Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற அறிக்கையும் எங்கள் தலைவன் பிரபாகரனும் : சபா நாவலன்

War-Crime
போர்க்குற்ற ஆதாரங்கள் வெளிப்படையானவை

இலங்கைப் பேரினவாத அரசு 2009 ஆம் ஆண்டு நடத்திய வன்னிப் படுகொலைகள் ஏதோ தற்செயலாக நடைபெற்ற துயரச் சம்பவம் போன்று கருதப்படும் நிலை தோன்றியுள்ளது. இயற்கையின் எழில் கொஞ்சிய உலகின் சிறிய மூலை ஒன்றில் ஒதுக்கப்பட்ட மக்கள் ஆயிரமாயிராமாய் கொன்று போடப்பட்ட கோரம் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப்படப் போகின்றது. முப்பது வருடப் போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய அரசியலை முன்வைக்க தமிழ்த் தலைமைகள் தவறின. எதற்கெடுத்தாலும் புலிகளின் பாதை என்றும் பிரபாகரன் வழி என்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தி முடித்துள்ளன.

கொலைகார அரசுகளதும் உளவுத்துறைகளதும் பிடியில் அனைத்தையும் ஒப்படைத்த அதே தலைமைகள் இன்றும் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கின்றன. போர்க்குற்ற விசாரணை என்ற தலையங்கத்தில் அத்தனை ஆதாரங்களையும் சேகரித்த ஐ.நா இன்று அவற்றை அழித்துவிடும் நிலைக்கு வந்தடைந்துள்ளது. ஏகாதிபத்தியங்கள் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வது போன்று மேடையேற்றிய நாடகம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அழிவிற்குப் பொறுப்பானவர்களே ஏகாதிபத்திய நாடுகளிடமும் உளவுத்துறைகளிடமும் போராட்டத்தை விற்பனை செய்துவிட்டு இன்று எல்லாமே முடிந்துவிட்டது என்று கையைவிரிக்கிறார்கள். புதிய அரசியல் வியாபாரத்திற்கான வெளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

முன்னை நாள் மகிந்த ராஜபக்ச அரசு நடத்திய இனவழிப்பை போர்க்குற்றம் என்று அழைத்த ஏகாதிபத்திய நாடுகள் போர்க்குற்றத்திற்கு எதிராக விசாரணை நடத்தி நீதிபெற்றுத் தரப்போவதாக அறிவித்தன. மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே மனித உரிமை தொடர்பாகவும், மனிதாபிமானம் தொடர்பாகவும் கூச்சல் போட்டு வந்தன.

பொதுவில் இந்த நாடுகளிடம் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்று காணப்படும்.

1. தாம் அடக்கியாள விரும்பும் காலப்பகுதியில் தேவைப்படும் போது போராட்ட இயக்கங்களையும் போரையும் தூண்டிவிடுவது.

2. அப்போராட்டங்களைத் தனி நபர்கள் ஊடாகவோ, தன்னார்வ நிறுவனங்கள் போன்ற தமது அமைப்புக்களின் ஊடாகக் கையாள்வது.

3. தமது மறைமுகக் கட்டுப்பாட்டினுள் இயக்கப்படும் போராட்டங்களைத் தாம் விரும்பும் காலங்களில் அழித்துவிடுவது.

4. போராட்டங்களை அழித்த பின்னர் தோன்றும் எதிர்ப்பியக்கங்களையும், மனித உரிமை மீறல் பிரச்சனைகளையும் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்துவது.

5. தமது அடியாட்கள் நடத்திய அழிப்பின் பின்னர் தோன்றும் எதிர்ப்பை வெறும் மனித உரிமைப் பிரச்சனையாகச் சுருக்கி தமது துணை நிறுவனங்களான ஐ.நா போன்றவற்றின் ஊடாகக் கையாள்வது.

6. இறுதியில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி தமக்குச் சார்பான அரசியல் சூழலை ஏற்படுத்துவது.

இவ்வாறான ஒரு படிமுறையின் ஊடாகவே ஈழப் போராட்டத்தின் இறுதி மூச்சும் நிறுத்தப்பட்டது. இவ்வாறே, வன்னி மனிதப் படுகொலைகளின் பின்னான பேரழிவின் சூத்திரதாரிகளும் காப்பாற்றப்பட்டனர். ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து இனப்படுகொலை நடத்தியவர்கள், அதன் பின்புலத்தில் தொடர்புடைய அரசுகள் மற்றும் தனிநபர்கள் ஆகிய அனைவருமே காப்பாற்றப்பட்டனர்.

வன்னியில் நடைபெற்ற படுகொலைகள் குறுகிய நேரத்தில், குறுகிய காலப்படுகுதியில், ஒரு லட்சம் உயிர்களைப் பலிகொண்ட இனவழிப்பு.

ஐரோப்பிய சமூகம் ரோமானிய காலத்திலிருந்தே இவ்வாறான இனவழிப்புக்களை அனுபவித்த ஒரு சமூகம். ஆயிரமாயிரமாய் மக்களை அழித்த ரோமானியப் பேரரசு மக்கள் போராடக் காரணமாவிருந்த யேசு என்ற மனிதனைக் கடவுளக்கிவிட்டு, கிறீத்தவ மதத்தைப் பரப்பியது. அன்று ஆரம்பித்த வரலாற்றின் பின்பகுதி இன்று உலகம் முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது.

ராஜபக்ச போன்ற உள்ளூர் யுத்தப் பிரபுக்களின் துணையோடும் இந்திய அரசின் துணையோடும் அழிப்பை நடத்திய ஏகாதிபத்திய நாடுகள் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பை மட்டும் நடத்தவில்லை, தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்ட நியாயத்தையும் அழித்தன.

அந்த அழிப்பு நடைபெற்ற பின்னர் எதிர்ப்பியக்கங்களையும், மனித உரிமை மீறல் பிரச்சனைகளையும் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்துவது(4) என்ற தந்திரோபாயத்தை ஏகாதிபத்திய நாடுகள் பயன்படுத்தின. அழிப்பு நடைபெற்ற போது பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா நிறுவனம் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதாக நம்பிக்கை கொடுத்தது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற ஏகாதிபத்திய நிதி வளத்திலும் ஆலோசனையிலும் இயங்கும் அமைபுக்கள் மட்டுமே வன்னியில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்தும் பேசின.

புலம் பெயர் தேசங்கள் முழுவதிலும் திரள் திரளாகத் தமிழர்கள் வாழ்ந்த போதிலும் ஏகாதிபத்திய அமைப்புக்களுக்கு மாற்றாக அமைப்புக்கள் எதுவும் தோன்றுவிக்கப்படவில்லை. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சிறிய முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன. அழிப்பிற்குத் துணை சென்ற அதிகாரவர்க்கக் கட்சிகளின் உறுப்பினர்களும், பாராளுமன்ற அரசியல் வாதிகளும் மட்டுமே அறிந்துகொள்ளும் வகையில் மட்டுமே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. புலம்பெய நாடுகளில் வாழும் சாமனிய மக்கள் மத்தியில் குறைந்தபட்சப் பிரச்சாரங்கள் கூட மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் மத்தியிலிள்ள அரச எதிர்ப்பியக்கங்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் போன்றன அன்னியப்படுத்தப்பட்டன.

ஆளும் வர்க்கங்கள் கூட ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மக்கள் மத்தியில் தான் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்ட முற்பட்ட மேற்கின் அரசுகள் ஊடகங்கள் ஊடாகவும், பிரச்சாரச் சாதனங்கள் ஊடாகவும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டன. ஆனால் ஈழப் பிரச்சனையை மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதற்கும் அவற்றை ஆளும் வர்க்கங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தவும் ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுச் செயற்பட்டன.

இந்த நயவஞ்ச்கத் திட்டத்திற்கு தமிழர்களின் தலைமையை கையில் வைத்திருந்த அமைப்புக்கள் துணை சென்றன. குறிப்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடுகடந்த தமிழீழம், உலகத் தமிழர் பேரவை போன்ற பிரதான அமைப்புக்கள் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கும், ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கும், மனித உரிமை அமைப்புக்களில் ஊதியத்திற்கு உழைப்பவர்களுக்கும் மட்டுமே இனப்படுகொலையைக் கொண்டு சென்றன.

இவை அனைத்தும் தோல்வியடையும் என்றும், இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டு எஞ்சிய போராளிகளும் உரிமைப் போராட்டமும் அழிக்கப்படும் என்று எச்சரித்தவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர். பிரபாகரன் தங்களது கைகளிலேயே போராட்டத்தை ஒப்படைத்திருக்கிறார் என்று தமக்குக் கவசமணிந்துகொண்டனர்.

இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் துணை அமைப்பான ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் நேரடியன பங்கிருப்பதை தமிழ் அமைப்புக்கள் தெரிந்து வைத்திருந்தன.

சண்டே லீடரில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஆதாரங்கள்

ரஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கும் கூட ஐ.நாவின் செயலாளரான பன் கீ மூனின் நேரடிப் பங்களிப்பிருந்தது. 3ம் திகதி ஜுலை மாதம் 2005ம் ஆண்டு வெளியான சண்டே லீடர் வார இதழ் பதிப்பில் இதற்கான ஆதாரங்கள் வெளியாகியிருந்தன. அவ்வேளையில் தென் கொரியாவின் வெளி நாட்டமைச்சராகப் பதவி வகித்த பன் கீ மூன் இலங்கை சென்று ராஜபக்சவால் தோற்றுவிக்கப்பட்ட சுனாமி நிதியத்திற்குப் பெரும் தொகைப் பணத்தை வழங்கினார். அப் பணமே பின்னதாக ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

இதன் மறு புறத்தில் பிரித்தானிய உளவுத்துறையின் கையாளாகச்  செயற்பட்ட அன்டன் பாலசிங்கம் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் நோக்கத்துடன் தமிழ்ப் பகுதிகளில் தேர்தலை நிராகரிக்க முடிவெடுத்து பிரபாகரன் ஊடாக உத்தரவிடுகிறார்.

ஏகாதிபத்தியங்கள் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கான திட்டங்களை இனப்படுகொலைக்குப் பல ஆண்டுகளின் முன்னரே திட்டமிட ஆரம்பித்துவிட்டன. இவ்வாறு நூற்றுக்கணக்கான உள்ளக ஆதாரங்கள், வரலாற்றுப் பாடங்கள் என்று எம் முன்னே நீண்டு கிடக்கும் போது ஐக்கிய நாடுகளை நிறுவனத்தையும் அமெரிக்காவையும் நம்புமாறு தமிழ்த் தலைமைகள் அழைப்பு விடுத்தன.

இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து காப்பாற்றும் என முள்ளிவாய்க்காலில் புலிகளையும் மக்களையும் குந்தியிருக்கக் கோரி அழித்த அதேதலைமைகள், முள்ளிவாய்க்கால் அழிவுகளின் நீண்ட கலத்தின் முன்பே தமது அழிப்பை ஆரம்பித்துவிட்டன. ஏகதிபத்தியங்களாலும் அவற்றின் உளவு அமைப்புக்களாலும் தூண்டப்பட்ட இவர்கள் இன்னும் தமிழர்களின் தலைமைகள் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றனர்.

காட்டிக்கொடுப்பு இன்னும் தொடர்கிறது.

இக் காட்டிக்கொடுப்பின் பின்னால் ஏகாதிபத்திய நிதி, திட்டமிட்ட கிரிமினல் வலையமைப்புக்கள் போன்ற அனைத்தும் காணப்படுகின்றன. இவர்களுக்கு எதிராகப் பேச விளைகின்றன ஒவ்வொரு மனிதனும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றான்.

2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னான காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் இனப்படுகொலையினதும் இனச் சுத்திகரிப்பினதும் பின்னணியில் இப் புலம்பெயர் அமைப்பின் தலைமைகளும் அதன் பின்னணியிலுள்ளவர்களும் செயற்பட்டனர்.. இவ்வமைப்புக்களின் அடிமட்டத்தில் நேர்மையாகச் செயற்படும் அப்பாவிகள் ஏமாற்றப்படுகின்றனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-TCC-:

கைதாகி விடுதலை செய்யப்பட்ட சாந்தன்

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் புலிகளின் அடையாளத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் அமைப்புக்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முதன்மையானது. 1978 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவிருந்த அ.அமிர்தலின்ங்கம் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அக்காலப் பகுதியில் பிரித்தானியாவில் வாழ்ந்த உயர் குடித்தமிழர்களில் ஒருவரான வைகுந்தவாசன் என்பவரது தலைமையில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. பின்னதாக இவ்வமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாகச் செயற்பட ஆரம்பிக்கிறது. குறிப்பாக 1994 ஆம் ஆண்டிலிருந்து சாந்தன் என்று அறியப்பட்ட கிருசாந்தகுமார் அருணாசலம் என்பவரால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வழை நடதப்படுகிறது.

பெருந்தொகைப் பணத்தைக் கையாண்ட சாந்தன் பிரித்தானிய உளவுத் துறையால் 2007 ஆம் ஆண்டு குண்டுகளைக் தயாரிக்கும் கருவிகளை வைத்திருந்தார் எனக் குற்றம் சுமத்தப்படுகிறார். பின்னதாகச் சாந்தன் விடுதலை செய்யப்பட்ட போதும் சாந்தனோடு கைதான பலரின் விபரங்கள் தெரியவில்லை. சாந்தனின் கைது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் உண்டு. கைதிற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் பிரித்தானிய உளவுத்துறையின் முகவர்களாகச் செயற்பட இந்த அமைப்பு பிரித்தானிய உளவுத்துறைக்காக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதை அந்த அமைப்பிலிருந்த பலர் சாட்சியாகக் கூறுகிறார்கள்.

புலிகளையும் மக்களையும் அழித்த பிரித்தானிய அரசினதும் உளவுத் துறையினதும் அடியாள் அமைப்பாகச் இன்றும் செயற்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இனப்படுகொலைக்குத் துணை சென்றது.

கருணா, டக்ளஸ் போன்ற இலங்கைப் பேரினவாத அரசின் அடியாட்கள் நேரடியாகவே இனப்படுகொலையில் பங்குகொண்டார்கள். இனப்படுகொலையில் இலங்கை அரசின் பின்னணியில் செயற்பட்ட பிரித்தானிய அரசின் இராணுவத் துணைப்படை போன்றே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வேலை செய்திருக்கிறது. ஆக, இனப்படுகொலையிலும் புலிகளின் அழிவிலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பங்காற்றியிருக்கின்றது.

உலகம் முழுவதிலும் மாவீரர் தினக் கொண்டாடங்களை நடத்துவதற்கான ஏகபோக உரிமையை வைத்திருக்கும் இவ்வமைப்பு, போர்க்குற்ற விசாரணைக்காக ஜெனீவாவில் போராட்டம் நடத்துவதாகக் கூறிவருகிறது. சில ஆயிரம் மக்களைக் கூட்டிவைத்து Our leader Prabaharan என்று ஐ.நா முன்றலில் முழக்கமிடும் TCC இன் போராட்டங்கள் அந்த அமைப்பின் தலைவர்களின் பிழைப்பிற்கு மட்டுமே பயன்படுகிறது. இனப்படுகொலைக்குத் துணை சென்றவர்களே அதற்கு எதிராகப் போராடுவதாக அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது. இந்த நாடகத்தின் இயக்குனர்கள் உளவுத்துறையில் பணியாற்றும் வெள்ளைக்காரத் துரைமார்களைத் தவிர வேறுயாருமல்ல.

பிரித்தானியத் தமிழர் பேரவை-BTF-:

2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களோடும் அரசுகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவதையும் ஆதரவளிப்பதையிம் தனது செயற்பாட்டு முறையாகக் கொண்டிருந்தது. ஒரு புறத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் கூட்டங்களில் பேசும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மறுபுறத்தில் இலங்கை அரசிற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்கினர்.

இனவழிப்பிற்குத் துணை செல்பவர்களுடன் ஐந்து நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து பியர் குடிப்பதை இவர்கள் லொபி அரசியல் என அழைத்துக்கொள்வார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பியப் பாராளுமன்றம், மனித உரிமை அமைப்புக்கள் போன்றவை மட்டுமே இக் குழுவின் செயற்பாட்டு வட்டத்தில் அணுகப்பட்டன. ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு போன்ற கோமாளித்தனமான உப அமைப்புக்களை ஏற்படுத்திக்கொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை, இனப்படுகொலைக்கு எதிரான உலக அபிப்பிராயம் தோன்றாமல் தடுப்பதில் பிரதான பாத்திரம் வகித்த அமைப்புக்களில் ஒன்றாகும்.

தவிர, நாடுகடந்த தமிழீழம், உலகத் தமிழர் பேரவை ஆகியன வெறும் அறிக்கை அமைப்புக்களாகச் சுருங்கிப் போய்விட இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தையும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் அழிப்பதில் இந்த இரண்டு அமைப்புக்களும் பிரதான பாத்திரம் வகிக்கின்றன.

இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலிருந்தே அரசுகளையும் ஏகாதிபத்திய நாடுகளையும் உளவுத்துறையையும் நிராகரித்து மக்கள் சார்ந்த அரசியல் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு இவ்வமைப்புக்களை நோக்கிப் பலர் குரல்கொடுத்தனர். இவ்வமைப்புக்களின் தலைமைப் பதவியை இறுகப்பிடித்திருக்கும் பலர் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இணைந்து செயற்படுகின்றனர்.

ஏகாதிபத்தியங்களால் நியமிக்கப்பட்ட ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்ட வேலையை ‘கறைபடாமல்’ செய்து முடித்தபின்னர், தற்காலிகமாகவே ஒய்வெடுத்துக்கொள்கிறார். ஐ.நாவில் போர்க்குற்றத் தீர்மானத்தை முமொழிந்த அமெரிக்காவில் பசில் ராஜபக்ச ஓய்வெடுத்துக்கொள்கிறார். இந்த இடைக்கட்டத்தில் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியானார்.

இவ்வேளையில் ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணையை முன் மொழிந்த அமெரிக்கா அறிக்கையை வெளியிடுவதைப் பின்போட்டுள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் ராஜபக்ச அரசு மீண்டும் தலையெடுக்கலாம் என்பதே. போர்க்குற்றம் தவிர்ந்த பல்வேறு ஊழல் குற்றங்களுக்காகவே ராஜபக்ச குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களையும் சிறைப்பிடித்துவிட்டு தேர்தலில் அமோக வெற்றி பெறுவது மைத்திரி-ரனில் கூட்டாட்சிக்கு ஒன்றும் சிரமமான காரணமல்ல. போர்க்குற்ற அறிக்கையைத் தாமதப்படுத்தி அழிப்பதிலேயே ஏகாதிபத்தியங்கள் குறியாக உள்ளன.

இதனால் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. இனப்படுகொலையின் சுவடுகள் ஐ.நாவால் உள்வாங்கப்பட்டு அழிக்கப்பட்டன.

2. இனப்படுகொலையை நடத்திய யுத்தப்பிரபு ராஜபக்சவும் இரகசியங்களும் காப்பாற்றப்பட்டன.
தேவைப் படும் நேரத்தில் ஆட்சியிலமர்த்த மகிந்த, பசில் போன்றோர் மிக அவதானமாகப் பாதுகாக்கப்படுகின்றனர்.

இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தால் போல, மனித உரிமைச் செயற்பாட்டாளர் கிருபாகரன் எந்தக் கூச்சமுமின்றி இனிமேல் எல்லாமே முடிந்துவிட்டது என ஈனக் குரலில் சொல்கிறார். அத்தோடு கூடவே தமிழர்கள் ஒற்றுமையாகவிருந்து இன்னும் அமெரிக்காவையும் ஐரோப்பிய அரசுகளிடம் முறையிட வேண்டும் என்கிறார். கடந்த ஆறு வருடங்கள், பல லட்சம் பணம் செலவு செய்யப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜெனீவாக் கூட்டங்கள், தொலைக்காட்சி விவரணங்கள் என மனித உழைப்பு விரையமாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இழப்பின் பின்னர் எந்தத் தயக்கமுமின்றி எல்லாம் முடிந்துவிட்டது எனக் கூறும் கிருபாகரன்,

ஐ,நாவும் அமெரிக்காவும் இணைந்து பொது வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழம் பெற்றுத் தரும் என்று மக்களிடம் கூறினார். இதுவரை நடந்தவற்றிற்கு மன்னிபுக் கேட்கும் அறம் கிருபாகரன் போன்றவர்களிடம் இல்லாவிட்டாலும், இனியாவது தவறான வழிமுறைகளை நோக்கி மக்களை வழிநடத்தாமலிருப்பதற்கு அவர் தயாரில்லை.

ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்காக அழித்தவர்களையே தண்டிகக் கோருவது கேலிக்கிடமானது. ஐ.நாவில் போர்க்குற்ற அறிக்கை தயாராகி விட்டது. அதனைச் வெளியிடமாட்டோம் என்கிறது அமெரிக்காவும், ஐ.நாவும் இலங்கை அரசும் இணைந்த கூட்டு.

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாமதிக்கப்பவது தற்காலிகமானது. இனிமேல் அது வெளிவரவே மாட்டாது என்பதே சரியானது. ஐ.நா வை நம்புவதற்குப் பதிலாக புதிய மக்கள் சார்ந்த அரசியல் முன்வைக்கப்பட வேண்டும்.

போராட்டங்கள் அழிக்கப்பட்டமையும், அவை மாபெரும் சக்தியாக மீண்டமையும் எமது கண்முன்னே பல உதாரணங்களாக நீண்டு கிடக்கின்றன.

குர்திஸ்தான் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்ட வேளையில் கடந்து போன வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய போராட முறைகளை முன்வைத்தார்கள். ஏகாதிபத்திய முகவர்களும், காட்டிக்கொடுப்பாளர்களும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டு புதிய வழிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குர்தீஸ் மக்களின் பிரிந்துசெல்லும் உரிமைக்கான போராட்டத்தை குர்தீஸ் தொழிலாளர் கட்சி என்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்குகிறது.

நமது தமிழ்த் தலைமைகள் போன்று ஏகாதிபத்தியங்களின் பின்னால் அவரக்ளின் அடியாட்கள் போன்று செயற்படுவதற்குப் பதிலாக உலகின் ஒவ்வொரு போராட்ட அமைப்புக்களுடனும் இணைப்பை ஏற்படுத்திய குர்தீஸ் தொழிலாளர் கட்சி, புலம்பெயர் நாடுகளில் ஜனநாயக சக்திகள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவுத் தளம் ஒன்றை உருவாக்கினர். அவர்களை ஒடுக்கும் துருக்கி அரசிற்கு எதிரான துருக்கியர்களோடும் குறிப்பாக துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியோடும் இணைந்து வேலைசெய்தனர்.

இன்று உலகின் பலம் பொருந்திய விடுதலை அமைப்புக்களில் குர்தீஸ் தொழிலாளர் கட்சியும் ஒன்று.

1996 இலிருந்து 2006 வரையன பத்தாண்டுகளில் மன்னராட்சிக்கு எதிராக நேபாள மாவோயிஸ்ட் கட்சி நடத்திய போரட்டம் வெற்றியடைந்தது. 2006 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா உட்பட ஏகாதிபத்திய நிறுவனங்களுடன் இணைந்து மாவோயிஸ்டுக்கள் செயற்பட ஆரம்பித்ததும் கட்சி படிப்படியாகச் சிதைக்கப்பட்டு பிற்போக்கு சக்திகள் மீண்டும் தலையெடுத்தன.

ஐரோப்பிட அமெரிக்க நாடுகளே போர்க்குற்ற விசாரணைக்க்கு ஆதரவளித்தன. சீனா ரஷ்யா கியூபா போன்ற நாடுகள் எதிர்த்தன அதனால் எமக்கு வேறு வழியில்லை எனத் தமிழ்த் தலைமைகள் கூறின. நாடுகள் தமது ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையிலேயே செயற்படும். அவற்றின் வலையில் வீழ்ந்துவிடாமல் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்பட்டவர்கள் தோல்வியடைந்ததில்லை.

இன்று,

1. கடந்த காலத் தவறுகள் தொடர்பாக ஆராய்வதும்,

2. கடந்தகாலத்தின் மீதான விமர்சங்களின் அடிப்படையில் புதிய அரசியல் திட்டத்தை முன்வைப்பதும்

அவசரத் தேவையாகிவிட்டது. இவை உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால் தொடர் அழிவுகளை நிறுத்த முடியாது.

இவற்றிலிருந்தே புலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். மக்கள் போராட்டம் என்பது ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என ஐ.நா அலுவலகத்தின் முன்னால் கூச்சலிடுவது என்பது தவறானது. அதற்கான மக்கள் சார்ந்த அரசியல் திட்டமும் பொறிமுறையும் தேவையானது. கஷ்மீரிலும், நாகாலந்திலும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டங்களை அழிக்க முடியவில்லை. பாரம்பரிய ஆயுதங்களோடு போராடும் இந்தியப் பழங்குடி மக்களைக் கண்டு சிறப்பு அதிரடிப்படை அஞ்சுகிறது. உலகம் முழுவதும் பரந்திருக்கும் ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றியோர்’ எனத் தற்பெருமை பேசிக்கொள்ளும் தமிழர்கள் மட்டும் அழிப்பவரக்ளிடமே சரணடைந்துள்ளனர். இன்று போர்க்குற்ற விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்ட பின்னான அரசியல் சூழலில் புதிய மக்கள் சார்ந்துள்ள அரசியல் முன்வைக்கப்படாவிட்டால் அழிவுகள் இன்னும் தீவிரமாகும்.

பிரித்தானிய உளவுப்படையின் அடியாட்களாக மாறிப்போன TCC- இன்னொரு முள்ளிவாய்க்கால் தயாராகிறது:ரஞ்சித்.

Exit mobile version