Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார், அம்பேத்கார், பூலே – ஏகாதிபத்தியப் பிரிவினைக் கருத்துகளைக் கொண்டவர்கள்? : பேர்லின் தமிழரசன்

பேர்லின் தமிழரசன் “தேசிய இனப்பிரச்சனையில்   ஏகாதிபத்தியங்களின் சதி”என்ற நூலிற்கு எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது.       சிந்தனையைத் தூண்டும் விடயங்களும், விவாதத்திற்கு-  விமர்சனத்திக்கு  உட்படுத்தக்கூடிய கூறுகளும் பொதிந்திருப்பதால் இப்பகுதியைத் தனிக்கூறாக மறு பதிவுசெய்கிறோம்.

தமிழ்நாட்டில் ஆரிய,திராவிட பிளவுகள்,பாகுபாடுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு அறியப்படாத ஒன்று.வீரமாமுனிவரின் திராவிட மொழியாய்வு நூலுக்கு பின்னரே இது மேற்கத்திய கல்வி அறிவுபடைத்தவர்களிடம் திராவிடமொழி,இனம்பற்றி கருதுகோள்கள் உருவாகின.

கென்றிமோர்கனின் திராவிடஉறவுமுறைகள் பற்றிய நூலும் மானுடவியயல் மொழியியல் துறைகளின்தொடக்ககாலத்துக்குரியவை.

இந்த தெளிவற்றபோக்கே திராவிடஇனம் என்ற கருத்தாக்கத்தை ஆரியஇனத்துக்கு எதிராக நிறுத்தியது,இவை இனவாதக் கற்பனைகளே.தமிழ் இலக்கியங்களில் ஆரியர் என்ற சொல் ஒரு போதும் இனம் அல்லது மக்கள் பிரிவு என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. ஆரியர் என்றால் குரு அறிவுடையோன்,மருத்துவன்,மேலாளன், ஆசிரியன், தலைவன், சிவன், புத்தன்,அரசன் ஆகியோரைக் குறிக்கவே பயன்பட்டது.சகல மதங்களின் மதகுருக்களும் இந்திரனை வழிபட்ட மதகுருக்களும் ஆரியர் என்று அழைக்கப்பட்டனர்.

எனவே திராவிடர் என்ற பதம் தமிழ் இலக்கியத்தில் பிரயோகிக்கப்பட்டு இருந்தாலும் அது ஆரியர் திராவிடர் முரண்பாட்டின் எதிர்வினையான இனம், இனக்குழு, மக்கள் பிரிவு என்ற பொருளில் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது என்பதுடன் தமிழ் இலக்கியத்தில் திராவிடர் என்ற சொல் பாவனையில் இருந்ததாய் ஒரு தடயமும் இல்லை. அதே போல் வேதம்களிலும் திராவிட என்ற சொல் பயன்பட்டதாக ஆதாரமில்லை.

ரிக்வேதம் ஆரிய திராவிட மோதல் என்ற கதைக்கு இன்று எந்த வரலாற்று ஆதாரமுமற்ற கட்டியமைக்கப்பட்ட பொய் என்பது நிருபணமாகிவிட்டது.

ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 1ம் அல்லது 2ம் நூற்றாண்டு ஆகும். வேதங்களில் உள்ள 1,52,972 சொற்களில் ஆர்ய’ என்ற சொல் வெறும் 3 தடவை மட்டுமே வருவதாக ஒரு ஆய்வு குறிக்கின்றது. வேத நூல்கள் ஆரியக் குடியேற்றத்துடன் எழுந்த ஆரியர்களின் இலக்கியம் என்பது வலுஇழந்து விட்ட பழைய காலங்கடந்த கருத்தாகிவிட்டது.

ஆர்யா’ என்ற சொல்லுக்கு வேதம்களில் நல்குடிப் பிறப்பு வேற்றாள் என்ற பொருள்கள் மட்டுமே கொள்ளப்பட்டன. பிராமணியத்தை பெரியாரும் பூலேயும் எதிர்த்தனர் என்று அ.மாக்ஸ் எழுதுகின்றார்.இந்த இருவரும் ஆரியர் – திராவிடர்களின் போhராட்டம் நிரம்பிய ஒன்றாக இந்திய வரலாற்றைப் பார்த்தவர்கள் பெரியாரின் பிராமணிய எதிர்ப்பு என்பது ஆரிய எதிர்ப்பு வடிவம்களில் ஒன்றே. பிராமனியத்தை அவர் ஆரியச் சதி என்றே பிரச்சாரம் செய்தவர்.

எனவே ஆரிய திராவிட சித்தாந்தம்கள் இன்று நவீன மானுடவியல், மொழியியல்,புதைபொருள் ஆய்வுகள் முன்பு பெறுமதி இழக்கும்போது பெரியார், பூலே, அம்பேத்கார் வரிசைகளும் சேர்ந்தே பெறுமதி இழக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிராமணர்கட்கு உரியதாய் கருதப்பட்ட பசுவணக்கம், காளை வழிபாடு, உருவவழிபாடு, மலர், பழம் இலை, நீர் இவைகளைக் கொண்டு செய்யப்படும் பூசைகள் சடங்குமுறைகள் ஆரிய மொழி பேசியவர்கட்கும் முந்திய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுக்குரியது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆரியம், திராவிடம், பிராமணியம் போன்ற கருத்துக்கள் இன்று முழுமையான மறு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவைகளாகும்.

பாரதியைக் கூடத் தேடிப்பிடித்து அவரின் பிராமணியக் கூறுகளை ஆய்வு கூடத்தில் வைத்துக் கட்டுடைத்தவர்கள் ஏன் அங்கு பெரியார், பூலே,அம்பேத்கர் போன்றவர்களை கொண்டு சென்று அவர்களது பிரிட்டிஸ் தொடர்புகளை ஏகாதிபத்தி;ய பிரிவினைக் கருத்துக்களை ஆராய்வதில்லை. பிராமணனையும் பாம்பையும் கண்டால் முதலில் பிராமணனை அடி என்ற பெரியார் வெள்ளையனையும் பாம்பையும் கண்டால் முதலில் வெள்ளையனை அடி என்று கூறக்கூடியவரல்ல.அம்பேத்கரின் பிரிட்டிஸ் சார்பு பற்றி பல தொகுதிகள் எழுதலாம். பூலே பரிசுத்தமான பிரிட்டிஸ் ஆதரவு நபர், பிராமணிய ஆதிக்கக் கருத்தை எதிர்க்கும் ஜனநாயக உரிமையானது சொந்த தேசத்தின் ஒரு பிரிவு மக்களை எதிரியாய்க் காண்பதும் பிரிட்டிஸ் ஆட்சியை ஆதரிப்பதுமான அரசியல் எல்லைகளைக் கொண்டிருக்கமுடியாது.ஆரியர், திராவிடர், பிராமணியம்,தலித்துக்கள்,தமிழன், மராட்டியன், தெலுங்கன் என்ற பிரிவினைப் போக்குகளுக்கு எதிராக இவர்களை மனிதர்களாக ஒன்றிணைக்கும் சிந்தனை வேண்டாமா?

பிறப்புச் சார்ந்து மனிதர்களை வகுப்பதும் பிரிப்பதும் பாசிசம் தான். பெரியாரை விமர்சித்தால் மாக்சைப் பற்ற எழுதுவோம் என்று பயமுறுத்தல்கள் புகலிடத்தில் உண்டு. இதுவும் தாய்த்தமிழகத்திலிருந்து பிரதியெடுத்த குணம் தான்.பெரியார் ஆரியரை பிராமணியத்தை மனிதவிரோதமட்டம் வரை எதிர்த்தவர்.

ஆனால் பிரிட்டிஸ்காரர்களை அப்படி எதிர்த்ததில்லை மேற்கத்தை பகுத்தறிவைப் போற்றி இந்தியப் பிற்போக்கு தனம்களை இழிவை அவர் ஏளனம் செய்தபோது அதை ஆரியர்களின் குற்றமாய்க் காண்பித்தார். இந்தியாவின் சாதியம் மனித இழிவுகளுக்கு இந்திய சமூக அமைப்புக் காரணமில்லையா?

அதை புதிய இந்திய தழுவிய சமுதாய மாற்றத்தாலும் உற்பத்தி வடிவங்களாலும் தான் மாற்றமுடியுமே தவிர ஆரியரைத் திட்டி பழித்து அல்ல, பெரியார் வெள்ளை நாகரீகத்தின் பிரச்சார்கர், அவர் வட இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்ப்பவரே தவிர பிரிட்டிஷ் வெள்ளை மனிதர்களும் ஆரியர்கள் தானே என்று ஒரு போதும் எண்ண முயலாதவர்.

திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தவர்கள் அவர்கட்கு முன்புவந்த திராவிடர்கள் இந்திய ஆதிக்குடிகளை ஆக்கிரமித்திருக்கமுடியாதா? ஆரியர்களை எதிர்க்க வேண்டும் என்பது ஜெர்மனிய நாசிகளின் எல்லா யூதர்களையும் செமிட்டிக் இனம்களையும் எதிர்க்கவேண்டும் அழிக்கவேண்டும் என்ற போதனைக்கு நெருக்கமானது தான். பிராமணர்கள் தலித்து மக்களை ஒடுக்குவதென்பது தனியே பிராமணர்களின் குணமல்ல பிரமாணர்களை படைத்து நிர்வகித்து வரும் இந்தியாவின் பழைய சமூக அமைப்பின் பிரச்னையாகும்.சமூக அமைப்பை மாற்றாமல் பிராமணர்கள் மாறமாட்டார்.

தமது விசேட உரிமைகளை விடச் சம்மதிக்கமாட்டார்கள். இதை தனியே மனித வெறுப்பாலும் மக்களில் ஒரு பிரிவை எதிர்ப்பதாலும் சாதிக்கமுடியாது.உலக மயமாதல் என்பது காந்தியையும் அம்பேத்காரையும் பெரியாரையும் தேவையற்றதாக்கும் முதலாளிய ஜனநாயகக் கருத்து வளர்ச்சியானது இவர்களை விட வலிமையானது.இவர்களின் போதனைகளை விட நிர்ப்பந்தங்களைத் தரும் சாதிகள்,இனம்கள், மதம்கள், பிரதேசங்கள், மொழிகள் கலப்பது தொடங்கும் இவர்கள் இந்தியர்களாக ஆசியர்களாக உலகமனிதர்களாக மாறுவார்கள்.

Exit mobile version