Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேய்கள், ஓநாய்கள்,வேட்டை நாய்கள் : டி.அருள் எழிலன்.

புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் கொடுக்கப் போவதாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள மேலாதிக்க இலங்கை அரசின் போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. போருக்குப் பிந்தைய உளவியல் துன்பங்களையும், உடல் துன்பங்களையும், சிவில் உரிமைகள் பறிக்கப்பட்ட துன்பங்களையும், சுய மரியாதை பறிக்கப்பட்ட துன்பங்களையும் நேரடியாக ஈழ மக்கள் இலங்கைத் தீவிற்குள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைக்கு வெளியே புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும், தமிழகத்தில் வாழும் மக்களும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இலங்கை அரசு நடாத்தும் உளவியல் போரை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் பல் வேறு குழுக்களாக சிதறி விட்டனர். சிலர் இந்தியாவின் தயவில் ஈழம் பெறலாம் என்றும், சிலர் மேற்குலக நாடுகளின் தயவில் இலங்கையை தனிமைப்படுத்தலாம் என்றும் கனவு காண்கிறார்கள். அத்தகையக ஒர் காலம் கனியும் என்று காத்திருக்கும் அரசியலை தந்திரோபாயம் என்று கதைக்கிறார்கள்.பெரும்பலான முன்னாள் புலி ஆதரவுப் பிரமுகர்கள் இலங்கை அரசோடு கைகோர்த்திருக்கும் உண்மையை புலத்து மக்களால் எதிர்கொள்ளவோ துல்லியமாக இனம் கண்டறியவோ முடியவில்லை. இந்தக் குழப்பமும் ஸ்திரமற்ற நிலையும் இலங்கையின் ஒடுக்குமுறைக்கு அதிக வலுச் சேர்த்து விடுகிறது.

இதுவரை இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலையில் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேல் இருக்கலாம். இறுதிப் போரின் போது மட்டும் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும், போருக்குப் பின்னர் முகாம்களிலும் ரகசிய வதை முகாம்களிலும் நடந்த அரசியல் படுகொலைகள் பத்தாயிரத்தைத் தாண்டும் என்பதை நாம் நிராகரிக்க முடியாது. ஆயுதமேந்தி களத்தில் நின்ற போராளிகளையும் கொன்றார்கள்.போருக்குப் பின்னர் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட அரசியல் கைதிகளையும் கொன்றார்கள். பாலகுமார்,புதுவை, யோகி, பேபி என இவர்களில் எவர் ஒருவருமே இன்று இல்லை என்று தெரிகிறது. ஆக கடந்த ஒரு வருடமாக இது தொடர்பாக நாம் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளோம். இலங்கை ஒரு இனக்கொலை நாடு, பயங்கரவாத நாடு அந்த நாட்டை இனகொலைக் குற்றத்திற்காக தண்டிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை மட்டுமல்ல உலகம் தழுவிய மனித உரிமையாளர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்கள், இடதுசாரிகள், புரட்சிகர சக்திகள், மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகளின் கோரிக்கையுமாகும்.

இலங்கையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

மேல் நிலை வல்லரசுகளின் உதவியோடும் அவர்களின் பிராந்திய வல்லரசுகளின் துணையோடும் வன்னி மீதான் போர் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவின் செல்வாக்கு மண்டலமான இலங்கையில் தனது உள்ளூர் தரகு முதலாளிகளுக்கான சந்தை வாய்ப்பிற்குத் தடையாக புலிகளும் தமிழீழக் கோரிக்கையும் இருப்பதாக இலங்கை சர்வதேச அளவில் முன்னெடுத்த பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றே பேரினவாத இலங்கை அரசின் இனக்கொலைக்கும் கிடைத்த வெற்றி. சொந்த நாட்டின் வளங்களை முதலீட்டீற்கான வாய்ப்பாகக் காட்டிய இலங்கை போருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் இஸ்ரேல், அமெரிக்கா, தொடங்கி சீனா, இந்தியா என்று எல்லா நாடுகளிலும் பெற்றுக் கொண்டது. இதில் ஏனைய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் பங்கு அதிகம்.

சுரண்டல் வர்த்தக நலனும், இலங்கையை தனது காலனியாக்கிக் கொள்ளும் நலனும் கூடவே சோனியாவின் தனிப்பட்ட விருப்பங்களும் ஒரு காரணமாக இருந்ததால் இந்தியா இப்போரை நடத்தி முடிப்பதில் தீவீரமான இருந்தது. போரை நடத்தி முடித்த கையோடு இந்தியா இலங்கையை கைகழுவவும் இல்லை, சர்வதேச அளவில் பெயரளவுக்கு எழுந்த இனக்கொலை குற்றச்சாட்டில் இருந்து இலங்கையை இன்று வரை பாதுகாத்துக் கொண்டிருப்பது இந்தியாதான். இறுதிப் போரின் போதும் மூன்றாவது நாடொன்று தலையிடுவதை விரும்பாத இந்தியா புலிகள் சரணடைந்த விஷயத்தில் என்ன சித்து வேலைகளை எல்லாம் செய்தது என்பதை உலக அளவில் சில மனித உரிமை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தினார்கள். இதெல்லாம் போருக்குப் பிந்தைய கடந்த ஒரு வருடச் சூழல்.

இப்போது சினிமா, நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், மக்களால் அறியப்பட்ட பொது முகங்கள் எனப் பலரும் இலங்கை செல்ல ஆர்வம் கட்டுகிறார்கள். ( இதில் நான் இலக்கிய நிகழ்வுகளுக்காகச் செல்லும் இலக்கியவாதிகளைச் குறிப்பிட வில்லை. காரணம் இலக்கிய நிகழ்வுகள் எவ்வித அரசியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பது என் கருத்து) அப்படி இலக்கியவாதிகள் எவரையும் நாம் இலங்கை செல்லக் கூடாது என்றோ இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றோ சொல்லவில்லை. தவிறவும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்ப்பியக்கம் கட்டக் கூட இலங்கை சென்றுதான் ஆக வேண்டும். இலங்கை செல்லக் கூடாது என்று சொல்வது எவளவு பெரிய முட்டாள் தனம் என்பது எனக்குத் தெரியும்.

சினிமாக்காரர்கள், பொதுவாழ்வில் உள்ளோர்கள் செல்லக்கூடாது என்று கூடச் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் பயண நோக்கம் எப்படியானது என்பதைப் பொறுத்து அதை நாம் நிச்சயமாக கடுமையாக எதிர்த்தே ஆக வேண்டும். இங்கே உதாரணத்திற்கு ஐஃபா விழாவைச் சொல்லலாம். இந்திய சர்வதேச திரைப்படக் கழகமான இந்த நிறுவனம் கொழும்பில் நடத்தவிருந்த விழாவை நாம் தமிழர் அமைப்பு கடுமையாக எதிர்த்ததோடு உணர்ச்சிவசப்பட்டு அறிக்கையோ, அதிரடி ஸ்டேட்டுமெண்டுகளையோ விடாமல் முறையாக திட்டமிட்டு அந்த இயக்கத்தை எடுத்தது. அவ்விழா தொடர்பான சர்ச்சையை ஊடகங்கள் கையாளுமாறு பார்த்துக் கொள்ள அந்தப் போராட்டம் பெரும் வெற்றியளித்தது. மிக மோசமான முறையில் அந்த விழா கொழும்பில் தோல்வியைத் தழுவியது. ஆனால் இதற்கு அடுத்தக்கட்டம்……அங்கேதான் இலங்கை அரசு அசினை வைத்து ஒரு உடைப்பை ஏற்படுத்தியது. உண்மையில் அசின் இன்று தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் ஒரு நடிகை அல்ல, அவர் கேரளாவில் உள்ளூர் நடிகைகள் மலையாளப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னபோதே அதை தூக்கி எரிந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர். இதே விதமான கண்டிப்பொன்றை நீங்கள் அசினிக்கு போடுவீர்கள் என்றால் தமிழ் சினிமாவையும் தூக்கிப் போட்டு விட்டு அவர் பாலிவுட் சென்று விடுவார். இதனால் ஏற்படும் பசி பட்டினிச் சாவுகளுக்கு யார் பொறுப்பேற்க முடியும்? ஒரு நடிகை தனது சினிமா வாழ்வில் எப்படி முன்னேற வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை வர்த்தக ரீதியில் செய்து கொண்டிருக்கிறார் அசின். அது சரியா? தவறா? என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு அசின் போகக் கூடாது என்று சொல்லும் உரிமை நமக்கில்லை. ஆனால் அவர் சென்றது அவருடைய வேலையைப் பார்க்க மட்டுமா? அரசு இராணுவ விமானத்தில் , இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சே மனைவியுடன் சென்று யாழ்பாண முகாம்களை பார்வையிட்டு வந்ததோடு தாம் மிகப்பெரிய மனித உரிமைப் பணியை செய்து வந்திருப்பதாகவும் சொல்கிறார் இவரது மனித உரிமைப்பணியின் பார்ட்டனர் ஷிராந்தி ராஜபட்சேயுடனான வர்த்தக நலன்களை மறைத்து தமிழ் மக்களை மோசடி செய்திருப்பதோடு இலங்கை அரசின் இனக்கொலை முகத்தை மாற்றும் முயர்ச்சிக்கு அசின் உதவியிருக்கிறார் என்பது நூறு சதவீதம் உண்மை. ஆனால் மிகத் தந்திரமாக நம்மைப் பார்த்தே ” அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவியது தவறா? நான் என்ன தவறு செய்தேன்? ” என்று சிலுவையில் தொங்கிய இயேசு மாதிரி கேட்கிறார். நாமோ இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்களைப் போல கூனிக்குறுகி நிற்க வேண்டியிருகிறது.

கருணாஸ், ரஜினி, கமல், சரத்குமார்

சரி அசின் மலையாளி அவர் அப்படித்தான். என்று தமிழ் தேசிய நோக்கில் பார்த்தால் கூட இங்குள்ள பச்சைத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்களா? என்ற கேள்வியும் வருகிறது. ஐஃபா விழாவை கமலும், ரஜினியும் புறக்கணித்து விட்டதற்காக தமிழகத்தில் சில இடங்களில் உண்மைத் தமிழர்கள் ரஜினி, கமலுக்கு நன்றி என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். நாளையே அவர்கள் இலங்கை சென்றால் இதே போஸ்டர்களின் நாளை ரஜினியும் கமலும் பார்ப்பனத் துரோகிகள் என்று போஸ்டர்களின் தெரிவார்கள். இப்படி வாழ்த்தியும் திட்டியும் அவசரப்பட்டு போஸ்டர் ஒட்டுகிறவர்கள். இம்மாதிரிப் பயணங்களில் இருக்கும் வர்த்தக நோக்கத்தை வருமானத்தையும், வருமானம் ஈட்டும் தந்திரத்தையும் மறந்து விடுகிறார்கள். இலங்கை அரசு வானொலியான சூரியன் எம்,எம் நடத்தும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கருணாஸ் இலங்கை செல்ல விருந்த நிலையில் நாம் தமிழர் அமைப்பு எஸ்.எம்.எஸ் மூலம் அவரை டார்ச்சர் செய்து விட்டதாக கருணாஸ் சொல்கிறார். கடந்த 24 – ஆம் தியதி செல்ல வேண்டிய பயணம் கேன்சலாகிவிட சென்னையிலிருந்தே இலங்கை வானொலியின் தோன்றிய கருணாஸ் விரைவில் வர விருப்பதாக அறிவித்திருக்கிறார். கருணாஸ் ஒரு தேவர் சாதி வெறியர் பகிரங்கமாக தேவர் சாதி மாநாடுகளில் கலந்து கொண்டு சவடால் அடிப்பவர் என்பதெல்லாம் தனிக்கதை. அவர் தேவர் சாதி வெறியராக இருப்பதற்கும் இலங்கை செல்வதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால்… தமிழில் ” மறத்தமிழன் ஒருவன்தான் மண்டியிடாத தமிழின்’ என்றொரு சாதி சென்டிமென்ட் இருக்குகிறது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது போர் நிறுத்தம் கோரி சென்னை மாணவர்கள் கொஞ்சம் பேர் ஒரு பேருந்தில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் சென்றார்கள்.

கனிமொழியும், திருமாவும் அந்த பிரச்சாரப் பயணத்தை சென்னையில் தொடங்கி வைத்தனர். ( அப்போது தமிழ் தேசியவாதிகளுக்கும் கருணாநிதிக்கும் பிளவு ஏற்படாத நேரம்). ஒரு மாணவர் என்னிடம் ஈழத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றார். பிரச்சாரம் போறாங்க அவங்க கூடப் போறீங்களா? என்று கேட்டேன். அதற்கு அந்தப் பையன் சொன்னான். ‘அது எஸ்.சி பசங்க சார்” என்றான். அப்போதுதான் தெரிந்தது அந்தப் பேருந்தில் சென்றதில் பெரும்பலான மாணவர்கள் சட்டக்கல்லூரியைச் சர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்று. பையன் சொன்னது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை. ஆக மறத்தமிழன், மண்ணாங்கட்டி தமிழன் என்கிற செண்டிமெண்டெல்லாம் சும்மா உதார். இலங்கை அரசு ஒரு தொழில் வாய்ப்பையோ, வருமானத்தையோ ஈட்டிக் கொடுக்கும் என்றால் மறத்தமிழன் கொழும்பில் முழங்குவான் என்பதை அனுபவம் நமக்குக் காட்டுகிறது. அட ஆயுதமேந்திப் போராடிய புலிகளே, புலிகளின் புலத்துத் தலைவர்களே இலங்கை அரசுக்காக வரிந்து கட்டி நிற்கும் போது இங்குள்ள மறத் தமிழன் மட்டும் நக்காமல் என்ன செய்வான்? தமிழனாவாது? திராவிடனாவது ஸ்பெஷல் எலும்புத்துண்டுகள் கிடைக்கும் போது இவர்கள் போகாமல் இருப்பார்களா? என்ன?

நடிகர் சங்கம் விரைவில் இலங்கை செல்லும்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்துள்ள நடிகர் சங்கக் கூட்டத்தின் தீர்மானத்தைப் படிக்கும் எவர் ஒருவருக்கும் புரிந்து விடும் விரைவில் இவர்கள் இலங்கை சென்று அகதிகளுக்காக மாபெரும் குத்துப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்டப் போகிறார்கள் என்று. நடிகர் சங்கக் கூட்டம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் சரத்குமார் லண்டன் சென்று வந்தார். சென்னையில் தூதராக இருந்து இப்போது லண்டனில் இருக்கும் அம்சாவின் அழைப்பின் பேரில் சென்றதாக ஈழத் தமிழ் பிரமுகர்கள் சொல்கிறார்கள். இதை எல்லாம் நாம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்பதால்தான் அவர் சினிமா நடிகர்கள் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ இலங்கை சென்றால் யாரும் விமர்சிக்கக் கூடாது என்று சரத்குமார் விரும்புகிற ஒன்றை நடிகர் சங்கக் குரலில் பேசுகிறார். ஆனால் நாம் இதை அச்சமற்ற முறையில் அம்பலப்படுத்த முன்வரவேண்டும். சரத்குமாரும் ஒரு பச்சைத் தமிழர்தான் கூடவே பசையுள்ள தமிழரும் கூட, இலங்கையில் அவருக்கு தொலைக்காட்சித் தொழிலக்ள் உண்டு நீண்டகாலமாக சிங்கள சீரியலை ராடான் நிறுவனம் தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது. ஆக ஜெகத்கஸ்பார் புராஜெக்ட் போட விரும்பினாலும் சரி, சரத், கருணாஸ், அசின் போன்றோர் இலங்கையின் இனக்கொலை முகத்தை மறைக்க தமிழ் மக்களின் பெயரால் படையெடுத்தாலும் சரி எல்லாமே தொழில், வருமானம், ஆதாயம் என சுய நல நோக்கங்கள் இல்லாமல் எதுவும் இல்லை.

ஈழ மக்களுக்கு உதவுவதை நாம் எதிக்கிறோமா?

இவர்கள் எல்லோரும் ஓங்கி ஒரே வார்த்தையில் நம் தலையில் அடிப்பது ‘ஈழ மக்களுக்கு உதவுவது தவறா?, ”சும்மா அறிக்கை விடுவதையும் தமிழீழம் என்று பேசுவதையும் நிறுத்தி விட்டு அங்கே போய் மக்களுக்கு உதவுங்கள்” இதுதான் இவர்கள் நமக்குச் செய்கிற அட்வைஸ். தந்திரமானதாகவும், புத்திசாலித்தனமாகவும் தோன்றும் இக்கேள்வியினுள் புதைந்திருக்கும் அருவருக்கத் தக்க உண்மைகளை பலரும் மறைத்து விடுகிறார்கள். அல்லது பேசினால் நாம் உண்மையிலேயே போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரிகளாக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் மறைமுகமாக அசின் மக்களுக்கு உதவுவது தவறா? என்பதே ஒரு வகையான மிரட்டல்தான். ஈழ மக்களின் இன்றைய தேவை நிவாரணமே, அதில் எனக்கு எத்தகைய கருத்து முரண்களும் இல்லை. ஏன் ஈழ மக்களுக்கு நிவாரணம் தேவை? அங்கு என்ன பிரச்சனை? என்ற கேள்வியை நாம் அசினிடம் எழுப்பினால் இலங்கை அரசு தொடுத்தப் போரில் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள் என்று சொல்வாரா என்ன? அல்லது இத்தனையாயிரம் விதவைகளும், ஊனமுற்றவர்களும் வானத்திலிருந்து தேவதூதனால் வன்னிக்குள்ளும் முகாம்களுக்குள் கொட்டப்பட்டவர்களா? என்ன? கிடக்கட்டும். ஈழ மக்களுக்கு நிவாரண உதவிகளுக்காக கலை நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள், ஸ்பெஷல் ஷோக்கள் நடத்துகிறோம் அதில் வசூலாகிற பணத்தை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கிறோம் என்பதுதான் இவர்கள் சொல்லும் காரணம். சொல்லப்படும் காரணம் இதுவாக இருந்தாலும் இம்மாதிரியான சகல விழாக்களையும் ஒருங்கிணைத்து நடத்துவது பயங்கரவாத இலங்கை அரசே. இப்படி வசூலாகிற பணத்தை இலங்கை அரசு தமிழ் மக்களுக்குச் செலவிடும் என்று இலங்கை அரசின் சார்பில் இவர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். சரி இலங்கை பல தசாப்தகாலமாக போரால் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் நலிந்த நாடு அதே விழாவை சென்னையில், பெங்களூருவில், மும்பையில் நடத்தி இலங்கையில் வசூலாவது போல பல மடங்கு வசூலித்து சினிமா நட்சத்திரங்களே நேரடியாகக் கொடுக்கலாமே? அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் கொடுக்கலாமே என்றால் நம்மை முறைக்கிறார்கள்.புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலவரான வழிகளில் உதவி செய்கிறார்கள்.

வழக்கம் போல இதிலும் சில கும்பல்கள் வசூலித்து தங்களை வளப்படுத்திக் கொள்வதும் நடக்கிறதாம். அகதிகளுக்குக் கொடுக்கிற நிலங்களைக் கூட சிலர் அபகரித்திருக்கிறார்கள். ஆனாலும் இம்மாதிரியான உதவிகள் அவர்களுக்கு கொசுறு போன்றதுதான் வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்பான நிலம், பணம், நகை என எல்லாவற்றையும் இழந்து விட்ட அவர்கள் ஒரு சமையல் பாத்திரத்தைக் கூட புதிதாக வாங்கித்தான் ஒரு வாழ்க்கையைத் துவங்கவே வேண்டும் என்பதுதான் அங்குள்ள நிலை. ஆக எத்தனை பேர் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வருகிறீர்களோ அவளவு பேரையும் நாம் வரவேற்க வேண்டும். ஆனால் நடிகர், நடிகைகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள், இலங்கைக்கு செல்ல இருப்பதன் நோக்கம் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர் ஒரே ஒருவர்தான் .பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் இந்திய விவசாயிகளையே தற்கொலை விழிம்பில் தள்ளிய எம்.எஸ். சுவாமிநாதன்தான். அவர்தான் அந்த உண்மையைச் சொன்னார் ”ஒவ்வொரு பேரழிவிலும் ஒரு ஆதாயம் உண்டு ” என்றால் அதைத்தான் இவர்கள் சுவாமிநாதனின் குரலில் பேசாமல் பாழடைந்து கிடக்கும் தமிழ் மக்களின் குரல்களிலேயே பேசுகிறார்கள்.

நிவாரணப் பணிகள் என்பது ஒருவகையான பொருளாதாரப்பணியே. பொருளாதார உதவியே, ஆனால் அதைச் செய்ய வேண்டியது யார்? கொல்வது அவன் உதவுவது நாமா? போபாலில் அமெரிக்க லாப வெறிக்குப் பலியான போபால் மக்களுக்கு நமது வரிப்பணத்தைக் கொடுத்து தங்களை யோக்கியர்களாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் குழுவினருக்கும், பேரினவாத போர் வெறியில் ஈழ மக்களை கொன்றொழித்து விட்டு நீங்கள் உதவுங்கள் உதவாதவன் எல்லாம் தமிழினத் துரோகி என்று சொல்லும் ராஜபட்சே கும்பலுக்கும் என்ன வித்தியாசம். ஆனாலும் சிங்கள மேலாதிக்க பௌத்த பாசிஸ்டுகள் ஒரு போதும் ஈழ மக்களுக்கு உதவப் போவதில்லை என்பதால் நாம் நிவாரணங்கள் செய்வதை வரவேற்கிறோம்.

ஆனால் கொலையும் செய்து விட்டு செய்யாத நிவாரணத்திற்கு போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்க நீங்களும் ஒரு முகமாக நிற்பதை எப்படி ஏற்றுக் கொள்வது என்றுதான் கேட்கிறோம். நிவாரணங்களுக்கான பயணத்தையே நீங்கள் இலங்கையில் கொலை முகத்தை மறைக்கும் தந்திரமாக மாற்ற வேண்டாம் என்கிறோம். சரி நிவாரணம் என்பது ஒரு கோரிக்கை. அடுத்து அரசியல் கோரிக்கை. ஏனென்றால் நிரந்தரமாக ஈழ மக்களின் நிம்மதி என்பது அரசியல் தீர்வில் மட்டும்தான் உள்ளது. ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கையின் எதிரி இலங்கை அரசுதான் எனபதை மிக மிகத் தந்திரமாக இங்கே மறைத்து விடுகிறார்கள். எவன் எதிரியோ, எவன் இந்த மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி அவர்களை வீதியில் விசினானோ, எவன் கூட்டம் கூட்டமாக இம்மக்களைக் கொன்று அவர்களை முட் கம்பி வேலிகளுக்குள் முடக்கினானோ, அவனுடனேயே சேர்ந்து நிவாரணங்கள் மேற்கொள்வதென்பது ஈழ மக்களின், உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை கொன்று விடுகிற அதை குழி தோண்டி புதைக்கிற வேலையாகும். ஈழத்தில் விழுந்த பிணங்களை இரண்டு விஷயங்களுக்காக இன்று பயன்படுத்துவதை நாம் காண்கிறோம் . ஒன்று இனகொலை செய்த இலங்கை அரசை தண்டிக்கக் கோரவும், இன்னொன்று உதவிகள் பெற்று மக்களுக்குக் கொடுக்கவும் இந்தப் படங்கள் பயன்படுத்தப்படுவதோடு மிக முக்கியமாக ஈழ மக்களின் எதிர்கால அரசியல் நோக்கங்கள் குறித்துப் பேசுகிறவர்களுக்கு எதிராகவும் இந்தப் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இம்மக்களை இப்படி கோர நிலைக்குக் கொண்டு வந்தவர்களோ மக்களை மீட்க வந்த ரட்கர்களைப் போல தங்களை படம் காட்டிக் கொள்கிறார்கள்.

இப்படியாக நிவாரணம் குறித்துப் பேசுகிற பலரும் குறிப்பிடும் இன்னொன்று நீங்கள் தமிழகத்திலும், புலத்திலும் இருந்து கொண்டு இனப்படுகொலை, சுயநிர்ணயம், தனி ஈழம் என்றெல்லாம் பேசினீர்கள் என்றால் அங்கே இலங்கையில் தமிழர்களுக்கு அது பிரச்சனையாகி விடும். ஆகவே நீங்கள் தமிழ் ஈழம், தேசிய இனப்பிரச்சனை, சுயநிர்ணய உரிமை இதெல்லாம் பேசக் கூடாது இலங்கை அரசோடு சேர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வது மட்டுமே உங்கள் பணி. அல்லது நீங்கள் நிவாரணம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை பேசாமல் இருங்கள் இதுதான் இவர்கள் பொதுவாகச் சொல்கிற இன்னொரு அட்வைஸ்.அதாவது காஷ்மீரில் கொல்லப்படும் மக்களுக்காக இந்திய முஸ்லீம்களோ தமிழ் பேசும் கிழக்கு முஸ்லீம்களோ பேசினால் அல்லது போராடினால் இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களைக் கொன்று விடும் என்பதுதான் இவர்கள் வாதம். இதனடிப்படையில் உத்தபுரத்தில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காக வெளியில் உள்ள தலித்துக்கள் போராடினால் வெள்ளாளர்களும், பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளும் உத்தபுரத்தில் தலித்துக்களைக் கொன்று விடுவார்கள். இதுதான் இவர்கள் நமக்குச் சொல்லும் அடைவைஸின் யோக்கியதை. இந்த இடத்தில்தான் நாம் புலிகள் அரசியலற்ற வலதுசாரி சுத்த இராணுவவாத போராட்டத்தைப் பார்க்கிறோம். உலகு தளுவிய மேல் நிலை வல்லரசுகளின் செல்வாக்கு மண்டலங்களில் அல்லது பிராந்திய வல்லரசுகளின் செல்வாக்கு மண்டலப் போட்டியை புரிந்து கொள்ளாத புலிகள் அமெரிக்கா விரித்த வலையில் விழுந்தார்கள். தவிறவும் சகோதரக் கொலைகள், ஜனநயாகச் சக்திகளை இனங்கண்டு ஒன்று சேர்க்காமை, என எவ்வளவோ விமர்சங்கள் சொல்லப்பட்டாயிற்று. சிலர் முள்ளிவாய்க்கால் தந்த பாடத்தை எதிர்கால அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயேப் பார்க்கிறார்கள். சிலரோ தலித் விடுதலை, பின் நவீனத்துவம், போன்றவைகளை குறுகிய நோக்கங்களோடு ஈழ விடுதலை அரசியலை சிதைக்கவே பயன்படுத்துகிறார்கள். புலிகளை விமர்சிக்கிறோம் என்ற பெயரிலும் தலித் விடுதலை என்னும் பெயரிலும் இவர்கள் ஆடுகிற நாடகங்கள் இப்போது அம்மணமாகிக் கிடக்கின்றன. இப்படிப் போராடிய தலித் போராளியாக தன்னைக் காட்டிக் கொண்டவர்கள் இப்போது இன்னொரு தலித் போராளியான டகள்ஸ் தேவானந்தாவின் முகாமில் ஐக்கியமாகி விட்டார்கள். புலிகள்தான் கடவுள் என்று கூவித்திரிந்தவர்கள் இப்போது ராஜபட்சேவின் மடியில் அமர்ந்தது போலத்தான் இதுவும்.ஆனால் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அந்த மக்களின் போராட்டத்தை மீள முன்னெடுக்கும் எண்ணம் கொண்ட நேர்மையான அரசியல் சக்திகளுக்கு மட்டுமே புலிகளை விமர்சிக்கும் உரிமை உண்டு. மேலும் ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் முற்போக்குச் சக்தி ஒன்று நாளை ஈழத்தில் உருவாகும் என்றால் அதை இவர்கள் ஆதரிப்பார்களா? என்றால் அங்குதான் இவர்களின் உண்மையான அரசியல் நோக்கம் நமக்குப் புரியும்.

இவர்கள் ஒன்றிணையும் புள்ளி

இலங்கை தனது உள்நாட்டுப் போரில் வென்றுள்ளது. வெற்றி என்பது ஈவிரக்கமற்ற படுகொலைகளின் மூலம் மொத்த ஈழத்தையுமே மயானமாக்கிச் சென்றதுதான் ராஷ்பட்சேவின் போர் வெற்றி. உள்நாட்டில் வென்றதற்கப்பால் இப்போது இலங்கை அரசின் கவனம் தமிழகம், புலம்பெயர்நாடுகளில் திரும்பியிருக்கிறது. உள்நாட்டில் கொன்ற, முடமாக்கப்பட்ட மக்களின் படங்களை நம்மிடமே காட்டி நமக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் தந்திர அரசியலை இலங்கை செய்கிறது. ஒரு கணத்தில் நம்மை முட்டாளாக்கி விடும் இச்செய்லகளை இலங்கை அரசு நடிகை அசினுக்கும் கற்றுக் கொடுத்தது. நடிகர் கருணாஸ் அசினிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதையேதான் தமிழ்நாட்டில் உள்ள ஆளும் தரப்பினரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரே புள்ளியில் இணைகிறார்கள். அது நிவாரணம். மத்திய அரசின் கொள்கைதான் மாநில அரசின் கொள்கை என்று கருணாநிதி பல முறைச் சொல்லி விட்டார். சரி மத்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறை எப்படி இருக்கிறது? ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை இல்லை என்பதோடு. மிகத் தீவிரமாக பயங்கரவாத இலங்கை அரசை சகல விதத்திலும் ஆதரித்து நிற்கும் அரசாக இந்திய மத்திய அரசு இருக்கிறது. இந்தக் கூட்டணியில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர்கள் திமுக ஆதரவாளர்களும். ( திமுக ஆதரவாளர்களில் சிலராவது ஈழ விவாகரத்தில் தனித்த போக்குடன் உள்ளனர். கட்சி தலைமையின் ஈழ முடிவுக்கு முரண்பட்டு நிற்கிறவர்களும் உண்டு) ஆனால் சி,பி.எம். அது எப்போதுமே ஈழ விடுதலைக்கு மட்டுமல்ல ஈழ மக்களுக்கும் எதிரானது. ஆக கட்சி நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத அதன் கலாசார பணியாட்கள் தலித் விடுதலை, கிழக்கு முஸ்லீம்களின் முரண், இவைகளைப் பேசி ஈழ விடுதலையை நிராகரித்தார்கள். இப்போது பின் நவீனத்துவாதிகள், திமுக ஆதரவாளர்கள், சி.பி.எம் கட்சியினர் இந்த மூன்று சக்திகளும் இணையும் புள்ளி என்பதே ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை எதிர்ப்பு என்பதை நாம் இனம் காண முடியும். நாளை இக்கூட்டணியில் தமிழகத்தில் ஏற்படும் கூட்டணி மாற்றங்களுக்கு ஏற்ப அதிமுக இணையும் என்பது நூறு சத உண்மை.

கொலைக்கரங்களை உதறுங்கள் போராடும் சக்திகளோடு இணையுங்கள்.

ஈழ மக்களின் சுயர் நிர்ணய விடுதலைப் போராட்டம் தொடர்பாக மிக மோசமான குழப்ப நிலைகள் உலகம் முழுக்க நிலவுகிறது. புலிகளின் முடிவுக்குப் பின்னர் இப்போது இலங்கையில் மீண்டும் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உலகெங்கிலும் உள்ள முற்போக்குச் சக்திகளிடம் காணப்பட்டாலும். இலங்கையில் தேசிய இன விடுதலைக் குரலை முன்னெடுக்கும் சக்தி எது என்பதை இனங்காண முடியாத சூழல் உள்ளது. தவிறவும் இனி போராடிய புலிகளைக் கூட ஆதரிப்பதில் பல்வேறு நடைமுறைத் தோல்விகளையும் காண முடிகிறது. குமரன் பத்மநாபன் என்னும் கே,பி. குறித்து ஒரு முறைக் வானொலி நிகழ்வொன்றில் என்னிடம் கேட்ட போது ‘கே.பி. துரோகி என்பதாக நான் நினைக்கவில்லை. முப்பதாண்டுகலாம் உங்கள் போராட்டம் வலிமையான இராணுவப் போரட்டமாக மாற கே,பி. வேண்டும் இப்போது அவர் சில கசப்பான உண்மைகளைப் பேசுகிறார் என்பதற்காக அவரைத் துரோகி என்று சொல்லக் கூடாது’ என்றேன். ( கசப்பான உண்மை என்பது பிரபாகரனின் மரணம் தொடர்பானது.) ஆனால் என்ன நடந்தது மலேஷியாவில் அவர் கடத்திக் கைது செய்யபப்ட்டார். இலங்கை சென்றதும் உயிருக்கு அஞ்சி அப்படியே உல்டா அடித்து இலங்கை அரசுக்காக வரிந்து கட்டி நிற்கிறார். வடக்குக் கிழக்கில் நிவாரணம் செய்ய வேண்டும் என்பதைத் தவிற வேறெந்த அரசியல் அபிலாசைகளும் தனக்கில்லை என்கிறார் கே.பி. என்ன அபத்தம் பாருங்கள்? இவரது அபிலாஷைகள் என்னும் அரசியல் தீர்வு இல்லாமல் போக இவர்கள் லட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்திருக்கிறார்கள். பலி எடுத்தவனிடமே போய் உயிருக்கு அஞ்சி சரணடைந்து நடந்ததை எல்லாம் விட்டு விடுங்கள் நீங்களும் வாருங்கள் நானும் வருகிறேன் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எல்லோரும் கொடுங்கள் மக்களுக்கு உதவுவோம் என்கிறார். புலம்பெயர் மக்களின் பல மில்லியன் டாலர் ரூபாய்களை ஈழப் போராட்டத்தின் பெயரால் வசூலித்தவர்கள் இவர்கள். இவர்களுள் பல கோஷ்டிகள் உண்டு. புலத்து மக்களின் பணத்தில் கொளுத்த இவர்கள் களத்தில் நின்றூ போராடிய போராளிகளின் பெயரால வசூலித்த பெருந்தொகையை திருடிக் கொண்டு விட்டார்கள் புலிகள் இல்லாமல் போனது இவர்களுக்கு பெரும் லாபத்தில் முடிய இப்போது கொன்றொழிக்கப்பட்ட மக்களைக் காட்டியே புலத்து மக்களின் பாக்கெட்டுகளைப் பார்க்கிறார்கள்.

ஈழம்

நூறாண்டுகால இலங்கையின் இன ஒதுக்கல் வரலாற்றில் புலிகளின் காலம் என்பது முப்பதாண்டுகால வரலாறே. புலிகளின் போராட்டம் என்பது பல் வேறு சாதக பாதக அம்சங்களைக் கொண்டது. இப்போது கூட முள்ளிவாய்க்கால் அனுபங்களில் இருந்து குறைந்த பட்சம் இந்தியா தொடர்பான அனுபங்களைக் கூட ஈழ விடுதலை ஆதரவாளர்கள் பெற்றிருக்கிறார்களா? என்று தெரியவில்லை. இப்போது இந்திய,சீன முரணை முன்னிநிலைப்படுத்தி தற்காப்பு நிலையில் இருந்தே அதை ஈழத்துக்கு சாதகமாக மாற்ற முடியுமா? என்று நினைக்கின்றனர். சீனா இலங்கையில் கால் பதிப்பதால் இந்தியாவுக்கு ஆபத்து என்று இவர்கள் சொல்கிறார்கள். ஒரு பேச்சுக்கு சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து வந்தால் தமிழ் தேசியவாதிகளுக்கு என்னக் கவலை? என்று எளிமையாகக் கூடக் கேட்கலாம். சீனாவைக் காட்டி இந்தியாவை எச்சரிக்க விரும்புகிற இந்தக் குரலில் உள்ள நோக்கம் என்பது மீண்டும் இந்தியாவை நட்புச் சக்தியாகப் பார்க்கிறதல்லாமல் வேறென்ன? உண்மையில் இதன் பொருள் ஈழ மக்களை, இலங்கையை சுரண்டும் உரிமை இந்தியாவுக்கே உண்டு.அது சீனாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ கிடையாது என்பதுதான். சீனாவும் இந்தியாவும் இலங்கையை பரஸ்பர புரிதல் அடிப்படையிலேயே சுரண்டுகிறது என்பதோடு சீனாவை விட மிக அதிக அளவிலான முதலீடுகளை இந்தியாதான் செய்கிறது என்கிற உண்மை கூட இங்குள்ள தமிழ் தேசியவாதிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நமக்குப் பிரச்சனை சீனா அதிகமாக முதலிடுகிறதா? இந்தியா முதலிடுகிறதா? என்பதல்ல ஒட்டு மொத்தமாக இலங்கை மக்களைச் சுரண்டாதே இந்தியாவின் செல்வாக்கு மண்டலமாக இலங்கையை, ஈழத்தை மாற்றாதே என்பதுதான் நமது கோரிக்கை. இந்தியப் பேய்களைக் கண்டு பயந்து அவர்களிடம் கெஞ்சுவதோ, சீனப் பிசாசுகளை அண்டிப் பிழைப்பதோ, சிங்கள வேட்டை நாய்களைக் கண்டு அஞ்சி அடிபணிவதோ ஒட்டு மொத்தமாக மிச்சமிருக்கும் ஈழ மக்களையும் அழித்து விடும், போரால் வென்று விட்டு அதை இராணுவ வெற்றியாகவும், அரசியல் வெற்றியாகவும் பிரகடனப்படுத்தும் இலங்கை அரசின் குரல்களை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். இலங்கைத் தீவில் இனி தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ முடியாது என்பதையும், ஈழ மக்களின் சுயநிர்ணய விடுதலைப் போரை முன்னெடுக்கவும். முற்போக்கு சக்திகள் சர்வதேச அள்வில் ஒருங்கிணைய வேண்டும். ஈழம் தேவையா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் வலுவை இலங்கை இனப்பிரச்சனை இயல்பிலேயே கொண்டிருக்கும் போது பௌத்த சிலைகளுக்கு மத்தியில் ஆயுதமேந்தி நிற்கும் சிங்கள வீரனில் காலடியில் கிடக்கும் மக்களை ஈழம் குறித்து தீர்மானியுங்கள் என்பது ஆகப் பெரிய அபத்தம். பறிக்கபப்ட்ட நிலங்களை,சிவில் உரிமையை, வாழும் உரிமையை, போராடும் உரிமையை, அடிப்படை உரிமைகளைக் கூட இழந்து விட்ட தமிழ் மக்கள் முடமாக்கப்பட்டு வீதியில் கிடக்கிறார்கள்.

இதையே மேலும் மேலும் தனக்குச் சாதகாமாக்கி தனது பாசிச எல்லையை விரிவுபடுத்திச் செல்கிறது இலங்கை. பறிக்கப்பட்ட உரிமைகளை ஈழ மக்கள் மீண்டும் பெற வேண்டுமென்றாலும் முதலில் உங்களைப் பற்றிப் படர்ந்திருக்கும் சில கொலைக்கரங்களை விட்டொழியுங்கள். ஒரு புதிய சமூக அரசியல் நடைமுறையில் மட்டுமே இனி ஈழமும், ஈழ மக்களும் தங்களுக்கான அரசியல் விடிவை போராடிப் பெற முடியுமே தவிற இந்தியாவிடமோ பாசிச இலங்கை அரசிடமோ கெஞ்சிப் பெறப் பட வேண்டிய ஒன்றல்ல ஈழ மக்களின் விடுதலை?

Exit mobile version