போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தமது வர்த்தக நலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்கின்றன என பொதுநலவாய நாடுகளின் மாநாடு மீண்டும் ஒரு முறை மக்களுக்கு அரசியல் பாடம் சொல்லித்தருகின்றது. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்திய அன்னிய நாடுகளுக்கும் எதிரான போராட்டம் என்பது மாற்றுக் கருத்தின்றி நிறுவப்படுகின்றது.
ஈழப் போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே அது ஏகாதிபத்தியங்களால் கையாளப்பட்டது. தமிழ்த் தலைவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த நாடுகளின் முகவர்களாகவே செயலாற்றி வந்துள்ளனர். உலகின் ஏனைய போராட்டங்களைப் போலன்றி எந்தவகையான புரட்சிகர அரசியல் முன்னோக்குமற்ற இராணுவக் குழுக்களாகவே போராட்டம் நகர்த்திச் செல்லப்பட்டது. புலிகள் உட்பட்ட போராட்டக் அமைப்புக்கள் இந்தியா உட்பட அனைத்து நாடுகளாலும் வெறும் அழுத்தக் குழுக்களாகவே பயன்படுத்தப்பட்டன. இதற்காகவே லட்சக்கணக்கானோர் மாண்டுபோயினர். ஆயிரமயிரமாய்க் கொல்லப்பட்டனர். நூறாயிரம் பேரின் பிணக்காடாக வன்னி மண் மாறிப்போனது.
மிகவும் துயர்தரும் அரசியல் யாதெனில் இன்றும் தோற்றுப்போன அதே போராட்ட வழிமுறைகளை நியாயப்படுத்துவதனூடாக அழிவுக்கான வழிகளை இன்னும் அகலத் திறந்துவிடுகின்றமையே. இன்றும் இந்தியாவினதும் மேற்கு ஏகாதிபத்தியங்களதும் அடிமைகளாகவும், அழுத்தக் குழுக்களகவும் பயன்படுகின்ற தமிழ் இனவாத அரசியல் தேசிய அரசியலல்ல. தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் விதேசிய அரசியல்.
இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை அந்த அரசிற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியலாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக இவற்றை வர்த்தகச் சுரண்டலுக்கன மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்த தமிழ் அரசியல் தலைமைகளே முன்வரிசை எதிரிகள்.
அண்டிப்பிழைக்கும் இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசை பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தண்டிக்கப் போவதாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அதே வேளை இந்த அரசுகள் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்காக இலங்கை அரசோடு தேனிலவு கொண்டாடுவதை மறைத்துவிடுகின்றனர்.
வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு பல வழிகளில் உதவிகளை வழங்கியது. இவை குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை எனினும் ஆயுத விற்பனையிலிருந்து ஆலோசனைகள் வரை பல்வேறு வழிகளிலான உதவிகளை வகைப்படுத்தலாம். இந்த அரசுகளின் நேரடியான ஆதரவாளர்களாகப் புலம் பெயர் தமிழர்கள் உலாவந்த போதே இவை நடைபெற்றுள்ளன.
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த காலதில் இரண்டு உயர்மட்ட பிரிதனிய அதிகாரிகள் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்க அனுப்பிவைக்கப்பட்டனர். வட அயர்லாந்து போலிஸ் சேவையச் சேர்ந்த இந்த அதிகாரிகள் இலங்கைக்கு உதவி வழங்க அனுப்பிவைக்கப்பட்டமை குறித்து கோப்ரட் வாச் என்ற நிறுவனம் தகவல் பெறும் சுதந்திர சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட தகவல்களைத் தொடர்ந்து இந்த உண்மை வெளியானது.
இலங்கை அரசிற்கும் அதன் இடைவிடாத பயங்கரவாதத்திற்கும் பிரிதானிய அரசு வழங்கிவரும் உதவிகள் வரலாற்றுரீதியானவை.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்கியமை ஏற்கனவே வெளியான செய்தி. பிரிதானிய அரசு வழங்கிய இராணுவ உதவி புதிய செய்தி.
பிரித்தானிய ஆவணக் காப்பகம் பல வருடங்களுக்கு ஒரு முறை அரச ஆவணங்களை வெளியிடுவதுண்டு. இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு நேரடியான ஆதரவை பிரித்தானிய அரசு தொடர்ச்சியாக வழங்கிவருவதை வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1971 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) என்ற கிளர்ச்சிக் குழு ஆயுதம் தாங்கி இலங்கைப் போலிஸ் நிலையங்களைத் தாக்குதல் செய்ய ஆரம்பித்திருந்தது. சிறியரக ஆயுதங்களுடன் பலமற்ற போலீஸ் நிலையங்களை அது கையகப்படுத்திக்கொண்டது. அப்போது இலங்கையின் பிரதமாரகவிருந்த சிறிமாவோ பண்டாரனாயக்க இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அவசர அவசரமாகப் பிரகடனப்படுத்தினார். அரச படைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. இந்திய அரசும் மேற்கு ஏகபோக அரசுகளும் உதவிக்கு அழைக்கப்பட்டன.
இலங்கை அரச படைகள் சிங்களக் கிராமங்களில் மிருகத்தனமாக நடந்துகொண்டன. போர்க்குற்றங்கள் புரிந்தன. போர்க் குற்றங்கள் குறித்து பிரான்ஸ் மற்றும் அமரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
பிரான்சிலிருந்து வெளியாகும் லூ மொந் மற்றும் அமரிக்க நியோயோர்க் ரைம்ஸ் ஆகியவற்றின் போர்க்குற்றம் குறித்த செய்திகளை ஆதாரம் காட்டிய பிரெட் ஹலிடே என்பவரின் கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகிறது :
‘ஏப்பிரல் மாதம் 17- 20 திகதிகளில் கொலைகள் குறித்த முதலாவது செய்திகள் வெளியாகின. ‘ஒரு கைதி போராளி என நாம் திருப்தியடந்தால் மயானத்திற்கு எடுத்துச் சென்று கொலைசெய்துவிடுவோம்’ என்று கூறும் அதிகாரி ஒருவரின் கூற்று பத்திரிகைகளில் வெளியாகின. அரசு இதனை நிராகரித்தது. ஆனால் சில வாரங்களின் பின்னர் கொழும்பிற்கு அருகாமையில் களனிய ஆற்றில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உடல்கள் மிதந்தன. சிப்பாய்கள் இவற்றைச் சேகரித்து எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்கள் தலையின் பின்புறத்தில் சுடப்பட்டிருந்தனர். முழு விவசாயிகள் மீதும் அரசபடைகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது தெளிவாகின்றது’.
கொழும்பு பிரித்தானிய தூதரகம் அதன் வெளிவிகார அமைச்சு அலுவலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியிருந்தது. அதன் சாரம் பின்வருமாறு:
விசாரணையின் பின்னர் துப்பாகிக் குழுவால் கொலைசெய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் குறித்த அறிக்கை இன்று வெளியானது. கேகாலை இராணுவ இணைப்பதிகாரியிடம் இருந்து கிடைத்த தகவல்கள் இவை என்பதால் இதுகுறித்துச் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இதற்கு முன்னர் இவ்வகையான கொலைகளையும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தென்மேற்கு லண்டனிலுள்ள ஆவணக்காப்பகத்தில் இத்தகவல்கள் இன்றும் காணப்படுகின்றன.
இலங்கை அரசபடைகள் ஜே.வி.பி ஐ முழுமையாக அழிப்பதில் உறுதியாக உள்ள என்பது மட்டுமன்றி கொடூரமான வன்முறைகளையும் பயன்படுத்த தயாராக உள்ளன என்ற மற்றொரு தகவலை ஏப்பிரல் 20ம் திகதி பிரித்தானியத் தூதரகம் லண்டனுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இவை அனைத்தையும் தெரிந்துவைத்திருந்த பிரித்தானியா அரசிற்கு அதன் தூதரகம் சில காலங்களின் பின்னர் இன்னொரு செய்தியையும் அனுப்பியது :
‘மிகவும் பிரதானமானது என்னவென்றால், மாட்சிமைதங்கிய மாகாராணியின் அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்ட சிறிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், கவச வாகனங்கள் உட்பட ஏனைய பொருட்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வேகமான நடவடிக்கைகளையும் தீர்க்கமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.’‘
இந்த ஆயுத பேரங்களுடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அலுவலகம் ஆயுதங்களை எவ்வாறு பயனுள்ள வகையில் பன்படுத்துவது என்பது குறித்து இலங்கை அரச படைகளுக்குப் பயிற்சி வழங்கியது. 21ம் திகதி ஏப்பிரல் 1971 இலிருந்து 28 ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் பிரித்தானிய உளவுப்படையும், போலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இணைந்து இந்த இரகசியப் பயிற்சியை வழங்கினர்.
உகண்டாவில் போலிஸ் கமிஷனராக வேலைபார்த்த மைக்கல் மக்கௌன் என்பவரும் உலகின் பல பாகங்களில் போராட்டங்களை ஒடுக்குவதில் பெயர்பெற்ற ரொஜர் மே என்பவரும் இந்த பயிற்சியைத் தலைமை தாங்கினர்.
இவையெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் 16.05.1971 பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இலங்கைக்கு பிரித்தானியா இராணுவ உதவிகளை வழங்குகிறதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்தார்.
அவரின் பதில் பின்வருமாறு:
‘இலங்கை அரசு எம்மிடம் இராணுவத் தளப்பாடங்களையோ, இராணுவ உத்தியோகத்தர்களையோ, ஆலோசகர்களையோ கேட்கவில்லை. அதனால் அவற்றை வழங்கவில்லை’
வன்னிப்படுகொலைகளை நடத்துவதற்கு இரண்டு பிரித்தானிய ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னர் பிரித்தானிய அரசு ஆயுதங்களை நேரடியாக வழங்கியது. இன்றோ ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குகிறது. பல மடங்கு முன்னோக்கிச் சென்றுள்ள நவீன வசதிகள் தகவல்களைத் துரிதப்படுத்துவதிலும் அதிகமாக கொலைகளை வேகப்படுத்துகின்றன.
தமிழர் தலைமைகளோ பிரித்தானிய அரசிடமும் இந்திய அரசிடமும் மக்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் விற்பனை செய்துவிட்டு தங்கள் பணப்பையை நிரப்பிக்கொள்கின்றன.
முன்னைய காலத்தில் போராட்டம் என்பது இலங்கை அரசிற்கும், ஏகாதிபத்திய அரசுகளும் எதிரானது மட்டுமே. இன்றோ இந்த அரசுகளுக்கெல்லாம் போராட்டத்தைக் காட்டிகொடுக்கும் தமிழர் தலைமைகளுக்கும் எதிரானது.
பிரித்தானியாவும் அமரிக்காவும் இந்தியாவும் தலையிடப்போகிறது என்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த மக்களை நம்பவைத்து அழித்துச் சாம்பலாக்கிய இத்தலைமைகள் அகற்றப்பட்டு புரட்சிகர அரசியலால் நிரப்பப்படும் வரை அழிவுகள் அதிகரித்துக்கொண்டே செல்லும்.