Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளை ஆதரிக்கும் மக்களும் புலம் பெயர் அமைப்புக்களும் : கோசலன்

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி இனபடுகொலையின் போது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். தெற்காசிய வரலாற்றில் குறுகிய காலத்துள் நிகழ்த்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்குரிய அத்தனை வலுவும் புலம் பெயர் தமிழர்களிடம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் புலம் பெயர் புலி சார் அமைப்புக்கள் நிராகரித்துவிட்டன. வடகிழக்கு தமிழ்த் தேசிய இனத்தின் தேசியப் பண்பு இன்று ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுச் சீர்குலைக்கப்படுகின்றது. இராணுவ மயமாக்கலை நிறுத்த முடியாது என்று ராஜபக்ச வெளிப்படையாகக் அறிக்கை விடுக்கின்ற அளவிற்கு இதுவரை இலங்கையில் அரச பாசிசம் கோலோச்சியதில்லை.

இவை அனைத்திற்கும் புலம் பெயர் நாடுகளிலிருந்து குறைந்தபட்ச அழுத்தங்களையாவது வழங்கவல்ல வலு காணப்படுகின்ற போதிலும் தோல்வியடைந்த அதே வழிமுறைகளைத் தமது வசதிக்காக வரித்துக்கொள்ளும் புலம் பெயர் புலி சார் அமைப்புக்கள் தமக்குள் மோதிக்கொள்கின்றன.

மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் காணப்படும் ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் அதே ஆதரவைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தை விரிவக்கிக் கொள்கின்றனர்.

80 களின் இறுதிக்குப் பின்னர் ஈழத்திலும், அதன் புலம்பெயர் நீட்சிகளான தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏகோபித்த ஆதரவு காணப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள மட்டுமே செயற்பாட்டுத் தளத்தில் இயங்குகின்ற நிலையில் இந்த மறுதலையான ஆதரவு தவிர்க்க முடியாததாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தின் குறியீடாகவே பெரும்பாலான தமிழர்களால் கருதப்பட்டார்.

மாவீரர் தினம், புலிக் கொடி, கார்த்திகைப் பூ போன்ற அனைத்து சின்னங்களும் இந்தக் குறியீட்டின் இன்ன பிற அம்சங்களாகத் திகழ்ந்தன.
வன்னியில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையிலிருந்து தப்பியோட முற்பட்ட பல தமிழர்கள் புலிகளின் துப்பாகிகளுக்கு இரையாகியிருக்கின்றனர்.புலிகளால் கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவர்கள் உட்படப் பலர் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிக்குப் பலியாகியிருக்கின்றனர்.

யுத்கம் ஆரம்பித்த நாட்களிலிருந்து புலிகளின் வெளிப்படையான இராணுவத் தர்பார் ஒன்றே வன்னியில் நடைபெற்றது. வன்னியிலிருந்து தப்பிய எவரும் இதனை மறுக்கவில்லை.

இவை அனைத்தையும் மீறி இன்று வன்னி மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சவும் பிரபாகரனும் தோன்றி தேர்தலில் நேரெதிராகப் போட்டியிட்டால், பிரபாகரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

புலி எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே அரசியலாக வரித்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இது கசக்கலாம் ஆனல் உண்மை நிலைமை இதுதான்.

புலம் பெயர் மக்கள் மத்தியிலும் நிலமை இதுவே. தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்திலிருந்து தப்பியோடி அன்னிய தேசங்களில் புகுந்துகொண்ட சாமானியத் தமிழனுக்கு பிரபாகரன் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு. புலிகள் அப்போராட்டத்தின் நிறுவனமயமான அலகு.

புலிகளின் போராட்டம் வெற்று இராணுவ யுத்தம் என்பதும் அதன் விளைவுகள் ஏகபோக அரசுகளின் நலன் சார்ந்தது என்பதெல்லாம் அரசியல் குறித்து விஞ்ஞான பூர்வமாக அணுகும் ஒவ்வோர் மனிதனும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறான்.

புலிகளின் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் கோரவடிவம் குறித்தும் அவர்களின் தவறான வழிமுறை எப்படியெல்லாம் பேரழிவுகளை நோக்கி மக்களை நகர்த்திச் சென்ற என்பன குறித்த சாட்சியங்களும் விளக்கங்களும் பக்கம்பக்கமாக இவர்களிடம் உள்ளன.

பெரினவாதப் பசிக்கு நாளாந்த வாழ்க்கையை இரையாக்கிக் கொள்ளும் தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தளவில் இவை அனைத்தும் அவசியமற்ற அரசியல் மேதாவித்தனமாகவே தென்படும்.

இதனால் புலியெதிர்ப்பு அரசியலை வரித்துக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளை அழிப்பதே போராட்டத்தை உருவாக்குவதற்கான முன் நிபந்தனையாகக் கருதினர். அதற்காக ஒடுக்கும் பாசிச அரசோடு பலர் கைகோர்த்துக்கொண்டனர். இலஙகை அரசைப் பயன்படுத்தில் புலிகளை அழித்த பின்னர் இலஙகை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்வைக்கலாம் என்ற கருத்து பரவாகப் புலி எதிர்பாளர்களால முன்வைக்கப்பட்டது. எவ்வாறு மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பயன்படுத்தி இலங்கை அரசை வெற்றிகொண்டுவிட்டு பின்னதாக எமக்கான வழியைத் தேடிக்கொள்வோம் என்று புலிகள் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுள் சிக்குண்டு அழிவுக்கு உட்படுத்தப்படனரொ புலி எதிர்பாளர்கள் இலங்கை அரசினது நிகழ்ச்சி நிரலுள் சிக்குண்டு அதன் துணைக்குழுக்களின் கூறுகளாகச் செயற்பட ஆரம்பித்த்னர்.

புலிகளை அழித்தல் என்ற முழக்கத்தின் கீழ் ஏற்கனவே மக்கள் மத்தியிலிருந்து அன்னியமாகியிருந்த இவர்கள் இலங்கை அரசே இவர்களின் இறுதிச் சரணாலமாகக் கண்டனர். மக்கள் குறித்துப் பேசியவர்கள் மக்கள் விரோதிகளாயினர்.

புலிகள் குறித்த மாயையும், அது குறியீடாகத் தொடரும் நிலையும் ஆபத்தானதே. அவ்வாறான மறுதலையான மாயை நிலவும் போதுதான் அதனைப் புலம் பெயர் அமைப்புக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கை அரசின் தமிழ் முகம் கே,பியின் முகவர்களாகத் தொழிற்படுகின்ரவர்கள் “தேசியத் தலைவரின் வழி நடபோம்” என்றால் மக்கள் கைதட்டி ஆரவரிக்கின்றனர். புலிகள் குறித்த இந்த மாயையைப் பயன்படுத்திக்கொண்டு தமது வியாபார நலன்களை தக்கவைத்துக் கொள்கின்றனர்.

இந்த அபாயகரமான சூழல் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை இலகுபடுத்தியுள்ளது.

1. புலி எதிர்பாளர்களின் மக்கள் விரோத செயற்பாடுகளுகு இன்னும் நியாயம் கற்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.

2. புலி ஆதரவுத் தலைமைகளின் அரசியல் வியாபாரத்தைத் தொடரும் சூழலை நிலைக்கச் செய்கிறது.

3. புலிகளின் இருப்பை காரணமாகக் காட்டியே இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பைத் தொடர வழிசெய்துள்ளது.

இங்கு இலங்கை குறித்துச் செலயாற்றுகின்ற ஒவ்வொருவரதும் பொதுவான எதிரி இலங்கை அரசும் அதன் பின்பலமான ஏகாதிபத்தியங்களுமே.

இந்த வகையில் இந்த சூழல் எதிர்கொள்ளப்பட வேண்டும். புலிகள் குறித்த போலியான மாயைக்கு வெளியில் மக்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

புலிகளை வெறுமனே திட்டித் தீர்ப்பது இதன் தீர்வாகாது. இலங்கை அரசிற்கு எதிரான உறுதியான அரசியல் இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். சரண்டைவுகள், விட்டுக்கொடுப்புகளுக்கு அப்பாலான அரசியல் இதன் அடிப்படையாக வேண்டும். புலம் பெயர் மற்றும் தமிழ் நாடு அரசியல் சந்தர்ப்ப வாதிகள் இலங்கை அரசிற்கு எதிராக முன்னெடுக்க முனையாத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Exit mobile version