“எனவே, சிங்கள வரலாற்று நூல்களில் கிழக்குப் பிரதேசம் பற்றிக் கூறப்படும் செய்திகளை அறிவதுவும், புராதான தொல்பொருள் சான்றுகள் குறித்த தேடலை மேற்கொள்வதுவும் இவ்விடயம் குறித்து அறிந்து கொள்வதற்கு அவசியமாகும்” எனக்குறிப்பிட்டிருந்தேன்.
அவ்வகையில் மட்டக்களப்பின் பூர்விக வரலாறு தொடர்பாக, இலங்கையின் வரலாற்று ஆவணங்களில் காணப்படும் தகவல்களைப் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கையின் மிகப் பணடயை வரலாற்று ஆவணங்களாக தொல்லியல் சான்றுகள், பிராமிச் சாசனங்கள், இலக்கியச் சான்றுகள் விளங்குகின்றன. ஆயினும் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு, இலக்கியச் சான்றுகளிலேயே அதிகம் தங்கியுள்ளது.
இலங்கையின் தொல்லியல் சான்றுகள் தரும் தகவல்கள்.
சேனக்க பண்டாரநாயக்கா அவர்கள், “மனிதக் குடியிருப்புப் பற்றிய நீண்டதொரு வராலற்றைக் கொண்ட இலங்கையின் இத்தகைய மக்கள் குடியமருகையின் சிக்கலான செயன்முறையைக் கவனத்திற் கொண்டு நோக்கும் போது, இலங்கை மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் ஆதி வரலாற்றுக் காலத்திலும் இன்று போல் பல்லின இயல்பினராயிருந்தனெர நம்ப இடமுண்டு…” எனக்குறிப்பிடுகிறார். அவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சான்றாதாரங்களைப் பற்றி விபரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடுகிறார். இங்கு கவனத்திற்குரிய விடயம், சேனக்க பண்டாரநாயக்கா இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆதி வரலாற்றுக் காலம் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பதே. இது கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். அக்காலத்தில் பல்லியல்பினரான மக்களே இலங்கையில் வாழ்ந்துள்ளார்கள் என்பது அவருடைய கருத்து.
ஆதிகாலத்தில் இலங்கையில் வாழ்ந்த இப்பல்லியல்பினரான மக்களில், மட்டக்களப்பில் பூர்விக காலத்தில் வாழ்ந்த மக்கள் பற்றி அறிந்து கொள்ள முடியுமா என்பதுவே நம்முன்னுள்ள வினாவாகும்.
மட்டக்களப்பின் பூர்விக வரலாறு மட்டுமல்லாது, தமிழ் மக்களின் வரலாறு தொடர்பில் காணக்கூடிய சிக்கலை “…இலங்கைத் தமிழ் மக்களின் வரலாறு சிங்கள மக்களுடைய வரலாற்றைப் போல எளிதான ஒரு தனிச்செயன்முறை அன்று..” என அவர் குறிப்பிட்டுள்ளதன் மூலம் உணரமுடிகிறது. இவ்விடயமே அதாவது “ஒரு தனிச்செயன்முறை அற்ற தமிழ் மக்கள் வரலாறு” மட்டக்களப்பு பூர்விக வரலாற்றை கண்டறிவதிலுள்ள பிரச்சினையாகவும் அமைந்துள்ளது.
எனினும் இவ்விடயம் குறித்த ஆய்வினைத் தூண்டுவதற்குப் போதுமானளவு சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் ஆதி வரலாற்றுக்காலம், பெருங்கற்காலப் பண்பாடு எச்சங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. ஆதி வரலாற்றுக் காலத்திற்குரிய பெருங்கற்காலப் பண்பாடு எச்சங்கள் (ஈமச்சின்னங்கள்;) மட்டக்களப்பில் கதிரவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது முக்கியமானதொரு தகவலாகும். இத்தகவல் கிழக்கில் – மட்டக்களப்பில் நீண்டாலமகவே தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்துக்கு வலவூட்டவதாக அமைந்துள்ளது.
இப் பெருங்கற்காலப் பண்பாடு எச்சங்கள் (ஈமச்சின்னங்கள்;) இலங்கையில் உலர்வலயப் பகுதிக்குரிய செம்பழுப்பு மண் பகுதிகளில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தென்னிந்திய ஆதிச்ச நல்லூர், அரிக்கமேடு போன்ற இடங்களிலும் இத்தகைய எச்சங்கள் (ஈமச்சின்னங்கள்;) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செனரத்ன அவர்கள், “இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் பொதுவான இப் பெருங்கற்காலப் பண்பாட்டின் குணாதிசயங்கள் நன்கு பிரபல்யமானவையாகும். ஒருவகையில் வதிவிடங்களின் தன்மையைப் பொறுத்த மட்டில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகிறது: சவ அடக்க முறையும் ஈமச்சின்னங்கள், கற்கவியல்கள், கற்சதுக்கம், ஈமத்தாழிகள் என்பன அடங்குகின்றன” எனக்குறிப்பிடுகிறார். குணராசா அவர்கள் கதிரவெளி ஈமச்சின்னங்கள் பற்றிக் குறிப்பிடவிட்டாலும் ஏனைய இடங்களில் கண்டடெடுக்கப்பட்ட ஈமத்தாழிகள் பற்றி, “… ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திராவிட மக்களது கலாசாரம் என்பது நிருபணமாகிவிட்டது” எனக்குறிப்பிடுகிறார். ஆயினும் இதன் காலம் இன்னும் பழமையானது. கதிரவெளி ஈமச்சின்னங்கள் குறித்து தனியாக ஆராய வேண்டும்.
குணவர்த்தன அவர்கள், மிகப்பழைய வரலாற்று ஆவணங்களான பிராமிச் சாசனங்கள் பற்றிய ஆய்வில், “சில சாசனங்கள் கபோஜா, மிலாக, தமடே போன்றவற்றின் குழுத்தனித்துவத்தைக் குறிக்கின்றன. கபோஜா, மிலாக என்பவை குழுநிலைச் சமூகம் போல காணப்படுகின்றன. தமடே திராவிடருக்குச் சமமானது எனப் பரணவிதான குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும் தமடே தமிழுக்குச் சமமானதாக அதிகம் காணப்படுகிறது.” (பக்63) எனக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் மட்டக்களப்பின் பூர்விக வரலாறு பற்றி ஏதும் அறிய முடியாத போதிலும் இலங்கையில் மிக நீண்ட காலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை அறிய முடிகிறது.
சேனக்க பண்டாரநாயக்கா அவர்கள், “இவர்கள்(தமிழர்கள்) ஆரம்ப வரலாற்றுக் காலத்திலிருந்து, நம்பகரமாக ஆதிவரலாற்றுக் காலத்திலிருந்து யாதாயினும் ஒரு வகையில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். மிக ஆரம்பகாலம் முதல் தமிழினத் தனித்துவச் சிறப்பியல்புடைய மக்கள் இங்கு வாழ்ந்து வந்தமைக்கு பிராமிக் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன.”(பக்.20) எனவும் குறிப்பிடுகிறார். அவர், இக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை தென்னிந்தியவுடன் தொடர்புபட்டவர்களாக நோக்குகிறார்.
ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் செவ்வியொன்றில், (பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 27 மார்ச் 2012) “இலங்கையின் தெற்கில் திஸ்ஸமகாரகமவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நாணயங்கள் 2200 ஆண்டு பழமையானது எனவும், இவை தமிழ் வணிகர்களின் நாணயங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகவல்கள் யாவும், இலங்கையல், ஆதி வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதனையும், இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் அக்கலாத்தில் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதனையும் உறுதி செய்கின்றன. ஆனால், இதுவரைக்கும் இவ்விடயம் குறித்துப் போதுமானளவு சான்றாதாரங்கைளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது உண்மையே.
இவ்வகையில் மட்டக்களப்பிலுள்ள புராதான தொல்லியல் சான்றுகள் குறித்து ஆரம்பநிலைப் பணிகளையாவது மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இன்று மட்டக்களப்பிலுள்ள புராதான தொல்லியல் சான்றுகள் புதைபொருள்களாகக் கருதப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன எனவும், அவற்றின் முக்கியத்துவம் உணரப்படாத நிலையில் அவை சிதைக்கப்பட்டு வருகின்றன எனவும் அறிய முடிகிறது.
இனி, இலங்கையின் வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ள, மட்டக்களப்பின் பூர்வீக வரலாறு பற்றிய தகவல்கள் குறித்து நோக்கலாம். இலங்கையின் பண்டைய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்ற விடயங்கள் முக்கியத்துவமுடையதாக இருக்கின்றன.
குணவர்த்தன அவர்கள், “ஐதீகத்தின்படி சிகளரின் ஆரம்பக் குடியேற்றங்கள் கதம்ப ஆறு(மல்வத்து ஓயா), கம்பீர ஆறு(கணதர?) ஆகியவற்றின் கரைகளிலும் அவற்றைச் சார்ந்த பகுதிகளிலும் அமைந்திருந்தன என்பதால் ஆரம்பத்தில் தானும் சிங்கள உணர்வு பிரதேசப்பண்பு கொண்டிருந்தது எனலாம். இலங்கையின் கிழக்கு, தென்கிழக்குப் பிரதேசங்களில் இருந்த குடியிருப்பக்களின் வேறுபட்ட மூலத்தை வரண்முறை ஏடுகள்; குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது (மகாவம்சம்சம் 9:7 – 11)” (பக்77)எனக்குறிப்பிடுகிறார். இலங்கையின் கிழக்கிலும் தென்கிழக்கிலும் நீண்ட காலமாக “சிகளர் (சிங்களவர்); அல்லாதவர்கள்” வாழ்ந்து வந்துள்ளார்கள் எனக் குறிப்பிடுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இலங்கை வரலாற்று நூல்களில் பிரபலயமான மகாவம்சம், துஸ்டகாமினியின் வெற்றி எனும் 25 ம் அத்தியாயத்தில்,
7.மஹியங்கானவுக்கு வந்து சேர்ந்த அவன் (துட்ட காமினி கி.மு 101-77) சத்தன் என்ற தமிழனை வெற்றி கொண்டான். அதே இடத்தில் அவனைக் கொன்று விட்டு அம்ப திட்டகத்துக்கு வந்தான்.
எனும் செய்யுள் கவனத்திற்குரியதாக அமைகிறது. அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தமிழன் எலராவுடன் போர் புரிவதற்காகச் சென்ற துட்ட காமினி வெற்றி கொண்ட தமிழன் பற்றிய செய்தியை இச்செய்யுள் கூறுகிறது. தொடர்ந்து வரும் செய்யுள்கள், கங்கையின் இக்கரையில் இருந்த மஹியங்கனாவில் தமிழர்கள் பலர் பலமுடன் வாழ்ந்த செய்திகைளை விபரிக்கிறது. துட்டகாமினி காலத்தில் (கி,மு. 100 ஆம் ஆண்டளவில்) தமிழர்கள் வாழ்ந்த இம் மஹ்யங்கானவே, மகாவம்சத்தில் முதல் புத்தர் வருகையின் போது (கி,மு 500 ஆம் ஆண்டளவில்) பெருமளவு இயக்கர்கள் ஒன்று கூடும் இடமாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்று நூல்களில்; கூறப்பட்டுள்ள முதல் வரலாற்றுச் செய்தி இதுவாகும். முகாவம்சத்தில் காட்டப்பட்டுள்ள இலங்கையின் பூர்விக மக்கள் இவர்களே. எனவே, விஜயன் வழியில் நிகழ்ந்த ஆரியக் குடியேற்றங்களுக்கும், பௌத்த மதத்தின் வருகைக்கும், சிங்கள மொழியின் தோற்றத்திற்கும் முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள் பற்றிய “பழமைப் பதிவுகளாக” இத்தகவலைக் கருதலாம்.
இவ்விடயங்கள், மட்டக்களப்பின் பூர்விக வரலற்றை புதியதொரு தடத்தில் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தினை உணர்த்துகிறது.
இலங்கை வரலாற்று நூல்கள் பற்றியும் அந்நூல்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பற்றியும் ஆராய்வது விரிவானதொரு பகுதியாக அமைய வேண்டியிருக்கிறது. எனவே அவ்விடயத்தினை இக்கட்டுரையின் இரண்டாம் பாகமாக ஆக்கவேண்டியேற்பட்டுள்ளது.
முன்னைய பதிவுகள் :
மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும். பகுதி – 2 : விஜய்
மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை : விஜய் மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய் மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய் மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்