Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்றவாளி ராஜபக்ச பிரித்தானியா வருகிறார் – என்ன செய்யப்போகிறோம்? : கோசலன்

“யூன் 6,7ம் நாட்களில் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கவென சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்ச வருகை தரவுள்ளர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையோடு தொடர்ந்தும் தமிழினம் மிதான படுகொலையை நடாத்திவரும் சிறிலங்காவின் சனாதிபதி அவர்கள் பிரித்தானியவிற்கு வந்து நிகழ்வில் கலந்துகொள்வதை இரத்துச்செய்யக்கோரி (44)2070248200 – (44)2070248239 – (44)2070248271 என்னும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவேண்டும்.
புலம்பெயர் வாழ் அனைத்துத் தமிழ்மக்களும் இந்நடவடிக்கை மிகவேகமாகசெய்யக்கூடிய வகையில் தங்கள் நாடுகளில் செயற்திட்டங்களை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.”

இது இன்று பரவலாக பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுக்கு மின் அஞ்சலாகவும் கைத்தொலைபேசியில் குறும் செய்தியாகவும் சமூக வலைத் தளங்களில் செய்தியாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தவிர, பிரித்தானிய மகாராணியை இரஞ்சும் செய்திகளும், பிரித்தானிய அரசை கெஞ்சும் செய்திகளும் பரவலாக எங்கும் காணப்படுகின்றன.

வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் போது உலக மனித நீதி அவமானப் படும் வகையில். மருத்துவ மனைகள் மீதும் பாடசாலைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. பிஞ்சுக் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும், முதியோரும் மிகப்பெரும் மனிதப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு எல்லாம் புலம் பெயர் தமிழர்கள் மண்டியிட்டு இரைஞ்சும் பிரித்தானிய அரசும் பின்னணியில் இருந்திருக்கிறது என்பதை சொல்வதற்கு யாரும் தயாரில்லை.

இன அழிப்பு கோரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 2009ம் ஆண்டில் பிரித்தானியத் தெருக்களில் ஒரு லட்சம் தமிழர்கள் கொட்டும் மழையிலும், சில வேளைகளில் பொலீசாரின் தடைகளையும் கடந்து, பனி உறையும் குளிரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். பிரித்தானிய அரசு போர்க்குற்றவாளி ராஜபக்சவைக் கண்டிபதாகக் கூட அவ்வப்போது அறிக்கை வெளியிட்டது.

ஆனால் அதே ஆண்டு – 2009 இல் – இன அழிப்பைத் துரிதப்படுத்துவதற்காக £700000 பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானிய அரசு இலங்கைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கியிருந்தது. 2009 மே மாதம் யுத்தம் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த சில மாதங்களுக்கு உள்ளாகவே 1 மில்லியன் பவுண்ஸ் பெறுமானமுள்ள ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியது.

இன அழிப்பு நிகழ்த்துவதற்கான தயாரிப்புக்களை 2005 முதல் 2008 வரையான யுத்த நிறுத்தக் காலத்திலேயே இலங்கை அரசு மேற்கொண்டது. தனது இராணுவ வலிமையை அதிகரித்துக் கொள்ளும் நோக்கோடு இராணுவத் தளபாடங்களையும் அழிவு ஆயுதங்களையும் வாங்கிக் குவித்தது.
இந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கிய ஆயுதங்களின் தொகை 18 மில்லியன் பவுண்ஸ்கள் பெறுமதியானது.

2009 வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவில் ஆட்சியிலிருந்த தொழிற்கட்சியில் பல தமிழர்கள் அங்கம் வகித்திருந்தார்கள். அதே புலம் பெயர் மேட்டுக்குடிகள், பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்தத தமிழீழம் போன்றவற்றிலும் அங்கம் வகிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்களே இந்த அமைப்புகளை வழி நடத்தும் பேர்வளிகளாகவும் இருக்கிறார்கள்.

இவர்களை விமர்சித்தால் “ஒரு குடையின் கீழ் ஒன்று சேருங்கள்” என்று ஒற்றை வார்த்தையில் கூறுவார்கள்.

இன்று தமிழ்ப் பகுதிகள் முழுவதும் இராணுவச் சிறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் கோரமாக அழிக்கப்படுகிறார்கள்.

புலம் பெயர் நாடுகளின் மேட்டுக்குடிகள் தமிழ் மக்களிடம் இன அழிப்பிற்கு உதவி செய்த நாடுகளை நம்புங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். முப்பது வருடமாக எது நடந்ததோ எது அழிவை உருவாக்கியதோ அதே அரசியலை எந்த மாற்றமும் இன்றி இப்போதும் முன்வைக்கிறார்கள்.

இந்திய அரசு இலங்கையில் இன அழிப்பிற்கு வழங்கிய ஆதரவு வெளிப்படையானது. ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆதரவு நயவஞ்சகத் தனமானது.
இன அழிப்பு நிறைவடைந்து இந்த மூன்று ஆண்டுகளில் அமரிக்கா வருகிறது, இந்தியா வருகிறது ராஜபக்சவை தூக்கில் போட்டுவிடுவோம் என்று திரும்பத் திரும்ப மக்களை மந்தைகளாகி தமது சொந்த வாழ்க்கையை வழப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஈழத்தில் வாழும் மக்களுக்காக போராடப் போவதாக விம்பத்தைக் கொடுக்கும் இவர்கள் இன அழிப்பு நடந்து மூன்றாண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு துரும்பைக் கூட அசைத்தது கிடையாது.

திட்டமிட்ட வேலைமுறையின் ஒரு பகுதியாக தொலை பேசி அழைப்பும், அரசுகளை கோருதலும் அமையுமானால் அது சில விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் ஒரு சமூகத்தை அழிமையாக்கி இன அழிப்பை நடத்தியவர்களையே நம்பக் கோருவதானது அழிவுகளை மட்டுமே இறுதியாக்கும்.
இந்த நிலையில் போர்க் குற்றத்திற்கும் இன அழிப்பிற்கும் எதிரான புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்தல் சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

உலக அளவில், சர்வதேசத் தளத்தில் போர்க்குற்றத்திற்கும் இன அழிப்பிற்கும் எதிரான வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்கும் புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கும் உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளும், மனித உரிமை குறித்து அக்கறை கொண்டோரும் தயாராக உள்ளனர். இங்கு யார் என்கிருந்து ஆரம்பிப்பது என்பதிலேயே சிக்கல்கள். புலம் பெயர்ந்த தமிழ்ப் பேசும் மக்கள் தேசிய அரசியல் வியாபாரிகளின் பிடிக்குள் சிறைப்பட்டு இருக்கும் வரை மூன்று ஆண்டுகள் அல்ல இன்னும் முப்பது ஆண்டுகள் சென்றாலும் இதே நிலை தொடர்வது தவிர்க்க முடியாதது.

Exit mobile version