மக்கள் போரட்டம் தொடர்பான விவாதங்கள் ஊடாகக் கருத்தை உருவாக்கும் முயற்சியின் முதல் பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மக்கள் யுத்தத்தை முன்னெடுத்தல்… என்ற கட்டுரை இனியொருவில் வெளியானது. அது குறித்த விவாதத்தின் முதலாவது பகுதியை வேல் தர்மா ஆரம்பித்துள்ளார். அவரின் ஆக்கம் கீழே பதியப்படுகிறது.
மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல்
சமூகவலைத்தளங்களில் நஞ்சூட்டிகள்
எகிப்திய மக்கள் போல் இலங்கையில் வாழும் மக்கள் சமூகவலைத்தளங்களூடாக தமது எழுச்சியை ஏற்படுத்த முடியாத அளவிற்கு அடக்கு முறை ஆட்சியாளர்களின் கைக்கூலிகள் சமூக வலைத்தளங்களில் ஊடுருவி இருக்கின்றார்கள். ஏகாதிபத்தியப் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களின் வலுவை உணர்ந்து அவற்றில் இணைந்து தமது கருத்துப் பரவலாக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நோர்வேயின் எரிக் சொல்ஹேய்ம் டுவிட்டரில் புலம் பெயர் தமிழர்கள் மீதும் அவர்களுடன் இணைந்து செயற்படும் ஊடகங்கள் மீதும் சேறு வீசும் அளவிற்கு நிலைமை வளர்ந்துள்ளது.
இன ஒற்றுமை சீரடையும் அறிகுறி இல்லை
சிங்கள – தமிழ் உழைக்கும் வர்க்கங்களிடையேயான தொடர்பாடல் இந்த மிகைப்பு தொடர்பாடல் (hyper communication) காலத்தில் கூட அவர்களின் மீட்சிக்கு உகந்ததாக இல்லை. சிங்கள – தமிழ் மத்தியதர வர்க்கத்தினரிடையான தொடர்பாடல் அறுபதுகளில் இருந்த அளவில் நூற்றில் ஒரு பங்கு கூட இன்று இல்லை. இலங்கையில் இன ஒற்றுமை ஒரு விடுதலையை நோக்கிச் சீரடையும் நிலை இல்லவே இல்லை. யாரும் அதை முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை.
அடக்குமுறையின் அனுபவத்தின் உச்சக் கட்டம்
இந்த நூற்றாண்டின் மோசமான அடக்கு முறை ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனையில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் சூழல் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. தோல்வியின் அச்சத்தில் இருந்து அவர்கள் எவ்வளவு தூரம் மீண்டுள்ளார்கள் என்பது அளவிட முடியாத ஒன்றாக இருக்கின்றது. அவர்கள் ஒரு புதிய முறையில் தமது எதிர்ப்பை காட்டவேண்டிய அவசியம் உண்டு. அந்த புதிய முறை என்ன என்பதை நிலத்தில் இருக்கும் மக்களில் ஒருவன் கண்டு பிடிக்கும் போது புதிய தலைமை உருவாகலாம். இலங்கைப் படைக்கும் உளவுத் துறைக்கும் கிளர்ச்சிகளை அடக்கும் நீண்ட கால அனுபவம் உண்டு. உலகிலேயே வலுமிக்க ஒரு போராட்டத்தைதாம் அடக்கினோம் என்ற தன்னம்பிக்கையே இப்போது அவர்களின் வலுமிக்க படைக்கலனாகும். அடக்குமுறைபற்றி உலகிற்கே பாடம் போதிக்கும் திறன் தமக்கு உண்டு என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கிளர்ச்சி என்று ஒன்று தொடங்க முன்னரே அவர்களிடை பிளவுகள் எளிதாக உருவாக்கக் கூடியதாக இருக்கின்றது. இது லிபியா முதல் உக்ரேயின் வரை ஒரு வெளிப்படையான நிகழ்வாக இருக்கின்றது.
திசைதிருப்பும் ஜெனிவாத் தீர்மானங்கள்
ஒரு பிரச்சனை ஒட்டிய கிளர்ச்சியோ அல்லது படைக்கலன் ஏந்திய போராட்டமோ படைக்கலன்களால் அடக்கப்பட்ட பின்னர் அப்பிரச்சனை ஐந்து ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படாவிட்டால் அந்தக் கிளர்ச்சி அல்லது படைக்கலன் ஏந்திய போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்ற தத்துதவத்தின் மீதான நம்பிக்கை இலங்கையில் சிதறடிக்கப்படுமா? இலங்கையில் இரு பெரும் போர் வெடிக்கும் ஆபத்தை ஜெனிவா திசை திருப்புகிறது. ஜெனிவாவில் அமெரிக்கா ஏதோ நீதியை நிலைநிறுத்தப் போகிறது என்ற மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் போது வெளியில் இருந்து எமக்கு தீர்வு வராது என்ற உண்மையை மக்கள் உணரும் போது ஒரு மக்கள் போராட்ட முன்னெடுப்புக்கு உரிய தலைமை இயல்பாகவே உருவாகும்.