Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போபால் நீதியின் பெயரால் கொல்லப்பட்டவர்கள் : யாழினி

நீங்கள் உங்கள் நம்பிக்கையை தளர விடாதீர்கள். நீதி இன்னும் புதைகுழிக்குச் சென்று விடவில்லை. போபால் நீதிமன்றத்திற்கு மேலே உயர் நீதிமன்றம் அங்கேயும் இல்லை என்றால் உச்ச நீதிமன்றம் என நீங்கள் நீதி கேட்டுப் போராடலாம். பாவம் அந்த நீதிபதி என்ன செய்வார். போலீசும், சி.பி.ஐயும் என்ன ஆவணத்தைக் கொடுக்கிறார்களோ அதன் படிதானே நீதி சொல்ல முடியும். இவர் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நீதிபதியாக இருந்தாலும் தீர்ப்பு இப்படித்தான் இருந்திருக்கும் …. ஆனாலும் போபால் மக்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை……… இதுதான் ஏமாற்றப்பட்ட போபால் மக்கள் மக்களின் கோபங்கள் குறித்து சில ஆங்கில ஊடகங்களும் இந்திய ஆளும் வர்க்கங்களும் போபால் மக்களை சாந்தப்படுத்தும் வார்த்தைகள்.

அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை சேர்மனாகக் கொண்டியங்கும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து 1984- டிசம்பர் மூன்றாம் தியதி மீதைல் ஐசோசயனைட் (toxic mathyl isocyanate ) என்னும் வாய்வு கசிய பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது மட்டும் 15,000 பேர் பலியாகினர். நீண்ட காலப் பாதிப்பின் அடுப்படையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000- க்கும் அதிகம்.

உடல் ஊனமுற்றோர் ஐந்து லடம் பேர். விபத்தின் பெயரால் இப்படுகொலை நடந்த சமகாலத்தில் பாதிக்கபப்ட்டவர்களோடு இந்தக் கொடுமை நின்று விடவில்லை. அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. மரணம். போபால் மக்களின் வாழ்வின் நீண்ட கால சாபக் கேடாய் ஆண்டர்சனால் வழங்கப்பட்ட பரிசுதான் இந்த விபத்து. சுமார் 26 வருடங்களுக்குப் பின்னர் இப்போது போபால் நீதிமன்றம் யூனியன் கார்பைட் அமைப்பின் இந்தியப் பிரிவுக்கான அப்போதையத் தலைவரான கேஷுப் மஹிந்த்ரா, மேலாண் இயக்குநரான கோகலே, துணைத் தலைவரான கிஷோர் கம்தார் உள்ளிட்ட ஏழு பேருக்கு தலா இரண்டாண்டுகாள் சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது போபால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அந்த ஏழு பேரும் ஜாமீன் பெற்று தங்களின் வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

ஆண்டசனின் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் வேலை பார்த்த மேல் மட்ட ஆளும் வர்க்க முதலாளிகளான எட்டு பேரை இந்த விபத்து வழக்கில் எதிரிகளாக சி.பி.ஐ. சேர்த்திருந்தது. வாரன் ஆண்டர்சனை தப்பிச் சென்ற குற்றவாளி என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு இறுதித் தீர்ப்பு வரை அவர் குறித்து எதையும் குறிப்பிடமால தீர்ப்பை வழங்கியிருக்கிறது. “இந்தத் தீர்ப்பு வெளிவந்த சில மணி நேரங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யூனியன் கார்பைட் நிறுவனம் எங்களை குற்றவாளியாக விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகார வரம்பு இல்லை.” என்று அறிவித்துள்ளது.

ஆனால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட ஒன்பது பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போபால் போலீசாரிடம் வாரன் ஆண்டர்சன் எப்போது வேண்டுமென்றாலும் விசாரணைக்கு வருவேன் என்ற உத்திரவாதம் கொடுத்து தப்பித்தான்.

உண்மையில் இந்திய அரசு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் ஆண்டர்சனை கடைசி வரை கைது செய்யவே இல்லை. கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர் தப்பிச் சென்றார் என்பதே கடைந்தெடுத்த பொய். அவரை இருபதாயிரம் பேரைக் கொன்ற கொலை பாதகத்துக்காக கைது செய்திருக்க வேண்டிய இந்திய அரசு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஒரு உபயோகமில்லாத சம்மனை மட்டுமே அனுப்பியது.

இதன் மூலம் இந்த வழக்கின் தீர்ப்பு 26 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி முடிக்கப்பட்டு விட்டது. ஒட்டு மொத்தமாக போபால் நகரமே மரணப்படு குழிக்குள் தள்ளப்பட்ட போது காங்கிரஸ் கட்சியின் பெருமுதலைகளோ ஆண்டர்சனை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தார்கள்.பின்னர் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் இந்தியா தொடர்ந்த வழக்கை நிராகரித்துச் சொன்ன தீர்ப்புதான் சுவராஸ்யமானது.

இந்தியாவின் அஹிம்சை ஆன்மாவின் உண்மை முகத்தை அமெரிக்க நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியிருந்தது. “இந்த வழக்கை நீங்கள் இந்தியாவிலேயே தொடரலாம். இந்த வழக்கை இந்தியாவில் நடத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள போபால் மக்களுக்கு நீதி தேடுவதன் மூலம். உங்களின் நீதித்துறை வளர்ச்சியடையும்” என்று வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்.

26 வருடங்களுக்குப் பின்னர் இந்திய நீதித்துறையும், ஆளும் வர்க்கங்களும் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பதை அப்போது தீர்ப்பு வழங்கிய அமெரிக்க நீதிபதி இப்போது உயிரோடு இருந்திருந்தால் கண்டு கழிப்புடன் இருப்பார் என்று நம்புவோம். இந்த வழக்கை லோக்கல் போலீஸ் விசாரித்தால் நீதி கிடைக்காது சி.பி.ஐ விசாரித்தால்தான் நீதி கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் இப்போது என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

குற்றவாளிகளின் பட்டியலில் வாரன் ஆண்டர்சனின் பெயர் எங்குமே இல்லை. யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இந்திய இயக்குநர்களாக இருந்த ஏழு பேரை ஒப்புக்கு தண்டிப்பது மாதிரி தண்டித்து விடுதலையும் செய்து விட்டார்கள்.

போபால் தன்னார்வக்குழுக்கள்

அதே காலக்கட்டத்தில் கூடன் குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை கையில் எடுத்தன தன்னார்வக்க்ழுக்கள். போராடினார்கள்…போராடியது போல அதைக் கொண்டு வந்து விட்டு விட்டு இப்போது அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

கூடன்குளத்தில் மீனவ மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. தனியார் தாரளமயத்திற்குப் பிறகு அனல்மின் நிலையங்கள், கனிமங்களைப் பிரித்தெடுக்கும் மணல் ஆலைகள், செய்ற்கைத் தனியார் துறைமுகங்கள் என்று தமிழகத்தின் எல்லா மீனவ கிராமங்களுமே பன்னாட்டு முதலாளிகளாலும் உள்ளூர் முதலாளிகளாலும் அபரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அபகரிப்பு எவ்வித எதிர்ப்பும் இன்று நடந்தேரி வருகிறது.

சமவெளிப்பகுதிகளில் அந்தந்த பகுதிகளில் வாழும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கு இம்மாதிரி தாரை வார்க்கப்படும் திட்டங்களில் பெரும்பலான வேலை வாய்ப்புகளை ஒதுக்குவதால் ஒடுக்கபப்ட்ட மீனவ மக்களின் குரலை பிரதிபலிக்க எவர் ஒருவரும் தயாரில்லை. பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி அரசியலை முன்னெடுக்கும் திராவிட இயக்ங்களும், தமிழ் தேசிய குழுக்களும் இந்த மக்களின் குரலை கண்டு கொள்ளவில்லை. கூடன்குளம் எதிர்ப்புப் போராட்டங்களின் தொடர்ச்சியால் தன்னார்வக்குழுக்களின் கவனம் போபாலில் திரும்பியது அவர்கள் போபால் மக்களுக்காகப் போராடினார்கள்.

இதோ எதிரி தப்பி விட்டான். தொண்ணூறுகளில் இந்த பிரச்சனையில் தலையிட்ட க்ரீன் பீஸ் அமைப்பு என்ன சொன்னதென்றால் “செத்துப் போனவர்களை விட இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை” என்று தனது ப்ராஜெக்டுகளை அதை நோக்கித் திருப்பியது. மேலும் சில தன்னார்வக்குழுக்கள் இதில் மக்களுக்காக போராடிய தோற்றம் உருவாக்கபப்ட்டதே தவிற இந்தப் பிரச்சனை அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படவில்லை. எண்பதுகளில், தொண்ணூறுகளில் இருந்ததை விட இன்றைய இந்தியாவின் முகத்தை வடிவமைக்கும் டிசைனர்கள் இந்திய தொழில் கூட்டமைப்பினரும்,

பன்னாட்டு தனியார் முதலாளிகளுமே 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஈவிரக்கமற்ற முறையில் இப்படியான தீர்ப்பு ஒன்றை வழங்கப்படுகிறது என்றால் அதை வடிவமைப்பவர்கள் இவர்களில்லாமல் வேறு யார்?

அணு உலை இழப்பீடு மசோதா?

இந்நிலையில்தான் ஒட்டு மொத்த இந்திய மக்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவின் காலடிகளில் வைக்கும் அணு உலை இழப்பீட்டு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றி விடும் தீர்மானத்தோடு இருக்கிறது காங்கிரஸ் அரசு. போபால் விஷ வாய்வுக் கசிவும் இருபதாயிரம் மக்கள் படுகொலையும் அதிலிருந்து கொலைகாரர்கள் தப்பிய விதமும் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கும். அதனால்தான் “இந்த வழக்கை மறு விசாராணைக்குட்படுத்தவோ, வழக்கை மீண்டும் விசாரிக்கவோ வேண்டியதில்லை, வாரன் ஆண்டர்ச்னை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இந்தியா எப்போதுமே எங்களிடம் பேசியதும் இல்லை” என்கிறது அமெரிக்கா.

இனி அமெரிக்கா எத்தனை இந்தியர்களை வேண்டுமென்றாலும் கொல்லலாம். அதை உங்களின் பிரதமர் என்று சொல்லிக் கொள்கிறவர்களோ, நமது நீதிமன்றம் என்று சொல்பவைகளாலோ அதன் குடிமக்களைக் காப்பாற்ற முடியாது. சில ஆயிரம் ரூபாய்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ஒரு இந்தியப் பழங்குடிப் பெண்ணைக் கவர்ந்து செல்லலாம். சில லட்சங்களை கொட்டிக் கொடுக்கத் தயார் என்றால் சில ஆயிரம் பேரைக் கூடக் கொல்லலாம் என்பதை மீண்டும் ஒரு முறை போபால் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.

Exit mobile version