பொதுநலவாய நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளின் கூட்டு பிரித்தானியப் பேரரசின் கீழ் காலனியாதிக்கத்திற்குக் கீழ் உடபட்டிருந்த 53 நாடுகளை பிரித்தானியா காலனியத்தின் பின் ஒழுங்கமைத்த கூட்டாகும். 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு தனது பினாமிகள் ஆட்சிசெலுத்தக் கூடிய பொறிமுறை ஒன்றைக் காலனி நாடுகளில் ஏற்படுத்தி விட்டு அந்த நாடுகள் மீதான நேரடி இராணுவ ஆதிக்கத்தை நிறுத்திக்கொண்ட பின்னர் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைவாகும்.
பிரித்தானியா ஆட்சிசெலுத்தி சுரண்டிய நாடுகள் அனைத்தையும் ஒரு கூட்டமைவின் கீழ் பிரித்தானிய மகாராணியின் தலைமையில் கொண்டுவருவதற்கான தீர்மானம் ஒன்று 1949 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறைவேற்றப்படுகிறது.
இத்தீர்மானத்தின் அடிப்படையிலேயே பொதுநலவாய நாடுகளின் கூட்டமைவு உருவாக்கப்படுகின்றது. இன்று தன்னார்வ தொண்டு நிறுவனம் போன்று செயற்படும் இக் கூட்டமைவு காலனிய ஒடுக்குமுறையின் காலம் கடந்தும் வாழும் குறியீடாகும்.
பொதுநலவாய சாசனத்தின் அடிப்படையில் இவர்களிடையேயான சட்ட வரைமுறை என்பதற்கு அப்பால், பொதுவான மொழி, ஜனநாயகப் பெறுமானங்கள், மனித உரிமை போன்ற விடயங்கள் உட்பட பலவற்றில் சரி சமனாக மதிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது.
இலங்கையில் தனது பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை மிகவும் கபடத்தனமாக நுளைத்த பிரித்தானியா, சிங்கள பௌத்த தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் நடத்திய இனபடுகொலைகளை இன்றுவரை ஆதரித்தே வந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் கோரமான இனக்கொலையாளிகளுள் ஒருவரான மகிந்த ராஜபக்சவும் பேரினவாதமும் கோலோச்சும் இலங்கை போன்ற ஒரு நாட்டையும் இனப்படுகொலையை உலகின் வழமையான செயற்பாடாகவும் அங்கீகரிக்கும் வகையில் இலங்கை செல்லும் ஏனைய நாடுகளின் தலைவர்களை நோக்கி எதிர்க்குரலெழுப்புவது நியாயமானதே.
இந்த நாடுகளின் தலைவர்கள் யாரும் மக்கள் பற்றுள்ளவர்கள் அல்ல. இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை உலகம் முழுவதும் வாழும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அங்கீகரிப்பதைப் போன்று இவர்கள் அங்கீகரிக்கப் போவதில்லை. பிரித்தானியாவினதும் ஏனைய ஆதிக்க நாடுகளதும் வரலாறு இரத்தம் தோய்ந்ததாகும். ஆக, பொது நலவாய நாடுகளின் உச்சை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று குரலெழுப்பும் போக்கில் இந்த நாடுகளின் மனிதப் படுகொலைகளை அங்கீகரிப்பது தவறானதாகும்.
பிரித்தானிய அரச ஒடுக்குமுறையின் அழுகிய குறியீடாக இன்றும் காணப்படும் பொதுநலவாய நாடுகளின் கூட்டைப் போகிற போக்கில் அங்கீகரிக்க முனையும் ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படை தேசியவாதிகள் மக்களின் தியாகத்தையும் அர்பணத்தையும் தமது நலன்களுக்காக இன்னொரு முறை விற்பனை செய்கிறார்கள்.