Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போருக்குப் பின்பான பிரதான முரண்பாடு : மோகன்

(22 Oct, 2009 at 7:36   அன்று பதியப்பட்ட கட்டுரை. ஐந்து வருடங்களின் பின்னர் இன்றைய காலத்தின் தேவை கருதி மீள் பதியப்படுகிறது)

 இலங்கையின் மாக்சிய லெனினியவாதிகள், இலங்கையின் அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடே எனினும்  குறிப்பான சூழ்நிலைகளின் பயனாகக் கடந்த மூன்று தசாப்தங்களாகத் தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாகத் தன்னை நிலைநாட்டியுள்ளது என்று கூறி வந்துள்ளனர். அதன் பொருள் ஏதென்றால், அந்த முரண்பாட்டின் தீர்வில்லாமல் அல்லது அதன் தீர்வு நோக்கிய பாரிய நகர்வு இல்லாமல்   , ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமோ வர்க்க ஒடுக்கு முறைக்கான போராட்டமோ வெற்றி பெற இயலாது என்பது தான். அதற்கான காரணம் என்னவென்றால் , தேசிய இனப் பிரச்சினை வலியதொரு முரண்பாடாக இருக்கையில் ஒடுக்கப்பட்ட மக்களை இன அடிப்படையில் பிளவுபடுத்துவது ஒடுக்கும் வர்க்கச் சக்திகட்கு இயலுமாயிருக்கும். அதே அளவுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்துவது புரட்சிகரப் போராட்டம் சக்திகட்குக் கடினமானதாக இருக்கும். பிரதான முரண்பாடு என்பதை ஏற்காத நேர்மையான இடதுசாரிகள் பலர் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வு அதி முக்கியமானது என்பதை ஏற்கிறார்கள். இடதுசாரிகளல்லாத சனநாகயவாதிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் இப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை மறுக்க இயலாமைக்கு அது போராக வடிவெடுத்தது முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

 விடுதலைப் புலிகள் தோல்வியை எதிர்நோக்க முன்பிருந்தே, தமிழரிற் சிலர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால்  தேசிய இனப் பிரச்சனை தானாகவே தீர்ந்து விடும் என்னுங் கருத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். தேசிய இனப் பிரச்சனையைப் பயங்கரவாதப் பிரச்சனையாக அடையாளங்காட்டி வந்த பேரினவாதிகளது நிலைப்பாட்டினின்று இது வேறுபட்டதல்ல. இன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். ஆனாற் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கான ஆரோக்கியமான நகர்வு எதற்குமான சாடை தெரியவில்லை.

இன்னொரு புறம் விடுதலைப் புலிகளையும் , சில சமயம், அதன் தலைவரை மட்டும் தமிழ்த் தேசிய இனத்தின் முழுமையான அடையாளமாகப் பார்த்து விடுதலைப் புலிகளது தோல்வியாற் துவண்டு போய் விரக்தி அடைந்தோர் உள்ளனர். சிலரால் விடுதலைப் புலிகளின் தலைவரது சாவை இன்னமும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இவ்வாறானவர்கள் மட்டுமன்றித் தீவிரமான சிங்களப் பேரினவாதிகள் கூட எல்லாத் தமிழரையும் புலிகளாகவே பார்த்தனர்.

 குழப்பம் மிக்க பார்வைகள் பலவற்றுக்குமான காரணம் தேசிய இனப் பிரச்சனையை மக்கள் மத்தியிலான ஒரு முரண்பாட்டின் விருத்தியாகக் காணத் தவறியமையாகும். அதைத் தனியே தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான முரண்பாடாகக் கண்டது ஒரு பெரிய தவறாகும். அதன் வர்க்கத் தன்மையை அடையாளங் காணாமை மற்றொரு பெரிய தவறாகும். மாக்சிய லெனினியவாதிகள் தேசிய இனப் பிரச்சனை எவ்வாறு ஒரு இன ஒடுக்குமுறையாகவும் போராகவும் உருமாற்றம் பெற்றது என்பதை இயங்கியற் கண்ணோட்டத்தில் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்ததால் மேற்கூறிய எக் குழப்பத்திற்கும் பலியாகவில்லை.

 அவர்களது நோக்கிற் தேசிய இனமுரண்பாடு எல்லாத் தேசிய இனங்களையும் தேசிய சிறுபான்மை இனங்களையுஞ் சேர்ந்த மக்களிடையிலான பகைமையற்ற, அதாவது சினேக, முரண்பாடு. அது எவ்வித வன்முறைக்கும் இடமின்றித் தீர்க்கக் கூடியது. அது, ஆளும் அதிகார வர்க்கத்தினரிடையே இருந்த போட்டியின் வடிவிற் தொடங்கி, மக்களின் கவனத்தை அடிப்படையான பொருளாதாரமுஞ் சமூக நீதியுஞ் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்புகிற நோக்கிற் பகை முரண்பாடாக மாற்றப்பட்டது. அதுவே முதலாளிய உலகமயமாக்கலின் தேவை கருதிப் போராகவும் உருமாற்றப்பட்டது. எனினுந் தேசிய இன முரண்பாடு உண்மையில் எந்த இரு தேசிய இனங்கட்கும் இடையிலானதல்ல. அது சிங்களப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களை காட்டிக் கொள்ளுகிற ஒரு ஆளும் அதிகார வர்க்கத்தின் நலன்கள் சார்ந்த பிரச்சினை. அந்த வர்க்க நலனை முன்னெடுக்கும் பேரினவாதப் பிற்போக்குச் சக்திகளதும் அவர்கட்குப் பின்னால் அவர்கட்கு ஆதரவாகச் செயற்படுகிற அந்நிய மேலாதிக்கச் சக்திகளதும் தேவைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட பிரச்சனை. எனவே தேசிய இனப் பிரச்சனையின் பகைமையான அம்சம் தேசிய இனங்களைச் சார்ந்த மக்களுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பற்றியதல்ல. அது பேரினவாத ஒடுக்குமுறை யாளர்கட்கும் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கட்கும் இடையிலானது. எனவே அதைச் சிங்களவர்-தமிழர் முரண்பாடு எனப் பார்ப்பது பல வழிகளிலும் தவறானது. அது சிங்களப் பேரினவாதத்திற்கும் சகல சிறுபான்மைத் தேசிய இனங்கட்கும் தேசிய சிறுபான்மையினருக்கும் இடையிலானது. அப் பகை முரண்பாட்டுக்கு வலுச் சேர்க்கிற ஒரு முரண்பாட்டு அம்சமாகக் குறுந் தேசியவாதத்தையும் குறுகிய இனவாதப் போக்குகளையும் கூறலாம்.

 தேசிய இனப் பிரச்சனையின் தீர்வு இரண்டு முக்கியமான போராட்ட அம்சங்களைக் கொண்டது ஒன்று பேரினவாத ஒடுக்குமுறையாளர்களின் வன்முறை உட்பட்ட பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்துப் போரிடுவது. மற்றது தேசிய இனப் பிரச்சனையின் பகைமையற்ற பண்பை மீளவும் நிலை நிறுத்துவது. இவை இரண்டையும் இயலுமாக்கினாலே தேசிய இனப் பிரச்சனைக்கு நிலையான நியாயமான தீர்வொன்றைப் பெற இயலும். அதற்கான போராட்டம் ஒரு பரந்துபட்ட வெகுஜனப் போராட்டமாகவும் அமைவது அவசியம். அப் போராட்டம், தேசிய இனப் பிரச்சனையை மட்டுமே தனது அக்கறையாகக் கொண்டிருக்க இயலாது. தேசிய இனப் பிரச்சனை ஒடுக்குமுறையாகவும் போராகவுங் காரணமான முரண்பாடுகளையும் ஒடுக்குமுறையாவும் போராகவும் மாறியதன் விளைவான முரண்பாடுகளையுங் கணிப்பில் எடுக்க வேண்டும். அதிற் சம்பந்தப்பட்ட சக்திகளைக் கணிப்பில் எடுத்து நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்ற முடிவுக்கு வரவேண்டும்.

  விடுதலைப் புலிகள் ஒரு ஆயதப் படை என்ற வகையில் முழுமையாக முறியடிக்கப் பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. அவர்கள் என்றேனும் முற்றாக அழிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்குக் காரணமான இன ஒடுக்கற் பிரச்சனை தீர்க்கப் படவில்லை.

 போரின் முடிவு ஒரு முரண்பாடு வெளிப்பட்ட முறையை மாற்றியுள்ளதே ஒழிய முரண்பாட்டின் தன்மையை மாற்றிவிடவில்லை. உண்மையிற் போரின் வெற்றி அதற்குப் பின்னாலிருந்த சக்திகளை வௌ;வேறு வகைகளிற் பாதித்துள்ளது. எனினுஞ் சிங்களப் பேரினவாதம் இப்போது மேலும் ஆக்கிரமிப்புப் பண்புடையதாகி விட்டது. அது முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் முன்னைவிட வெளிப்படையாக இலக்கு வைக்கிறது. எனவே தேசிய இனப் பிரச்சனை மேலும் மோசமாகியுள்ளதே ஒழிய, அது எவ்வகையிலும் இல்லாமற் போகவுமில்லை, தீர்வை நோக்கி நகரவுமில்லை.

 பிரதான முரண்பாடு என்பதை அரசாங்கத்துக்கும் புலிகட்கும் இடையிலான முரண்பாடு என்றோ அடக்குமுறைப் போரும் ஆயுதப் போராட்டமும் என்றோ தமிழருஞ் சிங்களவரும் என்றோ பார்த்தவர்கள் இனி எந்த முரண்பாடு பிரதானமான இடத்துக்கு வரும் என்று தடுமாறுவது இயல்பானது. தேசிய இனப் பிரச்சினை இன்று திட்டவட்டமாகவே புதியதொரு கட்டத்திற்கு வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. அதனால் அதைக் கையாளுகிற விதத்தில் மாற்றங்கள் அவசியமாகின்றன. அது தன்னை வெளிப்படுத்துகிற விதங் காரணமாக முரண்பாட்டின்  வெவ்வேறு தரப்புக்களும் போராட்ட அணிகளும் சில முக்கிய மாற்றங்கட்கு உள்ளாகலாம். ஆனாற் தேசிய இனப் பிரச்சினை பிரதான முரண்பாடாகத் தொடர்வது மறுக்க இயலாத உண்மை.

 இன்றைய நிலைமைகளில், மேலை ஏகாதிபத்தியவாதிகளும் இந்தியாவும் மீண்டும் இலங்கையிற் குறுக்கிட வேண்டும் எனவும் பேரினவாதிகளுடன் அவற்றுக்கு உள்ள முரண்பாடுகளைத் தமிழர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் எனவும் எவரும் ஏதிர்பார்ப்பது, மேலாதிக்கவாதிகள் எதற்காக அக்கறை காட்டுகின்றனர் என்பதை விளங்கத் தவறியதன் விளைவுகள். இலங்கையைத் தமது மேலாதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் யாருடைய தரப்பிலும் இல்லை என்பதையும் அவர்களுக்குப் பிரச்சனையின் நிலையான நியாயமான தீர்வில் அக்கறை இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும். இன்னொரு விதத்திற் பார்த்தாற், தேசிய இனப் பிரச்சினை தீராமற், பகைமையான இன முரண்பாடாகத் தொடருவது அவர்கட்கு வாய்ப்பானதாகும். அதன் மூலம் பொது எதிரிக்கு மாறாக மக்கள் இணைய இயலாமற் செய்யப்படுகிறது.

 எனவே தான் வர்க்க முரண்பாட்டின் பிரதானமான ஒரு வெளிப்பாடான ஏகாதிபத்திய மேலாதிக்கச் சக்திகடகு எதிரான போராட்டத்தின் வெற்றிக்குத் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு ஒரு முக்கிய நிபந்தனையாகிறது. தேசிய இனப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை மறுத்து இந்த நாட்டிற் சமூக நீதிக்கும் சனநாயகத்திற்கும் மனித உரிமைக்குமான போராட்டத்தால் ஒரு எல்லைக்கப்பால் முன்னேற இயலாது என்பதை நாம் மறக்கலாகாது.

Exit mobile version