Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த எதிர்ப்புப் போராட்டம் – எதிர்விளைவுகள் : சபா நாவலன்

இனப்படுகொலை, போர்க்குற்றம், சிங்கள – பௌத்த மேலாதிக்க ஆணவம், சர்வாதிகாரம், இனச்சுத்திகரிப்பு, பேரினவாதம் அனைத்தையும் ஒருங்கு சேரப் பிரதிநித்துவம் செய்யும் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு வந்திறங்கிய வேளையில் புலம் பெயர் தமிழர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்த தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டனர். உறைய வைக்கும் குளிர்காற்று, பனி மழை, காலநிலையால் ஒழுங்கற்றிருந்த போக்குவரத்து என்ற எதுவுமே மகிந்தவிற்கு எதிரான மக்கள் எழுச்சியைத் தடைசெய்யவில்லை. யார் அழைப்புவிடுத்தார்கள், எங்கு போராட்டம் நடக்கிறது என்ற இன்னொரன்ன விபரங்களை எல்லாம் ஆர்ப்பாட்டங்களுக்கு வந்தவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. மக்கள் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்தார்கள்.

விமான நிலையத்தில் ஆரம்பித்து மகிந்த எங்கெல்லாம் செல்கிறார் என அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

பயன்படுத்தப்பட்ட போராட்டம்

மக்களின் தன்னிச்சையான எழுச்சிக்குப் பின்னணியில் இலங்கை அரச அடக்குமுறை மீதான அவர்களின் தார்மீகக் கோபக்கனல் மட்டும்தான் எரிந்துகொண்டிருந்தது. இதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் கருத்தாடல்கள் குறித்த முக்கிய புள்ளி. மக்கள் எழுச்சியையும், அவர்களின் கோபத்தையும் பிரித்தானியாவில் ஏற்கனவே  சிதைவுபடிருந்த  புலி ஆதரவுச் சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்தி அதனைத் தமது எழுச்சியாக காட்ட முனைந்ததனர்.

தமது வியாபார அரசியலை மறு ஒழுங்கமைப்புச் செய்வதற்கான தந்திரோபயமாகப் புலிக் கொடியோடு வந்திறங்கிய சிலர் அவற்றை வினியோகிக்க ஆரம்பித்தனர்.

தாம் சார்ந்தவர்களைப் புலி கொடிகளோடு ஆர்பாட்டத்தின் முன்னணியில் நிறுத்தினர்.

மக்களின் அழிவைத் தமது வியாபார அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்ட அவமானகரமான ஒரு கூட்டம் இப்போது மக்களின் உணர்வுகளையும் அவர்களின் போராட்டங்களையும்,   தம்மை மறு ஒழுங்கமைப்புச் செய்வதற்காக தமது வியாபார அரசியலை மீள் கட்டமைப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்கிறது.

சிதைந்திருந்த புலியாதரவு அமைப்ப்புக்கள்

புலம் பெயர் நாடுகளில் புலி ஆதரவு அமைப்புகளாகக் கருத்தப்பட்ட   பிரித்தானிய தமிழர் பேரவை  போன்ற  அமைப்புக்கள் பல உட் கூறுகளாகச் சிதைந்திருந்தன.

1. கே.பி யை மையமாகக் கொண்டிருந்த இலங்கை அரச உளவாளிகளின்  வலைப்பின்னல் சார்ந்த கூறுகள்.

2. கே.பி குறித்த மெதுமையான போக்குடைய நாடுகடந்த தமிழீழம் சார்ந்தவர்கள்.

3. நெடியவன் சார்ந்த அல்லது முன்னைய புலிகளின் வழிமுறையை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் புலி சார் அடிப்படை வாதிகள்.

4. ஏற்கனவே மக்கள் பெருந்தொகையான பணத்தைத் தமதாக்கிக் கொண்டு அரசியலிலிருந்து விலகிச் சென்றவர்கள்.

5. கடந்த காலத்தை விமர்சன அடிப்படையில் நோக்குகின்ற  நேர்மைமிக்க தூய    தேசியவாதிகள்.

இக்கூறுகள் அனைத்துமே வன்னியிலிருந்த புலிகளின் தலமையின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்த “கட்டமைப்பு” என்ற அழைக்க்ப்பட்ட பிரிவினரையும், அவர்களின் ஆதரவுக்  குழுவாகச் செயற்பட்ட “அரசியல்” பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்த இரு பிரிவுகளிடையேயும் ஒருவகையான நிர்வாகச் சமரசமும் முரண்பாடுகளும் நிலவிவந்தன.

இந்த ஐந்து கூறுகளிலும் முதல் மூன்று பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பெரும்பாலானோரிடமும் புலம் பெயர் நிதி திரட்டலோடும் அதன் கையாள்கையோடும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகள் இருந்தன. பணம் குறித்த முரண்பாடுகளும் மகிந்த வருகையின் முன்னர் உச்ச நிலையை அடைந்திருந்தன. மாவீரர் தின நிகழ்வில் சேகரிக்கப்படுகின்ற பணத்தைப் பயன்படுத்தும் முறை குறித்தும் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருந்தன.

மகிந்த வருகைக்கு முன்னர் நேர்மைமிக்க தூய  தேசிய வாதப் போக்கைக் கொண்டிருந்தவர்களின் கைகள் ஒங்கியிருந்தன. பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் போக்கு அல்லது அதன் ஆரம்ப நிலை இவர்களிடம் உருவாகியிருந்தது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட புலிகளின் போராட்டதை விமர்சன அடிப்படையில் நோக்கும் மனோபாவம் உருவாகியிருந்தது. இன்னமும் குறுந்தேசிய வாதப் போக்கினையே  கொண்டிருந்த இவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு எதிரான ஏனைய பிரிவினரின் நேரடியான போராட்டங்கள்  பி.ரி.எப் போன்ற புலி சார் அமைப்புக்களில் ஆரம்பித்திருந்தது.

சரியானது தவறானது என்ற விவாதங்களுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான தூய தேசியவாத உணர்வுகொண்ட புலம்பெயர்  தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியினராக இவர்கள் மாற்றமடைந்திருந்தனர். குறுந்தேசிய வாதத்தை எதிர்கொள்ளும் அரசியலின் நுளைவாயிலாக இவர்கள் அமையக்கூடிய நிலை காணப்பட்டது. 

முள்ளிவாய்க்காலின் முன்பு, செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையிலிருந்த இவர்கள் சிறுபான்மையினரே எனினும், தோல்வியின் பின்னர் இவர்களின் ஆளுமை அதிகரித்திருந்தது.

மகிந்த ராஜபக்ச வருகையின் போதான ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்திக்கொண்ட முதல் நான்கு பிரிவினரும், தன்னிச்சையான மக்கள் எழுச்சியை புலிகளின் ஆதரவாளர்களின் எழுச்சியாக திசை திருப்பினர். மக்கள் பற்றற்ற இவர்கள் இதன் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்திப்பவர்கள் அல்ல. தமது ஆதிக்கத்தையும் அதனூடான அரசியல் வியாபார நலன்களையும் நிலை நிறுத்த இவர்கள் புலிக் கொடிக்கும் பின்னிருந்த அரசியலை அக்கொடியினூடாக முன்னிறுத்தினர்.

இவ்வாறு மக்களின் தன்னிழுச்சியை ஒழுங்கமைப்பதில் ஐந்தாவது வைகையான தேசியவாத சக்திகளின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்தது.

முதல் நான்கு வகையினரும் போராட்டத்தைத் தமது வியாபர அரசியலுக்குப் பயன்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஒழுங்கமைக்கும் வேலைமுறைகளிலிருந்து அவர்கள் விலகியே இருந்தனர் என்பது பரவலாக அறியப்பட்டதாகும்.

போராட்டத்தைப் பயனபடுத்திக்கொண்ட இலங்கைப் பாசிச அரசு


மறு புறத்தில் இந்தப் போராட்டங்களைப் புலிகளின் போராட்டங்களாகக் வெளிக்காட்ட வேண்டிய தேவை மகிந்த ராஜபக்ச அரசிற்கு தேவையாக அமைந்தது.தவிர, இந்தப் போராட்டத்தைப் புலிகளின் போராட்டமாகச் சித்தரித்த இலங்கை அரசின் நோக்கத்திற்கு வலுச் சேர்த்த புலிசார்  அரசியல் வியாபாரிகள் மகிந்த அரச பாசிசத்தின் வேர்களை ஆழப்பதிபதற்கு இன்னொரு வழியைத் திறந்துள்ளனர்.

புலிக் கொடி என்பது இங்கு ஒரு குறியீடு என்பதைத் தவிர அதன் பின்னணியிலிருந்த அபாயகரமான அரசியல் ஏற்படுத்திய அழிவுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக உலகின் அனைத்துப் பாசிச அரசுகளும் அதிகாரவர்க்கங்களும் மக்கள் எழுச்சிகளை குறுங்குழு வாதிகளின் போராட்டங்களாகச் சித்தரித்து மக்களின் பெரும்பகுதியினர் தமது பக்கம் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்து வழமையான ஒன்று.
அதிலும்கூட புலிகள் என்ற அமைப்பின் மனித உரிமை மீறல்களையும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்கள் பலரே ஏற்றுக்கொள்ளும் நிலையில் இப்போராட்டத்தை புலிகளின் போராட்டமாகச் வெளிக்காட்டுவதனூடாக தம்மைப் பலப்படுத்திக்கொள்கிறது இலங்கை அரசு.
இவ்வாறு அரசியல் வியாபாரத்தை நோக்காகக் கொண்ட புலம் பெயர் புலி ஆதரவாளர்களதும் இலங்கை அரசினதும் நோக்கங்கள் ஒரு புள்ளியில் இணைகின்றன.

வலுப்பெறும் பேரினவாதிகள்

இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் போராட்டத்தைப் புலிகளின் போராட்டமாகச் நம்ப வைப்பதில் அரச தரப்பு வெற்றி கண்டுள்ளது. போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும், பாசிசத்தையும் எதிர்த்த சந்தர்ப்ப வாதிகளும், வாக்குக் கட்சிகளும் பேரினவாததின் பக்கதில் ஒரே நேர்கோட்டில் பயணம்செய்ய ஆரம்பித்துள்ளனர். அரச பாசிசத்திற்கு எதிரான குரல் வலுவிழந்துள்ளது.

முரண்பாடுகள் தணிந்துள்ளன. எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர் சஜித் பிரேமதாச பெரும்பான்மைச் சிங்கள மக்களின் அபிப்பிராயம் புலியெதிர்ப்பு நிலையிலிருந்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது என்பதை உணர்ந்துகொண்டுள்ளார். அரசு போர்க்குற்றங்கள் புரியவில்லை என்கிறார்.

போராட்டம் என்பது வெறுமனே புலிகளின் ஆயுதக் கிளர்ச்சி அல்ல, தமிழ்ப் பேசும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என உணர ஆரம்பித்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த ஜனநாயக சக்திகள் இந்தப் போராட்டங்கள் புலிகளின் போராட்டங்கள் என்றதும் பின்வாங்க ஆரம்பிக்கின்றனர். புலிகளால் அப்பாவிச் சிங்கள மக்கள் கொன்றுபோடப்பட்ட வேஎளையில் எதிர்ப்புக்குரல் கொடுத்த ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகள், ஜனநாயக சக்திகள், லசந்த விக்கிரமதுங்க, போத்தல ஜெயந்த, ஜெயதேவ உயாங்கொட போன்ற ஊடகவியலாளர்கள் போன்றோரின் குரல்கள் மக்கள் ஆதரவுடன் மேலும் நசுக்கப்படுவதற்கு மகிந்த அரசின் “புலம்பெயர் புலிகள்” பிரசாரம் உதவிபுரிந்துள்ளது. மறு புறத்தில் புலிக் கொடியின் பின்னணியிலிருந்த அரசியல் உதவிபுரிந்துள்ளது.

இதுவரைக்கும் ஜே.வி.பியின் போராட்டங்களிலிருந்து ஆங்காங்கே நடைபெறும் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் சிங்கள மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தது. அவர்களின் அரசிற்கு எதிரான சிறிய வெற்றிகள் நம்பிக்கை தருவனவாக அமைந்தன. தவறாகப் பயன்படுத்தப்பட்ட போராட்டத்தின் பின்னான இலங்கைச் சூழல் பேரினவாதிகளைப் பலப்படுத்தியுள்ளது.

சிங்கள அரசியல் தரப்பிடமிருந்து வெளியான காணொளிகள் பிரித்தானியாவின் மக்கள்  மட்டத்தில் பொது அபிப்பிராயத்தை மாற்றுவதாக அமைந்திருந்தது என்பதையும் போராட்டங்களின் வெற்றிக்கு அது பிரதான பாத்திரம் வகித்தது என்பதையும் இங்கு குறித்தக்காட்டலாம்.

வெற்றிகள்:

ஆக, பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்கள் சில வெற்றிகளை பெற்றெடுத்திருக்கின்றன.

1. சர்வாதிகாரி மகிந்தவின் அரசிற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த பய உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

2. போராட்டங்களில் நம்பிக்கையற்றிருந்த மக்களுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.

3. அரச ஆதரவு புலம்பெயர் வலைப்பின்னலைப் பலவீனமாக்கியுள்ளது.

இப்போராட்டத்தில் முன்னைய தோல்வியுற்ற அரசியல் புகுத்தப்பட்டதன் தோல்விகள் எதிர்கொள்ளப்படவேண்டும்.

தோல்விகள்:

1. “புலிகள்”  அடையாளம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அர்ச எதிர்ப்பாளர்களைப் பலவீனப்படுத்தியுள்ளது.

2. பேரினவாத சக்திகள் ஒரணியில் திரள வாய்ப்பளித்துள்ளது.

3. புலிகளின் அரசியல் மக்கள் போராட்டத்தில் புகுத்தப்பட்டதானது அவர்கள் மத்தியிலிருந்த அடிப்படைவாதிகளைப் பலப்படுத்தியுள்ளது.

4. மக்கள் போராட்டங்கள் புலிகளின் போராட்டங்களாக தொடரும் அபாயம் தோன்றியுள்ளது.

5. உலகம் முழுவதும் போராடும் மக்கள் பகுதியினரிடமிருந்து தொடர்ந்தும் குறுகிய குழுவாகி அன்னியமாகும் நிலை காணப்படுகிறது.

6. புலிகள் சாராத மக்களிடமிருந்து போராட்டங்கள் அன்னியமாகும் சூழல் உருவாகியுள்ளது.

7. புலிசார் அரசியல் வியாபாரிகளின்  கரங்கள் ஓங்கியுள்ளன.
ஆக, இவ்வாறான போராட்டங்களும் அவை சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கப்படும் போதெல்லாம் போராட்டங்களுக்கான சரியான அரசியல் வழிமுறை தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஜனநாயக சக்திகளதும், முற்போக்குத் தேசியவாதிகளதும், இடதுசாரிகளதும் ஒருங்கிணைவும் செயற்பாட்டுத்தளத்தில் அவர்கள் சரியான அரசியலை முன்வைத்தலும்  தோல்விகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சமூக அரசியல் நெறிகளாக அமையும்.

Exit mobile version