ஆக, தேசிய இனம் தனது பிரிந்து போகின்ற உரிமை உள்ளிட்ட உரிமைக்காகப் போராடுதலும் விடுதலைபெறுதலும் நியாயமானது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் கூட. இராணுவ வலிமைகொண்டு ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போது மௌனமாய் மரணித்துப் போதலைத் தீர்வாக முன்வைத்தலை யார் அனுமதிக்க முடியும்?
தேசிய இனம் என்பது சமூக இயக்கத்தின் தவிர்க்க முடியாத கட்டத்திற்குரிய மக்கள் கூட்டம். அந்தத் தவிர்க்கவியலாத காலக்கூறையே கடந்துசெல்லத் தடைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் கூட்டம் தடைக்கு எதிராகப் போர்கொடி உயர்த்துதல் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
இலங்கையில் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து வன்னிவரை நகர்த்திவந்து மனிதர்களைக் கூட்ட்டமாகக் கொன்றுபோட்டுவிட்டு மனிதாபிமானம் பற்றிப் பேசிக்கொள்கிறது.
எண்பதுகளின் ஆரம்பப் பகுதியில்ருந்து நேரடியான இராணுவ ஒடுக்குமுறையாக கோரமடைந்த இலங்கை அரச பேரினவாதத்தை எதிர்கொள்ள ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் ஆயுதங்களோடு களமிறங்கினார்கள்.
எங்காவது கிராமத்தில் தலைமறைவு அரசியல் உரையாடல்களையும், அடர்ந்த காடுகளின் நடுவே பயிற்சிகளையும் பண்ணைகளையும் நடத்திக்கொண்டிருந்த விடுதலை இயக்கங்களை வீங்கிப் பெருக்கவைத்தது இந்திய அரசின் இராணுவப் பயிற்சி என்ற கபட நாடகம்.
மக்களிலிருந்து முற்றாக அன்னியப்படுத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் தமக்குள் மோதிக்கொண்டன. இந்த மோதலின் உச்சபட்ச வடிவம் தான் ஏனைய விடுதலை இயக்கங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் துரோகிகள் முத்திரையிட்டு தெருத்தெருவாக கொன்றொழித்த நிகழ்வு.
உணர்ச்சி வேகத்தில் தாய், தந்ததை, கற்கை, சுற்றம் அனைத்தையும் துறந்து இலங்கை இராணுவத்தை ஆயுத முனையில் எதிர்கொள்ளத் துணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தெருவோரத்தில் மக்களின் கண்முன்னால் கோரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.
எண்பத்தாறாமாண்டு இரண்டு ரெலோ இயக்கப் போராளிகள் திருனெல்வேலியில் மக்கள் முன்னால் புலிகளால் உயிருடன் தீயிட்டுக் எரிக்கப்பட்டனர். பதின்நான்கு வயது மட்டுமே நிரம்பியிருந்த கிழக்கு மாகணத்திலிருந்து போராடுவதற்காகவே புறப்பட்டவர்கள் ஏன் கொலைசெய்யப்படுகிறோம் என்று தெரியாமலே தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.
ரெலோ இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட சில காலங்களின் பின்னர் புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களும் புலிகளின் ஆயுதங்களின் பசிக்கு இரையாகின.
கைது செய்யப்பட்ட போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். அப்போதெல்லாம் சாரி சாரியாகச் செத்துப் போனவர்கள், முள்ளிவாய்க்காலை முன்னமே அனுபவித்தவர்கள்.
இலங்கை அரசபடைகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் அஞ்சி தலைமறைவு போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த பலர் புலிகள் இயக்கத்தின் துப்பாக்கிகளுக்கு இரையாகிச் செத்துப் போயிருக்கிறார்கள். புலிகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட காலத்தில் ஜெயராஜ் என்ற போராளி தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான். புலிகளுக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்த முடியாது. அவர்கள் இலங்கை அரசிற்கு எதிரானவர்கள். அவர்களோடு நான் உடன்படவில்லை. அவர்களது போராட்டம் அழிவையே ஏற்படுத்தும், நான் தலைமறைவாகி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை என்றாவது முன்னெடுப்பேன்… இப்படிப் பேசிக்கொண்டிருந்த வேளையில் இன்னமும் சூடாறியிராத புலிகளின் துப்பாக்கி ஜெயராஜின் உயிரைக் காவுகொண்டதை அவரது மனைவி இன்னமும் நினைவு கூர்கிறார்.
தேசிய விடுதலைக்காகப் போராடுகின்ற இயக்கம் ஏனைய ஒத்த நோக்கம் கொண்ட போராளிகளை நட்புசக்திகளாகக் கருதிக்கொள்ளும். அவர்களுடனான முரண்பாடுகளைப் பேணிக்கொண்டே உடன்பாட்டின் அடிப்படையில் பொது வேலைத்திட்டத்தை உருவாக்க முனையும். தேசியத்தின் இன்னொரு முகம் ஜனநாயகம். ஜனநாயகம் கருத்துப் பரிமாறலுக்கானதாக மட்டுமன்றி சுதந்திரமான நகர்வையும், தேசிய சக்திகளுடனான இணைவையும் வலிமை கொள்ளச்செய்யும்.
தேசியத்திற்கான போராட்டத்திலிருந்து ஜனநாயகத்தை அழித்ததனூடாக புலிகள் தேசிய விடுதலை இயக்கம் என்ற தன்மையை ஆரம்பத்திலிருந்தே இழந்திருந்தனர். தவிர, ஏனைய அமைப்புக்களையும், புலிகளுக்கு வெளியேயிருந்த தேசிய சக்திகளையும் எதிரியாகக் கருதி அழித்தொழித்த பண்பு தேசிய இயக்கத்திற்கானதல்ல. தேசியத்தின் ஒரு பகுதியைத் திட்டமிட்டு சிதைப்பதற்கான நடைமுறையாகும். இந்த வகையில் தமிழீழ விடுதலை இயக்கம் தேசிய விடுதலை இயக்கத்திற்கான அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை.
புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக தன்னை நிறுவிக்கொண்டது.
தொண்ணூறாம் ஆண்டு வட பகுதியில்ருந்து முஸ்லீம் மக்கள் இரவொடிரவாக வெளியேற்றப்பட்டனர். நூற்றாண்டுகளாக மதவழிபாடு தவிர்ந்த ஏனைய அனத்து சுக துக்கங்களிலும் தமிழ்ப் பேசும் ஏனைய பிரிவினரோடு இரண்டறக் கலந்திருந்த அவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுமாறு ஆயுத முனையில் கட்டளையிடப்பட்டனர். முதியோர், நிறைமாதப் பெண்கள், இயலாதோர், குழந்தைகள் என்று எல்லோரும் ஒரு காலைப் பொழுதில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்களால் எதிர்கள் போல துரத்தப்பட்டனர், எங்கே போகிறோம் என்பது கூடத் தெரியாமல் மரண பயம் பின் தொடர் அவர்கள் தமது சொந்த மண்ணிடம் விடைபெற்ற சோக நிகழ்வு வன்னி முகாம்களில் மக்க்கள் அனுபவித்த துயருக்கு நிகரானது.
ஒடுக்கப்பட்ட தேசிய இனமொன்றின் விடுதலைக்கான அமைப்பு ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைக் குறைந்தபட்சம் நட்பு சக்திகளாகவே கருதிக்கொள்ளும். அவர்களின் விடுதலைக்கான போராட்டத்தை ஊக்குவித்தலும் அரசைப் பலவீனப்படுத்தலும் தேசிய இயக்கம் ஒன்றின் அடிப்ப்படைப் பண்புகளாகும். முஸ்லீம் மக்களிடமோ, மலையக மக்களிடமோ புலிகளின் அணுகுமுறை அவர்களை அன்னியமாக்கியது மட்டுமல்ல அவர்களை ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் எதிரிகளாக மாற்றியமைத்தது.
புலிகள் தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் நட்புசக்திகளை எதிரிகளாக மாற்றியது மட்டுமன்றி நியாயம்மிக்க ஒரு போராட்டத்தைப் பல நீண்ட ஆண்டுகள் பின்னடைய வழிவகுத்தனர்.
இவ்வகையில் புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக மறுபடி தன்னை நிறுவிக்கொண்டது.
1985 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சிங்களச் அப்பவிகளை, துறவிகளை, பெண்களை, குழந்தைகளை எந்த வேறுபாடுமின்றி கொலைசெய்த புலிகளின் ஆயுதங்கள் உவப்பானவையல்ல.
பேரினவாதம் ஏற்படுத்திய அழிவுகள், நெருக்கடிகள் சிங்கள மக்களைக் கூட இலங்கை அரசிற்கு எதிரானவர்களாகச் சிறுகச் சிறுக மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. சிங்கள மக்களை அதிகமாகக் கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கம் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்திருந்தது. ஜே.வி.பியுடன் முரண்பட்ட பல குழுக்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து அரசிற்கி எதிரான ஆயுதப் போராட்டத்தை தயார்செய்ய ஆரம்பித்திருந்தன. தேசிய விடுதலைக்கு தமிழ் மக்கள் வழங்கிய அங்கீகாரம் அவர்களுக்குப் புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருந்தது.
அனுராதபுரப் படுகொலைகள், மொத்த சிங்களை மக்களையும் இலங்கை அரசிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கும் நிலைக்கு நகர்த்திச்சென்றது. தவிர, தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான உணர்வைத் உரமிட்டு வளர்த்தது.
ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள ஒடுக்கபடும் மக்கள் பிரிவினரைத் தமக்கு ஆதரவாக இணைத்துக் கொள்வது தேசிய விடுதலை இயக்கமொன்றின் அடிப்படைப் பண்பாகும். புலிகளின் சிங்கள அப்பாவி மக்களுக்கு எதிரான போக்கு விடுதலைப் போராட்டத்தின் பிரதான நட்பு சக்திகளான ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களைத் தேசிய விடுதலைக்கு எதிரானவர்களாக முற்றுமாக மாற்றியமைத்து போராட்டத்தைப் பல நீண்ட ஆண்டுகள் பிந்தளியது.
இவ்வகையில் புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக மறுபடி தன்னை நிறுவிக்கொண்டது.
இந்திய எல்லைக்குள் கஷ்மீர், நாகாலந்து போன்ற மாநிலஙகளில் மக்கள் தமது தேசிய சுயனிர்ணய உரிமைக்காகப் போராடுகிறார்கள். மத்திய இந்தியாவில் பழன்ங்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டம் நடத்துகிறார்கள். குர்திஸ்தான், போல்கன் நாடுகள், ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமரிக்க நாடுகள் என்று உலகத்தின் ஒவ்வொரு பிரதான சந்திகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களும் தேசிய இனங்களும் போராட்டங்களை நடத்துகின்றன. ஐரோப்பாவில் ஜநாயகவாதிகள் உலகமக்களின் உரிமைக்காகக் குரலெழுப்புகிறார்கள்.
இவர்களில் எவரையுமே புலிகள் நண்பர்களகக் கருதியதில்லை. இந்தியாவில் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத அரசியல்வாதிகளோடும், உலக மாபியக் குழுக்களோடும், அதிகாரவர்க்கத்தோடும் தம்மை அடையாளப்படுத்திய புலிகள் ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட ம்க்களின் போராட்டம் என்பதை உலக மக்கள் நம்ப மறுக்கும் அளவில் தேசியப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்துள்ளார்கள். இவையெல்லாம் தேசிய விடுதலையின் அடிப்படைப் பண்புகளுக்கு மாறானவை.
இவ்வகையில் புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக மறுபடி தன்னை நிறுவிக்கொண்டது.
விடுதலை புலிகள் சார்ந்த அளவில் போராட்டம் என்பது இரண்டு இராணுவக் குழுக்களுக்கு இடையேயான மோதல் மட்டுமே. இந்தவகையில் வெற்று ஆயுதக் குழுவான புலிகள் உலக நாடுகளின் அதிகாரவர்க்கத்தின் பயன்பாட்டிற்கு துணைசென்றார்கள். இறுத்தியில் புலிகள் இல்லாமலேயே இலங்கை அரசைக் கையாளலாம் என்ற நிலை ஏற்பட்ட வேளையில் அதே அதிகாரவர்க்கத்தால் அழிக்கப்பட்டார்கள்.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பாசிசத்தின் நேரடியான ஆயுத அடக்குமுறையை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலுள்ளனர். மக்கள் எழுச்சியோடிணைந்த ஆயுதப்போராட்டம் ஒன்று மட்டுமே தேசிய இனங்களின் விடுதலையை உறுதிப்படுத்தும். ஆனால் புலிகள் போன்ற எதிர்ப்பு ஆயுதக் குழுச் சிந்தனைக்கு அப்பால், தேசிய விடுதலை இயக்கம் ஒன்று மட்டுமே அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.