Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க் குற்றவாளிகளாக்கிப் போராளிகளை அழிக்கும் சதி அம்பலமாகிறது : சபா நாவலன்

warcrimeandgenocideஇலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் போர்க்குற்றமாகச் சுருக்கி அதன் வலுவைக் குறைத்தாயிற்று. இனப்படுகொலை நடைபெற்று ஐந்துவருடங்களை அண்மிக்கும் நிலையில் அதன் பின்னணியில் செயற்பட்ட அனைத்து அழிவுசக்திகளும் ஏறைக்குறைய ஒரணியில் திரண்டிருக்கின்றன. அவை ஒலிக்கும் தொனியில் மாறுபாடுகள் இருப்பினும் அவற்றின் உள்ளடக்கத்தில் பெரிதாக வேறுபாடுகள் கிடையாது. உலகின் தீய சக்திகளின் கூட்டிணைவும் அவற்றின் நகர்வுகளும் ஏதோ ஒரு பயங்கரம் நடைபெறப்போவதற்கான முன்னறிவிப்புப் போன்று காணப்படுகின்றது.

அந்தப் பயங்கரத்திற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற 42 அரசியல் அகதிகள் கைதிகள் பிரித்தெடுக்கப்பட்டு கைதிகள் போன்று தடுத்துவைக்கபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் அவலங்களைக் கடந்து ஜேர்மனியில், பிரான்சில், பிரித்தானியாவில்,இந்தோனேசியாவில் என்று உலகம் முழுவதும் அகதிகளான ஈழத் தமிழர்கள் குற்றவாளிகள் போன்று கண்காணிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக முன்னை நாள் போரளிகள் அந்த நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உளவுப் படைகளால் கண்காணிக்கபடுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் அழிப்பின் முன்னர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்ற எவருக்கும் இலங்கை அரச படைகளுக்கு எதிரான தமது இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதில் எந்தத் தடங்கல்களும் இருந்ததில்லை. இன்று நிலைமை வேறு, புலிகள் இயக்கத்தில் இணைந்து இராணுவப் பயிற்சியெடுத்தவர்களும், தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அந்த விசாரணைகள் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கான விசாரணைகள் என்பதைவிட குற்றம்காண்பதற்கானவையாக அமைகின்றன. கனடா,ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிய பலர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதன் மறுபக்கத்தில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன், அமெரிக்க அரசின் போர்க்குற்றங்களுக்கான தூதர் ஸ்ரிபன் ஜே ரப், அமரிக்க ராஜங்கச் செயலாளர் ஆகிய அனைவரும் ஒரே குரலில் ஒலிக்கின்றனர். இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றங்களுக்கான சுயாதீன விசாரணை நடத்துமாறு கோருகின்றனர்.

போர்க்குற்றம் என்பது என்ன?

ஆயுதம் தாங்கிய மோதல் ஒன்றின் போது, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறியவர்கள் அல்லது போர் விதிகளை மீறியவர்கள் போர்க்குற்ற்வாளிகளாகக் கணிக்கபடுகின்றனர். இது அரசியல் சிந்தனை சார்ந்த கருத்தல்ல. போர் விதிகளை மீறுதல் தொடர்பான இராணுவ ஒழுக்கம் குறித்த கருத்தாகும். தனி நபர்கள், அவர்களின் பங்கு என்பனவே இங்கு பிரதானப்படுத்தப்படுகின்றது.
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) உறுபுரிமைகொண்ட நாடல்ல என்பதால் போர்க்குற்றங்கள் இந்த நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட இயலாத ஒன்றாகும். இந்த நிலையில், இலங்கை அரசின் ஒத்துழைப்போடு போர்க்குறங்களை விசாரணை செய்வதையே இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

இலங்கையில் நடைபெற்றது வெறுமனே போர்க்குற்றமல்ல என்பதையும், அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படும் இனப்படுகொலையின் தொடர்ச்சியே என்பதையும் உலக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் வாய்ப்புக்கள் காணப்பட்டாலும் அதனை முன்னெடுக்க தமிழர்களை பிரதிநிதித்துவப்படுதும் பிழைப்புவாதத் தலைமைகள் முன்வரவில்லை. அவர்கள் தமது நலன்சார்ந்து இனி ஒரு பொழுதிலும் அதற்கு முன்வரமாட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமற்றது.

இன்று ஈராக்கில் நடைபெற்ற யுத்தத்தில் பிரித்தானியாவின் போர்க்குறங்கள் குறித்த விசாரணை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் போர்க்குற்றங்களை வெகு சாதாரணமாகப் புரிந்தவையே.

போர்க்குற்ற விசாரணையின் பின்னணியில்..

இந்த நாடுகள் இலங்கையிலுள்ள தமிழர்களிலுள்ள அக்கறையின்பால் போர்க்குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்தப் போவதில்லை. போர்க்குற்றங்களை ஆதாரமாக முன்வைத்து ராஜபக்ச அரசை மிரட்டி தங்களுக்குத் தேவையாவற்றைப் பெற்றுக்கொள்வதே இந்த நாடுகளின் ஒரே நோக்கம்.

ஆக, இந்த நாடுகள் பலனடைவதற்கு இரண்டு முன் நிபந்தனைகள் தேவை

1.மிரட்டப்படுவதற்காக ராஜபக்ச அரசு தொடர்ந்து ஆட்சியில் நிலைக்கவேண்டும்.

2. போர்க்குற்றம் அதற்கான விசாரணைகள் முழுமையடையக் கூடாது.

இதனால் ராஜபக்ச அரசு கோரிக்கைகளை நிராகரிப்பதும், ஏகாதிபத்திய நாடுகள் மிரட்டுவதும் போர்க்குற்ற விசாரணை மந்த கதியில் நடைபெறுவதும் இன்னும் சில வருடங்களுக்கு நடைபெறும். இந்தப் போக்குத் தொடர்ந்தால் ராஜபக்ச அரசிற்கும் பலனுண்டு.

1. சிங்கள மக்கள் மத்தியில் தன்னை போர்க்குற்றவாளியாக்க தனது எதிரிகள் முயற்சிக்கிறார்கள் என்ற அனுதாப அலையை ஏற்படுத்தி அதனை வாக்குகளாக மாற்றிக்கொள்ளும்.

2. தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகக் காட்டிக்கொண்டு உலகின் ஜனநாயக சக்திகளிடமிருந்ட்து சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அன்னியப்படுத்தும்.

இந்த வகையில் ஏகாதிபத்திய நாடுகளது நலன்களும் ராஜபக்ச அரசின் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இந்த இடைவெட்டுப் புள்ளியே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் ஆபத்தான முற்றுபுள்ளியாகவும் அமையலாம்.

யாருக்காக …

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் நடத்திய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அதன் ஆரம்பத்திலிருந்தே அழிவுகளூடாகக் கடந்துவந்து 2009 இல் முள்ளிவாய்க்காலில் இரத்தமும் சதையுமாகக் கரைக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்திய அரசின் துணையோடு வன்னிப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தின என்பதை 2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஜேர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்பாயம் முடிவுசெய்வதற்கு பல வருடங்களின் முன்பே சமூக அக்கறையுள்ளவர்களால் எச்சரிக்கப்பட்டது. இவ்வாறான ஏகாதிபத்திய குண்டர்படைகளின் குரல் ராஜபக்சவைத் தண்டிப்பதற்கானதல்ல. அதனை அவர்களே தெளிவாகக் கூறியுள்ளனர். ராஜபக்ச போன்ற மிரட்டலுக்கு உட்படுத்தக்கூடிய கிரிமினல்களை ஆட்சியில் வைத்திருப்பதே அவர்களுக்கு உகந்தாகும்.

டேவிட் கமரன் யாழ்ப்பாணத் தெருக்களில் தனது அடியாட்களோடு அலைந்துவிட்டு கொழும்பிலும் பிரித்தானியப் பாராளுமன்றத்திலும் பேசியவற்றில் எந்த இடத்திலாவது இலங்கை அரசைத் தண்டிக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாகப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கிறார்.

டேவிட் கமரன் கூறியவற்றையே அமெரிக்காவும் இப்போது இந்தியாவும் கூறுகின்றன. இவர்களின் கருத்துக்களையே ஐக்கிய நாடுகள் நிறுவனம் பின் தொடர்கிறது. டேவிட் கமரன் மீளமீள உமிழ்ந்தவை தெளிவானவை. புலம் பெயர் மற்றும் இலங்கை அரசியல் தலைமைகளால் திரிக்கப்பட்ட பொழிப்புரைகள் வழங்கப்பட்டன என்றாலும் அவர் சொன்னவற்றின் சாரம்சம் இவைதான்.

1. போர்க்குற்றம் விசாரணை செய்யப்பட வேண்டும்.

2. இலங்கையில் கொடூரமான, அவமானகரமான புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது.

3. பயங்கரவாதத்தின் மீதான போரில் இலங்கை வெற்றிபெற்றுள்ளது வரவேற்கப்படத்தக்கது.

4. மீண்டும் அந்தப் பயங்கரவாதம் முளைவிடாது தவிர்க்கப்பட வேண்டும்.

5. சுய நிர்ணைய உரிமைப் போராட்டம் மீண்டும் எழாமலிருக்க அதிகார அமைப்புக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.

இவற்றைத் தவிர டேவிட் கமரன் எதந்தக் கருத்தையும் முன்வைகவில்லை. இதன் பிறகு இலங்கை தொடர்பாகப் பேசிய அனைத்து ஏகபோக அடியாட்களும் ஏறக்குறைய ஒரே கருத்தையே முன்வைத்தனர். இதற்கும் மேலே ஒருபடி சென்ற ஸ்ரிபன் ரப், புலி இயக்க உறுப்பினர்களைத் தண்டிக்காமல் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்ததைக் கண்டித்திருக்கிறார்.

போர்க்குற்ற விசாரணையில் மறைந்திருப்பது என்ன?

புனர்வாழ்வு முகாம்கள் என்ற இலங்கை அரசாங்கத்தின் சித்திரவதைக் கூடங்களைக்கூடக் கண்டிக்காத அமரிக்கப் பிரதிநிதி புலி உறுப்பினர்களைத் தண்டித்திருக்க வேண்டும் என்கிறார்.

ஆக, ஏகாதிபத்திய நாடுகளின் நோக்கம் இரகசியமானவை அல்ல. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமும் அதன் கருத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான நோக்கம். அவ்வாறான போராட்டம் ஒன்று அழிக்கப்பட வேண்டுமானால் செய்யவேண்டியது என்ன என்பதையும் அவர்களின் கருத்துக்கள் வெளிப்படையாகக் கூறுகின்றன.

1. சுய நிர்ணய உரிமை என்ற கருத்தோடு மீண்டும் ஆயுத எழுச்சியைத் தோற்றுவிக்க முனைபவர்கள் தண்டிக்கபட்டு அழிக்கப்பட வேண்டும்.

2. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள அதிகார வர்க்கங்கள் இணைந்து இதனை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்.
மாற்றத்தை ஏற்படுத்தவல்ல போராளிகள்…

இந்த நிலையில் கழுத்தில் சயனைட் வில்லையோடு எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி களத்தில் ஆயுதம் தாங்கிப் போராடிய முன்னை நாள் போராளிகளே இவர்களின் உடனடிக் குறியாகவிருக்கும். டேவிட் கமரனும், ஸ்டீபன் ராப் உம் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் நிறுவனமும் இதனையே கூறுகின்றது.

போராளிகள் ஏகதிபத்திய நாடுகள் தம்மை அழித்ததை நேரடியாகக் கண்டவர்கள். சந்தர்ப்பவாதிகள் தம்மை ஏமாற்றியதைக் கண்முன்னே பார்த்தவர்கள். உள்ளிருந்தே தம்மை அழித்தவர்களை அறிந்துகொண்டவர்கள். தவறான வழிமுறைகளில் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டவர்கள். தமிழ் மக்கள் மத்தியிலான ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து போராட்டத்தில் இணைந்துகொண்ட இவர்களுக்கு வர்க்கம் சார்ந்த அரசியல் தெரியாது. அது குறித்த தெளிவான நிலைப்பாட்டிற்கு அவர்கள் வரும் நிலையில் இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே வெற்றிகரமான போராட்டத்தை நடத்தவல்ல ஆயிரம் தலைவர்களின் வலிமைபெறுவார்கள். அதன் மறுபுறத்தில் டேவிட் கமரனும் ஸ்ரிபன் ரப்பும் பிரதிநிதித்துவம் செய்யும் ஏகாதிபத்தியங்களின் தீர்க்கமான எதிரிகளாவார்கள்.

ஆக, போர்க்குற்றம் என்ற தலையங்கத்தில் இப் போராளிகளை அழிப்பதும், சிறையிலடைப்பதும், சமூகத்திலிருந்து அன்னியப்படுத்துவதுமே ஏகாதிபத்திய நாடுகளின் உடனடிச் செயற்பாடாக அமையும்.

ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் ராஜபக்ச அரசிற்கு அழுத்தம் வழங்கப்படுவதான தீர்மானம் நிறைவேற்றப்படும். ஜெயலலிதா வாக்குப் பொறுக்கும் நோக்கோடு நிறைவேற்றும் தீர்மானங்களைப் போன்றே அமையவிருக்கும் இத் தீர்மானங்களின் பின்னர் ராஜபக்ச அரசு போர்க்குற்றவாளிகள் என்று தனது எதிரிகள் சிலரைத் தண்டிக்க வாய்புண்டு. அது சவேந்திர சில்வாவிலிருந்து பாலித கோகண வரைக்கும் செல்ல வாய்ப்புண்டு.

அதன் மறுபக்க்த்தில் நிறைவேறப் போகும் பயங்கரத்தில் புலிகளின் போர்க்குற்றம் என்ற அடிப்படையில் அப்பாவிப் போராளிகள் தண்டிக்கப்படப் போகிறார்கள். ஸ்ரிபன் ராப் இதற்கான முன்னுரையை இலங்கையில் ஏற்கனவே வழங்கிவிட்டார். புலி உறுப்பினர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ராப் இன் கூற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, புலம் பெயர் புலிசார் பிழைப்புவாதிகளோ மூச்சுக்கூட விடவில்லை. இதன் இன்னொரு நடவடிக்கையாக, ஆபிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும், தாய்லாந்திலும் எந்த உதவிகளுமின்றி வீசியெறியப்பட்டுள்ள போராளிகள் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் புகலிடம் தேடிய முன்னை நாள் போராளிகள் போர்குற்றம் என்ற தலையங்கத்தில் அழிக்கப்படுவார்கள்.

போராளிகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது…

இதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. முன்னை நாள் போரளிகள் பலரின் பெயர்கள் இன்டர்போல் தேடுவோர் பட்டியலில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. அவுஸ்திரேலிய அரசு 42 தமிழர்களைக் கைதுசெய்து வைத்துள்ளது. பிரித்தானியாவில் சிலர் போர்க்குற்றம் என்றபெயரில் கைதானதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுளன.

முள்ளிவாய்க்காலில் மக்களைக் காட்டிக்கொடுத்த அதே அரசியல் தலைமைகள் கைதுசெய்படும் போராளிகள் குறித்தோ அவர்களின் எதிர்காலம் குறித்தோ எந்தத் துயரமும் அடைவதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை எந்த நிபந்ததனையும் இன்றி அங்கீகரித்த இவர்களே அப்பாவிப் போராளிகளையும் காட்டிக்கொடுத்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மார்ச் மாதத் தீர்மானங்களின் பின்னர் , போர்க்குற்ற விசாரணை என்றும் தண்டனை என்றும் ஆயிரக்கணக்கில் உலகம் முழுவதும் போரளிகள் அழிக்கப்படும் போது தமிழ் அரசியல் தலைமைகள் என்ன செய்யப்போகிறார்கள். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் அதன் கருத்தையும் அழித்த அதே ஏகாதிபத்தியங்கள் ராஜபக்சவைத் தண்டித்து தமிழீழம் பெற்றுத்தரும் என நம்பக்கோரியவர்கள் இன்று சிறிதுசிறிதாகத் தலைமறைவாகின்றனர்.

இன்றுவரை புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் தலைமையைத் தக்கவைத்துக்கொண்ட இத் தலைமைகள் தலைமறைவாகிவிட சுய நிர்ணய உரிமைகான கோரிக்கையை முன்வைக்கும் அனைத்துத் தரப்பும் காட்டிக்கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். முள்ளிவாய்கால் அவலம் இன்னும் நிறைவடையவில்லை. அதன் இறுதிக்கட்டத்திற்கு ஏகபோக அரசுகளும், பிழைப்புவாதிகளும் மக்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னர் அதிகார வர்க்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தலைமைகள் புலிகொடிகளோடே ராஜபக்சவுடன் சமரசத்திற்கு வரும். இவர்களைக் கையாள மேட்டுக்குடித் தமிழர்கள் உலகம் முழுவதும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிரியார் இமானுவலும், சுரேன் சுரேந்திரனும் தலைதாங்கும் உலகத் தமிழர் பேரவை தன்னார்வ நிறுவன நிதியைப் பெற்றுக்கொண்டு உலகம் சுற்றிவருவது இதற்கான சிறந்த்த குறியீடு.

இன்னொரு பக்கத்தில் புலியெதிர்ப்புக் கும்பல்கள் மத்தியில் மக்கள் மத்தியில் போராட்டங்களுக்கு எதிரான ஏகாதிபத்திய மற்றும் இலங்கை இந்திய நலன் சார்ந்த சிந்தனையை உருவாக்க குண்டர்படை ஒன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் அதே தன்னார்வ நிறுவன நிதியில் அரசியல் நடத்தும் ஜெர்மனிய தன்னார்வ அமைப்பான ஐ.என்.எஸ்.டி மேலும் பலரோடு இணைந்து மீட்சி பெறுகிறது. இலங்கை அரசோடு நல்லிணக்கத்தைப் பேணும், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் எதிரிகளாகக் கணிக்கப்படும் சிலர் பல்வேறு நாடுகளிலிருந்து ஐ.என்.எஸ்.டி உடன் இணைந்து பாரிசில் ஒன்றுகூடியிருந்தனர். இலங்கையில் பிரதான முரண்பாடாகக் காணப்படும் தேசிய இன முரண்பாடைக் கையாள்வது தொடர்பான போராட்டங்களை இடதுசாரிகள் மத்தியிலிருந்து அகற்றுவதற்கு தன்னார்வ நிறுவன நிதிப்பலத்தோடு களமிறக்கப்பட்டுள்ள இந்தக் குழுவும் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை அழிக்க இன்னொரு முனையிலிருந்து களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் பற்றுள்ள அரசியல் சக்திகளின் உடனடிச் செயற்பாடுகள் என்ன?

1. போர்க்குற்றம் என்ற அடிப்படையில் இலங்கை அரச உயர்மட்ட உறுப்பினர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

2. போர்க்குற்றம் என்ற தலையங்கத்தில் இனப்படுகொலையையும் பேரினவாத அழிப்பையும் நியாயபடுத்தக்கூடாது.

3. விடுதலைப் புலிகள் அமைப்பைத் தண்டிப்பதாகவிருந்தால் அதன் தாக்குதல்களைத் திட்டமிடும் தலைமை மட்டுமே விசாரணைகு உட்படுத்தப்பட வேண்டும்.

4. புலிகளில் போரிட்ட போராளிகள் பேரினவாதத்திற்கு எதிரான தற்காக்கும் யுத்தத்தையே நடத்தினார்கள்.

என்ற கோர்க்கைகள் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் முன்னால் வைக்கப்பட வேண்டும். இக் கோரிக்கைகளின் அடிப்படையில் அழிக்கும் நோக்கில் நகரும் ஏகாதிபத்திய நாடுகளை மக்களின் உரிமைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்த வேண்டும்.

தவிர, இதுவரைக்கும் ஏகபோக நாடுகளின் அருவருப்பான அடியாட்கள் போன்று தமிழ்ப் பேசும் மக்களை உலகமக்கள் முன் உருவகப்படுத்திய நிலை மாற்றப்பட்டு முற்போக்கு ஜனநாயக சக்திகள் என்ற அடிப்படையிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய வாதிகள் என்ற அடிப்படையிலும் ஈழப் போராட்டத்திற்கான புதிய தலைமை தோன்ற வேண்டும்.

நயவஞ்சகர்களும், பிழைப்புவாதிகளும், காட்டிக்கொடுப்பாளர்களும், திருடர்களும் நிறைந்திருக்கும் சூழலில் போராட்டத்தையும் மக்களையும் மீட்டெடுப்பது சமூகப்பற்றுள்ள அனைவரதும் கடமை.

Exit mobile version