Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் ஏன் தோற்றுப் போனார்கள் : மாவோயிஸ்ட் தோழர் கோவிந்தன் குட்டி

முன்னாள் மாவோயிஸ்டுக்களின் பிரதான உறுப்பினராகக் கருதப்பட்டவரும், பல ஆண்டுகள் pm2009-10சிறை வாசம் அனுபவித்தவரும், People’s March என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் கோவிந்தன் குட்டி கேரளாவில் அவரது இல்லத்திலிருந்த போது தொடர்புகொண்டோம். அவருடனான பதிவுசெய்யப்பட்ட நீண்ட உரையாடலின் முக்கிய பகுதிகளைத் தருகிறோம்.

இனியொரு: இலங்கை அரசியல் நிலை குறித்து உங்களது பார்வை என்ன?

கோவிந்தன்: இலங்கை சோவனிச அரசுகள் தொடர்ச்சியாக தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றன. அதின் மிக உச்சமான ராஜபக்ச அரசு அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்திருக்கிறது. இப்போது ஒரு பெரும் பகுதி மக்களை முகாம்களில் அவர்களது விருப்பிற்கு எதிராக அடைத்து வைத்திருக்கிறது. சிங்களக் குடியேற்றங்களை தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்டு அவர்களின் தேசியத்தைச் சீர்குலைத்து வருகிறது. இலங்கை சோவனிச அரசிற்கு எதிராகத் தமிழ் மக்கள் போராடுவது தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களின் போராட்டம் விடுதலைப் புலிகளின் தோல்விக்கான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு வெற்றிபெறும். இது வரலாற்று நியதி.

இனியொரு: விடுதலைப் புலிகளின் தோல்விக்கான அரசியல் காரணம் என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

கோவிந்தன்: இது தொடர்பாக மாவோயிஸ்ட் செயலாளர் கணபதி தெளிவான நேர்முகம் ஒன்றை வழங்கியிருக்கிறார். தெளிவான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான அரசியலை அடிப்படையாகக் கொள்ளாமையினாலேயே புலிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டனர். வெறுமனே ஆயுதங்களை நம்பிய போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆனால் இது முடிபல்ல. இத்தோல்வி தமிழ் மக்களுக்கு முன்னால் பல படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது. அவற்றிலிருந்து புதிய போராட்டம் முன்னெழும் அதற்கு இந்திய முற்போக்கு சக்திகளின் ஆதரவும் கிடைக்கும்.

இனியொரு: உலக மயம் புதிய உலக ஒழுங்கு விதி என்பனவெல்லாம் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவே?

கோவிந்தன் : அவையெல்லாம் ஏகாதிபத்தியங்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் சார்பான மாற்றங்களே.

இனியொரு : இந்தியாவில் மாவோயிஸ்டுக்கள் தோல்வியடைந்து விட்டார்களா?

கோவிந்தன் : இல்லை. இராணுவ ரீதியான சில பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்றாலும் அரசியல் ரீதியில் இந்திய அரசு நிலைகுலைந்து போயுள்ளது.

இனியொரு: மாவோயிஸ்டுக்கள் தளமாகக் கொண்டுள்ள மலைவாழ் பகுதிகளில் என்ன நடக்கிறது?

கோவிந்தன்: அங்குள்ள இயற்கை வழங்களையும், கனிமங்களையும், பெரு நிலப்பரப்புக்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுவதற்காக இந்திய அரசு அம்மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதுதான் உண்மை. அதிலும் பல பிரதேசங்கள் இந்திய அரசின் நிர்வாக அமைப்புகளே முன்னர் இருந்ததில்லை.

Exit mobile version