிய மட்டக்களப்பு குகன் குல முற்குகர் வரலாறும் மரபுகளும் நூல்கள் பற்றியும் க.த.செலவராசாகோபால் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இந்நூல்களும் மட்டக்களப்பு மாண்மியத்தின் ‘ஆதிக்கம்’ நிறையவே இடம்பெற்றுள்ளது என்பதனையும் குறிப்பிட்டிருக்கிறாhர்.

தொல்லியல் ஆய்வை பல்கலைக்கழக மட்டத்தில் கற்ற தங்கேஸ்வரி அவர்கள் எழுதிய ‘மாகோன் வரலாறு’ எனும் ஆய்வு நூலும் மற்றும் அவர் எழுதிய ‘குளக்கோட்டன் தரிசனம்’, ‘முக்குவர் வரலாறு’, ‘மட்டக்களப்பு வரலாற்றுப் பின்னணி’ முதலிய வரலாற்று நூல்களும் மட்டக்களப்பு வரலாற்றை சரியான வரலாற்றாய்வு முறையில் அணுகியிருக்கின்றன எனக்குறிப்பிடப்படுகின்றன. தங்கேஸ்வரி அவர்கள் எழுதிய ‘மாகோன் வரலாறு’ எனும் நூல் குறித்துக் குறிப்பிடும் க.த.செலவராசாகோபால், ‘பலவரலாற்று நூல்களில் இருந்து திரட்டிய தகவல்களைக் கொண்டு ஆராயும் தொல்லியல் முறையில் வெளிவந்த பெருமைக்கு உரியது மாகோன் வரலாறு’ எனக்குறிப்பிடுகிறார்.

த.சிவராம், ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ எனும் நூலிற்கு எழுதிய வரலாற்று அறிமுகக் குறிப்பில், 1960 களில் வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள்-கட்டுரைகள் பற்றிய குறிப்புக்களை தந்திருக்கிறார். அவற்றில், 1960களின் பிற்பகுதியில் மட்டக்களப்பில் களப்பணி செய்த அமெரிக்க மானிடவியலாளரான பேராசிரியர் டெனிஸ் பி.மக்கில்வ்ரே எழுதிய முக்குவ வன்னிமைகள் மற்றும் மட்டக்களப்பின் தாய்வழிக்குடிமை முறை பற்றிய ஒரு நூல், கட்டுரைகள் மற்றும் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

க.சண்முகலிங்கம்; அவர்களின் ‘இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும்'(2011) எனும் நூலின் மட்டக்களப்பில் சாதி எனும் அத்தியாயம், டெனிஸ் பி.மக்ஜில்வ்ரேயின் ‘முக்குவர்: இலங்கையின் மட்டக்களப்பில் தமிழர் சாதியும் தாய்க்குடிக் கருத்தியலும்’ எனும் நீண்ட கட்டுரையின்(63 பக்கம்) சுருக்கமான விபரிப்பாக அமைந்திருக்கிறது. மக்ஜில்வ்ரேயின் ‘மோதலின் உலைக்களம்’ எனும் நூல் மட்டக்களப்பு ஆய்வு தொடர்பானது. இந்நூலிலுள்ள விடயங்களை ‘இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் தமிழர்களும், முஸ்லிம்களும்’ எனும் அத்தியாயத்தில் அறிமுகம் செய்கிறாhர்; க.சண்முகலிங்கம்;. மற்றும் மக்ஜில்வ்ரேயின் இந்நூலை மிகச்சிறந்த ஒரு நூலாகவும் க.சண்முகலிங்கம்; குறிப்பிட்டுமிள்ளார். ஆயினும் இவை மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை ஆராயும் நூல்கள் அல்ல. மானிடவியல் சார்ந்த ஆய்வுகளாகும். மட்டக்களப்பின் குறித்த காலப்பகுதிக்குரிய சமூக அமைப்பை முக்கியமாக சாதியை மையமாகக் கொண்ட ஆய்வுகளாகும்.

இவை தவிர சிவராம் குறிப்பிடுகிற ஆவணங்கள், அமெரிக்கரான மார்க் விட்டர் மண்டூர் கோயிலை மையமாக வைத்து மேற்கொண்ட ஆய்வு, இலங்கையிலிருந்து பிரான்சிஸ்கன் பாதிரிமார் எழுதிய கடிதங்களில் உள்ள 1539 இலிருந்து 1542 வரையில் பிதா சைமாவே கொய்ம்ப்ரா அவர்களால் எழுதப்பட்ட கடிதங்கள், டிக்கிரி அபயசிங்க மொழிபெயர்த்து வெளியிட்ட போhத்துக்கீஸ் ரெஜிமென்டோஸ், மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த ஒல்லாந்த அதிகாரி பிட்டர் டீ கிறாவ் என்பவருடைய 8.4.1676 திகதியிடப்பட்ட ஆண்டறிக்கை, ஜோஹான்ஸ் பிறாங் எனும் மட்டக்களப்புக்குப் பொறுப்பான அதிகாரியின் சுற்றுப்பயணக் குறிப்பு(1767), ஒல்லாந்தர்கள் வெளியிட்ட பிரகடனம்(1789-இது தமிழிலும் மட்டக்களப்பில் ஒட்டப்பட்டது),ஜேகப் பேணான்ட் என்பவரின் அறிக்கை(1794) போன்றவைகள் த.சிவராமால் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பற்றிய ஆய்வுகள்; இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

டெனிஸ் பி.மக்ஜில்வ்ரே தனது கட்டுரையில் மட்டக்களப்பு பற்றிய மானிடவியல் குறிப்புக்களைத் தந்தவர் யல்மன் எனவும், அவரது ‘ருனெச வாந டீழ வுசநந'(1967) எ;னும் நூலின் அத்தியாயம் 14-15 இல் இக்குறிப்புக்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

காலத்திற்கு காலம் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கிற போதும் மட்டக்களப்பு வரலாறு பற்றிய தெளிவு இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. மேலாக ‘மட்டக்களப்பு மான்மியம்’ ஏற்படுத்திய தவறான செல்வாக்கு மட்டக்களப்பு வரலாற்றைக் கண்டறிவதில் பெரும் தடையாகவே இருந்து வருகிறது.

மட்டக்களப்பு வரலாற்றை எழுதும் இப்பல்வேறு முயற்சிகளின் பயனாக, மட்டக்களப்பிற்கு ஒரு தொன்மை வரலாறு உண்டு என்ற நிலைப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியமான விடயமாகும். அதே போல மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இலங்கை வரலாற்று நூல்கள் தரும் செய்திகளும் அதனை உறுதிப்படுத்தக்கூடிய தொல்பொருள் சான்றுகளும் பெரும் பயனுடயன என்ற கருத்தாக்கமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப முயற்சிகளை பல அய்வாளர்கள் மேற்கொண்டிருப்பதுடன் அதனை தன்னடக்கத்தடனும் பொறுப்பணர்வுடனும் கூறியும் இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும்.

Exit mobile version