Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுவுடமை போராளி சூடாமணியுடனான அனுபவ பகிர்வு : சை. கிங்ஸ்லி கோமஸ்

மனித நேயம் உலகின் மாற்றத்தின் முதல் அத்தியாயம் என்று உறுதியாய் வாழும் பொதுவுடமை போராளி சூடாமணியுடனான அனுபவ பகிர்வு

2011.10.08 தினம் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வித்தியாசமான நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. தனது 75 ஆவது வயதினை பூர்த்தி செய்த மூத்த பொதுவுடமை போராளி இ.கா. சூடாமணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிச கட்சியின் வவுனியா கிளை, தோழர் சூடாமணியின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தோழர் சூடாமணியின் அனுபவப் பகிர்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

முதிர்ச்சி,அனுபவம் ,பொறுமை ஆகிய மூன்றையும் இணைத்து மனித நேயத்தினை அடிநாதமாக கொண்டு மானுட விடுதலைக்கான பாதையினை வெட்டிய தோழர் சூடாமணி, சீனத்துக் கிழவன் மலை வெட்டப் போன கதையினை ஞாபகமூட்டியதனைக் காணக்கூடியதாய் இருந்தது.கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் தனது தோழர்களை சந்திக்க பெரும் ஆவல் கொண்டிருந்ததன் காரணத்தாலும் அவரது வாழ்வும் தியாகமும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெரும் படிப்பினையாக அமைந்தது.

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சூடாமணி

கடந்த 60 வருடங்களாக பொதுவுடமைத்தத்துவத்தை ஏற்றுக் கொண்டவராக மாத்திரம் வாழாது சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து பொலிசாரினால் தாக்கப்பட்டவர் என்பது மட்டுமல்ல பலமுறை பொலிசாரின் ஒடுக்கு முறை காரணத்தினால் சிறையில் அடைக்கப்படடு விடுதலை செய்யப்பட்டவர் என்பது மாத்திரம் அல்லாமல் இன்று யாழ் நகர இந்து ஆலயங்களில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி சுதந்திரமாக ஆலய தரிசனம் செய்கின்றார்கள் இந்த ஆலய நுழைவு போராட்டங்களில் இரத்தம் சிந்தியவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரம் சூடாமணி என்றால் மிகையாகாது.யுத்தத்தின் போது கால்களை இழந்த தனது மனைவியின் கடினமான வாழ்க்கை; புலம் பெயர்வு; தொழில் இழப்பு வறுமை என்று பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தாலும் மிக திடமாக தான் கொண்ட கொள்கையில் இருந்து சற்றும் தளராமல் இன்றும் தனது கட்சிக்காய் உழைத்துக் கொண்டு இருப்பதனை பெருமையாக கூறுகின்றார் சூடாமணி.

சின்ன சின்ன சலுகைகளுக்காக தங்களின் கட்சியை கொள்கையை தூக்கி எறிந்தவர்கள் மத்தியில் துப்பாக்கி அச்சுறுத்தல்களுக்கு பயந்து பொது வுடமையi காட்டிக் கொடுத்து தமிழ் தேசியத்தினுள் புதைந்து போனவர்கள் மத்தியில் குடும்பத்தில் இருந்து வரக் கூடிய விமர்சனங்கள் அதைரியப்படுத்தக்கூடிய கதையாடல்களை வெற்றிக் கொண்டு தான் மாத்திரம் இல்லாமல் தனது குடும்பத்தினரையும் கொள்கைப் பிடிப்பாளர்களாக செதுக்கி வவுனியா பிரதேசத்தில் பு.ஜ.மா.லெ.க பலரை உள்வாங்கி தனது கடமையை மிக சரியாக செய்து முடித்துள்ளார்.

மலையகத்தின் மக்கள் போராட்டங்கள் பலவற்றிலும் இவர் பங்கெடுத்துள்ளார் என்பதனை மலையக தோழர்கள் பலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

தோழர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்து கூற புரட்சிப்பாடல்,கவிதைகள், என நடைப் பெற்ற நிகழ்வின் போது ஒவ்வொரு பிறந்த தினத்தின் போதும் கட்சிக்காகவும் தேசிய கலை இலக்கிய பேரவைக்கும் தான் வழங்கும் நன்கொடையை இம்முறையும் வழங்கியது மாத்திரம் அல்லாது தனக்கு கிடைத்த பணநன்கொடைகள் அனைத்தையும் ஒரு மாணவனிண் மருத்துவ செலவிற்காக அந்த மேடையிலேயே வைத்து வழங்கியது அனைவரினதும் கண்களை கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மலையகம் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு சப்ரகமுவ போன்ற பிரதேச தோழர்களும்; கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களும் உறவினர் நண்பர்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்

65 வருடங்களாக தான் கொண்ட தத்துவத்தினுள் மக்களுக்காய் வாழ்ந்த வாழும் தோழர் சூடாமணி தொடர்பான நூல் தயாராகி வருவதுடன் அவர் தொடர்பான ஆவணப் படம் ஒன்றும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது இவரது வாழ்வும் பகிர்வும் களப்பணியும் இளைய தலைமுறையினரின் இதயத்தில் பதிய வேண்டிய பாடங்களாகும்

Exit mobile version