இலங்கையில் மக்கள் மத்தியிலான பிரதான முரண்பாடு என்னபது ஒரு வினாவே இல்லை. பெருந்தேசிய வாத ஒடுக்கு முறை ஒரு பக்கத்திலும் அதன் எதிர் முனையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான அரசியல் தலைமையின்றிய நிலையில் காண்ப்படுவதையே இன்றைய சூழல் உணர்த்தி நிற்கிறது.
இந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் அவர்களின் தேச விடுதலையை, முழுமையான தனி அரசை அமைத்துக்கொள்வதற்கான உரிமையைக் கோருகின்ற போராட்டம் அவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டம் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களான முஸ்லீம்கள், மலையகத்தோர், வடகிழக்குத் தமிழர்கள் தமக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்போடு போராட்டங்களை முன்னெடுப்பதை அடிப்படையாகக் கொண்டது.
முஸ்லீம் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் எப்படி வட-கிழக்குத் தமிழர்களின் பிரிந்து போகும் உரிமையை மறுக்கக் கூடாதோ அதே போல வட கிழக்குத் தமிழர்களும் ஏனைய தேசிய இனங்களின் சுய உரிமையை மறுக்கக் கூடாது. அவ்வகையான மூன்று ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தத்தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுதலை ஒன்றுபட்ட ஒத்துழைப்பின் அடிப்படையில் ஊக்குவிக்க வேண்டும்.
இந்த மூன்று தேசிய இனங்களும் தமது தேசியப் போராட்டத்திற்கான விடுதலை இயக்கங்களால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கப்படும். இத் தேசிய விடுதலை இயக்கங்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுதல் பிரதானமானதாகும்.
அதே வேளை தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதும் அவர்களிம் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதும் நாளாந்த உணவிற்கே வழிதெரியாத சிங்கள மக்களுக்குத் தெரியாத ஒன்று. அவ்வாறான ஏழைச் சிங்களத் தொழிலாளர்களுக்கு, தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனாவசியமாகப் போராடுகிறார்கள் என்றே கூறப்பட்டு வந்திருக்கிறது.அவர்கள் இருட்டுக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதனைத் தவிர, தமிழ் மக்கள் தென்னிந்தியாவின் உதவியோடு முழு நாட்டையும் ஆக்கிரமிப்புச் செய்து சிங்களமக்களைக் கொன்று பௌத்ததையும் அழித்து விடுவார்கள் என்றும் ஒரு பொதுவான கருத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க காலத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட இப்படியான கருத்துக்களால் 50 வருடங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்ட இவர்கள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறை குறித்து எந்த அறிவும் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
அவர்களைத் தமிழ் மக்கள் உண்மைகளைக் கூறி வென்றெடுப்பது மட்டுமல்ல அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவானவர்களாகவும் மாற்ற முடியும். குறிப்பாக அவர்களின் உரிமைக்காகவும் தமிழ் மக்கள் குரல் கொடுத்தால் சிறுகச் சிறுக அவர்களை வென்றெடுக்க முடியும்.
இது ஒரு வேறுபட்ட பணி. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைப் போர் தொடர்பாகச் சிங்கள் மக்கள் மத்தியில் பேசவும் அவர்களை வென்றெடுக்க வேலை முறைகளை மேற்கொள்ளவும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் தம்மாலானவற்றை மேற்கொள்ள வேண்டும். எது எப்படியாயினும் சிங்கள ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மத்தியதர மக்களை வென்றெடுக்க அவர்கள் மத்தியிலான கட்சி ஒன்று அவசியமானது.
அப்படியான கட்சி ஒரு கம்யூனிச இயக்கமாக மட்டுமே அமைய முடியும். அப்படியான ஒன்று தான் தன்னலமற்றுப் போராட முடியும். இன்று கம்யூனிஸ்டுகளாகத் தம்மைக் கூறிக்கொள்கின்ற ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது வாக்கை வென்று பாராளுமன்றம் செல்வதற்காக இனவாதிகளாகவே உள்ளனர். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களோடு சமரசம் செய்து கொண்டு பதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
சிங்கள மக்கள் மத்தியில் உருவாகக் கூடிய கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய தடை இவர்கள் தான். இது தவிர, பல காரணிகள் காணப்பட்டாலும் இவர்கள் மிகப் பெரிய தடைக்கல்.
இனிமேல் உருவாகும் சமூகப் பிரக்ஞை உள்ள கம்யூனிச இயக்கங்கள் தமிழர்களின் தேசியப் போராட்டத்தை ஆதரிப்பதை முன்நிபந்தனையாகக் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும்.
அவ்வாறான கம்யூனிச இயக்கத்தில் தமிழர்கள் பெரும் பங்கு வகிப்பது மாத்திரமல்ல தேசிய விடுதலையிலும் கொள்கை அளவிலான ஆளுமையை வழங்க இயலும். மூன்று தேசிய இனங்களினதும் விடுதலை இயக்கங்கள், சிங்கள அரசியல் தலைமை ஆகியவற்றின் முன்னால் இலங்கை அரச பேரினவாதம் சிறுபான்மையாக்கப்படும். மக்கள் விடுதலை வென்றெடுக்கப்படும்.