Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தரைக் காப்பாற்றும் மறைமுக நிகழ்ச்சி நிரலை இனங்காண்போம் : இதயச்சந்திரன்

புதிய இராணுவ தலைமையகம் 20 பில்லியன் செலவில் ‘மாலபே’ பகுதியில் நிர்மாணிக்கப்படப்போகிறது. அதற்கான விவாதமொன்று வருகிற புதன்கிழமை (06.07.2011) அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.
இன்னும் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவில்லை என்று கடந்த 27 ம் திகதி உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க மையத்தில் உரையாற்றிய ஐ.நா முகவர் அமைப்பின் அதிகாரி எலேனா பெரிடி கூறும் நிலையில், இராணுவத்திற்கு 20 பில்லியன் ரூபாய்களை அரசு செலவிடுவதைத் தட்டிக் கேட்க எவருமில்லை.
இந்நிலையில் அபிவிருத்தியும், மீள் குடியேற்றமுமே, என் ஆத்மாவில் கலந்துவிட்ட விடயமென்று கோத்தபாயவின் வீட்டில் ஞானம் பெற்ற கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் சொல்வது வேடிக்கையாகவிருக்கிறது. ஏறத்தாழ 180 மில்லியன் டொலர்களை வெறும் கட்டிடத்திற்குச் செலவிடும் சிறீலங்கா அரசு, தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவவில்லையென்று கேள்வி எழுப்ப இந்த அபிவிருத்தி இராஜாக்களால் ஏன் முடியவில்லை?
இனி ஒரு ஆயுதப் போராட்டம் தாயகத்தில் துளிர்விட்டால் அதை முளையிலேயே கிள்ளி எறிவேன் என சூளுரைப்பவரிடமிருந்து, இக் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பது மடமைத்தனம். எந்த வடிவிலான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டுமெனத் தீர்மானிப்பது மக்களின் வாழ்வுரிமை சார்ந்தது. தமிழ் மக்களின் பிறப்புரிமைப் போராட்டங்களை ஒடுக்க நினைப்பவர்களிடம், தொடர்ச்சியாக மன்னிப்புக் கேட்பது இவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
இக் கதைகளை எவரும் பொருட்படுத்தவில்லை என்பது வேறு விடயம். புலம்பெயர் நாட்டிலிருந்து யாராவது இலங்கைக்கு வந்து சேவை (?) செய்ய விரும்பினால் அவர்களின் பாதுகாப்பினை தன்னால் உறுதிப்படுத்த முடியுமெனச் சத்தியம் செய்கிறார் கே.பி. அளவெட்டியில், அரச படைக் குண்டர்களால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிவாங்கும்போது இந்த பாதுகாப்பினை கே.பியினால் ஏன் வழங்க முடியாமல் போனது?
காணாமல் போகடிக்கப்பட்டவர்களை, கண்ணெதிரே கடத்தப்பட்டவர்களை மீட்டுத் தரும்படி கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக வாய்விட்டுக் கதறி அழுத எம் தேசத்து அடித்தட்டு மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் இந்தக் கே.பி? வன்னியில் நடைபெறும் சிங்களத்தின் நில ஆக்கிரமிப்பு குறித்து, சீன சுவர் போன்று நீளமாகப் பட்டியலிடும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன் போன்றோரின் கண்டனங்கள் யாவும் பொய்யென்று கூறுவாரா? இந்தத் தமிழ் தேசிய எதிர்ப்பாளன் கே.பி.
அம்பாந்தோட்டையில், தான் வளர்க்கும் வெள்ளை யானைக்கு, கோடிக் கணக்கில் பணத்தை வாரியிறைக்கின்றார் மகிந்த சக்ரவர்த்தி. சீனாவின் கடனுதவியில், கொழும்பைச் சொர்க்க புரியாக மாற்றுவோமென சத்தியம் செய்கிறார் கே.பியின் தற்போதைய ஆன்மீகக் குருவும், அரசியல் தலைவருமான கோத்தா. ஆனால், வட – கிழக்குத் தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு மட்டும் அரசிடம் பணம் இல்லையாம். சிங்களக் குடியேற்றத்திற்கு இரவு பகலாகத் திட்டமிடும் பேரினவாதத்திடமிருந்து இதனை எதிர்பார்க்க முடியாதென்பதை புலம்பெயர் தமிழ் மக்கள் நன்கறிவர்.
இங்கு நடைபெறும் திட்டமிட்ட மோதல்களையும், பிளவுகளை ஏற்படுத்தும் நகர்வுகளையும், உன்னிப்பாக அவதானிக்கும் போது, சிங்களத்தின் அரூபக் கரங்களின் தொழிற்பாட்டினை உணரக் கூடியதாகவிருக்கிறது. மகிந்த சாம்ராஜ்ஜியம் போர்க்குற்ற அம்பினால் நிலைகுலைந்து போனால், அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழின அடிபணிவாளர்களும் உதிர்ந்து போவார்கள். ஆகவே மகிந்தரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் குழுக்கள்
, தமது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ள பல உடைப்பு வேலைகளை முன்னெடுக்கிறது.
இதன் ஒரு அங்கமாக, மகிந்த இராஜதானிக்கு எதிராகப் போர்க் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முற்படும் தமிழ்த் தேசிய விடுதலையை விரும்பும் சக்திகளை பிளவுபடுத்த அல்லது அழிக்க, இத்தகைய சீர்குலைவு சக்திகள் தீவிரமாகத் தொழிற்படுவார்கள் என்பது உண்மை. இயல்பாகவுள்ள தனிமனித முரண்பாடுகளை ஊதிப் பெருப்பித்து நிரந்தரமான பிளவுகளை உருவாக்குவதே இவர்களின் திட்டம்.
தாமும் விடுதலையை விரும்பும் அணியென்று கூறியவாறு, மறைமுக நிகழ்ச்சி நிரலோடு செயற்படுவார்கள் சிலர். உருவாக்கப்படும் உள் மோதல்களில், தெரிந்தோ அல்லது தெரியாமலோ பங்கெடுக்கும் அடிப்படையில் விடுதலை உணர்வு கொண்ட தனிநபர்கள் சிங்களத்தின் பின்னால் நின்றவாறு அழிப்பு வேலைகளை மிகக் கச்சிதமாக முன்னெடுக்கும் இத்தகைய கும்பல்களை இனங்காணத் தவறுவதே மிகவும் சோகமானது.
பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, சரியான அரசியல் வேலைத் திட்டத்தோடு இயங்கும் தேசிய விடுதலைப் பணியாளர்களை அடையாளம் காண வேண்டிய கடப்பாடு, தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. போராட்ட அணிகளுக்கிடையே மோதல் ஏற்படுவதால் பெரும் இன அழிப்பினை இன்னமும் நடாத்திக் கொண்டிருக்கும் சிங்கள தேசம் தப்பித்துவிடும் என்கிற எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உடைப்பு முயற்சியில் பயன்படுத்தப்படும் இன்னுமொரு ஆபத்தான கருவி குறித்தும் கவனிக்க வேண்டும். அதாவது கூட்டமைப்பிற்கு எதிரானவர்கள் இவர்கள் என்பதாக ஒருசாரரைச் சித்தரிப்பதன் ஊடாக, புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் இந்த மோதல் களத்தில் உள்ளிழுக்கும் முயற்சி நடைபெறுகிறது.
ஆகவே ‘விடுதலை’ என்கிற ஒரே இலட்சியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று கூறுபவர்களுக்கிடையே எதனடிப்படையில் முரண்பாடுகள் உருவாகும் என்பதுதான் மக்கள் மத்தியில் எழும் பலத்த சந்தேகம். ஆனாலும் இந்த முரண்பாடுகளுக்கான காரணங்கள் குறித்து மக்களுக்கு அக்கறை கிடையாது. சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் அவர்களது நலனடிப்படையில் இலங்கை மீது திரும்பும் இவ் வேளையில் சிங்களத்தை அனைத்துலக மட்டத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சரியான சக்திகளே மக்களுக்குத் தேவை.

Exit mobile version