Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொற்காலமும்-புதுயுகமும்!:பேராசிரியர் க. கைலாசபதி

Kailasapathy 3(பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர். ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை உடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு.)

சென்னை உயர்நீதிமன்றத்து நீதிபதிகளில் ஒருவராக இருந்த டி.எல். வெங்கட்ராம ஐயர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ‘வட துருவத்திலுள்ள பெரும் பனி மலைகளுக்குத் தீ வைத்துவிடலாம். தமிழிலே புதுமைப் புரட்சியேற்படுவது அதைவிடக் கடினம்’ என்று கூறினாராம். வாய்மொழியாக வழங்கும் இக்கூற்றின் உண்மை பொய் எவ்வாறாக இருப்பினும் அடிப்படையான ஒரு நம்பிக்கை வரட்சியை இக்கூற்று எடுத்து விளக்குவதாக உள்ளது. பழமைப் பற்றும் தன்னிறைவு உணர்வும் தமிழ்ச் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன என்பதே பொதுவாகக் காணப்படும் கருத்து. மாற்றமடையாத, தேங்கி நிற்கும் சமுதாயங்களில் ( (Stagnant Society)) இத்தகைய பழைமையாதிக்கம் காணப்படுவது உலகெங்கும் பொதுவான நியதி. உண்மையான பொருளாதார மாற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சமுதாயப் புனரமைப்பினைத் தொடர்ந்தே புதுமை பூத்துக் குலுங்கும். அதுவும் ஒரு வரலாற்று நியதிதான்.

இவ்விடத்திலே எமது சமுதாயத்திற் காணப்படும் பழைமைப் பிடிப்பின் ஓர் அமிசத்தைச் சிறிது ஆராயலாம். பழைமையாதிக்கத்தைக் கருத்தளவில் ஆராய்ந்து பார்க்கின், அதன் ஊற்றை இனங்கண்டு கொள்ள முடியும். எமது வரலாற்றின் தொடக்கத்திலே மகோன்னதமான பொற்காலம் ஒன்று நிலவியது என்றும், அதன் பின் வரவர இழி நிலை வளர்ந்து வந்துள்ளது என்றும் ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழப்பதிந்துள்ளது. உதாரணமாக, தமிழ் நூல் வரலாறு என்ற நூலிலே திருவாளர் பாலூர் கண்ணப்ப முதலியார் பின்வருமாறு எழுதுகிறார்: “பழங்காலம் பொற்காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நனிநாகரிகராய் வாழ்ந்தனர். தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந்தனர். இலக்கிய வளத்தில் சிறந்து விளங்கினர்”;. எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் இலட்சியவாதிகள் சிலர் குறைபாடெதுவுமற்ற கற்பனையுலகம் ஒன்றைப் பற்றுக்கோலாகக் கொள்வது போலச் சென்ற காலத்தின் ஒரு பகுதியை நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்றகாலமாகச் சிலர் கொள்வர்.

இம் மனப்பதிவு அறிவின் துணையாற் பெறப்படுவதன்று. அரைகுறைச் செய்திகளின் அடிப்படையிலும், ஒரு வகையான மயக்க உணர்வின் அடிப்படையிலுமே பெறப்படுவது. ஆயினும் இதற்கும் கோட்பாட்டு அடிப்படை ஒன்றுள்ளது. அதனைச் சுருக்கமாக விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெரும்பாலான தமிழரைப் பொறுத்தளவில், ஈடிணையற்ற ஏகாதிபத்தியப் பெருமையுடன் ‘அவனி முழுதான்ட’ சோழப் பெருமன்னர் மதிப்புக்குரியவராயிருப்பினும், ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த’ முடியுடை மூவேந்தர் அரசோச்சிய காலப் பகுதியே பொற்காலமாகக் கொள்ளப்படுகிறது. பழமைக்கும் பழமையானதே பாராட்டுக்குரியது போலும். அது மட்டுமன்று, பிற்காலத்திலே தென்னகத்தில் எழுந்த, சேர, பாண்டிய அரசுகளோடும், சோழப் பேரரசோடும் ஒப்பிடும்போது ‘சங்க கால’ முடியுடை மூவேந்தர் குறுநில மன்னராகவே காட்சி யளிக்கின்றனர். கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திலிருந்த செம்பியரான இடைக்காலச் சோழப் பெருமன்னரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புறநானூற்றுப் பாடல்கள் புகழும் சோழமன்னர்கள் சிறுநிலக் கிழாராகவே தோன்றுவர்.

அதைப் போலவே திரிபுவனச் சக்கரவர்த்திகள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட இரண்டாம் பாண்டியப் பேரரசின் பெருமன்னரோடு ஒப்பிடுமிடத்து, சங்ககாலப் பாண்டிய மன்னர் மன்னராகவே தோன்றுகிறார்கள் அல்லர். அவ்வாறிருந்தும், இடைக்காலத்தில் புகழொடு விளங்கிய பாண்டிய, சோழப் பெருமன்னர்கள் வீரயுகத்தில் வாழ்ந்த தத்தம் மூதாதையரது ‘உலகளந்த சிறப்புக்குத்’ தாம் அருகதையற்றவர் என்றே கருதினர். அந்தளவுக்கு வீரயுகம் ஈடிணையற்றதொன்றாகப் பிற்காலத்தவர் கருத்தில் வேரூன்றியிருந்தது. இக் காலத்திலும் தமிழபிமானத்தோடு பெயர் மாற்றிச் சூட்டிக் கொள்பவர்கள் வீரயுக மன்னர் பெயர்களையும் அவை போன்றவற்றையுமே விரும்புவது கண்கூடு. சுருங்கக் கூறின், ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக வீரயுகம் “சான்றோர் வாழ்ந்த காலம்” கழிந்த பொற்காலமாகக் கருதப்பட்டு வருகிறது.

இப்பழமைப் பற்று நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவாக உள்ளது. நியாயமான புராதனப் பெருமை, நியாயம் அற்ற அகங்காரம், அர்த்தமற்ற தூய்மை வாதம் முதலியவற்றிற்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது. இதற்கு காரணம் பொற்காலத்தைப் பற்றிய பெருமித உணர்வேயாகும்.

கிரேக்க இலக்கியங்களிலும் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் காணலாம். தமது ‘இன’ வரலாற்றுத் தொடக்கத்தில் இயற்கையின் மத்தியில் மக்கள் இன்பமாக வாழ்ந்த பொற்காலம் ((Golden Age) ) ஒன்று இருந்தது எனக் கிரேக்க ஆதிக்கவிகளே நம்பினர்.

இறுதியாக ஒன்று கூறலாம். பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. அரசியல் அதிகாரத்தை நாடும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் மொழி, இனம் ஆகியவற்றின் பழைய பொற்காலத்தை மக்களுக்குக் காட்டித் தம் கருமம் பார்க்கின்றனர். இலக்கிய சனாதனிகள் பொற்காலத்தைப் பிரமாணமாகக் கொண்டு ‘தொல்லாசிரியர் நல்லாணை’ என்ற பெயரில் தமது வலுவிழந்த கோட்பாடுகளை நிலைநாட்ட முயல்கின்றனர். இனவாதிகள், பொற்காலத்தைத் தமது சிறையில் அடைத்துக் காட்சிக்காக வைத்துப் பிழைக்கின்றனர்.

இவையெல்லாம் பொற்காலத்தைப் பயன்படுத்துவோர் பற்றியன. ஆனால் மக்களும் பொற்காலத்தைத் தமக்குப் பற்றுக்கோடாகக் கொள்வதுண்டு. முடியுடை மூவேந்தர் ஆட்சியும் உறந்தை போன்ற இடங்களிலிருந்த அறங்கூறவையங்களும் அக்கால மன்னர்கள் மக்கள் மீது திணித்த வர்க்க ஆட்சியையே காட்டுகின்றன. இரத்த உறவினராய் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த நேசபாசத்துடன் இயற்கையின் மத்தியில் வாழ்ந்த குலமரபுக் குழுக்களின் அழிவின் மீதே அரசுகள் ‘வர்க்க ஆட்சி’ ஏற்பட்டது. அந்த வர்க்கத்தின் வழிவழி வரும் இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர்.

ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. ஆகவே அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை யுடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு.

Exit mobile version