கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அவை அனைத்தையும் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிடுகிறது அரசு. இந்தியாவில் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளிலும்கூட இதுதான் நடக்கிறது. ஏற்கெனவே பெற்றிருந்த சலுகைகளை இழந்து, வாழ்க்கைத் தரத்தில் மென்மேலும் கீழே தள்ளப்படும் மக்கள் இந்நாடுகளிலெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று மக்கள் நலத்திட்டங்களை மறுக்கின்ற அமெரிக்க ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர் என்பதை விளக்குகிறார் அமெரிக்க இடது சாரி சிந்தனையாளரான ஜேம்ஸ் பெட்ராஸ்.
‘ஸ்டாலினிய எதிர்ப்பு’ பேசிய மேற்குலக அறிவுத்துறையினர் முதலாளித்துவத்தின் கைக்கருவிகளாகச் செயல்பட்டு, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும், முதலாளித்துவத்தின் கொடூர ஆட்சி அரங்கேறுவதற்குமே துணை நின்றிருக்கின்றனர் என்று சாடுகிறார். அவரது கட்டுரையின் சாரத்தை மட்டும் இங்கே தொகுத்து தருகிறோம். முழு கட்டுரையின் ஆங்கில வடிவம் அவரது இணைய தளத்தில் கிடைக்கிறது.
[The Western Welfare State: Its Rise and Demise and the Soviet Blochttp:// petras. lahaine. org/?p=1902]
முதலாளித்துவம் பக்குவமடைந்து மென்மேலும் முன்னேறும்போது, உயர் தொழில்நுட்பங்களும் முன்னேறிய சேவைகளும் வளரும்போது, மக்கள் நலனும் அவர்களது வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று மரபுவழிப்பட்ட முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவார்கள். நாம் தற்போது காண்கின்ற மக்கள் நல அரசின் அழிவு, அவர்களது கருத்தைத் தகர்த்து விட்டது. கணக்கு வைத்துக் கொள்வது, உற்பத்தி மற்றும் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, அதிகபட்ச இலாபத்தைத் தேடிப்பாயும் ஊக வணிகத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கும், சமூகநலத் திட்டங்களுக்கான செலவுகளை இரக்கமின்றி வெட்டுவதற்கும்தான் பொருளாதாரத்தின் கணினிமயமாக்கம் என்ற தொழில்நுட்ப முன்னேற்றம் பயன்பட்டிருக்கிறது.
பின்னோக்கிய பாய்ச்சல் துவங்கியது எப்படி?
‘மக்கள்நல அரசு’ என்ற கருத்தாக்கத்தின் மரணம், மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றுக்கான பின்புலத்தைப் புரிந்து கொள்ள நாம் இரண்டு கோணங்களில் ஆராய வேண்டியிருக்கிறது. முதலாவது, சர்வதேச நிலைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் பற்றியது ஒருபுறம் கிழக்கத்திய முகாமின் மக்கள்நல அரசுகள், இன்னொருபுறம் ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகள் மற்றும் அமெரிக்கா என்ற இரட்டைத் துருவப் போட்டி நிலையிலிருந்து, தமக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் முதலாளித்துவ நாடுகள் செலுத்துகின்ற ஏகபோக ஆதிக்கத்திற்கு வந்திருக்கிறோம்.
இரண்டாவதாக நாம் பரிசீலிக்க வேண்டிய விசயம், முதலாளித்துவ நாடுகளுக்குள்ளேயே நிலவும் சமூக உறவுகள் பற்றியது. தீவிர வர்க்கப்போராட்டம் என்பதிலிருந்து நீண்டகால நோக்கிலான வர்க்க சமரசம் என்பது அங்கே மூலதனத்துக்கும் உழைப்புக்குமான உறவைத் தீர்மானிப்பதாக ஆகியிருப்பது. இவ்விரண்டு போக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
மேற்கத்திய மக்கள்நல அரசின் தோற்றமும் வளர்ச்சியும்:
நாஜி ஜெர்மனியின் தோல்வியையும் முதலாளித்துவ பாசிச ஆட்சிகளின் தோல்வியையும் தொடர்ந்து, சோவியத் யூனியனும் அதன் கிழக்கு ஐரோப்பிய கூட்டாளி நாடுகளும் பிரம்மாண்டமான மறுகட்டுமானப் பணிகளில் இறங்கின. சமூகப் பொருளாதார நலனை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களே இந்த மறுகட்டுமானப் பணிகளின் அடிப்படையாக இருந்தன. இதைப் பார்க்கின்ற மேற்கு நாடுகளின் தொழிலாளி வர்க்கம், சோவியத் முன்மாதிரியைப் பின்பற்ற (புரட்சி – மொர்) விரும்பக் கூடும் அல்லது குறைந்தபட்சம் தனது நாட்டில் முதலாளித்துவம் மீண்டு எழுவதைத் தடுக்கின்ற கட்சிகளையும், அத்தகைய நடவடிக்கைகளையும் ஆதரிக்கக்கூடும் என்று மேற்குலக முதலாளித்துவ அரசுகள் பெரிதும் அஞ்சின.
மேற்குலக முதலாளி வர்க்கம் நாஜிகளுடன் வைத்திருந்த கூட்டின் காரணமாகவும், பாசிசத் தன்மை கொண்ட முதலாளித்துவத்திற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு பெயரளவினதாகவும், மிகவும் தாமதமாக காட்டிய எதிர்ப்பாகவும் இருந்த காரணத்தினால், மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் அரசியல் ரீதியில் மக்கள் மத்தியில் மதிப்பிழந்திருந்தன. இதன் காரணமாக மக்கள் மீது அவர்களால் அடக்குமுறைகளை ஏவமுடியவில்லை.
எனவே, சோவியத்தின் கூட்டுத்துவ மக்கள் நலச் சீர்திருத்தங்களை எதிர்கொள்வதற்கு அவர்கள் ஒரு உத்தியைக் கையாண்டார்கள். உள்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் தீவிர இடதுசாரிகளை மட்டும் ஒடுக்குவது; மக்கள்நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் விசுவாசத்தை விலைக்கு வாங்குவது. இதுதான் அவர்கள் வகுத்த தந்திரம்.
அனைவருக்கும் வேலை, வேலை உத்திரவாதம், அனைவருக்கும் மருத்துவம், இலவச உயர்கல்வி, சம்பளத்துடன் கூடிய ஒரு மாதச் சுற்றுலா விடுப்பு, முழுச் சம்பள ஓய்வூதியம், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச ஓய்வு விடுதிகள், பெண்களுக்கு நீண்ட பேறு கால விடுப்பு என சோவியத் முகாமின் அரசுகள், தனிநபர் நுகர்வைக் காட்டிலும் சமூகநலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.
இதனால் சோவியத் முகாமின் மக்கள்நல நடவடிக்கைகளைத் தானும் அமல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முதலாளித்துவ மேற்குலம் ஆளாக்கப்பட்டது. அதேநேரத்தில், முன்னேறிய தனது பொருளாதாரத்தின் வலிமையைக் கொண்டு, குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தும் தவணை முறைகள் மூலமும் தனிநபர் நுகர்வுப் பண்பாட்டை விரிவுபடுத்தியது.
1940களின் மத்தியிலிருந்து 1970களின் நடுப்பகுதி வரையிலான காலத்தில் மேற்குலகம் இரண்டு இலக்குகளைக் குறிவைத்து சோவியத் முகாமுடன் போட்டியிட்டது. உள்நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் விசுவாசத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற அதேநேரத்தில், அதன் போர்க்குணமிக்க பிரிவைத் தனிமைப்படுத்துவது; சோவியத்தைப் போன்ற மக்கள்நலத் திட்டங்கள் மட்டுமின்றி, மேலதிகமான தனிநபர் நுகர்வுக்கும் மேற்குலகில் வாய்ப்புண்டு என்று ஆசை காட்டி, கிழக்குலகின் (சோவியத் முகாம்) தொழிலாளி வர்க்கத்தைக் கவர்ந்திழுப்பது இவையே அந்த இரு இலக்குகள்.
இந்தப்புறம் கூட்டுத்துவம் (ரசிய,கிழக்கு ஐரோப்பிய நாடுகள்), அந்தப்புறம் முதலாளித்துவம் (அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள்) என்று இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே நிலவிய போட்டியின் காரணமாக, மக்கள்நலத் திட்டங்களைத் திரும்பப் பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லாமலிருந்தது. இருப்பினும், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் தோல்வியடைந்தன. மக்கள் நலத் திட்டங்கள் அதிகரிக்காமல் தேங்குவதற்கு இது காரணமானது.
மிகவும் முக்கியமாக மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் (போலி சோசலிச நாடுகள் – மொர்) சரி, ஆளும் வர்க்கங்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு ஒரு தேக்கநிலை அல்லது முட்டுச்சந்தை எட்டிவிட்டது. பொருளாதாரத் தேக்கம் வந்தது. தொழிற்சங்கங்கள் அதிகாரவர்க்கமயமாகியிருந்தன. மக்கள்நல அரசு என்ற கருத்தாக்கத்தையே நிர்மூலமாக்கவும், கூட்டுத்துவ (போலி சோசலிச) முகாமுக்குச் சவால் விடவும் ஆற்றல் படைத்த ஒரு புதிய அரசியல் தலைமை வேண்டுமென்ற கோரிக்கையை முதலாளித்துவ வர்க்கங்கள் எழுப்பத் தொடங்கின.
பின்னோக்கிய பயணம்: ரீகன், தாட்சர் முதல் கோர்ப்பசேவ் வரை:
கூட்டுத்துவ முகாமின் (போலி சோசலிச நாடுகள் – மொர்) மக்களை ஒரு மிகப்பெரிய மாயை பற்றியிருந்தது. தாங்கள் நீண்டகாலமாக அனுபவித்து வருகின்ற, அசைக்க முடியாத, மக்கள்நலத் திட்டங்களுடன், மேற்குலகம் ஆசைகாட்டுகின்ற மாபெரும் நுகர்வியத்தையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்பத் தொடங்கினார்கள். ஆனால், மேற்குலகிலிருந்து வந்த அரசியல் சமிக்ஞைகளோ இந்த நம்பிக்கைக்கு எதிர்த்திசையில் நகர்ந்து கொண்டிருந்தன.
அமெரிக்காவில் ரீகனும், பிரிட்டனில் தாட்சரும் அதிகாரத்துக்கு வந்துவிடவே, சமூக இயக்கத்தின் திசையைத் தீர்மானிக்கும் சுக்கான் முதலாளி வர்க்கத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. தொழிற்சங்கங்களின் போர்க்குணம் ஒடுக்கப்பட்டது. ஆயுதப் போட்டியில் சோவியத் யூனியனை இழுத்து விட்டு, அதனைத் திவாலாக்கும் திட்டம் தொடங்கியது.
அதேநேரத்தில் கிழக்குலகிலேயே மேல்தட்டு வர்க்கமாக வளர்ந்து கொண்டிருந்தவர்கள், படித்த மேன்மக்கள், அதிகாரவர்க்கப் பெருச்சாளிகள், புதிய தாராளவாதிகள், மொத்தத்தில் மேற்கத்திய விழுமியங்களைப் போற்றிய பிரிவினர் அனைவரும் மக்கள்நலத் திட்டங்களைத் தூற்றத் தொடங்கினார்கள். இவர்களுக்குத் தேவையான அரசியல், பொருளாதார ரீதியிலான ஆதரவை மேற்கத்திய உளவு நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், வாடிகனும் வழங்கினர். இதற்குத் தேவைப்பட்ட ஒரு சித்தாந்த ரீதியான மேற்பூச்சினை, ‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ என்று தம்மை அழைத்துக் கொண்ட நபர்கள் மேற்குலகில் வழங்கினர்.
சோவியத் முகாமின் மக்கள்நலத் திட்டங்கள் அனைத்தும் மேலிருந்து அமல்படுத்தப்பட்டவை. அவற்றின் மீது அதே நாட்டைச் சேர்ந்த அதிகாரவர்க்கப் பெருச்சாளிகள், கொள்ளையர்கள், பாதிரிகள், புதிய தாராளவாதிகள் அடங்கிய ‘ஸ்டாலினிய எதிர்ப்பு முகாம்’ தாக்குதல் தொடுத்தபோது, தம் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் அரசியல் பார்வையும், வர்க்க உணர்வும், வல்லமையும் கொண்ட போர்க்குணமிக்க வர்க்க அமைப்புகள் எதுவும் அந்நாடுகளில் இல்லை.
அதேபோல, மேற்குலகின் சமூகநலத் திட்டங்கள் எல்லாம், ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியுடன் அரசியல் ரீதியில் பிணைக்கப்பட்டிருந்தன. இக்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கத் தலைமைகளுக்கு வர்க்க உணர்வோ, வர்க்கப் போராட்டத்தில் ஈடுபாடோ கிடையாது. அவை சந்தா வசூலித்துத் தின்னும் அதிகார வர்க்கத் தலைமைகளாகவே இருந்தன.
சோவியத் ஒன்றியம் உடைந்தது. கோர்ப்பசேவ் வார்சா ஒப்பந்த நாடுகளை நேட்டோவின் கையில் ஒப்படைத்தார். இந்நாடுகளிலிருந்த கம்யூனிஸ்டு அதிகாரவர்க்கம் புதிய தாராளவாதிகளாகவும், மேற்குலக கையாட்களாகவும் புதுப்பிறவி எடுத்து, பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கியதுடன் தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்தது. போலந்தின் சாலிடாரிட்டி இயக்கத்துக்குப் பின்பலமாக இருந்த கப்பல்கட்டும் துறைத் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். மேற்கத்திய உளவுத்துறையின் சன்மானங்களால் உருவாக்கப்பட்ட அவர்களது தலைவர்கள் (லெக் வாலேசா போன்றோர்) வசதியான அரசியல்வாதிகளாயினர், முதலாளிகளாயினர்.
‘ஸ்டாலினிசத்தை ஒப்பிடும்போது வேறு எதுவானாலும் தேவலாம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, ‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ எனப்படுவோர் (சமூக ஜனநாயகவாதிகள், டிராட்ஸ்கியவாதிகள் மற்றும் இவர்களுக்கு இடைப்பட்ட பல்வேறு அறிவுத்துறை நீரோட்டங்களைச் சேர்ந்தவர்கள்) கூட்டுத்துவ அமைப்புகளை ஒழித்துக் கட்டியது மட்டுமின்றி, கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியக்காரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்த மக்கள்நலக் கட்டமைப்பையும் ஒழித்துக் கட்டியதன் மூலம் முதலாளி வர்க்கத்துக்கு இணையற்ற முறையில் சேவை செய்திருக்கின்றனர்.
கூட்டுத்துவ மக்கள் நல அமைப்புகள் ஒழிக்கப்பட்டு விட்டதனால், அவற்றோடு ஈடுகொடுத்து மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் மேற்கத்திய முதலாளி வர்க்கத்துக்கு இல்லாமல் போய்விட்டது. எனவே, மாபெரும் பின்னோக்கிய பாய்ச்சல் முழு வேகத்தில் தொடங்கிவிட்டது.
அடுத்த இரண்டு பத்தாண்டுகளில், லிபரல்கள், பழமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் என்று மேற்குலகில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொருவரும் தம் பங்குங்கு மக்கள்நலச் சட்டங்களை வெட்டிக் குறைத்திருக்கிறார்கள். பென்சன் குறைக்கப்பட்டது, ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுச் சாகும் வரை உழைக்க வேண்டுமென்பது கொள்கையாகிறது, வேலை நிரந்தரம் காணாமல் போய்விட்டது, தொழிலாளியை வேலைநீக்கம் செய்வது எளிதாக்கப்பட்டிருக்கிறது, முன்னாள் கூட்டுத்துவ நாடுகளில் குவிந்திருக்கும் திறன் வாய்ந்த உழைப்பாளிகளை குறைந்த கூலிக்குச் சுரண்டுவது சாத்தியமாகியிருக்கிறது.
‘ஸ்டாலினிய எதிர்ப்பில்’ ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு உலகங்களின் தீமைகளும் கிட்டியிருக்கின்றன. அவர்கள் தமது கிழக்குலகின் மக்கள்நலத் திட்டப் பாதுகாப்பை இழந்தார்கள். மேற்குலகின் தனிநபர் நுகர்வு மற்றும் வளத்தையும் அவர்கள் பெறவில்லை.
ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள் என்று கூறப்படும் அறிவுத்துறைப் பேடிகள் படையினரோ, தத்தம் பல்கலைக்கழகங்களில் சொகுசாக அமர்ந்துகொண்டு, புதிய தாராளவாதத்தின் தாக்குதலுக்கு எதிராக, தொண்டை கட்டும் வரை சவுண்டு விட்டார்கள்; பிறகு, “முதலாளித்துவ எதிர்ப்பு போர்த்தந்திரம் ஒன்றின் தேவை” குறித்துப் பேசினார்கள். தொழிலாளி வர்க்கத்துக்குக் கல்வியளித்து, உணவளித்து, வேலைவாய்ப்பும் அளித்த ஒரு மக்கள்நல அமைப்பை இழிவுபடுத்தி ஒழித்துக் கட்டுவதற்குத் தாங்கள் ஆற்றிய பாத்திரம் பற்றி மட்டும் கடுகளவுகூட அவர்கள் பரிசீலிக்கவில்லை.
ஸ்டாலினின் மறைவுக்குப் பிந்தைய பத்தாண்டுகளில், ஏதேச்சாதிகாரமும் மக்கள் நலனும் இணைந்த ஒரு ஒட்டுரகமாக சோவியத் சமூகம் உருவாகி வளர்ந்தது. இருப்பினும் இந்த அரசுகளை இவர்கள் ‘ஸ்டாலினிஸ்டு‘ அரசுகள் என்றே அழைத்தனர். ஸ்டாலினிசம் ஒழிந்தால்தான் புரட்சிகர ஜனநாயக சோசலிசத்துக்கு மிகப்பெரிய பாதை திறக்கும் என்று வாதிட்டனர்.
உண்மையில் நடந்தது என்ன? மேற்கிலும் கிழக்கிலும் மக்கள் நல அரசு என்பதே ஒழிந்தது. வெறிகொண்ட புதிய தாராளவாத முதலாளித்துவம் ஏற்றம் பெற்றிருக்கிறது. ஒரு புதிய தாராளவாத எதிர்ப்புரட்சியின் உந்து பலகையாக, மக்கள் நலச் செலவினங்கள் அனைத்தையும் வெட்டுவதற்கு, மேற்கத்திய முதலாளிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுடைய துருப்புச் சீட்டாகத்தான் பயன்பட்டிருக்கிறார்கள் இந்த ஸ்டாலினிய எதிர்ப்பாளர்கள்.
‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ கனவு கண்டதைப் போல, ‘ஸ்டாலினிசத்துக்குப் பிந்தைய சோசலிச ஜனநாயகம்’ எங்கேயும் மலரவில்லை. முந்தைய மக்கள் நல அரசைத் தூக்கி எறிந்தவர்கள் கோடீசுவரர்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள்கடத்தல் பேர்வழிகள் ஆகியோர்தான். அவர்களுடைய ஆட்சிதான் மலர்ந்திருக்கிறது.
மக்கள் நல அமைப்பின் அழிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண் தொழிலாளர்கள்தான். வேலை, பேறுகால விடுப்பு, குழந்தைப் பாதுகாப்பு அனைத்தையும் இழந்தார்கள். பொதுமருத்துவம் அழிந்ததால், குழந்தைகள் சாவு அதிகரித்திருக்கிறது. மணமுறிவும் மரண விகிதமும் அதிகரித்திருக்கிறது. தமது சொந்தச் சகோதரிகளை அடிமைகளாக்குவதற்கும் சீரழிப்பதற்கும் தாங்கள் ஆற்றியிருக்கும் பாத்திரம் பற்றி ‘ஸ்டாலின் எதிர்ப்பு பெண்ணியவாதிகளும்’ மூச்சுவிடுவதில்லை.
‘ஸ்டாலினிசத்தைக் காட்டிலும் வேறு எதுவானாலும் பரவாயில்லை’ என்ற அயோக்கியத்தனமான இவர்களது முழக்கத்தால் கிழக்கு ஐரோப்பியத் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் ஒரு தலைமுறையே அழிந்து விட்டது. எத்தனை இலட்சம் பேருக்கு வேலையில்லை; காசநோயும் எயிட்ஸும் எத்தனை இலட்சம் பேருக்கு; டெல் அவிவ், புகாரெஸ்ட், ஹாம்பர்க், பார்சிலோனா, புரூக்லின் விபச்சார விடுதிகளில் உருத்தெரியாமல் சிதைந்திருக்கும் இளம் பெண்கள் எத்தனை பேர் என்று இவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்.
ஸ்டாலினிசத்தின் மீது தாங்கள் பெற்ற வெற்றி குறித்து மேற்கத்திய அறிவுத்துறையினர் இன்னமும் பீற்றிக் கொண்டிருக்க, கிழக்கு ஐரோப்பாவில் இன்று உண்மையாக உயிர்வாழும் தொழிலாளிகளோ, ஓய்வூதியம், பொதுச்சுகாதாரம், வேலை, கல்வி உள்ளிட்ட ‘ஸ்டாலினிய மிச்சசொச்சங்களுக்காகப்’ போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள்நலத் திட்டங்களுக்காக நடைபெறுகின்ற இந்த புதிய வெகுசனப் போராட்டங்கள், முந்தைய கூட்டுத்துவ அமைப்பின் அனுபவங்களைத்தான் நினைவு கூர்கின்றனவேயன்றி, ஸ்டாலினிச எதிர்ப்பு இடதுசாரிகளின் வெற்றுச் சொல்லாடல்களை அல்ல. இவர்கள் காலாவதியானவர்கள்.
ஒரு விசயம் மென்மேலும் தெளிவாகிக் கொண்டே வருகிறது. மக்கள்நலத் திட்டங்கள், தொழிலாளர்நலச் சட்டங்கள், சமூகநலத் திட்டங்கள் என எவையெல்லாம் சோவியத் முகாமின் தோற்றத்தை ஒட்டி கிடைத்தனவோ, அதன் அழிவை ஒட்டி பறிபோயினவோ, அவைதான் இன்றைய தொழிலாளர் போராட்டங்களை மட்டுமின்றி, எதிர்காலப் போராட்டங்களையும் உந்தித் தள்ளும் இலட்சியங்களாகத் திரும்ப வந்திருக்கின்றன.
** (குறிப்பு: இக்கட்டுரையில் ஸ்டாலினுக்குப் பிந்தைய ரசிய, கிழக்கு ஐரோப்பிய அரசுகள் மற்றும் சமூகத்தைக் குறிக்கும் விதமாக “கூட்டுத்துவ அமைப்பு”, “மக்கள் நல அமைப்பு” போன்ற சொற்றொடர்களை பெட்ராஸ் பயன்படுத்தியிருக்கிறார். சோசலிச சமூகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சில போலி சோசலிச சமூகத்திலும் தொடர்ந்திருக்க கூடும் எனினும், இவற்றை அதிகார வர்க்க ஆட்சியென்று அழைப்பதே சரியெனக் கருதுகிறோம்.) *** அஜித். – புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012