கருத்துச் சுதந்திரம் -புலிகளிலிருந்து புலி எதிர்ப்பு ஜனநாகயம் வரை (2)
இந்த வகையில் எவ்வாறு இலங்கை அரசு கருத்துச் சுந்ததிரத்தையும், அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மறுத்ததோ அதே வைகையில் புலிகளும் கூட இவை அனைத்தையும் மறுத்திருக்கின்றனர். அதுவும் மக்கள் சார்ந்து போராடுவதற்கான ஜனநாயகம் மறுக்கப்பட்டது.
மிகக் குறிப்பாக புலிகளுக்கு மாற்றான அரசியல் தலைமை உருவாகும் நிலைமை முற்றாகச் சிதைக்கப்பட்டது. இதன் இன்னொரு விளைவாக, புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தலைமை வெற்றிடமாக்கப்படுள்ளது.
இதனூடாக புதிய போராட்ட வழிமுறைகளையும், அரசியலையும் அழிப்பதற்கு இலங்கை அரசு புலிகளை மறைமுகமாகப் பயன்படுத்திக்கொண்டது.
இந்திய எதிர்ப்புப் போன்ற புலிகள் இயக்கத்தின் போராட்டங்களை ஆதரித்த ஜனநாயக வாதிகள் கூட இதனைப் பயனபடுத்தியே தமிழ் நாட்டில்கூட அழிவிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இதே வழிமுறையை அமரிக்க ஐரோப்பிய அரசுகள் கூட இஸ்லாமியத் தீவிரவாத்திற்கு எதிராகப் பயன்படுத்தியதற்கான ஆதராங்கள் பரந்து கிடக்கின்றன.
ஆக, கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதற்கான அரசியலில் மிக நீண்ட காலமாகவே இலங்கை அரசும் புலிகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்திருக்கின்றன.
புலம்பெயர் நாடுகளிலும் புலத்திலும்(ஈழத்திலும்) தமிழ்நாட்டிலும் இந்தச் சமன்பாடே புலிகளின் இணைவிற்கான பின்பலமாக அமைந்திருந்தது. இதனை உறுதிப்படுத்துவதாக இராணுவ வெற்றிகளை புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.
புலிகளின் அரசியலைத் தொடரும் இன்றைய அமைப்புக்களின் நிலை:
புலிகளின் அழிவின் பின்னர் இச்சமன்பாட்டைத் தொடர்ச்சியாக பேணுவதற்கான எந்தக் குறைந்தபட்ச வேலைத்திட்டமும் புலி ஆதரவாளர்களிடம் இல்லாது போனது.
குறிப்பாகப் புலம் பெயர் நாடுகளில் செயற்பட்ட புலி சார் அமைப்புகளின் இருப்பு கேள்விக்கு உள்ளானது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அறிக்கை போன்றவற்றைத் தமது வெற்றியாகக் காண்பிக்க முற்படும் புலம் பெயர் புலிசார் அமைப்புக்களின் தொடர்ச்சியான வேலத்திட்டமும் அரசியலும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஏற்கனவே நிலவிய சமன்பாட்டைத் தொடர்ச்சியாகப் பேனமுடியாத நிலையில் இவ்வமைப்புக்களின் தலைமை திடீரென ஜனநாயகம் குறித்தும், பன்முகத் தன்மையை உருவாக்குவது குறித்தும் பேசுகின்றனர்.
அடிபடையில் இவை குறித்த்துப் பேசும் போது கடந்தகால அரசியலின் விமர்சனமாக புதிய அரசியல் வழிமுறையை முன்வைப்பதற்கு மாறாக தமது இருப்பை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே செயற்படுகின்ரனர்.
இவை ஜனநாயகமோ கருத்துச் சுதந்திரமோ அல்ல. மாறாக தமது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் தவறான நோக்கமுடையது. ஏகாதிபத்தியங்கள் எவ்வாறு இச் சொல்லாடல்களைப் பயன்படுத்திக்கொண்டதோ அதே வழியில் இவர்களும் இவற்றைத் தமது பயன்பாட்டிற்கு உட்படுத்துகின்றனர்.
புலிசார் அரசியலோடு தம்மை இன்றும் அடையாளப்படுத்தும் அமைப்புக்கள், குறிப்பாக அவற்றின் தலைமைகள், தமது அரசியலைச் சுயவிமர்சனத்திர்கு உட்படுத்துகிறவர்களாகவும், பன்முகத் தன்மையையும் ஜனநாயக முறைமைகளையும் ஏற்றுக்கொள்வார்களாயின், சஞ்சீவராஜ் என்பவர் மீதான வன்முறையின் உள்ளடக்கத்தை கண்டித்திருப்பார்கள்.அதனை அரசியல் ரீதியாக அணுகியிருப்பார்கள.
இன்றுவரை அது குறித்து ஒரு புறத்தில் மௌனம் சாதிக்கும் இவர்கள் மறுபுறத்தில் தாம் சார்ந்த பிரசார ஊடகங்கள் வழியாக வன்முறைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இதனூடாக புலி எதிர்ப்பு என்பது அரச சார்பு என்ற சமன்பாட்டை மறுபடி நிறுவ முயல்கின்றனர்.
வன்முறைச் சமன்பாட்டை உறுதிப்படுத்தும் அரச ஆதரவாளர்கள்:
புலிகளின் அரசியலுக்கு மாற்றைக் கோருவோர்:
எது எவ்வாறாயினும் புலிகளின் அரசியலை எதிர்த்துக் குரலெழுபியவர்களை மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. புலிகளின் அரசியல் வழிமுறை தவறானது என்றும் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்குத் தமக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் புலிகளை எதிர்த்துக் குரல்ழெழுப்பியவர்கள்.
2. புலிகளின் அதிகாரத்திற்கு எதிராகத் தமது சொந்த அடையாளத்தை நிலை நாட்ட முனைபவர்கள்.
3. இலங்கைப் பேரினவாதப் பாசிச அரசோடு இணைந்து கொள்ளும் நோக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.
புலிசார் அரசியலை முன்னெடுப்போர்
இதே வேளை இன்று எஞ்சியுள்ள புலி சார் அரசியலை முன்னெடுப்பவர்களை மூன்று பிரதான பிரிவினராக வகைப்படுத்தலாம்.
A. இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வைக் கொண்ட தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நேர்மையாகப் பங்காற்ற விரும்புவோர்.
B. மக்களின் விடுதலை உணர்வுகளை தமது சொந்த இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்வோர்.
C. மக்களின் விடுதலை உணர்வுகளை மூலதனமாக்கி வியாபார அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வோர்.
இணைவும் முரண்களும் வெற்றிக்கான வழிமுறைகளும்…
பல சவால்களையும் தடைகளையும் கடந்து செல்ல வேண்டிய தியாகங்களும் அர்ப்பணங்களும் மிக்க போராட்டங்களூடாகவே இது நடைபெறலாம். புலத்திற்கு (ஈழத்திற்கு) வெளியில் ஆரம்பத்தில் இந்த ஒருங்கிணைவும் அதனூடான எதிர்ப்பரசியலும் சாத்தியமாகும்.
தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் வாழும் முற்போக்கு ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அமைப்புக்களும் உதிரிகளும் இந்த இணைவு வட்டத்தினும் உள்ளடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாகவே காணப்படுகின்றது.
இவர்கள் மத்தியிலிருந்தே புதிய சமூகப்பற்றுள்ள அரசியல் வழிமுறை முற்போக்குத் தேசியமாக, இனவாதத்தைக் களைந்து உருவாகும். தமிழ்ப் பேசும் மக்கள் சிங்களப் பேரினவாதத்தால் இனச்சுத்திகரிபிற்கு உள்ளாக்கப்பட்டு துவம்சம் செய்யப்படும் நிலையில் இதற்கான செயற்பாட்டுத்தளம் விரிவுபடுத்தப்பட சமூக உணர்வுள்ள சக்திகள் முன்வர வேண்டும்.
இதில் பிரிவு 1. இலிருந்து உருவாகும் முன்னணி அரசியல் சக்திகளின் உறுதியும், ஜனநாயக, வர்க்க அரசியல் உறுதியும் பிரிவி A. யின் தேசப் பற்றுள்ள சக்திகளை வெற்றிகொள்ளும் நிலை உருவாகும்..
ஆக இவர்களின் தலைமை சக்திகள் மக்களின் உணர்வுகளை உள்வாங்கிகொள்வதும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும், அவற்றை அரசியல் வழிமுறையூடு அவர்களிடம் திருப்பி வழங்குவதுமான இயங்கியல் உருவாகும். இந்த நிகழ்வே கருத்துச் சுதந்திரத்தை மீளமைக்கும், புதிய வெற்றியை நோக்கிய சிந்தனைத் தளத்தை உருவாக்கும். ஒற்றுமை என்பதும், ஒரு குடை என்பதும் அர்த்தமுள்ளதாக அமையும்.
இது புலத்திலும் (ஈழத்திலும்), புலம் பெயர் சூழலிலும் அதே வேளை தமிழ் நாட்டிலும் ஏன் அழிவிலிருந்து மீள முனையும் ஒவ்வொரு அரசியல் பரப்பிலும் சாத்தியமான வழிமுறையாகும்.
ஒற்றுமைக்கான சவால்கள்:
இவ்வாறு உருவாகும் புதிய அரசியலுக்கு எதிராக பிரிவு 3 உம் பிரிவு C உம் மிக இறுக்கமான இணைவினை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் வியாபாரம் நடத்துவதற்கான ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கோருவார்கள். இவ்வாறான சக்திகளின் ஒருங்கிணைவு சமூகத்தை அழிவின் விழிம்பிற்குள் இழுத்துச் செல்லும்.
மிகக் குறிப்பாக பிரிவு 3 ஐச் சார்ந்தவர்கள் ஏற்கனவே தமது வியாபார அரசியல் உரிமைக்காக மக்கள் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். இனப்படுகொலை அரசுடன் இணக்க அரசியல், அபிவிருத்தி, மறு சீரமைப்பு என்பனவே இவர்களின் அடிப்படை முழக்கமாக அமைகிறது. இதே சுலோகங்களை முன்வைக்கும் பிரிவு C ஐச் சார்ந்தவர்களுள் முதன்மையானவர்கள் முன்னை நாள் புலி உறுப்பினரான கே.பி இன் தலைமையிலான வலைப் பின்னலுள் இயங்குகின்ற அல்லது அதனை நோக்கிச் செல்கின்ற பகுதியினர் பெரும்பான்மையானவர்கள். இதன் இன்னொரு பகுதியினர் தமது தேசிய வியாபார அரசியலை மக்களிடம் திருடிய பணத்திலிருந்து ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் பிரிவு C இன் உப பிரிவாகவும் அபாயகமானவர்களாயு கருத்தப்படலாம்.
புதிய அரசியல் முன்நிலைக்கு வரு போது C பிரிவில் உள்ளடங்கும் அனைத்துப் பிரிவினரும் அரச ஆதரவு அணிகளாக ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது.
பிரிவு B மற்றும் C ஆகிய பிரிவினர் புதிய அரசியலின் எதிர்நிலையாளர்களாக உருவாகும் நிலையில் அவர்கள் பிரிவு 1 மற்றும் A எதிர்ப்பியக்கங்களுக்கு எதிரானவர்களாகவோ அல்லது அதனை அழிப்பவர்களாகவோ உருமாறக் கூடிய நிலையே காணப்படும்.
இதே வேளை பிரிவு 2 ஐச் சேர்ந்த புலிகளின் அடையாளத்திற்கு எதிராகத் தமது அடையாளத்தை நிலை நாட்ட விரும்பும் பிரிவினர் அரச சார்பு அணிக்கு மிகவும் உறுதுணையாகவும் பின்பலமாகவும் அமைந்திருப்பார்கள். இவர்களின் அடையாளம் என்பதும் கூட வர்க்க நிலை சார்ந்ததே.
மிகத் தீவிர புலியெதிர்ப்பை முன்வைக்கும் இப் பகுதியினர் தமது வன்முறை அடையாளத்தைப் புலியெதிர்ப்பு சார்ந்தே கட்டமைத்துக் கொள்வார்கள். பழமைவாத யாழ்ப்பாண மேலாதிக்க வாத வெளாள சிந்தனையை அடிப்படையாகக் கொண்டியங்கும் இப்பகுதியினர் வேளாள புனிதத்துவத்தை தமது அடையாளத்தின் அதிகார ஆயுதமாகப் பயன்படுத்துவர்.
இன்று சமூகத்தில் புறக்கணிக்கத்தக்க அளவிலேயே காணப்படும் இப்பிரிவினர் இறுக்கமான அணியாகக் காணப்படாவிட்டாலும் அண்மித்த எதிர்காலத்தில் அபாயகரமானவர்களாக மாற்றமடைவது தவிர்க்க முடியாதது.
குறிப்பான சூழ்நிலை ஆய்வு – case study
சஞ்சீவராஜ் புலி ஆதரவாளர் ஒருவரால் தாக்கப்படதும், வன்முறைக் கலாச்சாரத்தின் அரசியல் பின்னணியை முன்வைத்து இனியொரு செய்தி வெளியிட்டது. பின்னதாக 26.06.11 அன்று இதனைக் கண்ணனம் செய்து ஆர்ப்பாட்ட ஒன்று கூடல் ஒன்று இடம்பெறுவதாக சிலர் அறிவித்தனர்.
அவ்வறிவிப்பை விடுத்தவர்களுடன் உரையாடிய போது, ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைப்பவர்கள் இலங்கை அரசோடு இணக்கப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் (C) என்றும் ஆனால் யாரும் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்ததொடர்ந்த விவாதத்தில் இனப்படுகொலை அரசுடன் இணக்கப் போக்கு என்பது மற்றொரு வன்முறை என்ற கருத்து முன்வைக்கப்பட்டடு விவாதித்த போது, ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் தரப்பிலிருந்து வெறுமனே பன்முகத் தன்மைகொண்ட இரு அரசியல் முரண்பாடுகள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதன் பின்னதாக, இலங்கை அரசிற்கு எதிரான சுலோகங்களை குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கலாமா எனக் கேள்வியெழுப்பப்பட்ட போது, ஆர்ப்பாட்டம் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு என்பதால் அது தேவையற்றது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஆர்பாட்டம் குறித்து புதிய திசைகள் அமைப்பு துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறது. இத் துண்டுப் பிரசுரத்தைத் தொடர்ந்து இனியொருவிற்குத் தாக்கப்பட்டவர் ஒரு கடித்ததை எழுதுகிறார். அது எந்த மாற்றமும் இன்றிப் பிரசுரிக்கப்படுகிறது. மறு நாள் இதே நபர் இனியொரு “ஜனநாயகவாதிகளின்” ஆர்ப்பாட்டத்தை தடுத்தாகவும் அதனால் இனியொரு புலிகளின் மறைமுக வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதம் பின்னதாக ஒரு இணையத்தில் பிரசுரிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜனநாயக வாதிகள் அல்ல என்பதை முன்னதாக ஒத்துக்கொண்ட சஞ்ஜீவராஜ் மிகத் தீவிரப் போக்குடன் ஆர்ப்பாட்டத்திற்கு தானும் செல்வதாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இறுதியில் அவர் கூறியபடியே ஆர்ப்பாட்டத்திற்குச் செல்லவில்லை என்பதும் உண்மை. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இலங்கை அரசோடு பேச்சு “வார்த்தை அரசியல்” அல்லது “இணக்க அரசியல்” எனப்தை வரித்துக்கொண்டவர்கள்.
இனியொரு போன்ற பல அரசியல் தளங்களில் இணக்க அரசியலின் அபாயத்தை தர்கீக அடிப்படையில் முன்வைத்த போதும் அதற்கு எதிரான சேறடிப்புக்களையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் மட்டுமே இவர்கள் முன்வைத்தனர்.
இப்போது தமது அடையாளத்திற்கான அரசியலை தீவிர புலியெதிர்ப்பு அரசியலாக முன்வைக்கும் குழுவினர் (பிரிவு 2) இனியொரு புலிசார் இணையம் என்ற ஆதாரமற்ற சேறடிப்பை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும், இலங்கை அரசுடன் இணக்கப்பட்டு நிலையிலுள்ளவர்களை, கே.பி ஊடாக மக்களை அணுக விரும்புகின்றவர்களையும், இலங்கையில் பண முதலீட்டிற்கான ஜனநாயம் கோருவோரையும், ஏனைய அரச ஆதரவுக் குழுக்களுடன் இணக்க அரசியல் என்ற தலையங்கத்தில் ஒன்றிணைவோரையும் ஜனநாயக வாதிகளாக முடிசூட்டி இனியொருவை புலி ஆதரவு இணையம் என்று இலங்கை அரசு உட்பட அனைத்து அதிகாரங்களுக்கும் காட்டிக்கொடுக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அணிசேர்க்கைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை மிகத் தெளிவாக வெளிக் காட்டுகின்றது.
இங்கு பிரிவு 1 ஐச் சார்ந்தவர்கள் மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்வைக்கும் போது பிரிவு A ஐச் சார்ந்தவர்களின் கருத்துக்களை உள்வாங்கி அவர்களுகே வழங்குதல் என்பதும் பின்னர் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளல் கற்பித்தல் என்ற இயங்கியல் உறவைத் தடை செய்து அதனைத் திசை திருப்பும் நோக்கில் ஏனைய அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவதை வெளிப்ப்படையாகக் காணலாம்.
ஆக, ஒற்றுமை என்பது பிரிவு 1 மற்றும் பிரிவு A ஆகியோரிடையேயான ஒன்றிணைவாகவும், ஏனைய பிரிவுகள் இதற்குச் சவாலாகவும் அமைகின்றனர். இது வெறும் குறித்த உதாரணம் மட்டுமே. முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின்னதாக நிகழ்ந்த ஒவ்வொரு குறிப்பான நிகழ்வுகளிலும் இதன் வெளிப்பாடுகளைக் காணலாம்.
இங்கே ஜனநாயகம் என்பதும் கருத்துச் சுதந்திரம் என்பதும் மக்கள் மற்றும் புரட்சிகர அரசியல் ஆகியவற்றின் இடையேயான இயங்கியலின் அடிப்படையிலேயே உருவாகிறது.
வியாபரம் செய்வதற்கான ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் கோரும் பகுதியினருக்கும், அவர்களை நேரடியாகவோ மறைமுகமாவோ ஆதரிக்கும் பகுதியினருக்கும் எதிரான ஒற்றுமை என்பது பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின், தேசிய இனத்தின் ஒற்றுமையாக அமையும்.
இதனையே வர்க்க ஆய்வாகவும் முன்வைக்கலாம்.
(இலங்கையில் உலகமயமாதல் ஏற்படுத்திய உற்பத்தி உறவுகளின் பின்னதான வர்க்க ஆய்வு எதுவும் இதுவரை தெளிவாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் பருமட்டான ஏற்கனவே கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மக்கள் மத்தியிலான முரண்பாடுகள் குறித்து ஆய்வு முற்படலாம். இந்த ஆய்வு இணைவிற்கான உடனடி மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களுடன் அடுத்த பகுதியில் முன்வைக்கப்படும்.)