Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேரறிவாளன், சாந்தன், முருகன், அபு ஜமால் : கோசலன்

இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டு இரண்டு தசாப்தங்கள் ஓடி மறைந்துவிட்டன. தனது சொந்த தேசத்து மக்களின் பிணக் குவியல்களின் மேல் உடக்கர்ந்துகொண்டு உலகத்திற்கு ஜனநாயகம் கற்பிக்கும் கொடிய அரசின் இன்னொரு மேல்தட்டுவர்க்க அடியாள் தான் ரஜீவ் காந்தி என்பதில் மக்கள் பற்றுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

மோகன்லால் காந்தி என்ற பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அடிமை ஆரம்பித்துவைத்த இந்திய அரசமைப்பின் தலைமைத்துவத்தை தனது குடும்ப ஆளுமையின் காரணமாக ஏற்றுகொண்ட ரஜீவ் காந்தியின் அதிகாரம் கொலைசெய்து தெருக்க்ளில் வீசியெறிந்த மனிதப் பிணங்களின் மரணங்களோடு ஒப்பிட்டால் ரஜீவ் காந்தியின் இழப்பு ஒரு துயர நிகழ்வல்ல.

ரஜீவ் இந்திய அரசாட்சியைத் தலைமை தாங்கிய காலத்தில் தான் இந்திய இராணுவம் இலங்கையில் தனது போர்க்குற்றங்களைச் சமாதானம் என்ற தலையங்கத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தது. ஆயிரக் கணக்கான அப்பாவிகள் சாகடிக்கப்பட்டார்கள். ரஜீவ் காந்தி மனிதன் என்றால் ஆயிரக்கணக்கில் மனிதர்கள் அரசியலில் ஈடுபடாமலே செத்துப் போயிருக்கிறார்கள்.

எது எவ்வாறாயினும் ரஜீவ் கொல்லப்பட்ட பின்னர் ஆயிரம் அரசியல் வியாபாரிகளும், அவர்களின் முகவர்களும் அவரின் இழப்பை நிரப்புவதற்கு வரிசையில் அணிவகுத்து நின்றார்கள். அவரை விஞ்சிய மக்கள் விரோதிகளாக ஏகபோகங்களுக்குத் தமது விசுவாசத்தைக் காட்டினார்கள். அவர்களில் ஒருவர் தான் இன்று இனவாதிகளின் கருணை தெய்வமாகத் திகழும் ஜெயலலிதா ஜெயராம்… திடீரென்று தமிழ்ப் பால் அருந்தி ஞானம் பெற்ற முதலமைச்சர்…

ஆக, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்வானது எதையும் சாதித்துவிடவில்லை. மாறாக, மக்கள் திரளாக நடத்த வேண்டிய போராட்டத்தைத் திசைமாற்றி உளவியல் வெறுப்புணர்வையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. ராஜிவ் காந்தி உடனடியாகவே வேறு மக்கள் விரோதிகளால் பிரதியிடப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியகொலையில் நேரடியாகத் தொடர்பற்ற மூவரும் மரணித்துப் போக வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியிருக்கிறது. திட்டமிட்ட அநீதியாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டோரின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் இந்த அநிதியின் அடிப்படையாக அமைந்த இந்திய ஆளும் வர்க்கம் குறித்து மக்கள் விழிப்படைய வேண்டும், போராட வேண்டும் என்பதெல்லாம் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள்.

இவர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு “கருணை தெய்வம்” ஜெயலலிதா ஜெயராமிற்கு கண்ணீர் வடித்துக் கடித அனுப்பியிருக்கிறார் நாடுகடந்த தமிழீழத்தின் “துணைப் பிரதமர்(?)”. 30 வருட காலமாக அருவருக்கத் தக்க கோளைகளின் காலடியில் நடத்திய இதே அரசியல் தான் முள்ளிவாய்காலை பிணக்காடாக்கியது. உதவிப் பிரதமர் கையெடுத்து வணங்கும் அதே ஜெயலலிதா தான் ரஜீவ் கொலைசெய்யப்பட வேளையில் ஈழத் தமிழர்களை தெருத்தெருவாக வேட்டையாடியவர்.
இலங்கையில் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் நாட்டை மட்டுமல்ல போராட்டத்தையும் கடத்த முனைகிறார்கள். மக்களோ அதிகாரத்திலிருக்கும் அடக்கு முறையாளர்களுக்கு எதிராகப் போராட முனையும் போது அதே அதிகாரத்தில் இருப்பவர்களின் இரத்தக் கறையைத் துடைத்துக்கொள்வதற்காகக் கைகோர்த்துக் கொள்கிறார்கள்.

இன்னொரு நாள் தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்படுமானால் இவர்கள் “அம்மாவின்” அரச மாளிகைக்குள் ஒளிந்துகொள்வார்கள். இலங்கையிலிருந்து மக்கள் போராட்டம் என்றால் என்ன என்று கற்றுத் தருகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து அதனை நாடுகடத்தி கொலைகாரர்களோடு இணைக்கும் இவர்களே அடிப்படையில் தூக்குத் தண்டனைக்குத் துணைசெல்பவர்கள்.

ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்டவர்களே இப்படியென்றால், தமிழ் நாட்டின் இனவாதிகளை கற்பனை செய்துபார்த்தாலே போதுமானது.

ஈழப் போராட்டத்தை தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும்  நாடுகடத்தும் இவர்கள் தற்காலிகமாகவேனும் ஒதுங்கிக் கொண்டால் மக்கள் போராடுவார்கள். போராட்டத்தில் புதிய தலைமுறை உருவாகும்.

தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும், மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் இதய சுத்தியோடு எண்ணுகின்ற எவரும் மமியா அபு ஜமால் என்பவரைப் பற்றி அறிந்திருப்பார்கள்.
இவர் தான் உலகில் அதிகாமகப் பேசப்படும் தூக்குத் தண்டனைக் கைதி. அமரிக்காவில் ஊடகவியளாலனாகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றியவர். கறுப்பின ஊடகவியளாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். பொலீஸ் அதிகாரியைக் கொலைசெய்தார் என்று ஆதாரமின்றிக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டர். கறுப்பின அமரிக்கரான இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து அமரிக்காவில் உருவான போராட்டங்கள் இன்று உலகளாவிய போராட்டமாக வியாபித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பதாக (20.082011) லண்டனில் இவரது விடுதலை கோரி நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். கறுப்பின மக்கள் மட்டுமல்ல வெள்ளை இனத்தோரும் பெருந் திரளாகப் பங்கேற்றனர். ஆபிரக்க நாடுகள் பலவற்றில் அபு ஜமாலை விடுதலை செய்யக் கோரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரிதானியாவில் பான் ஆபிரிக்க முன்ன்ணி இதனை ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே முன்னெடுக்கின்றது. பல இடதுசாரி இயக்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. அபு ஜமாலை தூக்கிலிட்டால் உலகெங்கும் மக்கள் எழுச்சி உருவாகும் என்பதை உணர்ந்து கொண்ட அமரிக்க ஏகபோக அரசு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய ஆலோசிக்கின்றது.

அபு ஜமாலின் பிரச்சார இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த ஒழுங்கமைப்பாளர்களுக்குப் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஜெயலலிதவை வலம்வரும் இனவாதிகளுக்கும், சோனியாவின் கண்களில் கருணையைத் தேடும் குறுந்தேசிய வாதிகளுக்கும் அபு ஜமாலை யாரென்று தெரிந்திருக்க நியாயமில்லை.

மமியா அபு ஜமாலிற்கான பிரச்சார இயக்கத்தோடு இந்திய அரச பாசிசம் கொலை செய்யத் துடிக்கும் தமிழர்களின் போராட்டம் இணைந்தால் பெரும் சக்தியாக உருவாகும் வாய்ப்புக்கள் உண்டு.

“ரமில்ஸ் போர் ஓபாமா” என்ற அமைப்பை உருவாக்கி தமது அமரிக்க விசுவாசத்தைக் அப்பட்டமாகக் காட்டிய உலகத்தமிழர் பேரவைக்கும், சீ,ஐ,ஏ இன் சிலந்திவலைக்குள் நாடுகடந்த தமிழீழம் அமைக்கும் உருத்திர குமாரர்களுக்கும் அவரது சகாக்களுக்கும் அடுத்த தலைமுறையில் கூடப் போராடும் எண்ணம் உருவாகாது.

Exit mobile version