Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேரினவாதத்தின் ராஜா – நூல் விமர்சனம் : பஷீர்

 

நூலின்  உள்ளே பேரினவாத ராஜாக்களாக இந்தியாவும் இலங்கையும் அடையாளங்காட்டப்பட்டிருந்தாலும் அட்டைப்பட ஓவியம் ராஜபக்ஷேவை மட்டும்தான் காட்டி நிற்கிறது. இலங்கைத்தமிழர் விடுதலைப்புலிகள் என்றவுடனேயே தமிழ்ச் சூழலில் அறிவுத்தளம் மறைந்து உணர்ச்சி மயம் தொற்றிக்கொள்ளும் காலக்கட்டத்தில் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூலில் புலிச்சாய்மானம் தூக்கலாகத் தென்பட்டாலும் புலிகள் உட்பட தமிழ்ப்போராளி இயக்கங்கள் இழைத்த பிழைகள் பட்டியலிடப்பட்டிருப்பது உணர்ச்சிமய அணுகுமுறையை விலக்கி நேர்மையான விமர்சனம் மூலம் சரியான இடத்தை அடைய உதவிடுகிறது. “புலிகளின் ஆயுதப் போராட்டமும் அவர்களும் கசப்பான முறையில் இல்லாமல் போனார்கள் என்கிற செய்தியை நம்மால் இன்று ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் மனம் தவிக்கிறது. நாம் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் மட்டுமே மீண்டெழ முடியும். ஆனால் சிலரோ, புலிகளை விமர்சிக்கத் தயங்குவதன் மூலம் வரலாற்றில் மீண்டும் அதே தவறுகளைச் செய்ய முனைகின்றனர்.” (நூல் பக்கம்: 151-153) ஒரு விடுதலைப் போரை விமர்சிப்பதென்பது, கனமான இலக்கியங்களை சுகமாக அமர்ந்துகொண்டு விவாதிப்பதும் விமர்சிப்பதும் போன்றுள்ள அவ்வளவு எளிய விஷயமல்ல. போராடும் மக்களின் நியாயங்களையும் உரிமைகளையும் தனது ஆன்மாவிற்கு நெருக்கமாக உணர்பவர்களாலேயே அவர்கள் அந்த போர்க்களத்தில் இல்லாவிட்டாலும் திறனாய்வு செய்யும் உரிமையைப் பெறவியலும். அதே குரலாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்களையும் விடுதலைப் போராளிகளாலும், இயக்கங்களாலும் புறக்கணிக்க முடியாத அளவிற்கு அந்தக் குரல்களின் தார்மீகம் வலுவாகவும் இருக்கும் என்பதற்கு கீழ்க்கண்ட வரிகளை எடுத்துக்காட்டாகக் கூறவியலும்.

தமிழ் மக்களை சிங்களப்பேரினவாதிகளிடமிருந்து விடுவிக்கப் புறப்பட்ட இந்த விடுதலைப் போர் மீண்டும் மக்களை அதே பேரினவாதிகளிடமே கொண்டுபோய் தள்ளுவதில் முடிந்த அவலம் புலிகள் தங்களின் போர்த்திறன் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை வன்னி மக்களை முதலிலேயே பாதுகாக்கத் தவறியது நமக்காக வாழ்ந்த மக்களை எதிரிகளிடம் தின்னக்கொடுத்தது. இனி எக்காலத்திலும் தமிழர் உரிமை, வாழ்வுரிமை, ஈழம்,தமிழீழம், தமிழ்த்தேசியம் போன்ற கருத்தியலைக் கொண்டு கட்சி நடத்தக் கூடாது. அம்மக்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்ற கோரிக்கை வலுத்துவருவது” (பக்கங்கள்: 122, 115, 189, 190, 191) எனப் புலிகளின் போராட்டம் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வில் சூன்யத்திற்குள் சூன்யத்தை தோற்றுவித்ததை நாம் வலியுடன் ஒத்துக்கொண்டாக வேண்டும். விடுதலைப்புலிகளும் ஏனைய ஆயுத குழுக்களும் இழைத்த பாரிய பிழைகள்: விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற சகோதரப் படுகொலைகளை இந்தியா தூண்டிவிட்ட ஒன்றாகவும் உள் சண்டைக்குப் பிறகு புலி தவிர்த்த ஏனைய ஆயுத குழுக்கள் இலங்கை அரசின் ஆட்களாகவும் மாறிபோனதாகவும் இந்நூல் பார்க்கின்றது. இந்தியஉளவுத்துறை தமிழ் ஆயுதக் குழுக்களிடையே சகோதர யுத்தத்திற்கான விதைகளைத் தூவியபோதிலும் உள் சண்டைகளுக்கு அது மட்டுமே காரணமல்ல. இலங்கைத் தமிழர்களின் ஏகப்போராளியாக தாங்கள் மட்டுமே திகழ வேண்டும் என்பதிலும் ஆயுதமுனையில் கனியும் அச்சம் சார்ந்த பணிவும் அதிகாரமும் தாங்கள் மட்டுமே சுவைக்கத் தக்க ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் புலித் தலைமைக்கு இருந்ததணியாத தாகத்தை யாராலும் மறுக்கவியலாது. ஏனைய ஆயுதக்குழுக்கள் இலங்கையரசின் கையாட்களாக மாறிப்போனதாக சாட்டப்படும் குற்றச்சாட்டு, புலிகளுக்கும் சொந்தமான ஒன்றுதான். கடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ராஜபக்ஷேவின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் ராஜபக்ஷேவால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள்தான் இந்தப்புலிகள். இந்த உதவிக்கு கைமாறாக புலிகள் ராஜபக்ஷேவிடமிருந்து பெற்றவை என்ன தெரியுமா? 1. பல மில்லியன் பணம். 2. புலிகளின் அரசியல் தலைமையகமான கிளிநொச்சியை தாக்கக்கூடாது என்ற உத்திரவாதம். புலிகள் செய்தால் ராஜதந்திரம். ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்கள் தங்கள் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள இலங்கை அரசை அண்டினால் அது துரோகம் என்ற பார்வை. இது எம்மட்டில் சரி? ராஜபக்ஷேவுடன் புலிகள் செய்துகொண்ட பேரம் இறுதியில் அவர்களையே காவு கொண்டுவிட்டது.

இந்நூலின் 85 ஆம் பக்கத்தில், “பஞ்சாப் இன விடுதலை நெருப்பை அணைத்த இந்தியா, அது போன்றே ஈழ விடுதலைப் போரை அணைத்துவிடலாம் என நினைத்தது. அதைக் காலம் எவ்வளவு தவறானது என்பதை நிரூபித்ததுஎன அருள் எழிலன் எழுகிறார். “தன் வீட்டினுள்ளேயே மிகக் கொடூரமாக நடக்கும் ஒருவன் தனது அண்டை அயலோடும் எப்படி இணக்கமாக நடப்பான்?” என்ற புரிதல் புலிகளுக்கும் இல்லாமல் போய் அவர்களை சீர்தூக்கிப் பார்க்கவந்த அருள் எழிலனுக்கும் இல்லாமல் போனதுதான் வியப்பு. “புலிகளின் அத்தியாயத்துக்கும் ஈழ விடுதலைக் குரல்களுக்கும் முடிவுரை எழுதியதில் இலங்கை அரசோடு இந்திய அரசுக்கும் உள்ள பங்கை நம் கண்ணெதிரிலேயே கண்டோம். ஈழ விவகாரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை என்பது புலிகளின் மீதும் ஈழமக்கள்மீதும் தொங்கவிடப்பட்ட கத்தி” (பக்கம்: 97) என இந்நூல் கூறுவது முழுக்க சரி. இந்திரா காந்தி கொலையுண்டபின் சீக்கிய சமூகமும் அதன் இனவிடுதலை கோரிக்கையும் அடைந்த பாதிப்புகளையும் இழப்புகளையும் கணக்கிலெடுக்கத் தவறியப் புலிகள் நிகழ்த்திய ராஜீவ் கொலையானது தமிழக மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் துடைத்தெறிந்ததோடு மட்டுமல்ல; புலிகளையும் ஈழ இனவிடுதலை கோரிக்கையையும் புதைகுழிக்கு அனுப்பிவிட்டது. பிரபாகரனை கொன்றதன் மூலம் ராஜீவின் அழித்தொழிப்பிற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு கணக்கு தீரத்துக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்திரா அரசிடமிருந்துப் பெற்ற ஆயுத நிதி உதவி முதல் ராஜீவ் காந்தி படுகொலை வரை உள்ள புலிகளின் நிலைப்பாட்டை அலசுமிடத்து அண்டுவது அல்லது கொல்வது என்கிற அதிதீவிர நேரெதிர் நிலைப்பாட்டைத்தான் பார்க்க முடிகிறது. புலிகளின் சமகாலத்தில் இலங்கைஅரசுக்கு எதிராக ஆயுதக்கிளர்ச்சி செய்த ஜே.வி.பியின் தலைமை உட்பட பெருமளவிலான அதன் அணிகள் பிரேமதாசாவால் வேட்டையாடப் பட்டாலும் இலங்கையின் அரசியல் பரப்பிலிருந்து அதனை துடைத்தெறிய முடியாத அளவிற்கு இன்று நாடாளு மன்றத்தில் ஜே.வி.பிக்கு நாற்பது இடங்கள் உள்ளன. (பக்கம்: 91) அதேபோல் இலங்கையரசு தனது பேரினவாதப் போருக்கு ஆதரவாக இந்தியா பாகிஸ்தான்சீனா இடையே உள்ள முரண்களை வெகு இலாவகமாக கையாண்டது.. இந்தியாவின் கபளீகர எண்ணத்தைப் புரிந்துகொண்டு அதிருந்து தங்களை பாதுகாக்க 1947-ல் பிரிட்டிஷாருடன் இலங்கை அரசு 

ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டது. (பக்கம்: 197) ஒடுக்கும் பேரினவாத அரசும் ஒடுக்கப்பட்ட ஜே.வி.பி..யும் கையாண்ட, கையாளுகிற ராஜதந்திரம், பதுங்கும் திறன், சூழலுக்கேற்ப தகவமைத்தல், எதிரிகளுக்கிடையே உள்ள முரண்களை தனக்கு சாதகமாக மாற்றுவது என அனைத்திலும் புச்சியமாகவே இருந்துள்ளனர் புலிகள். ஹிந்துத்து பாஸிஸம்வெள்ளை ஏகாதிபத்தியம்சிங்களப் பேரினவாதம் கைகோர்த்ததைப் போல (பக்கம்: 113) புலிகள் தங்களது அண்டையில் உள்ள கஷ்மீர் வடகிழக்கில் நடக்கின்ற உரிமைப் போர் உட்பட உலகெங்கிலும் உள்ள விடுதலை எழுச்சிகளுடன் கைகோர்க்கத் தவறியதோடு குறைந்தபட்சம் அந்த விடுதலைப் போராளிகளுக்கு ஈழப் போராட்டத்திற்கான நியாயத்தைப் புரியவைக்கும் வேலையைச் செய்யவே இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்தியா: “இந்திய சமஷ்டி அரசில் இலங்கையும் ஒரு சுயாதிக்கமுள்ள பகுதியாக நீடிக்கலாம்” (பக்கம்: 109) என 1945 இல் நேரு வெளிப்படுத்திய விரிவாதிக்க வேட்டைகளிருந்து போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்திய ஆளும் பனியா வர்க்கம் உருவாக்கத் துடிக்கும் சந்தைவரை இனப்பிரச்சனையில் இந்திய அரசின் குரூரப் பங்களிப்பை அருமையாகப் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். தமிழ் போராளி அமைப்புகளுக்கிடையே முரண்களைக் கூர்மையடையச் செய்தது (பக்கம்: 49) திம்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீது அழுத்தத்தை செலுத்தாத இந்திய அரசு (பக்கம்: 52) 1987-ல் இலங்கைக்கு ராணுவ கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி இந்திய ஆதிக்கத்தை நிலைபெற செய்ய முயற்சித்தது (பக்கம்: 57,58) தான் வளர்த்த புலிகளையே  வேட்டையாடிய இந்தியா (பக்கம்: 83) ஈயஎ, பசஆ போன்ற ஆயுதக் குழுக்களை வைத்து குழந்தைகளைக் கடத்தி முதன் முதலாக குழந்தைப் போராளி முறையை உருவாக்கிய இந்திய ராணுவம் (பக்கம்: 87) ராஜீவ்ஜெயவரத்தனா ஒப்பந்தம் வாயிலாக இலங்கை சென்ற இந்திய ராணுவத்தின் விளைவாக தென்னிலங்கை சிங்களர்களின் இனஓர்மை கூர்மையடைந்தது (பக்கம்: 89) தோற்றுப்போன மேலைத்தேய சுரண்டல் விவசாய முறையை கையிலெடுத்துக் கொண்டு வன்னியைக் குறிவைத்துக் கிளம்பியுள்ள எம்.எஸ். சுவாமிநாதன் (பக்கம்: 196) கிழக்கில் உள்ள தமிழ் அகதிகளிடம் பணி செய்துகொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். தன்னார்வக் குழுக்கள் (பக்கம்: 201 ) என இலங்கையை தங்களின் சந்தையாகவும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை ஒடுக்கப்பட்ட காலனியாகவும் மாற்றத் துடிக்கும் இந்திய விரிவாதிக்க பெரியண்ணன் போக்கை காண வலுவில் மறுத்துவரும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு இந்திய அரசுக்கு மனுமேல் மனுப்போடுகின்றனர். இந்நூல் கவனிக்கத்தவறிய பகுதிகள்: “தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் தமிழ் மக்களும் வேறுபட்டு நிற்கிற சூழல் களையப்பட ணேடும். கடந்தகால தவறுகள் களையப்பட்டு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்” (பக்கம்: 162) என்ற வரிகள் மூலம் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள முஸ்லிம்களின் மீதான கரிசனம் வெளிப்படுகிறது. எனினும், நான்கு வரிகளுக்குள் அடங்கிவிடுகிற எளிய விஷயமல்ல அது. இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களில் படும் துயரை, வாசிக்கும் வாசகர்கள் உணரும் வண்ணம் வரிக்கு வரி அந்த அவலத்தை நம்முன் பிழிந்துக் காட்டிடும் நூலாசிரியர், இலங்கை இனப் பிரச்சனையால் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த அவலமிகு வாழ்க்கை முதன்முதலாக வடக்கையும் கிழக்கையும் சார்ந்த 90,000 முஸ்லிம்களுக்கு உரித்து என்பதை எங்கும் அழுத்தமாகச் சொல்லிடவில்லை. புலிகளால் ஈவிரக்கமில்லாமல் விரட்டப்பட்டு கடந்த 20 வருடகாலமாக சொல்லொணாத் துயரை அனுபவித்து வரும் முஸ்லிம் அகதிகளின் நிலை தமிழ் அகதிகளின் நிலை அளவிற்கு தமிழ் குழுக்களாலும் இலங்கை அரசாலும் உலகத்தாராலும் பேசப்படவுமில்லை; கவனிக்கப்படவுமில்லை. அதே போல் இலங்கையின் தமிழ்ச் சமூகத்தினுள் காணப்படும் சாதீய ஏற்றத் தாழ்வுகள் பற்றியும் இந்நூல் அழுத்தமாகப் பேசிடவில்லை. பொதுவாகவே இலங்கைத் தமிழரின் வரலாறென்பது, யாழ்ப்பாணத்தை சார்ந்த சைவ வெள்ளாள அரசர்களின் வரலாறாகவும் தமிழர்களின் அரசியல் விருப்பங்களும் அதைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. புலம் பெயர இலங்கைத்தமிழரல் பெரும்பாலோர் வெள்ளாளர்களே. இவர்களும் தாங்கள் வாழும் நாடுகளில் சாதீய வேறுபாட்டை மிக ஓர்மையுடன் கடைப்பிடிக்கின்றனர். ஒடுக்குமுறை என்பது சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து வெளிப்பட்டால் அது கண்டிக்கத்தக்கது. அதுவே தமிழ்ச் சமூகத்திடமிருந்து முஸ்லிம் 

ஒறுத்தலாகவும் சாதீய வெறுப்பாகவும் அம்மணமாக வெளிப்பட்டால் கவனிப்பிற்கோ, ஆழ்ந்த கண்டிப்பிற்கோ உள்ளாக்கப்படுவதில்லை. சொந்த சமூகத்தினுள் கடைப்பிடிக்கப்படும் பாரபட்சம் ஒறுத்தல் போன்றவற்றுக்கு எதிராக கண்டிப்பான தன்விமர்சனத்தை மேற்கொள்ளாத எந்த ஒரு சமூகமும் தன்னை ஒடுக்கும் பேரினவாதத்திற்கெதிரான போரில் தனக்குரிய நியாயத்தையும் முழுமையாக
வென்றெடுத்திட இயலாது என்பதே பேரூண்மை. பெரும்பான்மை சிங்கள குடிமைச் சமூகத்தையும் அதிலுள்ள சில மனித நேயமிக்க அறிவுஜீவிகளையும் பேரினவாதத்திற்கெதிரான தனது போராட்டத்திற்கு ஆதரவாக வென்றெடுக்க முடியாவிட்டாலும் தன் தரப்பு நியாயங்களையாவது அவர்கள் மறுக்கவியலாத அளவிற்கு முன்வைத்திருக்க வேண்டும் புலிகள் தரப்பு. தமிழ் மக்களுக்காக பேசிய சிங்களரின்
குரல்களை நாம் நமக்கானதாக மாற்ற வேண்டும் என்கிறார் அருள் எழிலன். (பக்கம்: 161) ஆனால் நடந்தது என்ன? அரசு தமிழ் குடிமைச் சமூகத்தை குண்டு வீசிக் கொல்கிறது என்ற தர்க்க நியாயத்தை முன்னிறுத்தி பேருந்து, தொடர்வண்டி, சந்தை, வீதிகள் போன்ற பெரும்பான்மைச் சிங்களர் நடமாடும் பொது இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி சிங்களக் குடிமைச் சமூகத்தையும் பொதுப்
புத்தியையும் தனக்கெதிராக கட்டமைத்தது புலிகள் இயக்கம். அரசின் இறுதிக்கட்டத் தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வன்னிப் பகுதியிலுள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களை அரசின் கொடூரத் தாக்குதலுக்கு பலியிட்டதோடு மட்டுமல்லாமல் தங்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளினர் புலிகள். ஆக,
சிங்களக் குடிமைச் சமூகம், சக இயக்கத்தவர், முஸ்லிம்கள், தமிழ் மக்கள் என அனைவரையுமே தங்களது விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளாக மாற்றி நிறுத்தி பலியிட்டு ஓய்ந்து ஒடுங்கியதுதான் விடுதலைப்புலிகள் தலைமையில் நடந்த ஆயுதவழி இன விடுதலைப் போர். நிறைவாக

இலங்கைத் தீவிற்குள் இனி சிங்கள மக்களும் தமிழ்மக்களும் சேர்ந்துவாழும் சாத்தியங்கள்
முற்று முழுதாக அறுந்துவிட்டனஎன நூலின் முன்னுரையிலும் உள்ளேயும் தீர்மானமாகச் சொல்லும் நூலாசிரியர், “ஈழ மக்களுக்கு இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை தேர்தல் நடைமுறைதான்என்றும் சொல்கிறார். அவரின் இந்த முரண்பாடுகளில் முந்தையது அரவது விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட முடிவு; பிந்தையது பேருண்மையானது. சேர்ந்துவாழும் சாத்தியங்கள் முற்று முழுதாக
அறுந்துவிட்டன எனச் சொல்லும்போது, அது எதிரி இனத்திற்கெதிரான முழு அளவிலான போரின் தொடக்கத்தை தானாகவே சுட்டி நிற்கிறது என்பதையே உணர்த்துகிறது. இப்போரின் அவலத்தை அதன் முழுத் தோற்றத்தோடு நூலாசிரியரே பிறிதோர் இடத்தில் சொல்கிறார்: “…நீரேரியைக் கடக்கும்போது தள்ளாத வயதுடைய முதியவர்களை அப்படியே அங்கேயே விட்டுவந்த வேதனையைச்
சுமந்துகொண்டிருக்கிற அம்மக்கள் தங்கள் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ளும் துடிப்பில் இருக்கிறார்கள்.” (பக்கம்: 173) இங்கிருந்து கொண்டு ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்கிறோம். வெடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் நண்பர்களே! போர் குழந்தைகளுக்கு வாணவேடிக்கை காட்டுவதில்லை. அது நெருப்பைக் கொண்டுவந்து கொட்டுகிறது.
குழந்தைகளை எரிக்கிறது. நமது மனைவியை காதலியை குழந்தையை தாயை நிர்வாணமாக்கி வன்முறையைத் திணிக்கிறது கொடூரமாக கொன்றொழிக்கிறது. நிலத்தைப் பிரிக்கிறது மக்களை வீடற்றவர்களாக்குகிறது.. பெரும் கூட்டமான மக்களை பைத்தியங்களாக அலையவிடுகிறது. போர் இதை மட்டுமே மக்களுக்குப் பரிசளிக்கிறது. (பக்கம்: 157) ஆம்! களப் பருண்மைகளையும் நடைமுறை சாத்தியங்களையும் புறந்தள்ளும் வெற்றுரை வீச்சுக்களினால் தமிழக அரசியல்வாதிகள் தங்களது வாக்குவங்கியையும் அரசியல் எதிர்காலத்தையும் உறுதி செய்திருக்கலாம். ஆனால் அதே வேகத்தில் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் வாழ்வை சூனியத்திற்குள்ளாக்கிய துரோகத்தை மறைத்துவிட இயலாது. விரக்தி, பாசம், வெறுப்பு என்ற மன உணர்வுகளுக்கும், கள உண்மைகளுக்கும் இடையே சமன் செய்ய முயன்றிருக்கும் அருள் எழிலனின் இந்நூல் இலங்கைத் தமிழர் விடயத்தில் தமிழகத்தின் அறிவு, அரசியல் தளத்தில் படிந்திருக்கும் போலித்தனம், சவடால், மத்திய கால மன்னர்போக்கு போன்றவற்றை துடைத்தெறிய பயன்பட்டால் நன்றாக இருக்கும்.

 ஐரோப்பாவில் நூலின் பிரதியைப்  பெற்றுக்கொள்ள :  inioru@gamil.com

 

Exit mobile version