Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போலிஸ் கொலைகள் தமிழகம் முதலிடம்! : மதி

பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் இந்தியா முழுக்க வெடித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் பிராந்தியவாதமும் அதன் பிராந்திய அடையாள அரசியலும் ஒரு பக்கம் விரிவடைந்து செல்கிறது. உலகமயச் சூழலில் வெடித்தெழும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசும் போலீசும் கையாளும் ஒரு வழிமுறைதான் இத்தகைய என்கவுண்டர்கள்.சத்தீஸ்கர் மாதிரியான மாநிலங்களில் அரசே “சல்வார்ஜுடூம்”மாதிரியான குண்டர் படையை உருவாக்கி அரசுக்கு விரோதமாக போராடுபவ்ர்களை அழித்தொழிக்கும் பொறுப்பை இம்மாதிரி அடியாள் படைகளுக்கு வழங்கிவிடுகிறது.

ஆனால் தமிழகத்தில் அம்மாதிரி சூழல் இல்லை எல்லா காலத்திலும் நகச்ல்பாரிகளை வேட்டையாடவும் அடங்க மறுக்கும் ரௌடிகளை மட்டுமே வேட்டையாடவும் என்கவுண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இந்த நீண்ட கொலைகளுக்கு பிறகும் ஒரு ரௌடி உருவாகி வருவதையோ தீவிர சோஷலிச எண்ணமுள்ள இளைஞர் ஒருவர் ஆயுதம் தூக்குவதையோ அரசாலோ போலீசாலோ தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த காவல்துறை ரௌடிகள் மோதல் தொடரத் தொடர இன்னொரு பக்கம் சேரிகளில் இருந்தும் கூவம் நதியின் கரையோரங்களில் இருந்தும் ரௌடிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,என்றாவது ஒரு நாள் நாம் போலீசால் வேட்டையாடப் படுவோம் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் புதிய ரௌடிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக இன்று நடந்து கொண்டிருக்கும் என்கவுண்டர்கள் தொடர்பாக இரண்டு கேள்விகள் நமது மனதில் தோன்றுகிறது.

ஒன்று இம்மாதிரி கொலைகளை செய்யும் அதிகாரம் சட்டபூர்வமாக போலீசுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?

போலீஸ் மோதலின் போது நிகழும் இம்மாதிரி கொலைகளை சட்டம் அனுமதிக்கிறதா? எனக் கேட்டால் தற்காப்புக்காக போலீசார் இம்மாதிரி கொலைகளை செய்யலாம் என்கிறது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 46 – வது பிரிவு.மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக் கூடிய அளவுக்கு குற்றம் புரிந்த ஒரு நபரைக் கைது செய்ய முயலும் போது தற்காப்புக்காக தேவைப்பட்டால் குற்றவாளி என கருதும் நபருக்கு மரணத்தை விளைவித்தால் கூட குற்றமில்லை என்கிறது.ஆனால் சட்டம் எப்படி காவலர்களுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறதோ அதே பாதுகாப்பை குற்றவாளிகள் எனக் கருதப்படுகிறவர்கள்க்கும் வழங்கியிருக்கிறது.என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் அந்தக் கொலையில் தொடர்புடைய காவலர் அல்லது அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 – வது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

அந்த அதிகாரி சான்றுச் சட்டத்தின் கீழ் தான் செய்த கொலையானது தற்காப்பின் நிமித்தமே நிகழ்த்தப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.இம்மாதிரி மோதல் சாவுகளை நிகழ்த்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளோ அன்பளிப்பு பரிசுகளோ கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது என தேசீய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.ஆனால் தமிழகத்தில் இம்மாதிரியான என்கவுண்டர்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் விருதுகளும் வழங்கப்படுகிறது.

ஆனால் இம்மாதிரி வாழ்வுரிமை ரீதியிலான வழிகாட்டுதலகள் எதையும் என்கவுண்டரின் போதும் அதற்குப் பின்னரும் காவல்துறை பின்பற்றுவதில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.என்கவுண்டரின் தொட்டில் என்றால் அது மும்பை நகரம் என்று இருந்தது.

டில்லி, குஜராத் மாநிலங்களிலும் போலி மோதலகள் நடைபெற்றிருக்கின்றன. டில்லியில் இரு வியாபாரிகளை தீவீரவாதிகள் எனச் சொல்லி சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆணையர் ரதி உட்பட பத்து போலீசாருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பல மாநிலங்களிலும் சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.மும்பை நகரத்தின் காவலதிகாரியாக இருந்த பிரதீப் வர்மாவுக்கு காவல் வட்டாரத்திலும் ரௌடிகள் மத்தியிலும் வைக்கப்பட்ட செல்லப் பெயர் ‘அப்தக் 100’அதாவது நூறு என்கவுண்டர் செய்தார் என்பதால் அப்படி செல்லப் பெயர் வந்ததாம்.பிரதீப் வர்மாவின் காவல் வாழ்வை சித்தரித்து எடுக்கப்பட்டதுதான் நானாபடேகரின் ‘அப்தக் 56’ இந்தப் படத்தில் நடித்த நானா படேகருக்கு பிரதீப் வர்மா எபபடி என்கவுண்டர் செய்வது,நடந்த மோதலை எப்படி தந்திரமாக கையாள்வது என்றெல்லாம் வகுப்பெடுத்தாராம்.

அப்பேர்ப்பட்ட பிரதீப் வர்மாவின் வாரிசுதான் தயாநாயக் இவர் செய்த என்கவுண்டர்களோ 83.மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தயாநாயக்கின் சொத்து மதிப்போ நூறு கோடி.ரௌடிக் கும்பலிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர் கோஷ்டிகளை அழித்தொழிப்பதுதான் இருவரின் வேலையும் இன்று இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட கதைகளும் உண்டு.

2007-ல் தெஹல்கா இதழ் இந்தியா முழுக்க உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.அதில் தமிழக காவல்துறை அதிகாரிகளின் பெயர் எதுவும் இல்லை.

ஆனால் மும்பைக்கோ, குஜராத்திற்கோ, டில்லிக்கோ நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல போட்டி போட்டுக் கொண்டு போலி மோதல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக காவல்துறையினர். எப்படி வட இந்தியாவில் என்கவுண்டர் ஸ்பெஷலிஷ்டுகள் உண்டோ அப்படி தமிழக காவல்துறையிலும் உண்டு. அதில் மிக பிரலபாமக அறியப்பட்டவதான் வெள்ளைதுரை என்கிற மதுரை துணை கமிஷனர்.

சாதாரண கான்ஸ்டபிளாக தன் வாழ்வைத்துவக்கிய வெள்ளைதுரையின் சொத்து மதிப்பை யாராவது புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வந்தால் பல உண்மைகள் வெளிவரும்.

தவிறவும் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் பல அதிகாரிகள் பதவியில் இருந்து கொண்டே தொழிலதிபர்களாகவும் இருக்கிறார்கள். சில அதிகாரிகள் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தாங்களின் இந்தத் தொழிலுக்கு துணையாக தங்களின் பதவியை அதிகார துஷ்பிரயோகமும் செய்து கொள்கிறார்கள். பல நேரங்களில் பெரும் பணக்காரர்களிடம் பல லட்சங்கள் பணங்களைப் பெற்றுக் கொண்டும் சில கொலைகளை செய்கிறார்கள் என்ற சந்தேகங்கள் நிலவுகிறது.

இரண்டாவது கேள்வி சட்டம் தன் கடமையைச் செய்யாதா?

சட்டம் எல்லாக் குடிமக்களையும் சமமாகவோ ஒன்றாகவோ பாவிப்பதில்லை என்பதற்கும் பல நேரங்களில் அது போலீஸ் மனதோடு செயல்படுகிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும் சென்ற ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவி மீதான வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கச் சொல்லி 1999 – ல் உத்தரவிட்டது அரசு.அப்போது அவரது மீதிருந்த வழக்குகளின் எண்ணிக்கை 24.ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதோ 2003 – ல் அதற்குள் பல வழக்குகளில் இருந்து நிரபராதி என விடுதலை ஆனார் வெள்ளைரவி. மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.கடைசியில் எந்த ஒரு வழக்கிலும் தண்டிக்காப்படாமல் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மணல் மேடு சங்கரின் கதையோ வித்தியாசமானது.அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போதே தான் என்கவுண்டர் செய்யப்படுவோம் என பயந்தார்.அவரது தாய் மனித உரிமை அமைப்புகளிடம் போய் முறையிட்டார் மனித உரிமை அமைப்பினர் நீதிமன்றம் சென்றனர்.மணல் மேடு சங்கரின் தாய் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்ட போது அப்படி மணல் மேடு சங்கரைக் கொல்லும் திட்டம் எதுவும் தமிழக காவல்துறைக்கு இல்லை என நீதிமன்றத்தில் சொன்னது தமிழக அரசு ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் மணல் மேடு சங்கர் மோதலில் கொல்லப்பட்டார்.

ரௌடி, போலீஸ், அரசியல்வாதிக் கூட்டு……. தண்டனை ரௌடிக்கு மட்டும்?

முன்னர் ரௌடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நேரடியான தொடர்புகள் இருந்ததில்லை. ஆனால் எண்பதுகளுக்குப் பின்னரே ரௌடிகள் அரசியல் ரௌடிகளாக உருவானார்கள். லோக்கல் கவுன்சிலராக இருந்து வட்டம், மாவட்டம் என்று படிப்படியாக திருட்டு அரசியல்வாதியாக உருவான காலம் போய் வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் என்று உருவானது எண்பதுகளுக்குப் பின்புதான்.

இந்தியா என்ன நேருவின் குடும்பச் சொத்தா? என்று கேள்வி எழுப்பிய கருணாநிதிதான் தென்னிந்தியாவில் வாரிசு அரசியலின் மூல கர்த்தா. வாரிசு அரசியலுக்கும் ரௌடி அரச்யலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லோக்கல் தாத்தாக்கள் அரசியல்வாதிகள், போலீஸ் கூட்டு இல்லாமல் வளர முடியாது. ரௌடிகள் கூட்டு இல்லாமல் அரசியல்வாதியோ போலீஸோ செயல்பட முடியாது. ஊழல் மலிந்து போன இந்த அமைப்பில் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது.

தொண்ணூருகளுக்குப் பிறகு அரசியல்வாதி ரௌடிக் கூட்டு என்பது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பரவி விரிவடைந்தது. ஒரு அரசியல்வாதி செல்லும் போது அவருடன் செல்லும் பத்துப் பேரில் ஐந்து பேராவது அல்லக்கைகளாக இருப்பார்கள். இந்த அல்லக்கைகள் என்போர் தனித்து எதுவிதமான அதிகாரமும் இல்லாமல் அரசியல்வாதியின் செல்வாக்கிலேயே வலம் வருவார். அரசியல்வாதிக்கும் அவரின் வாரிசுகளுக்கும் பாதுகாப்புக் கொடுப்பதுதான் இவரது வேலை. தவிறவும் அரசியல்வாதி கொடுக்கும் அசையின்மெண்டுகளை அவ்வப்போது முடித்துக் கொடுப்பதுதான் இந்த அல்லக்கை ரௌடிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை.

இவர் அரசியல்வாதியின் நிழலில் இருக்கும் போது இயல்பாகவே இவர் போலீசின் நண்பராகவும் ஆகிவிடுகிறார். அவர்களுக்கும் தன்னால் ஆன சேவைகளைச் செய்கிறார். அயோத்திக்குப்பம் வீரமணி, பங்க் குமார், வெள்ளை ரவி, மணல் மேடு சங்கர், என்று நீளும் கொலையுண்ட ரௌடிகள் அனைவருமே ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒரு அரசியல்வாதிக்கு பயன்பட்டவர்கள்தான். திமுக, அதிமுக, பமக என்று கட்சி வேறு பாடுகள் எல்லாம் கிடையாது. ஆனால் தங்களின் ரௌடி அரசியலுக்கு பயன்படும் இந்த ரௌடிகளை நிரந்தரமாக எந்த அரசியல்வாதிகளும் வைத்துக் கொள்வதில்லை. காரியம் முடிந்ததும் முடித்துக் கொடுத்தவனையே போலீஸை விட்டுப் போட்டுத் தள்ளிவிடுவார்கள்.

சில நேரங்களில் சிறைக்கு அனுப்பி அங்கே ரௌடிகளை மோத விட்டும் கொல்வார்கள். சம்பந்தப்பட்ட ரௌடியைக் கொன்ற பின் கொன்றவன் வெளியில் வந்ததும் எதிர்தரப்பு ஆளைத் தூண்டி விட்டு அவனையும் தீர்த்துக் கட்டி விடுவார்கள். இதெல்லாம் ரௌடிகளுக்கிடையிலான மோதல் என்கிற அளவிலேயே முடிந்து விடும்.இப்படி முடியாத முடிக்க இயலாத தாத்தாக்களை போலி மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றும் விடுவார்கள்.

1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மெமன் சகோதரர்கள் ஆகியோருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புருப்பதாக சர்ச்சை எழுந்த போது.அதை விசாரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் என்.என்.வோரா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது காங்கிரஸ் அரசு.1995-ல் அந்த கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைத்த போது அந்த அறிக்கையின் விபரங்களைப் பார்த்து நாடே அதிர்ந்து நின்றது.உள்ளூர் அளவிலும் துறைமுக நகரங்களிலும் மிகப்பெரிய நகரங்களிலும் கள்ளச்சாரயம் சூதாட்டம் பாலியல் புரோக்கர் என வளரும் சிறு குற்றவாளிகள் பின்னர் போதைபொருள் கடத்தல் ரியல் எஸ்டேட் கந்து வட்டி என வளர்ந்து போலீஸ் அரசியல்வாதிகளின் கூட்டோடு எப்படி கோலோச்சுகிறார்க்காள்.என என வோரா கமிட்டி சுட்டிக்காட்டியது.ரௌடிகளுக்கு அரசியல்வாதிகளுக்கும் உருவாகியிருக்கும் கூட்டணியை ஒழிக்க வோரா கமிட்டி NODAL AGENCY என்கிற உயர் அதிகாரம் படைத்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது.ஆனால் காங்கிரஸ் பிஜேபி உடபட அனைத்து கட்சிகளுமே வோரா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்தார்கள்.காரணம் கட்சி வேறு பாடில்லாமல் அனைத்து கட்சிகளிலும் சமூக விரோதிகள் கலந்திருந்தார்கள்.கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்த தாதா அரசியல் கூட்டு அனைத்து கட்சிகளிலும் வளர்ந்திருக்கிறது. தங்களின் தேவைக்கு ரௌடிகளை வளர்ப்பதும் அரசியல் வாதிகள்தான் வளர்த்த கடா வேண்டாத கடா ஆகி மார்பில் பாயும் போது போலீசை ஏவி அவர்களை அழித்தொழிப்பதும் அரசியல்வாதிகள்தான்.கடந்த காலங்களில் போலீஸ் மோதல்களில் கொல்லப்பட்ட நக்சல்பாரிகளைத் தவிர ரௌடிகள் அனைவருமே ஏதோ ஒரு அரசியல் கட்சியால் பாலூற்றி வளர்க்கப்பட்டவர்கள்தான்.தேர்தல் காலங்களில் தங்களின் அராஜக அரசியலுக்கு தொண்டர்களைக் காட்டிலும் இம்மாதிரி ரௌடிகளை நம்பியே இருக்கிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள்.பிரமுகர்கள்,அரசியல்வாதிகள்,காவல்துறை உயரதிகாரிகள்,கல்வி நிறுவன அதிபர்கள் என அனைவ்ருமே ஏதோ ஒரு ரௌடியை தங்களின் தொழிலுக்கு துணையாக வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏனென்றால் ரௌடிகள் இல்லாமல் இந்த தொழில்களை இவர்களால் செய்ய முடியாத அளவுக்கு சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.கிராம கூட்டுறவு வங்கிகள்,ரேஷன் கடைகள் என சிறு ராஜ்ஜியமாக உருவாகும் இம்மாதிரி அரசியல் ரௌடிகள் அரசியல் வாதிகளின் ஆசியோடும் போலீசின் துணையோடும்தான் வளருகிறார்கள் என்பதற்கு கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடிகளின் இறந்த கால அரசியல் தொடர்புகளை கிளரினாலே தெரியும்.

புத்திசாலி ரௌடிகள் எம்.எல்.ஏ. எம்.பி. ஆகி விடுகிறார்கள்….

ஒரு கான்ஸ்டபிள் சாராய வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் ஆனார். என்ன செய்யலாம் என யோசித்தவர் வசிதிக்காக கரைவேட்டி ஒன்றை வரித்துக் கொண்டார். மெள்ள அந்தக் கட்சியின் தலைவருடன் நெருக்கம் பேணியவர் அவருக்கு பாதுகாப்புப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். தலைவர் எங்கு போனாலும் பத்து பல சாலிகளோடு பாதுகாப்புக் கொடுப்பதுதான் அவரது வேலை. அடியாள் வேலை பார்த்த இந்த மனிதர் இன்று இந்தியாவின் பெரிய கல்வி வள்ளல். தமிழகத்தில் மிகப்பெரிய பொறியியல் கல்லூரிகளின் அதிபர் என்பதோடு தனது பல்கலைக்கழகத்தின் பெயரில் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், பெரியமனிதர்களுக்கு டாக்டர் பட்டங்களை வாரி வழங்குகிறார். இது போல தென்னகத்தில் எஸ்.ஏ. ராஜா என்று ஒரு கல்வி வள்ளல் இருந்தார் அப்போதே ஆகப் பெரிய ரௌடியாக வலம் வந்தார். போலி மருத்துவக் கல்லூரி நடத்தி எண்பதுகளிலேயே அம்பலப்பட்டவரை அரசியல் தொடர்புகள் காப்பாற்ற கல்வி எல்லை விரிவடைந்தது. ஆனால் போட்டிக்கு இன்னொரு பெரிய மனிதர் வந்தார். அவர் திமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரான ஆலடி அருணா ஆலடி இதே பகுதியில் பொறியியல் கல்லூரியைத் துவங்க ஒரு நாள் காலையில் வாக்கிங் போன ஆலடி அருணாவை வெட்டிப்படுகொலை செய்தது எஸ். ஏ. ராஜாவின் கூலிப்படை. சென்னை விமான நிலையம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற எஸ். ஏ. ராஜா இப்போது சிறையில் இருக்கிறார். ஆலடி அருணாவின் அரசியல் வாரிசான பூங்கோதை திமுக அமைச்சராக இருப்பதால் இந்த வழக்கிலிருந்து எஸ். ஏ. ராஜாவால் தப்ப முடியாவில்லை. ஆனால் கொலை செய்யும் எல்லா ரௌடிகளையும் திமுகவோ சட்டமோ தண்டித்து விடுகிறதா? என்ன?

கருணாநிதியின் குடும்பப் பிரச்சனை காரணமாக மதுரையில் தினகரன் பத்திர்கை அலுவலகம் கொளுத்தப்பட்டு மூன்று தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு காரணம் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி என்பது ஊரரிந்த விஷயம் ஆனால் அழகிரியின் அடியாளாக அந்த கொலை பாதகத்தை முன்னின்று நடத்தியது அட்டாக் பாண்டி என்னும் அரசியல் ரௌடியும் மதுரை மேயர் தேன்மொழியும் முன்னிநின்று நடத்தியவைதான் இந்தக் கொலைகள். ஆனால் தேன்மொழி இன்றும் மதுரை மேயராக இருக்கிறார்.இந்த கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி சில நாட்களிலேயே வெளியில் வர இப்ப்போது அவனுக்கு மதுரை மாவட்ட விவ்சாயத்துறை ஆலோசனைப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கொலைகார அரசியல் ரௌடி இப்போது அரசுப் பதவியில். கருணாநிதியின் சமூக நீதி என்பது இன்றைய காலத்தில் ரௌடி அரசியலின் கூட்டுடனே நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி மட்டுமல்ல ராமதாஸ், வைகோ, ஜெயலலிதா, திருமாவளவன் என எந்தத் தலைவரை எடுத்துக் கொண்டாலும் ரௌடிகளின் துணையில்லாமல் அரசியல் செய்ய முடியாத சூழலை இவர்களே உருவாக்கி விட்டார்கள்.

முன்னரெல்லாம் கூலிக்கு அடியாட்களை நியமிப்பார்கள். இப்போது இவர்களுக்கு அந்த அவசியமே இல்லை. ரௌடிகள்தான் அரசியல்வாதிகள்…அரசியல்வாதிகள்தான் ரௌடிகள். ஒத்துவராதவர்களை போட்டுத் தள்ளிவிட்டு எஞ்சியிருப்போரை தங்களின் வாரிசு அரசியலுக்கு தூபம் போடும் அரசியல் அடியாட்களாக உருவாக்குவதுதான் இன்றைய திமுகவின் திராவிட இயக்க அரசியல்.

இறுதியாக,

அதிகார மையங்களான போலீஸ்,அரசியல்வாதிகள்,ரௌடிகள் கூட்டை ஒழிக்காமல் ரௌடியிசத்தை ஒழிக்கவே முடியாது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் என்கவுண்ரில் கொல்லப்பட்ட வெங்கடேஷப் பண்ணையார் என்னும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி ரௌடியை ஜெயலலிதாவின் போலீஸ் சுட்டுக் கொன்ற போது அதை வைத்து தெற்கில் ஆதாயம் அடைந்தது திமுக.

அந்த என்கவுண்டர் தியாகமாக மாற்றப்பட்டது. ராதிகா செல்வி என்கிற ஒரு எம்பி திமுகவுக்குக் கிடைத்தார்.ஆனால் சாதிச் செல்வாக்கற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த ரௌடிகளின் மரணங்கள் இவ்விதமாய் மாற வாய்ப்பில்லை.அம்மாதிரி அதிகாரமாய் மாற வாய்ப்பற்ற என்கவுண்டர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வதுமில்லை.

இன்றைய திராவிட இயக்கத்தின் ஓட்டு அரசியலில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகள் எப்படி ஆதாயம் அடைந்து திராவிட இயக்க அரசியலே பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச்சாதிகளுக்கானது என்று மாறிப்போன நிலையில் எல்லா துறைகளைப் போலவே என்கவுண்டர்களிலும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களின் கொலைகள் கேள்விகளற்றுப் போய் விடுகின்றன. இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சென்ற வாரத் தொடர்ச்சி..

Exit mobile version