கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று ஆய்வு செய்துவிட்டுத் திரும்பியதும் வழமை போல புலி ஆதரவாளர்கள் தரப்பிலிருந்தும் பேரினவாதிகள் தரப்பிலிருந்தும் நாய்ச் சண்டை ஆரம்பமாகிவிட்டது. மக்கள் சார்ந்து எந்தப் பெறுமானமுமற்ற நவநீதம் பிள்ளையின் பயணத்தின் விளைவுகள் ஒருபுறமிருக்க இந்த நாய்ச்சண்டையில் நசுங்கிச் செத்துப்போவது அப்பாவி மக்களே.
குறிப்பாக நவநீதம் பிள்ளை புலிகளின் மனித உரிமை மீறல் குறித்த சில கருத்துக்களைக் கூறியதும் புலம் பெயர் நாடுகளிலுள்ள புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் -தேசிய விடுதலையின் ஆதரவாளர்கள் அல்ல- துடித்துப் போனார்கள். நவநீதம் பிள்ளைக்கு முன்பதாக ஈழப் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் உள்நுளைந்த அத்தனை பேரும் புலிகள் மீதான போர்க்குற்றங்களை முன்வைத்திருக்கிறார்கள்.
நவி பிள்ளையின் நோக்கம்…
எரிக் சொல்கையீம், நவி பிள்ளைக்கு முன்பதாக மனித உரிமை ஆணையாளராகப் பதவி வகித்த லூயிஸ் ஆர்பர், தஸ்ருமன் தலைமையில் ஐ.நா அறிக்கை சமர்ப்பித்த அனைவரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வேறுபட்ட அளவுகளின் முன்வைத்திருக்கிறார்கள். இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசு இடதுசாரிகள் என்று முடிசூட்டிக்கொண்டவர்கள், வன்னிப் படுகொலையின் பின்னர் இனங்களின் ஐக்கியம் குறித்துத் துயர் கொள்ள ஆரம்பித்த ஜனநாயகக் கனவான்கள், புலியெதிர்ப்பையே அரசியல் என்று வரித்துக்கொண்ட கும்பல்கள், அரச துணைக் குழுக்கள் என்று நீண்டு செல்லும் பட்டியல் ஒன்று புலிகளின் ‘தவறுகளை’ யும் கொலைகளையும் பற்றிப் பேசுவதையே தொழிலாகக் கொண்டுள்ளன.
மேற்குறித்த நீண்ட பட்டியலுக்குள் அடங்கிப் போகும் ஒவ்வொரு மனிதனதும் நோக்கமும் நவநீதம் பிள்ளையின் நோக்கமும் ஒன்றுதான். இவர்கள் அனைவருமே புலிகளைக் குறைகூறுவது மக்கள் மீதான அக்கறையிலிருந்தல்ல. புலிகளைக் காரணமாகச் சுட்டிக்காட்டி தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தையே தவறு என்கிறார்கள். ஒரு தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினால் அழிவுதான் மிஞ்சும் என்கிறார்கள். ஒடுக்கும் பாசிச அரசோடு பேசியும் அவ்வப்போது அழுத்தங்களையும் வழங்கி ‘பிரச்சனைகளை’ தீர்த்துக்கொள்ள முடியும் என்று பொதுவான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்கள்.
நவி பிள்ளைக்கு புலிகளை விமர்சிக்க உரிமை உண்டா?
மக்களின் நிலைமையோ முற்றிலும் மாறுபட்டது. இலங்கையில் பிரதான முரண்பாடாக இன்றும் தேசிய இன முரண்பாடே காணப்படுகின்றது. தேசிய இன ஒடுக்குமுறை வெறும் கருத்தளவிலன்றி இராணுவ ஒடுக்குமுறையாக மக்களைத் கொன்று தின்கின்றது. சமாதானமாக வாழ விரும்பும் மக்களை இலங்கை அரச பாசிஸ்டுக்களே ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கிறார்கள். ஆக, இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைகு எதிரான போராட்டம் என்பது தவிர்க்க முடியாத முன்நிபந்தனை. இப் போராட்டத்தின் வழிமுறை குறித்து முரண்பாடுகள் இருப்பினும் அது தவிர்க்க முடியாதது என்பது வெளிப்படையானது.
இங்கு புலிகளை விமர்சிக்கின்ற, அதன் அரசியலை நிராகரிக்கின்ற ஒருவரது அரசியல் நோக்கம் இத் தவிர்க்க முடியாத போராட்டத்தைச் செழுமைப்படுத்துவது என்றால் அது மக்கள் சார்ந்தது, நியாயமானது. அதே வேளை புலிகளை குறம்சுமத்தும் ஒருவரது நோக்கம் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையையே நிராகரிப்பது என்றால் அது மக்கள் விரோதமானது, நியாயமற்றது. இந்த வகையில் நவநீதம் பிள்ளையினது குற்றம்சாடல் என்பது சமூகவிரோதமானது. புலிகள் குறித்து மட்டுமல்ல போராட்டத்தின் எந்தக் கூறுகளையும் விமர்சிப்பதற்கு நவி பிள்ளைக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது.
புலி ஆதரவாளர்களின் கோழைத்தனம்
நவி பிள்ளை ஐ.நாவின் அடியாளாகவே இலங்கை சென்று அதன் அடியாளாகவே திரும்பியிருக்கிறார். இடையே எந்த மாற்றமும் நிகழவில்லை.
நவிப் பிள்ளையோ தனது குற்றப் படலத்தின் ஆரம்பத்திலேயே புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலைசெய்யப்பட்டதைக் நினைவு நாளுக்காகவே முதல் தடவையாக இலங்கைக்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார். இலங்கை அதிகாரவர்க்கத்தின் மற்றொரு ஒட்டுண்ணியான நீலன் திருச்செல்வம் புலிகளால் கொல்லப்பட்ட அரசியல் வழிமுறையை நிராகரிக்க ஆயிரக்கணக்கில் மனிதாபிமானிகள் அணிதிரள்வார்கள். ஆனால் அதிகாரவர்க்கம் மட்டுமே அவருக்காகக் கண்ணீர்வடிக்கும். நீலன் திருச்செல்வத்தைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என்றும் அதனைக் கேட்க நவிப் பிள்ளைக்கோ அதிகாரவர்க்கத்தின் எந்தக் கொம்பன்களுக்கும் உரிமைகிடையாது என்றும் அதற்காக நாங்கள் அழுதுவடிக்க மாட்டோம் என்றும் புலிகளின் வீரம் பேசும் பரணி கிருஷ்ணரஜனி சொல்வார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. வழமையான புலிகளின் விசில்களைப் போன்று நவி பிள்ளை ஆதாரமில்லாமல் புலிகளைக் குறைசொல்வதாகக் கோழைத்தனமாக நொந்துகொள்கிறார்.
‘நீங்கள் புலிகளைக் குறை சொல்வது தேசிய இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப்படுத்தவும் அழிக்கவுமே தவிர மக்கள் மீது உங்களுக்குள்ள பற்றினால் அல்ல’ என நெஞ்சை நிமிர்த்தி வீரம் பேசுவார் என்றால் புலிகளை அனாவசியமாகக் நவிப்பிள்ளை குறைசொல்கிறார் என்று உடைந்து போகிறார். அதே கோழைத்தனத்தோடு பரணியைச் சுற்றிவருகின்ற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நவி பிள்ளை புலிகளைக் குறை சொல்லவேண்டாம் என கூனிக் குறுகிக் கோரிக்கைவிடுக்கிறார்கள்.
மனித குலத்தின் ஒரு பகுதி வன்னியில் அழிக்கப்பட்டு நாலரை வருடங்களைக் கடந்தாயிற்று. இன்னும் உலகின் இரத்தக்கறை படிந்த காட்டேரிகளை நம்பியே வாழ்க்கை நடத்தும் கூட்டம் மக்களைப் போராட வேண்டாம் என்று மறைமுகமாகக் கூறுகின்றது. இந்தியா வருகிறது, அமரிக்கா அடிக்கத் தயாராகிவிட்டது, ஐ.நா ரஜபக்சவைத் தூக்கிலிடுகிறது என்று நாளுக்கு நாள் மந்திர உச்சாடனம் செய்து மக்களின் போராட்டங்களுக்கு மறியல் செய்கிறார்கள்.
இதற்கிடையே இனப்படுகொலையோடு அழிந்து போன புலிகளை உயிர்ப்பித்து, பிரபாகரனுக்கு வாழ்வுகொடுத்து பிழைப்பு நடத்துகின்றவர்கள் சமூகத்தின் மீது பற்றுக்கொண்டவர்களா?!
மக்கள் மீது பற்றிருந்தால் பினவரும் முடிவுகளுக்கு வருவார்கள்.
1. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்துசெல்லும் உரிமைக்காகப் போராடுவது தவிர்க்க முடியாத விடுதலைக்கான முன்நிபந்தனை.
2. 30 வருடம் தேசிய விடுதலை இயக்கங்களும் குறிப்பாகப் புலிகளும் நடத்திய போராட்டம் தோல்வியடைந்துள்ளது
3. இறுதியாகப் புலிகளால் தலைமைதாங்கப்பட்ட அரசியல் தவறானது, அழிவுகளுக்கு வழி செய்திருக்கிறது, இத் தவறான அரசியலிலிருந்து கற்றுக்கொண்டு பேரினவாத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை மக்கள் யுத்தமான உருவாக்க வேண்டும்.
இவ்வாறான குறைந்தபட்ச முடிவுகளுக்கு வரத் தயங்குகின்றவர்கள் இரண்டுவகைப்படும்
1. புலிகள், பிரபாகரன் போன்ற அடையாளங்களைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள்.
2. இந்த வியாபாரிகளைக் கண்மூடித்தனமாக நம்பும் விடுதலை மீது பற்றுக் கொண்டவர்கள்.
முதலாவது வகையினர் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவது வகையினர் மக்கள் சார்ந்த அரசியலில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு புலிகள் என்ற அடையாளத்தைவிட எதிர்காலத்தில் தவிர்க்கவியாலாது உருவாகவிருக்கும் சுய நிர்ணய உரிமைக்கான மக்கள் யுத்தமே முதன்மையானது.
புலிகளின் வெளிப்படையாகத் தெரிந்த கொலைகளையும், அரசியலையும் மூடி மறைப்பது நவி பிள்ளை போன்ற ஏகபோகங்களின் அடியாட்களுக்கும் புலியெதிர்ப்புக் கும்பல்களுக்கும் தான் பயன் தரும். நாங்கள் புலிகளின் அரசியலை நிராகரித்து சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன் வைக்கும் போது மட்டுமே எமது தவறுகளை நவிப் பிள்ளை போன்றவர்களும், ராஜபக்சக்களும் குற்றச்சாட்டாக முன்வைக்க முடியாது. சுய விமர்சனமின்றிய எந்த அரசியலும் ஒரு அங்குலம் கூட முன்செல்ல முடியாது.