Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பௌத்தத்தின் மீது பாச மிகு ஆதவன் தீட்சண்யாவிற்கு .. : சபா நாவலன்

ஆதவன் தீட்சண்யா,

உத்தரபுரத்தில் உங்களது கட்சி போர்க்கொடி தூக்கிய போது ஆதரவு கொடுப்பதையும் மகிழ்ச்சியடைவதை விடவும் என்ன செய்யமுடியும்? அது மட்டும் சி.பி.எம் என்ற கட்சியையும் அதன் நீண்ட நாள் உறுப்பினரையும் எடைபோட அளவுகோலாகுமா என்றால் சந்தேகம் தான். நீங்கள் எனது நாலுவரிப் பின்னூட்டத்திற்கு எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதற்கு முன்பதாக இவையெல்லாம் எனது நினைவுச் சுழலில் வந்துபோகிறது.

உங்கள் யன்னல்களைத் திறந்துபாருங்கள் “அக்ரஹாரங்களின்” கற்பூரக்காற்றை தென்றல் சுமந்துவருவதற்குப் பதிலாக இரத்தவாடைதான் வீசும்; அதுதான், நந்திகிராமிலும், தண்டக்காரண்யாவிலுமிருந்து பெருகும் மனித இரத்த வாடையத் தான் குறிப்பிடுகிறேன்.

கொத்துக் கொத்தாக உங்கள் கொல்லைப் புறத்தில் மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் புலிகளின் பாசிசம் அழிக்கப்படுகிறது என்று உங்கள் கட்சியோடு இணைந்து கூக்குரல் போட்டீர்களே இன்னமும் நினைவிருக்கிறது.

இலங்கைத் தீவில் ராஜபக்சவின் பௌத்தம் மனிதப் பிணங்களின் மேல் “ஜனநாயகத்தை!” மீட்ட போது நீங்களும் உங்கள் புலம்பெயர் தோழர்களும் தமிழ் நாட்டின் இதயத்தில் எழுந்து நின்று தேசிய கீதம் பாடியதாக நண்பர்கள் சொல்லித்தான் தெரியும். எவ்வளவு வேலைப்பழு மிக்கவர் நீங்கள்.

தவிர, அமரிக்காவா சீனாவா, தென்னாபிரிகாவா வட ஆபிரிக்காவா, பூக்கோவா தெரீதாவா இப்படி பெரிய பெரிய விடயதானங்களைப் பற்றியெல்லாம் எழுதுவதிலேயே நேரம் தொலைத்துவிடுவீர்களே, இதற்கெல்லாம் மத்தியில் எனது பின்னூட்டத்தைப் போய் கட்டுரையாக வடித்து…

இதையும் தவிர, மகிந்த சிந்தனையின் மனிதக் கொலைகள் பிரச்சனையாகத் தெரியாத உங்களுக்கு, பழங்குடிகள் செத்து மடியும் போது அசையாமல் சி.பி.எம் இன் உறுதியோடு மௌனித்திருந்த உங்களுக்கு எனது பின்னூடம் ஏற்படுத்திய கொதினிலை உணர்ச்சி இருக்கிறதே அதுதான் புரிந்துகொள்ள முடியாத புதிர்.

நெத்தியடி அடித்திருக்கிறீர்கள்; ஆனால் எனது நெத்தியில் வியர்வைக்க்குப் பதிலாகக் குருதி வடியவில்லை.

இன்று மாலை உங்கள் “பின்னூட்டக் கட்டுரையை” நண்பர் ஒருவர் அனுப்பிவைக்க, இவ்வளவு பிஸியான பெரியபெரிய எழுத்துக்கள் எழுதும் உங்களுக்கு பின்னூட்டம் ஏற்படுத்திய பாதிப்புக் குறித்து எனது மூளைக்குள் வியப்புக்குறி குந்தியிருந்து குடைய ஆரம்பித்துவிட்டது. இதுதான் இந்தக் கடிதமெழுதும் விவகாரத்தை ஆரம்பிக்க மூல காரணமாய் அமைந்தது.

உங்களதும் கட்சியினது நடைமுறை அரசியலையும் ஒதுக்குவைத்துவிட்டுப் பார்த்தால் நீங்களும் அவ்வப்போது மார்க்சியம் கொம்யூனிசம் என்று பேசிக்கொள்வதால் தனிப்படவே இந்தக் கடிததை எழுதி அனுப்பித் தொலைத்திருக்கலாம் ஆனல் நீங்கள் பொதுத் தளத்தில் எழுதியிருப்பதால் நானும் அவ்வாறே செய்யலாம் என முடிவிற்கு வருகிறேன்.

நான் இணைய வெளியில் இதுவரைக்கும் நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத நீங்கள் நான் எழுதிய பின்னூட்டடம் ஒன்றிற்கு ஆதாரம் கேட்டு உங்கள் இரத்த நாளங்களின் கொதி நிலையை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.

எனது முதலாவது கேள்வி இதெல்லாம் ஏன்……

நானும் உங்களைப் போல பெரிய பெரிய விடயங்களைப் பேசுகிறேனோ என்று எண்ணி புரட்சிக்கான அரசியல் கொமிசாரின் உருளு நாற்காலியைத் தேடலாம் என்று கூட ஒரு கணம் தடுமாறிவிட்டேன்.

எது எப்படியானாலும் எனது பின்னூட்டத்தை வைத்தே கட்டுரை எழுதிய நீங்கள் பலே கில்லாடி தான் போங்கள்.

சரி, அடுத்தத காரணம் என்னவாக இருக்கலாம் என்று இன்னும் மூளையை குடைகிறேன். அருள் எழிலன் உங்களை கேள்விமேல் கேள்வி கேட்டு இனியொருவிலும் கீற்று இணையத்திலும் கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு நீங்கள் பதில் சொல்வதற்குப் பதிலாக எனக்கும் நெத்தியடி தருகிறீர்களோ என எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் அப்படிப்படவரா என்ன? எப்பேர்பட்ட எழுத்தாளர்!

இன்னும் எனது யூகக் குரங்கு எனது மூளையின் மூலையில் குந்தியிருந்து குடைகிறது. ஏன் இப்படி .. இன்னும் விடை கிடைக்கவில்லை ஆதவன்.

மார்க்சியம், பின்நவீனத்துவம், பின் மார்க்சியம், தலித்தியம், பௌத்தம், ஜெயினிசம் இப்படி எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கிக் காச்சிய சாம்பாரை சமூகத்தின் புதுவிசை என்று மார்தட்டிக்கொள்ளும் வேளையில் பௌத்ததைப் பாதுகாக்க நீங்கள் எனது பின்னூட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியிருபீர்களோ? இல்லை அப்படியிராது அகில இந்திய கம்யூனிசக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர் நீங்கள் போய் இப்படியெல்லாம்…? இருக்காது.

வன்னி இனப்படுகொலை தணிந்திருந்த வேளையில் உங்கள் புலம் பெயர் அரசியற் தோழர் பௌத்த மரபிலிருந்து வந்ததாக இலங்கைத் தேசிய கீதத்தை ஒரு ஒன்று கூடலில் பாடிப் பரபரப்பு ஏற்படுத்தியது வேறு நினைவிற்கு வருகிறது. நீங்கள் வழிபடும் அம்பேத்கார் கூட பௌத்ததிற்கு மதமாற்றம் செய்துகொண்டாராமே? இவை எல்லாவற்றோடும் உங்களது முதல் இலங்கைப் பயணம், மகிந்த சிந்தனை கூறும் பௌத்தம் எல்லாம் கலக்கிக் காய்சிய இன்னொரு சாம்பாரும் எனது எண்னங்களில் வந்து தொலைக்கிறது. இலங்கையில் பௌத்தத் தீயை மூட்டிவைத்த அனகாரிக தர்மபாலவின் ஆரியர் சிந்தனையைப் போல, ஆரியரல்லாதவர்களை குறிப்பாக இலங்கை வேடர்களை அரை மனிதர்கள் (semi-human) என்றழைத்த பிளவார்ஸ்கி போன்றோரின் வழிவந்த பௌத்த சிந்தனை முறையையா நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள். தலித்தியம் உங்கள் உயிர் மூச்சாயிற்றே!

ஊகங்களைக் கருத்துக்களாக உருவமைப்பதில் எனக்க்கு உடன்பாடில்லை என்பதால் அப்படியெதுவும் இருக்கமுடியாது என்ற நம்பிக்கைக்கு வந்தாயிற்று.

பின்னூட்டம் குறித்த குறிப்பு : தியோ சோபிகல் சமூகம் குறித்தும் அதன் ஆரிய சிந்தனை குறித்தும் பல சர்சைகள் நிலவுகின்றன. பிளவாற்ஸ்கியின் இறப்பின் பின்னர் வெளியான அவரது இறுதி நூலின் மூன்றாம் பகுதி பிரசுரத்திற்கு வருகிறது. அதனை வெளியிட்டவர் அன்னி பெசன்ட் தான். கிறீஸ்தவ வெள்ளையர்களையும் யூதர்களையும் கூட ஆரியர்களாகச் சித்தரிக்கும் பிளவாட்ஸ்கி(அப்போ ஹில்லர் விரும்பிய நூல்களில் இவரது நூலும் ஒன்றென்பது ஏன் என்ற கேள்வியெழ அதற்கு வேறு கட்டுரை எழுதிவிடாதீர்கள்), ஆரியர்களே சமூகத்தின் உயர்வான மனித விழுமியங்களைக் உடையவர்கள் என்கிறார். இதைத் தான் இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக் காலக் கதாநாயகனான் அனகாரிகவும் கூறுகிறார். தனது இறப்பிற்கு ஒரு வருடங்களின் முன்னர் பிரித்தானியாவில் சரே என்னுமிடத்தில் தனது தியோ சோபிகல் சமூகத்தின் தலைமையகத்தை நிறுவுகிறார். அதற்குப் புரட்டஸ்தாந்து சபையின் ஆதரவும் கிடைக்கிறது. இவையெல்லாம் பின்னூட்டமாக இல்லாமல் கட்டுரையாக எழுதியிருக்கலாம் என்பது சுயவிமர்சனம்.

மக்கள் ஊடகம் என்று புளெக்குகளை அழைக்கிறார்கள். பின்னூட்டங்கள் என்பது தோன்றுகின்ற அபிப்பிராயங்களை அவ்வப்போது எழுத அதற்கு அதே பதிவின் கீழ் உடனடியாக எதிர்வினையாற்ற ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்படும் என்பதே இதன் உள்ளர்த்தம். ஆயினும் பின்னூட்டங்கள் கட்டுரைகளின் மையக்க்கருவிற்கு அப்பாலும் பல சந்தர்பங்களில் சென்றுவிடுவதால் விவாதங்கள் திசை மாறிவிடுகிறது. நீங்களோ கட்டுரையாக எழுதி அதுவும் விமானத்தை எல்லாம் நடுவானில் வெடிக்கவைத்து ….!

“அந்தக் கேள்விக்கு மட்டும் இன்னும் விடை தெரியவில்லை.” மன்னன், மகாராசன், என்ற பெயர்களிலிருந்து எண்களை பெயர்களாக வைத்துக் கொள்வது வரை ஆயிரம் மனிதர்கள் பின்னூட்டம் போடுகிறார்கள். நூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். எனது பின்னூட்டத்திற்கு மட்டும் நீங்கள் கட்டுரை எழுதியதற்குக் காரணம்.. அதுவும் உங்கள் எழுத்துப் பணி அரசியல் பணி அனைத்தையும் விட்டுவிட்டு!

குறிப்பு: நாம் ஒரு எழுத்துக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பது எனது அவா! பாருங்கள், முதலில் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆக, பொதுத் தளத்தில் உங்களை எனது எதிரி என்ற வகைக்குள் உள்ளடக்கிவிட்டு கடிதம் எழுதவில்லை. நீங்கள் எழுதிய அதே பாணியிலான ஒரு சிறு முயற்சி. அவ்வளவு தான்! உங்கள் எழுத்து முறமை என்னக்கு விரக்தி தருவதைப் போல் எனது எழுத்துக்கள் உங்களை பாதித்திருந்தால் மன்னிப்பும் கோருகிறேன்..!

தொடர்புடைய பதிவுகள் :

சிங்கள பௌத்த நச்சு வேர்களும் ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் :

ஆதவன் தீட்சண்யா – பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு

ஆதவன் தீட்சண்யா பின்னூட்டத்திற்கு எழுதிய கட்டுரை:

சிங்களப் பேரினவாதம் 1983 ஜூலை 23 அன்று இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்தக் கொடுமையை மையப்படுத்தி குருதியுறைந்தப் படுகொலைகள் என்ற தலைப்பில் சபாநாவலன் எழுதிய கட்டுரையொன்று இனியொரு.காமில் வெளியாகியுள்ளது. சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை பிரித்தானிய காலனியாட்சி திட்டமிட்டே வளர்த்தது என்று இக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ள கருத்தை மேலும் பலப்படுத்திட சிவா என்பவர் “… அனகாரிக தர்மபாலவைத் திட்டமிட்டு உருவாக்கியது பிரித்தானிய அரசு. பௌத்த மதத்தை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்திய பிரித்தானியப் பிரித்தாளும் தந்திரம், நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை பேரினவாதமாக வளர்த்துள்ளது. அனகாரிக தர்மபாலவின் சிங்கள பவுத்தம் கிறிஸ்தவர்கட்கெதிராகவும் முஸ்லிம்கட்கெதிராகவுமே வளர்த்தெடுக்கப்பட்டது. எனவே பிரித்தானியரின் நோக்கம் என்னவாயிருந்தது என்ற கேள்வி எழுகிறது…” என்று பின்னூட்டமிட்டுள்ளார்.

சிவாவுக்கு பதில் சொல்ல வருகிற கட்டுரையாளர் நாவலன் “இலங்கையில் டேவிட் ஹேவிதாரண என்ற அனகாரிக தர்மபாலவை ஊடாக உருவாக்கியவர் மடம் பிளவாட்ஸ்கியும் கேணல் ஒல்கொட்டும். அநகாரிக பிளவாற்ஸ்கியுடன் தமிழ்நாட்டில் தங்கியிருந்து Theosiphical society இல் செயற்பட்டு இலங்கை திரும்பிய பின்னர் ஒல்கொட்டுடன் இணைந்து பௌத்த பாடசாலைகளை நிறுவுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒல்கோட்டும் பிளவாட்ஸ்கியும் கிறிஸ்தவர்களாகவே செத்துப் போகிறார்கள். பிளவாட்ஸ்கி இங்கிலாந்தில்தான் மரணிக்கிறார்…” என்று கூறுகிறார். கிறித்துவத்திற்குள்ளேயே தேங்கிச் செத்ததாக அவ்விருவரையும் சித்தரிக்கிற நாவலன், அவர்கள் ஏன் தங்கள் மதத்தில் இருந்த டேவிட் ஹேவிதாரணவை அனகாரிக தர்மபாலாவாக்கி பௌத்தத்திற்கு கிளப்பிவிட்டார்கள் என்ற மர்மத்தின் முடிச்சினை அவிழ்க்கவில்லை.

யார் என்னவாக இருந்து எப்படியாகச் செத்தார்கள் என்று இப்போது ஆராய்ந்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. ஆனால் நம்பத்தகுந்த பதங்களைப் பிரயோகித்து வரலாற்றின் சிலபக்கங்களை மீட்டெடுப்பதான தோற்றம் காட்டுவது முறையல்ல என்று சொல்ல வேண்டியுள்ளது. அனகாரிக தர்மபாலாவின் குணவியல்புகளுக்கு கர்னல் ஆல்காட் மற்றும் மேடம் பிளாவட்ஸ்கி ஆகிய இருவரையும் பொறுப்பாக்குகிற நாவலன் அவ்விருவர் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்கு வரலாற்றுத் தரவுகளைத் தேடியலைய வேண்டியதில்லை என்றாலும் குறைந்தபட்சம் இதற்குமுன் தானே எழுதியிருக்கும் கட்டுரையையாவது ஒருமுறை திருப்பிப் பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

இதற்குமுன் தமிழ்பவர்.காம் என்ற இணையதளத்தில், “சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு- புதிய போரின் முன்னறிவிப்பு” என்ற தனது கட்டுரையில் “ஹெலேனா பிளவாட்ஸ்கியும் ஒல்கேட்டும் பௌத்தத்தை ஆரியர்களின் உயர்ந்த மதமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த இருவரினதும் இறுதிக்கால வாழ்க்கை பௌத்தக் கொள்கைகளுடன் எந்தச் சார்புநிலையினையும் கொண்டிராத போதிலும், பௌத்த மதத்தைச் சுற்றிய இவர்களது ஆர்வத்தினால் இலங்கைக்குப் பலமுறை பயணம் செய்தனர்…” என்று எழுதிய இதே சபா நாவலன் இப்போது இனியொருவில் எழுதும்போது “இதில் வேடிக்கை என்னவென்றால் ஒல்கோட்டும் பிளவாட்ஸ்கியும் கிறிஸ்தவர்களாகவே செத்துப் போகிறார்கள்…” என்று எழுதியிருக்கிறார். இரண்டு கட்டுரைகளுக்கும் இடைப்பட்டக் காலத்தில் ஆல்காட்டுக்கும் பிளவாட்ஸ்கிக்கும் இருந்த பௌத்த ஆர்வம் எப்படி குன்றியது என்ற விளக்கங்கள் எதையும் தர நாவலன் மெனக்கெடவில்லை.

அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களாகவே இருந்து இறந்தார்களா என்பதற்கான ஆதாரத்தை நாவலன்தான் கொடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் பௌத்தர்களாக இருந்தமைக்கு ஏராளமான தரவுகள் உள்ளன. Old Dairy Leaves என்ற தனது சுயசரிதையின் தொகுதி இரண்டில் 167-169 வரையான பக்கங்களில் தானும் பிளாவட்ஸ்கியும் இலங்கைக்கு சென்று 1880 மே 25ம் நாளன்று பஞ்சசீலத்தையும் திரிசரணத்தையும் ஏற்று பௌத்தர்களானதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சம்பிரதாயமாக தம்மை பௌத்தர்கள் என்று அறிவித்துக் கொண்டதுதான் அந்த நாளே தவிர அதற்கும் முன்பிருந்தே தாங்களிருவரும் பௌத்தத்தை வாழ்முறையாக ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட முதல் அமெரிக்கர், முதல் ஐரோப்பியர் என்று குறிக்கப்பெறுகின்றனர்.
கீழைத்தேய தத்துவங்கள்/ மதங்கள் பற்றிய ஆய்வுகளினூடாக அவர்கள் வந்தடைந்த புள்ளி பௌத்தமாயிருக்க அடுத்துவந்த ஆண்டுகளில் அவர்களிருவரும் குறிப்பாக ஆல்காட் இலங்கையில் பௌத்தத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்ததை அறியமுடிகிறது. நாவலன் சொல்வதுபோல காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக திட்டமிட்டே பௌத்த மீட்டுருவாக்கத்தை இவ்விருவரும் மேற்கொண்டனரா அல்லது அவர்களது பணியின் விளைவுகளை காலனியாதிக்கம் தன் நோக்கத்திற்கு இசைவாக பயன்படுத்திக்கொண்டதா என்று முறையாக ஆய்வேதும் நடத்தப்படவில்லை. ஆனால், சிங்கள இனவாதத்தின் மேலாதிக்க வெறி அனகாரிக தர்மபாலாவிலிருந்து தொடங்குகிறதென்ற எளிதான முடிவுக்கு வருகிற ஒருவர், கிறித்துவரான தர்மபாலாவை ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் பௌத்தராக மாற்றியதற்குப் பின் மிகப்பெரும் சதித்திட்டம் இருந்ததென்ற குற்றச்சாட்டுடன்தான் தன்வாதத்தை முடிக்கவேண்டியிருக்கும். அந்தவகையிலான நாவலனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது எனது நோக்கமல்ல. ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் கடைசிவரை கிறித்துவர்களாகவே இருந்து செத்துப்போயினரா என்பதை மட்டும் பார்ப்போம்.

பிளாவட்ஸ்கி தன் அந்திமத்தை இங்கிலாந்தில் கழித்து அங்கேயே செத்துப்போனார். இங்கிலாந்தில் செத்துப்போனார் என்பதைக்கொண்டு அவர் கிறிஸ்தவராகவே இருந்து செத்தார் என்ற முடிவுக்கு வரமுடியுமானால் விமானம் வெடித்து நடுவானில் செத்தவர்களை எந்த மதத்தில் சேர்ப்பது? லண்டனில் வசிப்பதனாலேயே தானும் ஒரு கிறிஸ்தவராகத்தான் இருக்கமுடியும் என்று நாவலன் தன்னைத்தானே மதக்கடத்தல் செய்துகொண்டதாக நம்பிக்கொண்டால் அது எவ்வளவு அபத்தமோ அதற்கிணையான அபத்தம்தான் இதுவும். சரி, ஆல்காட் சாவுக்கு வருவோம். ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் இலங்கையுடனானது போலவே தமிழ்நாட்டுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாயிருந்தனர். தியாசாபிகல் சொசைட்டியின் தலைமையகத்தை சென்னை அடையாறுக்கு மாற்றிக்கொண்டு அங்கிருந்துதான் தமது பணிகளை ஒருங்கிணைத்தனர். அன்றைய பவுத்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்களான அயோத்திதாசர், சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர் கர்னல் ஆல்காட்டுடன் அறிவார்ந்த தொடர்பினைப் பேணிவந்துள்ளனர். பௌத்த மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்த அயோத்திதாசர், 1898ஆம் ஆண்டு ஆல்காட்டின் உதவியுடனேயே தான் இலங்கை சென்று தீட்சை பெற்று முறைப்படி பௌத்தம் தழுவியதாக குறிப்பிடுகிறார். (அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 180). சாக்கிய பௌத்த சங்கம் தலித்துகளுக்கான கல்விச்சாலைகளை நடத்துவதற்கு ஆல்காட் உதவியாக இருந்திருக்கிறார். அவ்வமைப்பின் தலைமையகம் இயங்கிய இடத்திற்கான மாதாந்திர வாடகைத் தொகையை ஆல்காட் செலுத்திவந்ததாகவும் மேற்சுட்டிய கடிதத்தில் அயோத்திதாசர் நினைவுகூர்கிறார். அதாவது ஆல்காட் பௌத்தம்சார் நடவடிக்கைகளுடன் தன்னை இறுதிவரை இணைத்துக் கொண்டவராகவே இருந்திருக்கிறார். இதையும் காலனியாதிக்க நலனுக்காக ஆல்காட் அயோத்திதாசரை தூண்டிவிட்ட பிரித்தாளும் சதியாக நாவலன் பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கையில் மேற்தொடர்கிறேன்.

ஆல்காட்டின் மரணம் மற்றும் இறுதிச்சடங்குகள் குறித்து வே.ப.குப்புசாமி என்பவர் எழுப்பிய வினாவுக்கு அயோத்திதாசர் டிசம்பர் 8, 1909 தேதியிட்ட தமிழன் இதழில் சொல்லியிருக்கிற பதிலை நாவலன் படிப்பது நல்லது. ( அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுதி 1, பக்கம் 212,213). “சகோதிரர்கள் என் ஞாபகத்திற்காக மேன்மையான சகோதிர ஐக்கிய மார்க்கத்தை பிரசங்கத்தாலும் விசுவாசத்தாலும் நடத்துங்கள். எனக்குப் பிரியமும் சமநிலையுமுள்ள சகோதிரர்கள், நான் உங்களிடம் வந்து வாழ்த்தி விண்ணப்பிப்பதாவது உலகத்திலுள்ள சருவ சகோதிரர்களுக்கும் ( சத்தியத்தை ) விட வேறு மதங் கிடையாதென்று விளக்கி அதை சகோதிர வாஞ்சையாலும் அன்பினாலும் நடத்துவீர்களானால் கலகமில்லாமல் உலகம் சீர் பெரும்…” என்று 2.2.1907 ஆம் தேதி ஆல்காட் எழுதிய குறிப்பை சுட்டிக்காட்டும் அயோத்திதாசர், அதற்கொப்பவே ஆல்காட்டின் இறுதிவிருப்பங்கள் இருந்தன என்பதை பதிவு செய்கிறார்.

மரணத்தருவாயில் இருக்கும் தன் தலைமாட்டில் பௌத்தக்கொடி பறக்க வேண்டுமேன்றும், தன் பிரேதத்தை எடுக்கும்போது முதலாவதாக பௌத்தர்களும், அவர்களையடுத்து பிராமணர்கள், ஜோராஸ்டர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் என்ற நியமத்தில் வந்திருந்து தத்தமது தியானங்களை நடத்தி தகனம் செய்யவேண்டும் என்றும் ஆல்காட் கொண்டிருந்த விருப்பத்தினை அன்னிப்பெசன்ட் அம்மையார் சாக்கைய முனிவர் சங்கத்தின் பொதுக்காரியதரிசியாகிய தன்னிடம் தெரிவித்ததாகவும், அதன்பேரில் தான் பௌத்தக்கொடியைக் கொண்டுபோய் அவரது சிரசினருகில் வைத்த பதின்மூன்றாம் நாளாகிய 17.21908 அன்று காலை 7.17 மணியளவில் ஆல்காட்டின் உயிர் பிரிந்தது என்றும் அயோத்திதாசர் எழுதியிருக்கிறார்.

“…பௌத்தக்கொடிகள் பரக்க சகோதிர ஐக்கியஞ்சிறக்க ஆனந்தகோஷத்துடன் சென்று தென்னந்தோப்பின் மத்தியில் தகனஞ்செய்து மறுநாட்காலையில் காரியதரிசி அவர்களால் (அயோத்திதாசரால்) தணலை பால்கொண்டவிக்க மற்றவர்களுங் கலந்து அஸ்திகளைப் பொருக்கி பகவன் நிருவாணமடைந்த பீடத்திற்கருகிலுள்ள கங்கைநதியில் விடுவதற்கு ஓர் பாகமும், சங்கத்துள் ஸ்தாபிக்க ஓர் பாகமும், சாக்கைய சங்கத்தார் ஓர் சிரியபாகமும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை சமுத்திரத்தில் கரைத்துவிட்டார்கள். கர்னல் எச்.எஸ்.ஆல்காட் துரையவர்கள் புத்ததன்மத்தைச்சார்ந்து இத்தியாதி நன்மெகளை உலகத்தில் செய்துவந்தாரென்று அவர் மரணகாலத்தில் சகலருக்கும் விளங்கியது சொல்லாமற்செய்த நன்மெயின் பயனாம்….” என்று முடிக்கிறார் அயோத்திதாசர். எச்.எஸ்.ஆல்காட் துரையவர்கள் புத்ததன்மத்தைச்சார்ந்து இத்தியாதி நன்மெகளை உலகத்தில் செய்துவந்தாரென்று அவர் மரணகாலத்தில் சகலருக்கும் விளங்கித்தானிருக்கிறது என்று அயோத்திதாசர் குறிப்பிட்டது நாவலனுக்கும் பொருந்தும்தானே

Exit mobile version